அர்பன் நக்சல் - அறிவுசார் நக்சல்: பா.ஜ.க.வின் நக்சல் பயன்பாட்டின் அரசியல் நோக்கம் என்ன?

the hardline

அர்பன் நக்சல் - அறிவுசார் நக்சல்: பா.ஜ.க.வின் நக்சல் பயன்பாட்டின் அரசியல் நோக்கம் என்ன?

    ஆயுதம் ஏந்திய நக்சல் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஆனாலும் அந்த இயக்கத்தின் சித்தாந்த ஆதரவாளர்களிடமிருந்து இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ‘‘ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளை ஒழிப்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது,’’ என்று கூறினார். இருப்பினும், ‘திமகி நக்சல்கள்’ (அதாவது அறிவுசார் நக்சல்கள் – Intellectual Naxal) வன்முறையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்,’’ என்றும் சாடினார்.

முன்னதாக மோடியும் வலதுசாரி ஆதரவாளர்களும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்க விமர்சகர்களைக் குறிக்க ‘அர்பன் நக்சல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

நக்சலைட் இயக்க வரலாறு

இந்தியாவின் நக்சலைட் இயக்கம் 1967ல் கிழக்கு இந்தியாவில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில் ஒரு கிளர்ச்சிக்காகத் தொடங்கியது. நிலமற்ற விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் மற்றும் பழங்குடி சமூகங்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியது; மாவோயிசக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இந்த இயக்கத்தின் போராட்டத்தில் கிளர்ச்சியாளர்களும், பாதுகாப்புப் படையினரும் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர்.

இதனால் தான், ‘‘மாவோயிச இயக்கம் பல தலைமுறை இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது,’’ என்று கூறிய மோடி, 2014ல் தான் பதவியேற்றதிலிருந்து தனது அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக் கொள்கைகளே, இந்தியாவில் மாவோயிச வன்முறையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாகப் பெருமை தொனிக்கப் பேசினார்.

எதிர்ப்புக் குரலை ஒடுக்க பா.ஜ.க. கையிலெடுக்கும் சொல் நக்சல்!

ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், தேசத்துரோகம் தொடர்பான சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி, அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்புகளைக் குறிவைப்பதாக, மனித உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் தான், பா.ஜ.க. அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்புகளோடு தற்போது மாணவர்களையும் ‘அறிவுசார் நக்சல்கள்’ என, மோடி விமர்சித்திருக்கிறார்.

இந்தியாவில், நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராகக் கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்த இளைஞர் போராட்டம் கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தது. இந்த நிலையில், மோடி தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து கவனம் ஈர்த்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், “அரசைக் கேள்வி கேட்பதற்காக மட்டுமே படித்த இளைஞர்களை ‘நக்சல்கள்’ என்று முத்திரை குத்த முடியாது,” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிரதமரே, திமாகி (அறிவுசார்) நக்சல் போன்ற வார்த்தைகள் எடுபடாது.  படித்த இளைஞர்கள் உங்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதால் மட்டும், அவர்களை எப்படி நீங்கள் அப்பட்டமாக ‘நக்சல்கள்' என்று முத்திரை குத்தலாம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதை அப்பட்டமான ஆணவம் எனக் கூறியவர், மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உள்ள திறமையின்மையை இது காட்டுவதாகவும் எச்சரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்கிவிட்டன. விழிப்புணர்வு காலம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தவிர, தனியாகப் பதிவிட்ட சுதந்திர வாழ்த்தில், ‘‘12 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, நமக்குள் இருந்த பயம் இறுதியாக விடுதலை அடைந்திருப்பதால் நாடு சுதந்திர தினத்தை உண்மையாகக் கொண்டாடுகிறது. மவுனமாக இருக்கச் சொல்லப்பட்ட ஒரு தலைமுறை தனக்கான குரலையும் ஊடகத்தையும் கண்டறிந்துள்ளது. பிளவுபட மறுக்கும் மக்களை விட சக்தி வாய்ந்தது வேறு எதுவும் இல்லை. அவர்கள் அச்சத்தைப் பரப்புவார்கள். நாம் தைரியத்தைப் பரப்புவோம். இப்போது மனம் அச்சமற்று இருக்கிறது. இனி பின்வாங்குவதற்கு வழியில்லை,” எனக் கூறியுள்ளார்.

மோடியின் நக்சல் கருத்து அரசியல் கட்சிகளிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை, ‘இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு எதிராக மோடி அரசு நடத்தும்  தாக்குதல்’ என, சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்தான காணொலியை வெளியிட்டவர், அதில், “அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பவர்கள் அல்லது விமர்சிப்பவர்கள் அனைவரையும் 'நக்சலைட்டுகள்' அல்லது 'மாவோயிஸ்டுகள்' என்று முத்திரை குத்த மோடி விரும்புகிறார். இது ஜனநாயக உரிமைகளுக்கும் குடிமக்களின் சுதந்திரத்திற்கும் விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மோடி அரசாங்கத்தால் வரவிருக்கும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் நாம் திரட்ட வேண்டும்,” என்றார்.

‘‘வலதுசாரிகளால் உருவாக்கப்பட்ட 'தேச விரோதி', போன்ற ஆதாரமற்ற பெயர்களுடன், மோடி இப்போது 'திமாகி நக்சல்' என்ற மற்றொரு அபத்தமான முத்திரையையும் சேர்த்துள்ளார்’’ என சி.பி.ஐ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்திருக்கிறார்.

இது, அரசாங்கத்தைக் கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்த செய்யப்படும் ஒரு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை எனக் கூறியவர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எழுப்பியுள்ள கவலைகளுக்குத் தீர்வு காணுமாறு பிரதமரை ராஜா வலியுறுத்தினார்.

    ‘இளைஞர்கள் மீது வன்முறையையும் பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, மோடி தனது வழக்கமான அபத்தங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்’ என, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சாகேத் கோகலே சாடியிருக்கிறார்.

‘‘உங்கள் அகந்தையைத் தூக்கி எறியுங்கள், பிரதமர் அவர்களே. அது உதவப்போவதில்லை," என்று அவர் கூறினார்.

மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய அமைதி வழி அறப் போராட்டத்தை ஆயுதமேந்திய நக்சலைட், மாவோயிச இயக்கங்களோடு இணைத்து, 'திமாகி (அறிவுசார்) நக்சல்' என மோடி பேசுவதன் மூலம், போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளைத் திசைதிருப்பவும், பொதுமக்களிடம் இளைஞர்களுக்கான ஆதரவைக் குறைக்கவும் முற்படுகிறார். வரலாறு நெடுகிலும் இம்மாதிரியான யுக்தியை பா.ஜ.க. கையாண்டு வருகிறது.

சி.ஜே.பி. நடத்திய போராட்டத்தின் விளைவாக தனது பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், அதற்குப் பொறுப்பேற்பதற்குப் பதிலாக, ‘‘மாணவர்களின் போராட்டத்தைத் தேசியவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கவும் நாட்டின் ஒற்றுமையைப் பேணவும் ராஜினாமா செய்கிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

இப்படி, எதிர் கேள்வி கேட்பவர்களை "நாட்டின் இறையாண்மைக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள்" எனக் கட்டமைப்பதன் மூலம், பா.ஜ.க. தன் அரசை "தேசியத்தைக் காக்கும் வலுவான அரசு" என நிலைநிறுத்த முயல்கிறது.

அன்று அர்பன் நக்சல்கள்... இன்று அறிசார் நக்சல்கள்!

துப்பாக்கி ஏந்தி காடுகளில் போராடுபவர்களை விட, பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நீதித் துறையில் இருந்து கொண்டு அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அதிக ஆபத்தானவர்கள் என்ற கருத்தாக்கத்தை பா.ஜ.க. தலைவர்கள் முன்வைக்கின்றனர். அதைத் தான் தனது சுதந்திர உரையில் நிலைநாட்ட முயற்சித்திருக்கிறார் பிரதமர் மோடி.

தவிர, பா.ஜ.க. இருதுருவ அரசியலைக் கையாண்டு வருகிறது. அதன்படி, இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை நிறுத்தி அரசியல் செய்வதுபோல, சமூகத்தில் தேசியவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் அதாவது நக்சல்கள் என்ற இரு துருவ அரசியல் நிலையை உருவாக்கி, தன் சித்தாந்த ஆதரவாளர்களையும் வாக்காளர்களையும் தீவிரமாக ஒருங்கிணைக்கும் முயற்சிதான் இந்த நக்சல் குற்றச்சாட்டுகள்.

இதையே சட்டத்தின் வாயிலாக நிலைநிறுத்த, போராட்டக்காரர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அதற்குப் பொதுமக்கள் மத்தியில் ஒப்புதலையும் நியாயத்தையும் பெறுவதற்கு "நக்சல்" என்ற முத்திரை ஒரு கருவியாகப் பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

அரசியல் லாபம் தேடும் சொல்!

இதுபோன்ற சொற்றொடர்களைத் தங்களின் அரசியல் லாபத்துக்காக மட்டுமே பா.ஜ.க. பயன்படுத்தியது நாடாளுமன்றத்தில் அம்பலபட்ட வரலாறும் இருக்கிறது. ஒருமுறை அல்ல, இரண்டுமுறை ஆளும் அரசு இதுகுறித்து அவையில் பேசியிருக்கிறது.

குறிப்பாக 2020ம் ஆண்டு, ‘‘நக்சலைட்டுகள் என்ற சொற்றொடர் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் பயன்படுத்தப்படுவதில்லை’’ என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பதிலளித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022ம் ஆண்டு, இது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நக்சலைட்டுகள் எனக் கைது செய்யப்பட்ட தனிநபர்கள் குறித்த எந்த மத்திய தரவுகளும் தங்களிடம் இல்லை” எனப் பா.ஜ.க. அரசு கூறியது. இப்படி, அதிகாரப்பூர்வப் பதில்களுக்கும் பா.ஜ.க.வின் பொதுவெளி சொல்லாடலுக்கும் இடையே பெரும் இடைவெளியை இருக்கிறது. ஆக, நக்சல் என்ற சொல் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் வகையைச் சேர்ந்ததல்ல, மாறாக பா.ஜ.க.வால் அரசியல் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தும் சொல் அவ்வளவே.

    சட்டத்தின் ஆட்சி பொது விவாதங்களுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கும் வழிகாட்ட வேண்டிய ஒரு ஜனநாயக நாட்டில்,

    பா.ஜ.க. தொடர்ந்து உச்சரிக்கும் 'நக்சல்' போன்ற ஆதாரமற்ற சொற்கள், அரசு அதிகாரத்தின் தவறான பயன்பாடு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதுவே மக்களை அச்சுறுத்தும் சொல்லாக உருப்பெறும் நிலை ஏற்படும் முன் அதைத் தடுத்து மக்களுக்குத் தெளிவான புரிதலைக் கொண்டு சேர்ப்பதில், எதிர்க்கட்சிகள் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

https://thehardline.in/from-urban-naxal-to-intellectual-naxal-what-is-the-political-backdrop-behind-the-bjps-use-of-the-term-naxal/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு