ஒளிபரப்புச் சேவைகள் சட்டமுன்வடிவு: எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் குரூர முயற்சி

தீக்கதிர்

ஒளிபரப்புச் சேவைகள் சட்டமுன்வடிவு: எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் குரூர முயற்சி

பொது மக்களின் கருத் துரைகளுக்காக, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் 2023 நவம்பரில் சுற்றுக்கு விடப்பட்டி ருக்கும், 2023ஆம் ஆண்டு ஒளிபரப்புச் சேவைகள் (முறைப்படுத்தல்) சட்டமுன் வடிவின் வரைவு, மோடி அரசாங்கத்தால் கருத்துக் கூறும் உரிமையின் கழுத்தை நெரித்திடும் மற்றுமொரு நடவடிக்கை யாகும். 

இந்தச் சட்டமுன்வடிவானது, சுமார் முப்பதாண்டு காலமாக இருந்துவரும் 1995ஆம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர் க்ஸ் முறைப்படுத்தல் சட்டத்தை (Cable Television Networks Regulation Act, 1995) மாற்றியமைத்திடக் கோருகிறது. இதற்கு முன்பு, அரசாங்கம் 2023ஆம் ஆண்டின் தொலைத்தகவல் சட்டம், 2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act) மற்றும் அதற்கு முன்பிருந்துவந்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழி காட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் (Infor mation Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) கொண்டு வந்திருந்தது.  இந்தச் சட்டங்கள் மற்றும் விதிகள் அனைத் தும், அரசமைப்புச் சட்டத்தினை மீறுவதா கக் கூறி, மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றன. 

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தண்டனை விதிக்கவும்...

இப்போது கொண்டு வரப்படும் சட்ட முன்வடிவும் உண்மையில், 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளில் கூறப்பட்டிருந்த ஷரத்துக்களையே மீண்டும் கொண்டு வரக் கோருகிறது. இந்தச் சட்டங்கள் மற்றும் விதிகள் அனைத்துக்கும் இடை யேயிருக்கும் பொதுவான கருப்பொருள் என்பது, உலகளாவிய அளவில் விரிவடை ந்துவரும் ஊடகங்களையும், டிஜிட்டல் தரவுகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அற்பக் கார ணங்களைக் கூறி தண்டித்திட வேண்டும் என்பதேயாகும்.

ஒலிபரப்புச் சேவைகள் சட்டமுன் வடிவு, தொலைக்காட்சி அலைவரிசைகளி லிருந்து, மேலதிக ஊடகச் சேவை எனப் படும் ‘ஓடிடி’ (Over The Top media service) இயங்குதளங்கள் மற்றும் சுயேச் சையான யூடியூப் அலைவரிசைகள் (You Tube channels) உட்பட அனைத்து வகையான ஊடகங்கள் மீதும் அரசாங் கத்தின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்திடக் கூடிய விதத்தில் தணிக்கைக்கான ஒரு சாசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒழுங்குமுறை விதிகளை ஒழுங்குபடுத்து கிறோம் என்ற பெயரிலும், பகுத்தறிவுப் படுத்துகிறோம் என்ற பெயரிலும் தொலைக் காட்சி மற்றும் இணையம் மூலம் மேற் கொள்ளப்பட்டுவரும் அனைத்து விதமான ஒளிபரப்புகள் மீதும் ஒரு சீரான மற்றும் கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கிறது. மேலும் அரசாங்கத்திற்கு தன்னிச்சை யான முறையில் தண்டனைகள் விதிக்கும் அதிகாரங்களையும் வழங்குகிறது.  

சமூக ஊடகங்களுக்கும் விரிவாகும் தணிக்கை

மேலும் இந்தச் சட்டமுன்வடிவானது, வாட்சப் (WhatsApp), டெலகிராம் (Tele gram) போன்ற சமூக ஊடகங்களுக்கும்  தணிக்கை முறையை விரிவுபடுத்தி இருக் கிறது. இந்தச் சட்டமுன்வடிவின்கீழ் அளிக் கப்பட்டுள்ள வரையறைகளைப் பார்க்கும் போது, அதன் அரக்கத்தனமான நோக் கத்தை தெளிவாகவே பார்க்க முடிகிறது. உதாரணமாக, “நிகழ்ச்சிநிரல்களை” (“Programmes”) வரையறை செய்துள்ள 1(dd) பிரிவானது, அதன்கீழ், ஆடியோ (audio), வீடியோ (vedio) மற்றும் அனை த்து விதமான சித்திரங்களையும் வரைய றுத்திருக்கிறது. எந்தச் செய்தியாக இருந் தாலும், நடப்பு விவகாரங்களாக இருந்தா லும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும். அனைத்தும் அரசின் சட்டத்தைக் கறாரா கப் பின்பற்றிட வேண்டும். இதன்கீழ் திறன் பேசி (smart phone) மூலம் அனுப்பப் படும் தகவல் அல்லது கார்ட்டூன் படங்கள் உட்பட ஊடகங்கள் மூலம் அனுப்பப் படும் அனைத்தும், நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு இச்சட்டமுன்வடிவு வகை செய்கிறது.

செய்திகள் தொடர்பான எந்த நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் அது இந்தச் சட்டத் தினைக் கறாராகப் பின்பற்றிட வேண்டும். திறன்பேசி மூலமாக செய்தி அல்லது கார்ட்டூன்கள் அனுப்பினாலும், இந்த சட்டத்தின் ஷரத்துக்களைப் பின் பற்றியாக வேண்டும். இல்லையேல் தண்ட னைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்தச் சட்டமுன்வடிவானது அனைத்து யூடியூப் செய்தியாளர்கள், செய்திகளை அலசி ஆராய்பவர்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி இணையதளங்களுக்கு எதிராக செயல் படுவதற்கான ஒரு கருவியாக மாறிடும். இவற்றின் சந்தாதாரர்களாகிறவர்களும் (subscribers) கூராய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். சமூக ஊடகங்களுக்கான வரையறைகளும் அநேகமாக தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ஒத்ததாகவே இருக்கிறது.

அனைத்து ஒளிபரப்பாளர்களும் தங்கள் சந்தாதாரர்களின் தரவை அவ்வப் போது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் ஒருவரின் தனி நபர் அந்தரங்கம் (privacy) காற்றில் பறக்கவிடப்படுகிறது. மேலும், ஒளிபரப் பப்படும் செய்தி தொடர்பான உள்ளடக் கத்தை “முன் சான்றளிப்பதற்காக” (“pre-certified”) இதற்காக அரசாங் கத்தால் அமைக்கப்படும் உள்ளடக்க மதிப்பீட்டுக் குழுவிடம்  (CEC-Content Evaluation Committee) அளித்திட வேண்டும். இந்த மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கோரம் (quorum) போன்றவற்றை அரசாங்கம் நிர்ண யம் செய்திடும்.

அதிகாரிக்கு அதிகாரம்

இந்த சட்டத்தின் ஷரத்துகள் மீறப்படு வதாக இதற்காக “அதிகாரம் அளிக்கப் பட்டுள்ள அதிகாரி” (“authorized officer)  நம்பினால், இவ்வாறு மீறப்படுவதற்காக சாதனமாக இருந்த கருவி அரசாங்க அதி காரியால் கைப்பற்றப்பட்டு, அரசாங்கத் திற்கு ஆதாயம் செய்யப்படலாம். அதே போன்றே, அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி, எந்தவொரு நிகழ்ச்சிநிரலும், தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக வோ, ஒருமைப்பாட்டுக்கு எதிராகவோ அல்லது பாதுகாப்புக்கு எதிராகவோ, இதர நாடுகளுடன் சுமூக உறவுகளைப் பேணுவதற்கு எதிராகவோ, பொது ஒழுங்குக்கும், கண்ணியத்திற்கும், அற நெறிக்கும் எதிராக இருப்பதாகவோ கருதி னால் அந்த நிகழ்ச்சிநிரலைத் தடை செய்திட முடியும். இவ்வாறு அதிகாரம் பெற்ற அதிகாரிக்கு எவ்விதமான தெளி வும் இல்லாது அளிக்கப்பட்டுள்ள அதிகா ரம் என்பது, அரசாங்கத்தின் கட்டுப் பாடற்ற தணிக்கைக்கான அழைப்பேயா கும்.    எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தச் சட்டத்தின்கீழ் ஓர் ஒளிபரப்பு ஆலோச னைக் குழு அமைக்கப்படும். அந்த ஆலோ சனைக்குழு, நிகழ்ச்சிநிரல்களில் காட்டப் படும் செய்திகள் அல்லது விளம்பரங்க ளில் சட்டத்தின் ஷரத்துக்கள் மீறப்பட்டி ருந்தால் அது தொடர்பாக அரசாங்கத் திற்கு அறிவுரை வழங்கிடும்.

கருத்துச் சுதந்திர பன்முகத் தன்மைக்கு அச்சுறுத்தல்

இந்த ஆலோசனைக் குழுவிற்கு உறுப்பினர்களை அரசாங்கமே சொந்த மாக நியமனம் செய்திடும். இந்த உயர் மட்ட அமைப்பானது சுயேச்சையான கூராய்வை மேற்கொள்ளும் அல்லது தீர்ப்பு வழங்கும் என்பது சந்தேகமேயா கும். இந்தச் சட்டமானது, எந்தவொரு நிகழ்ச்சிநிரலும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கவில்லை என்று அரசாங்கம் கரு தினால், அதனை முறைப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியும் என்றும் கூறுகிறது. இந்தச் சட்டத்தின் விவ ரங்கள் இன்னமும் முழுமையாக வெளி வரவில்லை. நாட்டிலுள்ள ஊடகங்களில் பெரும்பாலானவை விரல்விட்டு எண்ணக் கூடிய கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் குவிக்கப்பட்டிருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துக்களின் பன்முகத்தன்மை க்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந் திடுவது தொடர்பாக இந்தச் சட்டம் எது வுமே கூறாமல் மவுனமாக இருக்கிற அதே சமயத்தில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி நிரல்களின் உள்ளடக்கம் குறித்து மட்டுமே இது ஆராய்கிறது.

கண்டு கொள்ளப்படாமல் போகும் கருத்துக்கள்

மற்ற சட்டங்களுக்கு என்ன கதி ஏற் பட்டதோ அதே கதி இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக வல்லுநர்களும், மக்களும் அனுப்பும் கருத்துக்களும் கண்டுகொள் ளப்படாமல், இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படக்கூடும். இந்தச் சட்ட முன்வடிவு அரசமைப்புச்சட்டத்தின்படி செல்லத்தக்கதா என்பது குறித்து நீதி மன்றங்களில் வழக்கு தொடரப்படலாம்.  

மோடி அரசாங்கம், வல்லுநர்கள் மற்றும் பொதுவான நுகர்வோரின் கருத் துக்களுக்கு செவிசாய்த்து, அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டு, சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறுவது நல்லது. ஜனநாயகம் என்றால் அதற்கு பல்வேறு கருத்துக்களும், பல்வேறு சிந்தனைகளும் ஒன்றையொன்று மோது வது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். எனினும், ஆளும் பாஜக மற்றும் மோடியால் தலை மை தாங்கப்படும் அதன் அரசாங்கமும் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வரும் குரல்களும், மாறுபட்ட கருத்துக்களும், குறிப்பாக பொதுத் தேர்தல்களுக்கு ஒருசில மாதங்களே இருக்கும் நிலை யில், அரசியல் அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை அரித்துவிடும் என்று கவலைப்படுவதாகத் தெரிகிறது. அத னால்தான், ஒளிபரப்பு சேவைகள் சட்ட முன்வடிவு போன்ற சட்டங்களைக் கொண்டுவருவதில் குறியாக உள்ளது.

எதிர்ப்புக்குரலை ஒடுக்கும் குரூர முயற்சி

உண்மையில், ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பயன்படுத்தியேகூட அரசாங்கம் பல  ஊடகவியலாளர்களைச் சிறைக்குள் தள்ளி, பொய் வழக்குகள் புனைந்து, அரசாங்கத்தின் கொள்கை களைக் கேள்விக்கு உள்ளாக்கும் உள்ள டக்கத்தை வெளியிடுவதையோ அல்லது ஒளிபரப்புவதையோ தடுத்து வரு கிறது. இவ்வாறு ஓர் அச்ச உணர்வை சுதந் திரமாகச் செயல்படும் ஊடகவியலாளர் கள் மத்தியில் உருவாக்கி இருக்கிறது. இப்போதே ஆளும் கட்சியும், சங் பரிவா ரத்தின் கீழ் இயங்கும் பல அமைப்புகளும் உண்மையை வெளிக்கொணரும் குரல்களுக்கு எதிராக வீதியில் நின்று சண்டை போடுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய அனைத்துவித மான கேடுகெட்ட செயல்களின் பின்னணி யில் பார்க்கும்போது, ஒளிபரப்பு சேவை கள் சட்டமுன்வடிவு என்பதும் தங்கள் ஆட்சிக்கு எதிராக எழும் குரலை மவுனப் படுத்தும் குரூரமான முயற்சியே தவிர வேறல்ல. இந்தியாவில் ஜனநாயகம் பாது காக்கப்பட வேண்டுமானால், அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்துநின்று இதனை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.

ஜனவரி 24, 2023, 

தமிழில் : ச.வீரமணி

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு