அதானிக்காக வங்கிகளை திவாலாக்கிய மோடி!
அறம் இணைய இதழ்
பார்க்கும் நிறுவனங்களை எல்லாம் அதானியின் உடமையாக்குவதற்கும், அவர் கேட்கும் கடன் தள்ளுபடிகளை எல்லாம் வாரி வழங்கி, வங்கிகளை திவாலாக்குவதற்கும் என்றே உருவாக்கப்பட்டது தானா இந்த ஆட்சி..? மக்களின் சேமிப்பை எல்லாம் மன்னவரே திருடனுக்கு தாரை வார்ப்பதா?
சேமித்த பணத்தை சுருட்டியவர்களுக்கும், கடன் வாங்கி கம்பி நீட்டியவர்களுக்கும் இந்த நாட்டில் பஞ்சமில்லை என்றாலும், அரசாங்கமே ஒரு சிலர் கொள்ளையடிக்க உதவ முடியுமா? என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.
இந்தியாவில் பத்து நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.62,000/- கோடிகளை கடனாகப் பெற்றன, ஆனால், அக்கடனை திருப்பி செலுத்த இயலாமல் அந்நிறுவனங்கள் நொடித்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் “ஆபத்பாந்தவன்” போல் உள்ளே நுழைகிறார் மோடியின் நண்பரான அதானி! நட்டத்தில் நொடித்த பத்து நிறுவனங்களையும் தானே வாங்க முடிவு செய்கிறார் அதானி!
வங்கிகளும் தங்களது கடன் வசூலாகி விடும் என்ற மிதப்பில் இருந்தனர்.
ஆனால், வெறும் 16,000 கோடிகள் மட்டும் கொடுத்து, இந்த பத்து நிறுவனங்களையும் அதானி எடுத்துக் கொள்ள “ செட்டில்மென்ட்” போடப்படுகிறது! மீதமுள்ள 46,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்ற பெயரில் வங்கிகள் தலையில் ‘மிளகாய் அரைக்க அனுமதிக்கப்படுகிறது. இத்தகைய அடாவடி தள்ளுபடிக்கு ஆங்கிலப் பெயர் ஹேர் கட் (haircut) ஆகும் .
இதை சட்ட பூர்வமாக்கியது மோடி அரசின் புதிய சட்டமான Insolvency and Bankruptcy Code 2016 ஆகும்.
உழைப்பவர்களும், உட்கார்ந்து சாப்பிடுபவர்களும் தங்களது சேமிப்பை ஒரு பொதுவான , நேர்மையான நாணயமிக்க நபர்களிடமோ, நிறுவனங்களிலோ இருப்பு வைத்துக்கொண்டு பின் வேண்டும் வேளையில் அத்தகைய சேமிப்பை சேதாரமில்லாமல் திரும்ப எடுத்துக் கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
இப்படியான “பொது” அமைப்புகள் மற்றும் “கனவான்கள்” மக்கள் சேமித்த பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிடக் கூடாது என்பதற்காக அரசு அத்தகைய அமைப்புகளுக்கு அங்கீகாரமும், கண்காணிப்பும் சேமிப்பாளர்களுக்கு உத்தரவாதமும் கொடுப்பது அடிப்படை பொருளாதார நடைமுறை ஆகும்.
இத்தகைய அமைப்புகள் வங்கிகள் என பெயரெடுத்த போதும் அவை அரசினுடைய கண்காணிப்பில் இயங்க வேண்டும் என்பது “ முதலாளித்துவ” செயல்பாட்டின் அடிப்படை விதியாகும்.
இவ்வங்கிகள் மக்களின் பணத்தை தொழில் முனைவோருக்கு கடன் கொடுத்து தொழில் வளர்ச்சிக்கும் உதவுவதும், அதை வசூல் செய்வதும் பாரபட்சமின்றி நேர்மையாக நடக்க வேண்டும் , இதை ஒரு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது அடிப்படை நியாயமாகும்.
தனது நண்பர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே, இந்த திவால் மற்றும் திவால் குறியீட்டு சட்டம் 2016-ல் மோடி அரசால் இயற்றப்பட்டது என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறலாம் .
தனது நண்பரான அதானி இந்தியாவில் உள்ள நிறுவனங்களை விழுங்கும் பொழுது அதற்கு வசதியாக அவர் முதலீட்டைக் குறிக்க இந்த ஐபிசி சட்டம் ஹேர்கட் என்ற முறையில் உதவுகிறது. அதானிக்கு 46,000 கோடிகள் லாபம் என்றால், இந்த நாட்டு வங்கிகளுக்கு 46,000 கோடிகள் நட்டம் என்று பொருள்.
# HDIL (திட்டம் BKC) என்ற நிறுவனத்தின் கடன் ரூ 7,795 கோடிகள்! இதை தனதாக்கிய அதானி பிராப்பர்ட்டீஸ் வங்கிக்கு கொடுத்த தொகை வெறும் ரூ 285 கோடிகள் தான்! வங்கி அடைந்த நஷ்டம், 96%.
# ரேடியஸ் எஸ்டேட்ஸ் & டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் கடன் தொகை 1,700 கோடிகள். இதை தனதாக்கிய அதானி குட்ஹோம்ஸ் வங்கிக்கு கொடுத்த தொகை வெறும் ரூ 76 கோடிகளே. இதனால், வங்கி அடைந்த நஷ்டம் 96% மாகும்.
# நேஷனல் ரேயான் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் கடன் தொகை ரூ 1,175 கோடிகள் இதனை தன்வசமாக்கிக் கொண்ட அதானி பிராப்பர்ட்டீஸ் வங்கிக்கு தந்த தொகை ரூ 160 கோடிகள். வங்கி அடைந்த நஷ்டம் 86% மாகும்.
# எஸ்ஸார் பவர் எம்.பி. லிமிடெட் என்ற நிறுவனத்தின் கடன் தொகை ரூ 12,013 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி பவர் லிமிடெட் வங்கிக்கு கொடுத்த தொகை ரூ 2,500 கோடிகள் வங்கி பெற்ற நஷ்டம் 79% மாகும்.
# திகி போர்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கடன் தொகை ரூ 3,075 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி போர்ட் & SEZ லிமிடெட் வங்கிக்கு வழங்கிய தொகை ரூ 705 கோடிகள். வங்கி சந்தித்த நஷ்டம் 77% மாகும்.
# லான்கோ அமர்கந்தக் பவர் என்ற நிறுவனத்தின் கடன் தொகை ரூ 15,190 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி பவர் வங்கிக்கு தந்ததோ வெறும் ரூ 4,101 கோடிகள். வங்கியின் இழப்பு 73% மாகும்.
# கோஸ்டல் என்ர்ஜென் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கடன் தொகை ரூ 12,300 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி பவர் லிமிடெட் வங்கிக்கு தந்த தொகையோ ரூ 3,500 கோடிகள். 72% மாகும்.
# ஆதித்யா எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்தின் கடன் தொகை 593 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி பிராப்பர்ட்டீஸ் வங்கிக்கு வழங்கிய தொகை ரூ 265 கோடிகள். வங்கி அடைந்த நஷ்டம் 55% மாகும்.
# காரைக்கால் போர்ட் என்ற நிறுவனத்தின் கடன் தொகை 2,959 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி போர்ட் & SEZ லிமிடெட் வங்கிக்கு வழங்கிய தொகை ரூ 1,485 கோடிகள். வங்கி அடைந்த நஷ்டம் 43% மாகும்.
# கோர்பா வெஸ்ட் பவர் கம்பெனி என்ற நிறுவனத்தின் கடன் தொகை ரூ 5,032 கோடிகள். இதனை உரிமையாக்கிக் கொண்ட அதானி பவர் லிமிடெட் வங்கிக்கு வழங்கியதோ, வெறும் ரூ 2,900 கோடிகள். வங்கி அடைந்த நஷ்டம் 42% மாகும்.
இந்த வகையில் வங்கி வழங்கிய கடன் தொகை மொத்தம் ரூ 61,832 கோடிகள். ஆனால், வங்கிக்கு கிடைத்ததோ ரூ 15,997 கோடிகள் மட்டுமே! இழந்த தொகையோ 74 % மாகும்.
அனில் அம்பானி போன்ற மோடியின் நண்பர் வங்கிகளிடமிருந்து 43,000 கோடிகள் கடனாக சுருட்டிய பின்னர் , அதிலிருந்து “விடுபட” வெறும் 455 கோடிகள் கட்டினால் போதும் என்று உதவுவதும் இந்த சட்டம் தான். அம்பானிக்கு லாபம் , வங்கிகளுக்கோ நட்டம்.
இவ் வங்கிகளில் சேமிக்கப்பட்ட மக்களின் பணம் இவ்வாறு சூறையாடப்பட அனுமதிப்பதே இந்த சட்டத்தின் பிரதான நோக்கம் என்ற குற்றச்சாட்டு மிகையல்ல.
இதற்கு வழி வகுத்துக் கொடுப்பதே தனது தலையாய கடமையாக மோடி கருதி, சட்டங்களை இயற்றுகிறார், விதிகளை திருத்துகிறார், உத்தரவுகள் பிறப்பிக்கிறார்.
இதுவரை இருந்து வந்த அரசுகள் சில நிறுவனங்களுக்கு சில சலுகைகள் அளித்தன என்றாலும், இப்பொழுது மோடி அரசு முற்றிலும் வேறான புதிய பாணியை நடைமுறை படுத்துகிறது எனலாம்.
தனது நண்பர்கள் பல்வேறு நிறுவனங்களை வாங்கி ஏப்பம் விட(acquire) ஏதுவாக ஐ பி சி போன்ற சட்டங்களை இயற்றி சூழலை இலகுவாக்குவதும், அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் தொழில் அதிபர்களை அச்சுறுத்தி அவர்களை அத்தொழிலில் இருந்து வெளியேற்றுவதையும் மோடி அரசு செய்கிறது.
ஜி வி கே (GVK) நிறுவனத்தை மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றியதும், டி.பி. ராஜு குடும்பத்தினரை கங்காவரம் துறைமுகத் திட்டம் மற்றும் கிருஷ்ணபட்டினம் துறைமுக முகமையிலிருந்து நவயுகா நிறுவனத்தை அதானி வெளியேற்றி அவற்றை வாங்கிக் கொண்டதும் நாடறிந்த ரகசியம், மோடி ஆட்சியின் மகிமை ஆகும்.
இவ்வாறாக அதானியின் வீங்கிப் பெருத்த வளர்ச்சிக்கு – வித்திடும் மோடி அரசின் கொள்கைகளையே க்ரோனியிசம் என்று அழைக்கிறோம்.
ஐ பி சி யின் உதவியாலும் , புலனாய்வு நிறுவனங்களான சி.பி ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் உதவியாலும் பல்வேறு நிறுவனங்களை வாங்கி குவித்துள்ள அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இன்று முந்திரா போர்ட், கிருஷ்ணாபட்டினம் போர்ட், கங்காவரம் போர்ட், காரைக்கால் போர்ட், எர்ணாவூர் போர்ட், விழிஞ்சியம் போர்ட் ஆகியவை உள்ளன.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆறு துறைமுகங்களை தன்வசமாக்கியுள்ள அதானி குழுமம் அதே போல மங்களுர், அகமதாபாத், லக்னெவ், திருவனந்தபுரம், கெளகாத்தி, ஜெய்ப்பூர் ஆகிய விமானத் தளங்கள் பலவற்றையும் தன்னகத்தே வைத்துள்ளதற்கும் இதே மோடி அரசின் கொள்கைகளே காரணம்.
விமானதளங்கள், துறைமுகங்கள், கட்டுமானம், எரிசக்தி போன்றவற்றில் ஏகபோக சக்தியாக அதானி குழுமத்தை மோடி வளர்த்தெடுக்கிறார். இவற்றின் மற்றொரு அம்சமாக குறி வைக்கப்படும் நிறுவனங்களின் சொத்துக்களை குறைத்து மதிப்பிடுவதும் , அந்த தொழிலதிபர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதும், நெருக்கடி – பண விஷயத்திலோ அல்லது மற்ற விஷயங்கள் மூலமாகவோ- கொடுப்பதும் மோடி அரசின் வாடிக்கையாக உள்ளது . இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மும்பை விமான தளத்திலிருந்து ஜி வி கே நிறுவனத்தை வெளியேற்றியதை குறிப்பிடலாம்.
அதே போன்று கிருஷ்ணாபட்டினம் துறைமுக திட்ட முனைவரான ‘நவயுகா’ நிறுவனத்திற்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.
இதன் மூலம் தொழில் முனைவோர்களும் ஒரு ‘ நிச்சயமற்ற தன்மையை ‘ எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஓரளவு வெற்றியை ருசிக்கும் பிற நிறுவனங்களும் தங்களது தொழில் “திருடப்படாமல்” இருக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அதானியின் பெயரை உச்சரித்தாலேயே ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியதும், மகுவா மொய்தராவின் பதவியை பறித்ததும் மோடி அரசின் “சின்ன புத்தியை” மட்டும் காட்டவில்லை. இதற்குப் பின்னால் இருக்கும் மாபெரும் சதிவலைப் பின்னலையும் இங்கு கவனிக்க வேண்டும் .
இந்த சதிக்கு உறுதுணையாக அதிகார வர்க்கமும், கீழமர்வு நீதிபதிகளும் சட்டத்தை வளைக்க தயக்கம் ஏதுமின்றி மோடி அரசுடன் ஒத்துழைத்ததை என்னவென்று கூறுவது…!
2024 நாடாளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை கிடைக்காவிடினும், “கைத்தடி”களின் உதவியால் ஆட்சியில் இருக்கும் மோடி , அதானிக்கு கவசமாக செயல்படுவதில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை என்பது செபி தலைவர் மாதவி பூரி புச் விவகாரத்தில் வாய்மூடி மௌனியாக இருப்பதில் இருந்து அறிய முடிகிறது.
பங்கு வர்த்தக சந்தையில் அதானி குழுமம் நடத்திய “தில்லு முல்லுகளை” விசாரித்து கண்டிக்க வேண்டிய செபி நிறுவனமே அதானிக்கு அடிமையாக இருப்பது கடந்த மாதம் அம்பலமானது. உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும், 18 மாதங்களாக அதானி குழுமத்தின் மீதான விசாரணையை முடிக்காமல் இழுத்தடிப்பதற்கு காரணம், அதன் தலைவர் மாவி பூரி புச்சின் சார்பு நிலையே என்பது அம்பலமான பின்னரும், அவரை அப்பதவியில் நியமித்த மோடி – ஷா கும்பல் மௌனமாக இருப்பது எதை உணர்த்துகிறது?
அதானி -பூரி – மோடி கூட்டு வேரோடு சாய்க்கப்படாதவரை இந்திய பொருளாதாரம் உருப்பட போவதில்லை. ஜல் ஐங்கிள் ஜமீன் என்று பேசப்படும் நீர், வனம் மற்றும் நிலம் சார்ந்த அரசு கொள்கைகள் அதானிக்கு சாதகமாக மாற்றுவதில் மோடி அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது. இவ் வெற்றிகளெல்லாம் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை புதைக்கும் செயல்களாகும் .
வளங்களை பறி கொடுத்து வளர்ச்சியை எட்ட முடியாது!
உரிமைகளை அடகு வைத்து பெருமைகளை பேச கூடாது!
(கட்டுரையாளர்; ச.அருணாசலம்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/19112/adani-modi-bankloan/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு