ஆசியாவின் இரு பெரும் சக்திகள்: அமெரிக்காவின் நெருக்குதல்களையும் வர்த்தகப் போர்களையும் கடந்து சீனாவும் இந்தியாவும் உறவுகளைப் பலப்படுத்துகின்றன
விஜயன் (தமிழில்)

சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. இந்த இரண்டு அண்டை நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது சிறு மோதல்கள் உட்பட பல்வேறு காலகட்டங்களில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கின்றன. தீர்வுறாத எல்லைப் பூசல்களுக்கு முக்கியக் காரணமாய் அமைந்தது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கமே; பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் பல பிராந்தியப் பிணக்குகளை வேண்டுமென்றே முடிவுக்குக் கொண்டு வராமல் விட்டுச் சென்றதே எல்லைத் தகராறுகளுக்கு காரணமாகும். சீனா மற்றும் இந்தியா இடையேயான எல்லைகளில் நிலவிய பதட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் வன்முறையாக வெடித்திருக்கின்றன, இதனால், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் பல்லாண்டுகளாகவே ஒருவித இறுக்கத்துடனேயே நீடித்து வந்தன.
இருப்பினும், அண்மைக் காலங்களில், பல்துருவ உலக ஒழுங்கு மேலெழுந்து வரும் நிலையில், சீனாவும், இந்தியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்பயணம் எளிதானதாக இருக்கவில்லை; பல்வேறு இடர்ப்பாடுகளும் இருந்தன. இருப்பினும், பதட்டங்களைத் தணித்து, பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு நிலையான, நீடித்த வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பினை உருவாக்க இரு நாடுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
அண்மைக் கால மாதங்களில், அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தை இரு நாடுகளும் எதிர்கொண்டதால், இந்த உண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்க டிரம்ப் ஆட்சியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எதிராக வரிகளை விதித்து, வர்த்தகப் போர்களைத் தொடங்கி வைத்தது. இதுவே, இரு நாடுகளையும் தங்கள் உறவுகளை மீண்டும் சீரமைக்கத் தூண்டியது. ஆகஸ்ட் 18 அன்று, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு வருகைத் தந்தார். சீன வெளியுறவு அமைச்சகம் இப்பேச்சுவார்த்தைகளை “நேர்மறையானவை, ஆக்கபூர்வமானவை, எதிர்கால நோக்கு கொண்டவை” என விவரித்தது. இரு தரப்பினரும் இரு நாட்டினுடைய, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசித்தனர். இரு நாட்டுத் தலைவர்களின் “முக்கியமான பங்கு” என்பது இதரப்பு உறவுகளை போர்த்தந்திர நோக்கில் வழிநடத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் உள்ளது என்பதை வலியுறுத்தி, பல்வேறு முக்கிய அம்சங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டன.
“ஒரு நிலையான, ஒத்துழைப்புடன் கூடிய, எதிர்கால நோக்கு கொண்ட சீன-இந்திய உறவு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் பொதுவான நலன்களுக்கும் பெரிதும் உதவும்” என்பதை இருதரப்பினரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டனர். தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை சீனா வரவேற்றது. அதேவேளையில், SCO-விற்கு சீனா தலைமை தாங்குவதற்கு இந்தியாவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியது. 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் பிரிக்ஸ் உச்சிமாநாடுகளை நடத்துவதற்கு பரஸ்பரம் ஆதரவளிக்க இரு நாடுகளும் உறுதி பூண்டன.
இரு நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக உறவை குறிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு சீனாவும், இந்தியாவும் ஒப்புக்கொண்டன. சுற்றுலா மற்றும் வணிகத்தைப் பெருக்குவதற்கு, நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், விசாக்களை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
“நட்பு ரீதியான ஆலோசனைகள் மூலம் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கூட்டாகப் பேணுவதற்கு” இரு நாடுகளும் சம்மதித்தன. முக்கியமாக, ‘பன்முக உலக ஒழுங்கிற்கு ஆதரவளிப்பது, முக்கியமாக சர்வதேச பிரச்சனைகள், பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது, உலக வர்த்தக கழகத்தை மையமாகக் கொண்ட பல்துருவ உலக வர்த்தக முறையைப் பாதுகாப்பது, பல்துருவ உலக ஒழுங்கை ஆதரிப்பதுடன் வளரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பது’ ஆகிய உறுதிமொழிகளை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இறுதியில் கூறப்பட்ட அம்சம் மேற்கத்திய சக்திகளுக்கு நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தும்; ஏனெனில், அவை சீனா மற்றும் இந்தியாவை ஒன்றுக்கொன்று எதிராகத் தூண்டிவிட்டு, 'பிரித்தாளும் சூழ்ச்சி'யைப் பயன்படுத்துவதென்று நம்பியிருந்தன. ஆனால், இந்த இருபெரும் ஆசிய சக்திகள் இத்தகைய சூழ்ச்சிகளை உணர்ந்து, அவற்றை அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
“இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் போட்டி நாடுகளாகக் கருதாமல், கூட்டாளிகளாகவே நோக்க வேண்டும்” என தனது இரண்டு நாள் பயணத்தின்போது, வாங் யீ குறிப்பிட்டார். ஒத்துழைப்பை நோக்கிய ஒரு நேர்மறையான போக்கினை அவர் கோடிட்டுக் காட்டினார். இருதரப்பு உறவுகளில் நிலவிய கடினமான காலகட்டத்திற்குப் பிறகு இரு அண்டை நாடுகளும் “முன்னோக்கிச் செல்ல முற்படுகின்றன” என்பதை ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். எல்லைகளில் நிலைத்தன்மை திரும்புவதைக் கண்டு பீஜிங் “மகிழ்ச்சி கொள்கிறது” என்றும், “சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்ததல்ல என்பதை இரு தரப்பினரும் உணர்ந்துள்ளனர்” என்று வாங் யீ அவர்களும் தெரிவித்தார். இந்த அறிக்கைகள் வெறும் தற்காலிக பதற்றத் தணிப்பைக் காட்டிலும் மேலான ஒன்றைக் காட்டுகின்றன — இது கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளின் முழுமையான மறுமலர்ச்சியாகவே காட்சியளிக்கிறது. இது டெல்லி மற்றும் பீஜிங்கிற்கு மட்டுமல்லாமல், பரந்த பல்துருவ உலக ஒழுங்கிற்கும் பேருதவியாய் அமையும், ஏனெனில் சீனாவும், இந்தியாவும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாக விளங்குவதோடு, முக்கியப் பொருளாதாரங்களாகவும் திகழ்கின்றன.
எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதை ஒரு எதிர்மறைப் போக்காகவே கருதுகின்றன. ஆனால், இவ்வாறு நிகழ்வதற்கு அவர்கள் தங்களையே நொந்து கொள்ள வேண்டும். வாஷிங்டனின் இடைவிடாத அழுத்தமும்கூட சீன-இந்திய உறவுகள் புதுப்பிக்கப்படுவதற்கு ஒரு பெரும் பங்காற்றியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும், குறிப்பாக ரஷ்யாவுடனான வர்த்தகம் குறித்து, அழுத்தம் கொடுத்து வருவதால், சீனா மற்றும் இந்தியா போன்ற பெரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் தங்களுக்குள் நெருங்கிய ஒத்துழைப்பை நாட அதிக முனைப்பு காட்டுகின்றன.
ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் ஏற்படும் “ஆபத்துகள்” குறித்த அமெரிக்காவின் முறையீடுகளை யாரும் காது கொடுத்துக்கூட கேட்க விரும்புவதில்லை; ஏனெனில், அமெரிக்காவே ரஷ்யாவிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. ஆயினும், அமெரிக்க அதிகாரிகள் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதை நிறுத்தவில்லை. உதாரணமாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, ஃபைனான்சியல் டைம்ஸ் இதழில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதற்காக இந்தியாவை அண்மையில் கடுமையாக விமர்சித்தார்.
“‘ரஷ்ய எண்ணெய்க்கான உலகளாவிய வர்த்தக மையமாக இந்தியா செயல்படுகிறது; அதாவது, தடைசெய்யப்பட்ட கச்சா எண்ணெயை மதிப்புமிக்க ஏற்றுமதிப் பொருளாக மாற்றுவதோடு, மாஸ்கோவுக்குத் தேவையான அமெரிக்க டாலர்களையும் வழங்குகிறது’.” இந்தியா “ரஷ்யாவின் இராணுவ பொருளாதாரத்திற்கு நிதி வழங்கி வருகிறது” என்று நவரோ குற்றம் சாட்டினார். மேலும், இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரினார். ரஷ்ய எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதை “சந்தர்ப்பவாதமானது” என்றும், “ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பது” என்றும் அவர் சாடினார்.
இந்த விமர்சனம், அமெரிக்கா, இந்தியாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கிய சில வாரங்களிலேயே வெளிப்பட்டது. இதற்குப் பதிலடியாக, இந்தியா பல ஆயுத ஒப்பந்தங்களை இரத்து செய்தது. இந்தியா இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததில் வியப்பில்லை.
அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் முடிவில்லாத “அறநெறி” உபதேசங்களைக் கேட்டு இந்தியா சலிப்படைந்துவிட்டது எனலாம். பல நூற்றாண்டுகளாக காலனியாதிக்க ஆட்சியையும் போர்களையும் நடத்திய மேற்குலக நாடுகளுக்கு, காலனியாதிக்கத்தின் கீழ் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு, அறிவுரை வழங்கும் அறுகதை இல்லை. மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன், மேற்குலக நாடுகள் தங்களது சொந்தச் செயல்பாடுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
இந்தக் கட்டுரை முதலில் InfoBrics தளத்தில் வெளியானது.
டிராகோ போஸ்னிக் ஒரு நடுநிலை புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர். அவர் உலகமயமாக்கல் ஆராய்ச்சிக்கான மையத்தில் (CRG) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.globalresearch.ca/china-india-strengthen-ties/5898565
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு