அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் பாஜக அரசு!
அறம் இணைய இதழ்
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொல்லைப் புற வழியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறது. இந்த வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர்களை தந்திரமாக உள்ளே நுழைக்கிறதா? இதையே தமிழக அரசும் செய்து வருகிறதா? உண்மை நிலவரம் என்ன?
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அதிரடியாக அரசு நிர்வாக மட்டத்திலும், அரசியல் சட்ட திருத்தங்களிலும் பல அதிரடிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் ஐஏ.எஸ் பொறுப்புகளில் உள்ளவர்கள் மட்டுமே நிர்வகிக்கும் முக்கிய அமைச்சகங்களின் ஜாயிண்ட் செகரட்டரி, இயக்குனர், உதவி இயக்குனர் ஆகிய மிகப் பெரிய பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தவிர்த்து, தனியார் துறையில் இருக்கும் திறமையாளர்களை நியமிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது. இதன் மூலம் தன் கட்சிக்காரர்கள், ஆர்.எஸ்.எஸ்காரர்களை அரசின் முக்கிய துறைகளின் தலைமை பதவிகளுக்கு கொல்லைப் புற வழியாக கொண்டு வருகிறது’’ என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி இருந்தார்.
இது குறித்த உண்மைகளை அறிய முற்பட்டதில் இப்படியாக ஐ.ஏ.எஸ், ஐஎப்எஸ் ஆகிய பதவிகளுக்கு நேரடியாக தனியார் துறையில் இருந்து திறமையாளர்களை தருவித்து பொறுப்பு தரலாம் என்ற பரிந்துரையை second Administration reforms commission (ARS) வழங்கியது. வழங்கிய ஆண்டு 2005. இந்த ஆலோசனை கமிஷனை அமைத்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாகும். இதே போன்ற ஆலோசனையை சுரேந்திர நாத் கமிஷன், ஹோட்டா கமிஷன் ஆகியவையும் தந்துள்ளன.
எனினும், ஐக்கிய முன்னணி அரசு இப்படியான நியமனங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த பரிந்துரைகளின்படி முக்கியமான அமைச்சகங்களின் ஜாயிண்ட் செகரட்டரி, இயக்குனர், மற்றும், துணை இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்தவர்களை அதிரடியாக அரசு துறையின் உயர் பதவிகளில் அமர்த்தியது.
இதற்கு பாஜக அரசு கூறிய காரணம், ’அரசு துறைகளுக்கு வெளியில் உள்ள திறமையாளர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்பதே. இதன்படி தனியார் நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பெரிய பொறுப்பு வகித்தவர்களை விண்ணப்பிக்க கேட்டது. ஒவ்வொரு துறையிலும் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரே ஒருவரை வேலைக்கு எடுப்பதால் இதற்கு இட ஒதுக்கீடு பார்முலா அவசியமில்லை என விளக்கமளித்தது. இந்த வகையில் மிக உயர்ந்த அரசு பொறுப்புகளில் இது வரை மோடி அரசு 63 நபர்களை நியமித்து உள்ளது. தற்போது மீண்டும் 45 பேரை 24 முக்கிய அமைச்சகங்களுக்கு எடுக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானதை வைத்து இந்த விவகாரம் கவனம் பெற்று, ராகுல் காந்தி, மாயாவதி, தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் கண்டணம் தெரிவித்து பேசி வருகின்றனர். ஆனால், சமூக நீதியை அதிகம் பேசும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இது குறித்து நாம் விசாரித்ததில், ”மத்திய பாஜக அரசின் வழிகாட்டலில் தமிழக அரசுமே தமிழக தலைமைச் செயலகத்தின் முக்கிய துறைகளின் உயர் பொறுப்புகளில் தனியார் நிறுவனத் திறமையாளர்களை அழைத்து லட்சக்கணகாக ஊதியத்திற்கு நியமித்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான செய்தியே. இதைக் கண்டித்து அரசு ஊழியர் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி கண்டன அறிக்கைகளும் வெளியிட்டுள்ளன.
இதில் என்ன குறைபாடுகள் உள்ளன…?
இப்படி முக்கிய பொறுப்புகளுக்கு எடுக்கப்படுபவர்களுக்கு அரசு துறை நிர்வாகம் , நடைமுறைகள் எதுவும் தெரியாது. பொதுவாக ஒருவர் ஐ.ஏ.எஸ் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே கடுமையாக அதற்கு தன்னை தயார் செய்து கொள்வார். அப்படி வந்த பிறகு புதிய ஐ.ஏ.எஸ் கேடர்களுக்கு அரசின் சார்பில் விதவிதமான பயிற்சிகள் தரப்படும். அதன் பிறகு இவர்கள் படிப்படியாக அரசு நிர்வாகத்தில் வெவ்வேறு இடங்களில் சுமார் 17 வருடங்கள் பணியாற்றிய பிறகே முக்கிய துறைகளின் ஜாயிண்ட் செகரட்டரி, இயக்குனர் போன்ற பொறுப்புகளில் அமர்த்தப்படுவார்கள்.
ஆனால், புதிதாக மிக உயர்ந்த அரசு பதவிகளுக்கு வருபவர்களுக்கு இந்த அனுபவம் எதுவுமில்லை. அதைவிடக் கொடுமை இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரையே அந்த பதவிகளில் இருப்பார்கள் எனும் போது தான் பல கேள்விகள் எழுகின்றன.
அதிரடியாக ஒரு துறையின் உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கு அதைப் பற்றிய முழுமையான புரிதல் வருவதற்கே சுமார் ஒரு வருடம் ஆகலாம். அடுத்த இரண்டு வருடத்தில் இவர்கள் வெளியேறிவிடுவார்கள். இது சரியாக இருக்குமா? அடுத்ததாக இவர்கள் எந்த தவறுகள் செய்தாலும், முறைகேடுகள் செய்தாலும் மூன்றாண்டுகளில் அவர்கள் வெளியேறிய பிறகு பொறுப்பேற்பார்களா?
இப்படி ஒரு நடைமுறை அரசு துறையில் அறிமுகமாவதற்கே ”கார்ப்பரேட் லாபி’ தான் காரணம் என சொல்லப்படுகிறது. தங்களுக்கு சாதகமான ஒரு முடிவை அரசு துறைகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு தங்களுடைய ஆள் அங்கு இருந்து செயல்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகும். இந்த மூன்று அல்லது ஐந்தாண்டுகளில் தங்களுக்கு விசுவாசமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் வெளியேறிவிட்ட பிறகு அங்கிருக்கும் தங்கள் விசுவாசிகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.
இந்த ஏற்பாட்டை தற்போது பொறுப்பில் உள்ள எந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் விரும்பவில்லை எனத் தெரிகிறது. சீனியாரிட்டிப்படி தங்களுக்கு வர வேண்டிய பொறுப்புகள், உயர்பதவிகள் கொல்லைப் புற வழியாக வரும் யாரோ ஒருவருக்கு தாரை வார்க்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மேலும் அரசின் ரகசியங்கள் இந்த குறுகிய கால உயர் அதிகாரிகளால் சுலபத்தில் வெளியில் கசிந்துவிடும். இன்னும் சொல்வதென்றால், அப்படி கசிவதற்காகவே அவர்கள் உள்ளே வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. அரசு நிர்வாகத்தையே சீர்குலைக்கும் முயற்சி என்று இன்றைக்கு பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் வைக்கும் குற்றச்சாட்டை நாம் புறம் தள்ள முடியாது.
மோடி ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய பணியாளர் திட்டத்தின் கீழ் (சி.எஸ்.எஸ்) நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எண்ணிக்கை சரிபாதிக்கும் கீழே குறைந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காரணம், இது போல கொல்லைப் புற வழியாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை உள்ளே கொள்கை முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளில் அமர்த்துவதே. அதே போல் தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து மத்திய அரசு பொறுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இவை யாவும் அரசு நிர்வாக உயர் பொறுப்புகளை தங்களுக்கான முழு விசுவாசிகளைக் கொண்டு ஆக்கிரமித்துவிட வேண்டும் என்ற பாஜக அரசின் நோக்கமேயாகும்.
இந்தச் சூழலில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எத்தனை பேர் இந்த பொறுப்புகளை பெற்றுள்ளனர். அவர்கள் யார்? யார்? அதே போல அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து அரசு துறைக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்? யார்? என்பதை பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும் எதிர்கட்சிகள்.
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/18894/central-govt-policy-jc-new-posting/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு