டிரம்பை சமாதானப்படுத்தும் மோடி? அமெரிக்காவுடன் ரூ.38,842 கோடிக்கு டீல் போடும் இந்தியா! பின்னணி

Oneindia Tamil

டிரம்பை சமாதானப்படுத்தும் மோடி? அமெரிக்காவுடன் ரூ.38,842 கோடிக்கு டீல் போடும் இந்தியா! பின்னணி

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் நம் நாடு பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருநாடுகள் இடையே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்காவிடம் இருந்து ரூ.38,842 கோடிக்கு 6 பி-81 ரோந்து விமானங்களை வாங்குவதற்கான டீலை முடிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் இன்னும் சில நாட்களில் இந்தியா வர உள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டிரம்ப் நம் மீது வரி போட்டுள்ளார்.

இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது டிரம்ப் ஓரளவு நம் நாட்டை விமர்சிப்பதை நிறுத்தி உள்ளார். அதோடு அவ்வப்போது பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார்.

விமானம் வாங்க முடிவு

ஆனாலும் இருநாடுகள் இடையேயான வர்த்தக பதற்றம் தணியவில்லை. இருநாடுகள் இடையே ஒருபுறம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நம் நாடு அமெரிக்காவுடன் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடற்படையின் கண்காணிப்பு பணிக்காக அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக பி -81 ரோந்து விமானத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது இதுதொடர்பாக இருநாடுகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக அமெரிக்க பிரதிநிதிகள் இந்தியா வர உள்ளனர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு துறை கொள்கை பிரிவை (NIPO)சேர்ந்தவர், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏஜென்சி(DSCA), போயிங் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்தியா வர உள்ளனர். இவர்கள் வரும் 16 ம் தேதி முதல் 19ம் தேதி வரை இந்தியாவில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ரூ.38,842 கோடி ஒப்பந்தம்

அதன்படி அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 6 பி -81 ரக கடல் ரோந்து விமானங்களை வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் ரூ. 38,842 கோடியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நம் நாடு பி 81 கண்காணிப்பு விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

மொத்தம் 12 விமானங்கள் நம்மிடம் உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அந்த கடல் பிராந்தியத்தில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் விமானங்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தற்போது அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விமானத்தில் சிறப்பு என்ன?

இந்த பி -81 ரக கடல்சார் ரோந்து விமானம் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த விமானம் 41,000 அடி உயரம் வரை பறக்க முடியும். இந்த விமானத்தில் anti Ship ஏவுகணைகளை பொருத்த முடியும். அதேபோல் Cruise வகை ஏவுகணைகளை பொருத்தி துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும்.

AN/APY-10 ரேடார் உள்ளதால் துல்லியமாக படம் பிடிக்க முடியும். அதேபோல் MAD அமைப்பின் மூலமாக நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கும் திறன் கொண்டது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானம் கடல் ரோந்து பணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் மீண்டும் இந்த விமானங்களை இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது.

திடீரென நடந்த மாற்றம்

முன்னதாக கடந்த மாதம் இந்த விமானம் வாங்கும் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்கா -இந்தியா இடையே டீல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் பின்னணியிலும் முக்கிய விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கடந்த மாதம் நம் நாட்டின் மீது டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தது மட்டுமின்றி நம்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக தாக்கி பேசினார். இந்தியாவின் பொருளாதாரம் செத்துப்போய் விட்டதாக அடாவடி செய்தார்.ஆனால் தற்போது நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இது டிரம்புக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் அவர் நம் நாட்டின் மீது காட்டமான விமர்சனங்களை தவிர்த்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை நண்பர், சிறந்த பிரதமர், இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளதாக கூறி வருகிறார். இதனால் இந்தியா - அமெரிக்கா உறவு மீண்டும் வலுவாகும் என்று கூறப்பட்டது. இப்போது அமெரிக்காவுடன் நம் நாடு பி 81 ரக கடல் ரோந்து விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/delhi/amid-of-donald-trump-tariffs-tension-india-decided-to-acquire-6-p-81-maritime-patrol-aircraft-from-u-735425.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு