திமுகவை ஆதரித்தால் முற்போக்கு! தவெக வை ஆதரித்தால் பிற்போக்கு! எனும் மாயாவாதம்

துரை. சண்முகம்

திமுகவை ஆதரித்தால் முற்போக்கு! தவெக வை ஆதரித்தால் பிற்போக்கு! எனும் மாயாவாதம்

தவெக வுக்கு ஆதரவு கொடுத்ததில் இருந்து சிபிஐ, சிபிஎம் , விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

கட்சிகளுக்கு தர்ம அடி விழுகிறது.

அடிப்பவர்கள் யார்? 

இவர்களைத் தாண்டி  முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டிவிட்டு சோசலிசப் புரட்சிக்கு தயாராக இருந்த போராளிகளா? பொழப்பு போச்சே! என்ற பொச்செரிச்சலைத் தவிர இந்த பெரும்பாணாற்றுப்படைக்கு

வேறு உயர்ந்த நோக்கம் எதுவும் கிடையாது.

பாசிச குணாம்சம் கொண்ட காங்கிரஸ் கட்சியியும்,  இன்று விமர்சிக்கப்படும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளும் திமுகவை ஆதரித்தபோது நல்ல பிள்ளைகளாக கருதப்பட்டார்கள்.

அப்போது திராவிட முன்னேற்ற கம்யூனிஸ்டுகள் அவர்களை இதுதான் கம்யூனிச  லட்சணமா? என்று ஓட்டவில்லை. பாசிச எதிர்ப்புக்கான கூட்டணி எனும் பெயரில் முற்போக்கு முகம் காட்ட பயன்பட்டார்கள். பயன்படுத்திக் கொண்டார்கள்.

இப்போது அதே மதவாத எதிர்ப்புக்காக நாங்கள் சூழ்நிலை கருதி தவெக பக்கம் போய்விட்டோம்! என்று சொல்வதை 

ஏற்கத் தயார் இல்லை! திமுகவை ஆதரித்தால் முற்போக்கு! தவெக வை ஆதரித்தால் பிற்போக்கு! 

என்பதுதான் இவர்களின் மாயா வாதம். 

உண்மையில் சிபிஐ சிபிஎம் கட்சிகளின் மீதான விமர்சனம் என்பது பாட்டாளி வர்க்க லட்சிய நோக்கில் இருந்து வைக்கப்படுவதே சரியானது. 

மொத்த முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியல் தழுவிய விமர்சனத்தின் ஒரு பகுதி இது. 

பல பத்தாண்டுகளாக தொழிற்சங்க இயக்கங்களை கலைத்து பிரித்து, அடக்கி ஒடுக்கி! கம்யூனிச இயக்கங்களை வளர விடாமல் அடக்கி ஒடுக்கி! கம்யூனிச இயக்கங்களை ஒடுக்குவதற்கு என்றே க்யூ பிராஞ்சை உருவாக்கிய 

திமுகவின் பிராஞ்ச்சை ஆதரிப்பது அவசியமற்றது.

தவெக வும் கூட புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் முதலாளித்து வளர்ச்சி போக்கில் பிரதிநிதிதான். ஆனால் திராவிட முகமூடி போட்டுக் கொள்ளாத முதலாளித்துவத்தின் முகம். 

அதன் செய்கை ஒவ்வொன்றும் நேரடியான முதலாளித்துவ அர்த்தத்தில் எளிதாக வெளிப்படுகிறது. 

நேற்று வந்த தவெகவும் திமுகவும் சமம் என்று மதிப்பிடுவது அரசியல் கொச்சைத்தனம். தேர்தல் அரசியலில் இருக்கும் ஒரு இடதுசாரிக் கட்சி தானாகவே வந்து தனது நெருக்கடிக்காக ஆதரவு கேட்கும் ஒரு கட்சியை 

தனது அரசியல் சூழலுக்கு பயன்படுத்ததான் செய்யும். 

முதலாளித்துவ அரசியல் அணிச் சேர்க்கையில் பங்கு பெற்று விட்ட ஒரு கட்சி , திமுகவை விட்டால் வேறு வழியில்லை எனும் சிறைப்பட்ட வாழ்க்கையில் இருந்து சிறிது ஒரு விடுதலையாக தான் வாய்ப்பாகத்தான் இது நடந்திருக்கிறது. திமுக கூட நெடுநாளைய காங்கிரஸ் முகாமில் இருந்து இடம் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை பாஜக மூலமாக பயன்படுத்திக் கொண்டதுதான்.

அப்படித்தான் இரண்டு கட்சிகளும் முடிவு செய்தும் இருக்கின்றன. இதற்கு முன்னால் வேறு ஒரு தேர்வு இல்லாமல் அதாவது ஆப்ஷன் இல்லாமல் கிடந்தன இந்த கட்சிகள். இது புதிய சூழல் தோற்றுவித்திருக்கும் முதலாளித்து அரசியலின் உள்ளார்ந்த ஒரு நிலைக்கு உட்பட்டதுதான். 

இந்த மொத்த சூழலையும் மறுத்து

அதாவது தவெக வையும் மறுத்து மாற்று வேலை திட்டத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தன்மையோடு வர்க்க அரசியலை செய்ய வேண்டும் என்பதுதான் உரிய மாற்றாக இருக்குமே ஒழிய, திமுகவை ஆதரிக்காததுதான் 

கம்யூனிசத்தை விட்டு விலகிய பாதை என்பது திராவிட கம்யூனிஸ்டுகளின் புரட்டுவாதம்.

குறிப்பாக சிபிஎம் சிபிஐ கட்சிகள் மீது கடந்த காலத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் அரசியல் ரீதியாக மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றன. வாதப்பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன. அவற்றின் சாரம் மார்க்சிய கொள்கையை திருத்தல்வாதம் செய்யும்கட்சி நாடாளுமன்ற வாதத்தில் சூம்பி போய் கிடக்கிறது! ஜனநாயக புரட்சிக்கு எதிரான அணி சேர்க்கையில் போகிறது! என்ற வகை அரசியல் இலக்கில் இருக்கும். 

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பதிலுக்கு மார்க்சிய லெனினிய இயக்கங்களை, வரட்டுவாதிகள்! அமெரிக்க ஏஜெண்டுகள்! ! என்றும் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் தீவிரவாதிகள் கணக்கிலும் வரையறுத்து செயல்படும். 

இது மார்க்சிய கொள்கையை கம்யூனிசத்தை சித்தாந்தத்தை பாட்டாளி வர்க்க நோக்கில் கையாள வேண்டும் எனும் பார்வையில் எழும் விவாதம்.

இத்தகைய வாதங்கள் பொருட்படுத்தத் தக்கவை மதிப்புக்குரியவை. 

கம்யூனிச அமைப்புகளின் எந்த ஒரு வேலை திட்டத்தையும் செய்ய வக்கற்ற கார்ப்பரேட் சேவை கட்சிகள் தங்களுக்கு பயன்படவில்லையே எனும் கடுப்பில் வைக்கும் வாதங்கள் தகுதியற்றவை. 

முதலாளித்துவ அரசுகளைப் பற்றிய அம்பலப்படுத்தல்கள் மாற்று கம்யூனிச அரசியல் வேலை திட்டங்களை வைத்து மக்களை திரட்டுவது! என்று நோக்கிலான விமர்சனங்கள் பொருட்படுத்தத்தக்கவை மதிக்கப்படத் தக்கவை. 

அவ்வாறு மக்களுக்காக வர்க்க கண்ணோட்டத்தில் வேலை செய்யும் இயக்கங்கள் வைக்கும் விமர்சனங்கள் வரவேற்புக்கு உரியவை. விவாதத்துக்கும் உரியவை.

ஏதோ அடுத்த முறை தங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு புதிய ஜனநாயக புரட்சி செய்ய தயாராக இருந்தது போலவும்! அதை இடதுசாரிகள் கெடுத்து விட்டது போலவும்! 

பாசாங்கு செய்யும் திமுக பக்கம் நின்று கொண்டு கூவும் கூவல்கள் 

இதுதான் சாக்கு என்று பொத்தாம் பொதுவாக கம்யூனிஸ்டுகளை இழிவு செய்வதை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும்.

- துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1062989839741145/?rdid=hv6JUGyij7uJNbwh

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு