வாச்சாத்தி! வன்கொடுமையும் வர்க்க அரசியலும்.
துரை. சண்முகம்
தருமபுரி கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு மலை கிராமத்தின் பெயர் வாச்சாத்தி.
அது ஒரு ஊரின் பெயர் மட்டுமல்ல அரசியலின் குறியீடாகவும் உள்ளது.
அடித்தட்டு உழைக்கும் மக்கள் மலைவாழ் பழங்குடி மக்கள் மீது ஒரு அரசு எந்திரத்தின் அணுகுமுறை அதன் ஆதிக்கம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான கடலின் துளிகளில் ஒன்றாய் வச்சாத்தியின் கண்ணீர் துளிகளும் ரத்தத் துளிகளும்.
ஒவ்வொன்றாய் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து விவரித்து எழுத முடியவில்லை. வார்த்தைகளை உணர்ச்சிகள் முந்திச் செல்கின்றன. கொடுமைகளை விவரிப்பதின் கொடுமை பயங்கரமானது.
ஒரு அரசியல் இயக்கமும் அரசியல் செயல்பாடும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்குடி மற்றும் மலைவாழ் சங்கமும் இல்லாவிட்டால் வாச்சாத்தியின் வன்கொடுமை இந்த அளவுக்கு வெளியேகூட தெரிந்திருக்காது.
1992 - இல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக காவல்துறை வனத்துறை வருவாய்த்துறை மூன்றும் சேர்ந்து வாச்சாத்தி எனும் சிறிய மலை கிராமத்தை வேட்டையாடியது.
சந்தன கடத்தல் நடக்கிறது, சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது எனும் பெயரில் வாச்சாத்தியை முற்றுகையிட்டு ஊர் ஆலமரத்தடியில் அனைத்து பெண்களையும் திரட்டி வைத்து
விசாரணை எனும் பெயரில் அவர்களை லாரியில் ஏற்றி ஏரிப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தது நடந்தது. பள்ளியில் படிக்கும் 13 வயது பெண் கர்ப்பிணிப் பெண் என எவரையும் விட்டு வைக்கவில்லை அரசு எந்திரத்தின் வெறித்தனம்.
உண்மையில் வீரப்பன் காலத்திலிருந்து கூட்டு சேர்ந்து கொண்டு சந்தன மரங்களை கடத்தியது சகல ஓட்டுக் கட்சிகளின் கூட்டோடு நடந்தது.
இந்தக் கூட்டுக் கொள்ளையில் தரகர்கள் தனியே தன் பங்குக்கு பதுக்கி வைத்து பெரும் கொள்ளையர்களை ஏமாற்றியதாக ஏற்பட்ட முரண்பாடு மலைவாழ் மக்களை வேட்டையாடுவதில் வந்து முடிந்தது.
ஏய்த்துப் பிழைக்கும் திருடர்கள், நாட்டின் வளங்களை சூறையாடும் அதிகாரவர்க்கம் கட்சிகள், உழைத்து வாழும் மக்களின் மீது
பாய்ந்து குதறியதுதான் வாச்சாத்தியின் சுருக்கமான வர்க்க அரசியல்.
சட்டக் குறிப்பின்படி பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கான நீதி வேண்டி
காவல்துறையில் புகார் நீதித்துறையில் மனு என்ற முறையாக கொடுத்த போதும்
முதலில் பொய் புகார் என தள்ளுபடி செய்யப்பட்டதுதான் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக தொடர்ந்து எடுக்கப்பட்ட சட்டப் போராட்டமும் சமூகத்தில் நிகழ்த்தப்பட்ட விடாப்பிடியான அரசியல் போராட்டத்தின் அழுத்தமும் அரசு எந்திரத்தை அசைய வைத்தது.
தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் மூலமாக தேசிய மழைவாழ் பழங்குடி மக்கள் ஆணையத்தின் மூலமாக முயற்சிகள், உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்களின் கள ஆய்வு மக்களுக்கான வழக்கறிஞர்களாக என். ஜி பிரசாத், இளங்கோ போன்றவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் விடாப்பிடியான இயக்கம்
ஆகியவற்றின் காரணமாக 30 ஆண்டுகள் கழித்து அந்த மக்களுக்கு நீதி கிடைத்தது.
சல்லைப்பிடித்த சட்டப் போராட்டத்தில் தங்கள் மீதான பாலியல் வன்முறையை ஒவ்வொரு முறையும் நினைவு கூறும் போது அந்தப் பெண்கள் எவ்வளவு துடித்துப் போயிருப்பார்கள். மருகிப் போய் மங்கி விடுவார்கள் என்றுதான் அரசு எந்திரம் நம்பிக்கை வைத்தது. ஆனால் அந்தப் பெண்கள் துணிந்து வெளிப்படையாக சாட்சி கூறினார்கள். சராசரி பெண்களின் மனநிலையை அவர்களிடம் மாற்றியது கம்யூனிச அமைப்பின் சித்தாந்த இயக்கம்தான்.
பாதிக்கப்பட்டாலும் பண்பாடு அவமானம் என்று கருதி பெண் உண்மையை வெளியே சொல்லக்கூடாது! என்று திணிக்கப்பட்டு இருக்கும் ஆணாதிக்க சமூகத்தின் தினவையும் திருப்பி அடித்தார்கள் வாச்சாத்தி மலைவாழ் பெண்கள்.
அவர்களின் போராட்ட உறுதி கல்வராயன் மலையை விட கனமானது.
வச்சாத்தி வன்கொடுமையின் போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன்தான் இப்போது தமிழக வெற்றி கழகத்தின் விஜயின் தளபதிகளில் ஒருவர். பாதிக்கப்பட்ட பெண்களின் மீது வழக்குப் புனைந்து சிறையில் அடைத்து, மலைவாழ் பெண்கள் பொய் சொல்லுகிறார்கள்! என்று ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற மக்கள் விரோதிதான் இந்த செங்கோட்டையன். இந்த ஒன்றுக்காகவே இந்த சமூக விரோதியை கட்சியில் சேர்த்திருக்கக் கூடாது விஜய்.
படுபாதகமான ஒரு மக்கள் விரோதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு என்ன மாற்றத்தை தரப் போகிறார் இந்த வெங்காய விஜய்! இன்னும் ஒரு ஆம்பள ஜெயாவாக அடித்தளமிடும் விஜயை அவரது ரசிகர்கள் இளைஞர்கள் அரசியலாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வரலாற்றுச் சம்பவங்களை வாச்சாத்தி எனும் ஆவணப்படமாக கம்ரேட் டாக்கீஸ் இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் " உண்மையின் போர்க் குரல்" எனும் பெயரில் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக ஒரு ஆவணப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த மொத்த நிகழ்விலும் விதிவிலக்கான சில அரசு அதிகாரிகளைத் தவிர, மொத்த அரசு கட்டமைப்பு இந்த வன்கொடுமையை மூடி மறைக்கவும் வன்கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு துணை போகவும் செய்வதுதான் நடந்தது.
எப்படி வெண்மணியில் சேரிக்கு போய் மேல்சாதிக்காரர்கள் தீ வைத்திருக்க மாட்டார்கள்! என்றது போலவே, வாச்சாத்தியின் முதல் கட்டத்திலும் இந்த அதிகாரிகள் மலைவாழ் பெண்களை இப்படி செய்திருக்க முடியாது! என தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் வன்புணர்ச்சி வன்கொடுமைகளுடனும் இந்தப் பெண்கள் போராட வேண்டியிருந்தது.
ஜெயலலிதா கட்சிதான் இப்படி என்றால், வச்சாத்தி வன்கொடுமைக்காக சமூக நீதிப் பேசும் திமுக ஒன்றும் சமர் செய்ய களமாடவில்லை. கம்யூனிஸ்டுகள்தான் களத்தில் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடினார்கள்.
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் எதிரிகளின் மீதான தன்னியல்பான சமூக நீதி பாய்ச்சல் எதுவும் இல்லை.
அதனால்தான் திமுக கட்சி ரீதியாக நிவாரண உதவி செய்ய வந்தபோது அந்த மலைவாழ் பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து ஒதுக்கினர். அதிகார வர்க்கத்துடன் ஒட்டுறவாடி சமூகத்தை கொள்ளையடிக்கும் எல்லா கட்சிகளின் வர்க்க நிலையும் இதுதான்!
இதன் தொடர்ச்சியாக ஒன்றை சொல்லாமல் இருக்க முடியாது.
எந்த பாசிச ஜெயலலிதா வாச்சாத்தி கிராமத்தை சூறையாடி ஆடு மாடுகளை வெட்டி , குடிக்கும் நீரில் கரசினை ஊற்றி என்னவெல்லாம் அநியாயம் செய்தாரோ! அந்த ஜெயலலிதா கட்சியுடன் 2011 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது.
அந்தக் கொடூர செங்கோட்டை யனுக்காக கோபிச்செட்டிபாளையம் பகுதியில் ஓட்டு வேட்டையும் நடத்தியது.
ஆவணப்படங்களுக்கு வெளியே இதையும் ஆவணப்படுத்த வேண்டி இருக்கிறது.
வர்க்க சமரசம் என்பது தங்களது அளப்பரிய தியாகங்களை கூட ஆளும் வர்க்கத்திற்கு திருக்காணிக்கை செய்துவிடும்
என்பதுதான் கோட்பாடற்ற ஜனநாயகவாதத்தின் தாழ்நிலை!
ஆயினும் கூட மக்களுக்காக உறுதியாக நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதன் சகல தரப்பு களத்தின் தோழர்களின் நீதிக்கான போராட்டத்தில்,
உழைக்கும் வர்க்கத்துக்கான அந்த உயிர் துடிப்பான உழைக்கும் மக்களின் வர்க்க அரசியலின் சாதக பக்கங்களை சமரசம் இல்லாமல் கைப்பற்றி கொள்வோம் என்பதையும் மனதில் ஆவணப்படுத்திக் கொள்வோம்!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/940623535311110/?rdid=mbVzYachlVwtsGok
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு