கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கான கடுங்கோடை பருவம் துவங்கியிருக்கிறது...

துரை. சண்முகம்

கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்கான கடுங்கோடை பருவம் துவங்கியிருக்கிறது...

தவிக்கும் பாசிச பாலைவனத்தில் தவிர்க்க இயலாத நீரூற்று திமுக! 

இதில் முழுக்க நனையாமல் அப்படி என்ன உங்களுக்கு பிடிவாதம்? நனைந்த நாங்கள் சளி பிடித்து கரைந்தா விட்டோம்!  என்று திருமுழுகாட்டுக்கு தலையை கொடுக்காதவர்களைப் பார்த்து தலைகால் தெரியாமல் கொதித்து கொப்பளிக்கிறார்கள்.

வழி வேறாக சித்திப்பவர்கள் வரட்டுவாதிகளாகவே அற சாபப்படி ஆகட்டும்!

இந்த ஐந்து ஆண்டுகளில் 
திமுகவை ஆதரித்து நின்றதன் மூலம் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க / பாசிச வழித்தடங்களை தடுத்து நிறுத்திய பலாபலன்கள் என்ன? 

இந்து மத வெறி வெளிப்படும் படுகொலைகளை மட்டுமே பாசிசமாக பார்க்கிறார்கள் சிலர். இந்த ஐந்து ஆண்டுகளில் கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக போராடிய பலர் தமிழகத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கொள்ளையை படம்பிடித்த பத்திரிக்கையாளர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவது நடக்கிறது.

 கார்ப்பரேட்டுகளுக்கான நிலப்பறிப்பை எதிர்த்து விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் அச்சுறுத்துகிறது. சாதி ஆணவ படுகொலைகள் கவின் கொலை வழக்கு போன்றவை 
சாதிய பயங்கரவாதம் ஊக்கம் பெற்று வருவதைக் காட்டுகிறது. 
திருப்பரங்குன்றம் பிரச்சனைகளில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இன்று சிக்கந்தர் தர்காவின் அன்றாட பள்ளிவாசல் தொழுகையும் சட்ட வழியில் மறுக்கப்பட்டுள்ளது.

 இந்துத்துவ அமைப்புகளை எதிர்த்து சமூக வெளியில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் தி.மு.க.ஏதும் செய்ய இயலாமல் முடங்கி விட்டது. அல்லது அத்தகைய கடமைக்கு தலைமை ஏற்காமல் பின்வாங்கி விட்டது. 
விடாப்பிடியாக போராடுபவர்கள் முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் வாஞ்சிநாதன் போன்ற வழக்கறிஞர் பிரிவினரும்தான்.
பாசிச எதிர்ப்பில் மட்டுமல்ல பாஜக எதிர்ப்பிலும் கூட மதப் பிளவை பற்றவைக்கும் பாசிச எச். ராஜாவிடம் போய் பல்லைக் காட்டுகிறது. 

இந்த லட்சணத்தில் இவர்கள் ஆட்சியை அதன் அடுத்த ரவுண்டை ஆதரிக்காதவர்கள் எல்லாம் வரட்டு கம்யூனிஸ்டுகள் என்று புரட்டல் வாதிகள் பேசுவதை ஏற்க வேண்டுமாம்? 

கேட்டால் திமுக கம்யூனிஸ்ட் இல்லை! நீங்கள் போராடுங்கள் 
என்று சில நக்கல் வேறு!
திமுக கம்யூனிஸ்ட் இல்லை என்பதல்ல அதை விமர்சிப்பவர்களின் வாதம் அதனிடமும் வெளிப்படுவது ஜனநாயகம் அல்ல பாசிச அரசமைப்பின் கூறுகள்தான் என்பதை கூறுகிறோம் அவ்வளவே. 

 இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு கடைபிடித்த மோடி அரசின் அதே பொருளாதாரக் கொள்கையின் மறு உருவிலான பொருளாதாரக் கொள்கைகளால் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி கொல்லப்படுவதை பேசுவதில் கூட பாசிச எதிர்ப்புக்கு என்ன பங்கம் வந்துவிடும். 

நகம் முளைத்த நாள் முதல் கம்யூனிச அரங்குகளை காலி செய்வதும் தொழிற்சங்க அரங்குகளை கலைத்து அடிப்பதும் , இன்று வரை மார்க்சிய லெனினிய அமைப்புகளின் ஜனநாயக பிரச்சாரத்தைக் கூட மட்டறு ப்பதும்தான் திமுகவின் வரலாற்றுப் பாத்திரம்.
இதை நிர்பந்தம் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என எந்த வேண்டுதலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானது 
 

பாசிச எதிர்ப்பு எனும் ஒரு வாய்ச் சொல்லை வைத்துக்கொண்டு எந்த நிர்ப்பந்தமும் குறைந்தபட்ச திட்ட வகையிலான பரஸ்பர அமைப்புகளின் ஒப்பந்தங்களும் கூட இல்லாமல் 
பாஜக எனும் கொடூரத்தை தடுப்பதற்கான ஒரு தடுப்பரண் என்று சொல்லியே , பாசிச எதிர்ப்பு அரசியலை உள்ளீடு அற்றதாக புனிதக் கோட்பாட்டு முழக்கமாக நடைபெறும் சந்தர்ப்பவாதம்தான் இங்கே வெகுஜன கவர்ச்சி அரசியலாக இருக்கிறது. 

கம்யூனிச அரசியல் பின்னடைவுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் இதை பின்னடைவுக்கு உள்ளாக்கிய காரணிகளை படிப்பினையாக கற்று முன்னேறுவதற்கு பதிலாக, ஒரு ஐக்கிய முன்னணி என்றால் கூட திமுகவுடன் இவர்கள் போட்டுக் கொண்ட மக்கள் நலனான ஒரு ஒப்பந்தத்தை கூட மக்களுக்கு வெளிப்படையாக கண்ணில் காட்ட முடியாத, இந்தக் கையறு நிலையை அப்படியே வழிமொழிவது இன்னும் பின்னடைவுக்கான சூழலை உருவாக்கும்! ஆகவே அரசியல் விமர்சனங்களுடன் கூடிய நடைமுறை சரி என்று சொல்வதில் எந்தத் தவறும் நேர்வதில்லை. 

கம்யூனிஸ்டுகள் பிற முதலாளித்துவ கட்சிகளுடன் அணுகுமுறையை ஒரு கொள்கை கோட்பாடு திட்டத்துடன் கூடியதாக அமைத்துக் கொள்வதுதான் சரி என்று வலியுறுத்துவதை , அவ்வாறு செய்யும் பலத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லை என்று ஏற்பதே சரியாகிவிடுமா? 

பலமற்று நோய் வாய்பட்ட நிலையில்தான் இன்னும் எச்சரிக்கையாக வெளியில் இருந்து வருவதை அணுக வேண்டிய தேவை இருக்கிறது. 
அதாவது உயிர் ஆதாரத்தையே அழித்து விடாத அளவுக்கான 
மருந்துதெனினும் அளவிட்டு ஆராய்ந்து அணுக வேண்டிய தேவை இருக்கிறது. 

இப்படி சொல்வதையே 
ஜனநாயக மறுப்பாக எரிச்சலாகி, அப்படியானால் பாஜக வந்தால் பரவாயில்லை யா? என்று மடக்குகிறார்கள். 

எஞ்சி இருப்பது இது ஒன்றுதான் 

எதிரி என்று பட்டவர்த்தனமாக தெரியும் போது மக்களிடம் வெளிப்பட்ட அரசியல் எப்படிப்பட்டது என்பதை எடப்பாடி ஆட்சியில் தமிழகம் கண்டது. 

பாசிசத்திற்கு தடுப்பரண் என்ற பெயரில் எதிரியின் பாத்திரத்தை , அதாவது பாசிச அடிப்படைக்கான சூழலை எதிர்த்து போராடக்கூடிய ஜனநாயகப் போராட்டங்களையும் மறுத்து அடக்குவது ஒடுக்குவது வெறும் பாஜக எதிர்ப்பாக சுருக்கி தேர்தலை மட்டுமே தீர்வாக திணிப்பது! இதை மறுப்பவர்களை சமூக வளர்ச்சி எதிரியாக சித்தரிப்பது! இவைகளும் கூட பாசிசத்தின் திரிந்த வடிவங்களாக , கம்யூனிச அரசியல் பேசுவதையே தடுக்கும் தடுப்பரண்களாக வளர்ந்து வருவதும் விமர்சிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. 

இந்தப் பின்னணியில் விமர்சனங்களை புரிந்து கொள்ளாமல், திமுக மற்றும் தேர்தல் பின்னணிகளிலான தீர்வை மறுப்பவர்கள் அனைவருமே வரட்டுவாதிகள் என்று புரிந்து கொள்கிறார்கள் 
திராவிட கம்யூனிஸ்டுகள். 

இவர்களையெல்லாம் தாண்டி இன்னும் ஒரு படி மேலே போய் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு? பொது உடமை
பெயரிலான தயக்கங்கள் தேவையில்லை என்கிறார்
மருதமுத்து அவர்கள், 

" உடனடி லட்சியம் திமுகவை ஆதரிப்பது! 

கூடவே உடனடி தேவை சோஷலிச திராவிட கட்சியை தொடங்குவது!" என்று வழிகாட்டுகிறார்.

கதைக்கு ஆவாத பொதுவுடமை வேலை திட்டத்தை கைவிட்டு விட்டு, வரட்டுவாதத்தில் இல்லாமல் உடனடியாக திமுகவை ஆதரிப்பது ஒன்றுதான் 
கடைத்தேற  வழி என கை காட்டுகிறார்.

களப்போராளிகளே உண்மையில் உங்களுக்கு எதிர்நிலை வரட்டுவாதிகள் அல்ல! 
உங்கள் கூடவே சிலர் உருவாகி இருக்கிறார்கள்! 

    - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/1A1wkTNMEe/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு