Monday Blues-ம்! கார்ல் மார்க்சும்!

செந்தளம் செய்திப்பிரிவு

Monday Blues-ம்! கார்ல் மார்க்சும்!

இந்தாண்டு(2024-25) பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முதன்முறையாக, மன நல ஆரோக்கியம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளதோடு, ஒட்டுமொத்தமாக ஒரு மனிதன் நலமுடன் இருக்கிறானா இல்லையா என்று சொல்வதற்கு அடிப்படை அம்சமாக மனநல ஆரோக்கியத்தையும் கணக்கில் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மன நலப் பிரச்சனையை பொருளாதாரக் கண் கொண்டு பார்ப்பதாக கூறும் நிர்மலா சீத்தாராமன் மனநலக் கோளாறு காரணமாக ஒழுங்காக வேலைக்கு வராமல் இருப்பது, வேலைக்கு வந்தாலும் குறித்த நேரத்தில், குறித்த வேலையை செய்யும் திறன் குறைந்து போவது, திறினிழப்பு எற்படுவது, மருத்துவச் செலவினங்கள் அதிகரிப்பது போன்று இன்னும் பல காரணங்களால் நாட்டின் உற்பத்தித் திறன் கனிசமான அளவிற்கு பாதிக்கப்படுவதாக மிகவும் வருத்தப்படுகிறார்.

 

 

ஒருபுறம், உற்பத்தித் திறன் குறைந்து, நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்பும் நிர்மலா சீத்தாராமன்தான், 2019-ம் ஆண்டிலிருந்தே தேசிய மனநல ஆரோக்கியத் திட்டத்திற்கான(NMHP) நிதி ஒதுக்கீட்டை 40 கோடிக்கு மேல் உயர்த்தவில்லை; சென்றாண்டு வரைக்குமேகூட ஒரு நபருக்கு, ஆண்டுக்கு 30 பைசா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதி 65 பைசா என்ற அளவிற்கு மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டிலுள்ள 1,73,000 ஆரம்ப சுகாதார மையங்கள்(PHCs), இராண்டாம் நிலை சுகாதார மையங்களில்(SHCs) மனநல மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியுள்ளார். இதுவொரு புரட்டுருட்டு என்பது நமக்கே தெரிந்தாலும், ஒரு நபருக்கு, ஓர் ஆண்டிற்கு 30 பைசா செலவில் என்னென்ன மாதிரியான மனநல மருத்துவ சேவைகளை எல்லாம் வழங்கப்பட்டிருக்கும் என்பதை நம்மையே கணக்கிட்டுகொள்ளுங்கள் என்கிறார்.

நமது கணக்கு ஒருபுறமிருக்க, டெல்லி எய்மஸ் மருத்துவமனை உதவியுடன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி(2022), 18 மாநிலங்களில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டாம் நிலை சுகாதார மையங்களில்(SHCs), 32 சதவீத சுகாதார மையங்கள் மட்டுமே மனநல சேவைகளை வழங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த 32 சதவீத சுகாதார மையங்களில்கூட ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களாக(AB-Health and Wellness centre) மாற்றம் செய்யப்பட்ட 48 சதவீத மருத்துவமனைகள் மட்டுமே மனநல சேவைகளை வழங்கி வருகின்றன என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதேபோல, 35 சதவீத ஆரம்ப சுகதார மையங்கள்(PHCs) மட்டுமே மனநல சேவைகளை வழங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கையே தவறு செய்துவிட்டீர்கள் சீத்தாராமன், பொய் பேசாதீர்கள் நிர்மலா சீத்தாராமன் என்று சொல்லுமளவிற்கு ஒரு ஆய்வை  இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்புமே சீர்குலைந்திற்கும் நிலையில், இந்திய மக்களின் மனநலத்திற்காக ஒரு ஆண்டிற்கு 65 பைசா மட்டுமே ஒதுக்கியிருக்கும் நிலையில், இந்திய மக்களின் மனநலப் பிரச்சனையை இந்தப் பட்ஜெட்டும், நிதியமைச்சரும் கவலைப்படுவதாக சொல்வதை நாம் நிச்சயம் நம்ப வேண்டுமா என்ன? 

கார்ல் மார்க்ஸ் சொல்வதென்ன?

மனநலக் கோளாறு காரணமாக நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக நிர்மலா சீத்தாராமன் வகையறாக்கள் சொல்லும் புனைச் சுருட்டுக்களை 180 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து நொறுக்கிய கார்ல் மார்க்ஸ். 

 “உழைக்கும் மக்களின் உழைப்பால் மட்டும்தான் அனைத்துமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை மறுப்பதன் மூலம், உழைப்புச் சுரண்டலால் எற்படும் புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட நிலையை, அந்நியமாதலை இந்த முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் கட்டமைப்பு அறிந்துகொள்ளவிடாமல் செய்துவிடுகிறது. பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் பிரம்மாண்டமான, அசாத்தியமான, வியக்கத்தக்க பொருள்களை படைத்தவன் தொழிலாளிதான் என்றாலும் அவனுக்கு மிஞ்சியது வறுமையும், துன்பமும் மட்டுமே; உழைப்புதான் பெரும்பணக்காரர்கள் வசிக்கும் மாட மாளிகைகளை உருவாக்குகிறது, ஆனால், உழைத்தவனுக்கு மிஞ்சியது குடிசை வீடும், குப்பம் மேடுகளும் மட்டுமே; முதலாளிகளுக்கு கிடைக்கும் தரமுயர்ந்த, அழகான, ஆடம்பரமான பொருட்களை உருவாக்கியதும் உழைப்புதான், ஆனால், உழைத்தவனுக்கு கிடைத்தது உடல் உபாதைகளும், மனச் சோர்வும், உடற்சோர்வும்தான்” என்று மார்க்ஸ் 1844-ம் ஆண்டு எழுதிய பொருளாதார, தத்துவக் கையெழுத்துப்படியில் அந்நியமயமாக்கப்பட்ட உழைப்பு என்ற தலைப்பின் கீழ் முதலாளித்துவச் சுரண்டல் மனதளவில் என்ன மாதிரியான தாக்கத்தை செலுத்துகிறது என்பதை விவரித்திருப்பார். ( Political economy conceals the estrangement inherent in the nature of labor by not considering the direct relationship between the worker (labor) and production. It is true that labor produces for the rich wonderful things – but for the worker it produces privation. It produces palaces – but for the worker, hovels. It produces beauty – but for the worker, deformity.)

செல்வங்களை உருவாக்குபவர்கள் என்று சொல்லி விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில ஏகபோக கார்ப்பரேட்களுக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களின் உழைப்பையும் பலிக்கொடுக்கும் நிர்மலா சீத்தாராமன், உற்பத்தி திறன் குறைவதற்கு மட்டும் தொழிலாளர்களின் மனநலனில் கோளாறு ஏற்படுவதே காரணம் என்று இழிவுபடுத்துவது அயோக்கியத்தனம்; இவர்கள் அமல்படுத்தும் உலகமய கொள்கைகளால்தான் பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு மனநோய் பெருகியுள்ளது. உலகத்தில் மனநோய்க்கென்று தனி அமைச்சகம் உருவாக்கும் அளவிற்கு நெருக்கடி உள்ளது. உலகில் அதிகளவில் மன அழுதத்தில் உள்ளவர்கள் இந்தியாவில்தான் உள்ளார்கள். தற்கொலைகளும் இங்குதான் அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2015 முதல் 2021 வரையிலான  ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்ளும் தினக்கூலிகளின் எண்ணிக்கை 2.2 லட்சத்தை தாண்டிவிட்டது. 1 லட்சத்திற்கும் மேலான சுயதொழில் செய்வோர் இந்த காலக்கட்டத்திற்குள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். 90,000 மேலான வேலைவாய்ப்பற்றவர்களும் பலியாகியுள்ளனர். 

இன்றைக்கு திங்கட்கிழமை வரப்போகிறதென்றாலே இணையத்தில் திங்கட்கிழமை பாவங்கள்/பரிதாபங்கள்(Monday Blues) மீம்ஸ்களை சமூக ஊடகத்தில் உலாவும் எவரும் பார்க்காமல் திங்கட்கிழமை வேலைக்கு சென்றிருக்க முடியாது. முகத்தில் நகைப்பு இருக்கிறதோ இல்லையோ, அகத்தில் அவலமும், சோர்வும் கண்டிப்பாக அப்பிக் கிடக்கும். சொந்த உழைப்பிலிருந்தே அந்நியப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் மனச்சோர்வுடனும், விரக்தியுடனும் இருப்பதற்கு இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்புமுறைதான் காரணமே ஒழிய, தனிநபர் சார்ந்த மனநலக் கோளாறு காரணம் அல்ல என்பதை உழைக்கும் மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதோடு, இந்த சுரண்டல் அமைப்புமுறை தொடர்வதற்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீத்தாராமன் வகையறாக்களை அரசியல் வழியில் எதிர்த்து கேள்வி கேட்பதோடு, மோடி ஆட்சியையும், அதன் பட்ஜெட்டையும் எதிர்த்து போராடு வேண்டியதும் நம் கடமையாகிறது.

- செந்தளம் செய்திப்பிரிவு