யாருக்கானது 'டிஜிட்டல் இந்தியா'?
செந்தளம்
கார்ப்பரேட்டுகளுக்கு வங்கிக் கடன், சிறுதொழில்களுக்குக் கந்துவட்டி: இதுதான் இந்தியத் தரகு முதலாளித்துவ அரசின் இலட்சணமா?
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அளவிடுவதற்கு ஆளும் வர்க்கம் காட்டும் "வளர்ச்சி" எண்களை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது, மக்களின் கண்களை இறுகக் கட்டிவிட்டு உலகமே இருண்டுவிட்டதாகக் கதைவிடும் அப்பட்டமான கண்கட்டி வித்தையே தவிர வேறல்ல. அந்த எண்களுக்குப் பின்னால் பட்டினி கிடப்பது யார்? கொழுப்பது யார்? என்பதைப் பார்ப்பதே உண்மையான அரசியல் பொருளாதார ஆய்வாக இருக்க முடியும். சமீபத்தில் டெலாய்ட் (Deloitte) நிறுவனம் வெளியிட்ட “இந்தியாவில் நிதிச் சேவைகளின் நிலைமை“ (State of Financial Services in India) அறிக்கையில் வெளிவந்துள்ள ஒரேயொரு புள்ளிவிவரம், ஆளும் வர்க்க கும்பலின் "டிஜிட்டல் இந்தியா" பம்மாத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.
யாருக்கானது 'டிஜிட்டல் இந்தியா'? வங்கிக் கடன் 14%, கந்துவட்டியோ 86% !
இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் (MSME) வெறும் 14 சதவிகிதத்தினருக்கு மட்டுமே முறையான வங்கிக் கடன் கிடைக்கிறது என்றும், மீதமிருக்கும் 86 சதவிகித சிறு-குறு உற்பத்தியாளர்கள் கடுவட்டிக்காரர்களின் கொள்ளை வட்டி நிதியையே நம்பி இருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது. 86 சதவீத சிறு-குறு நிறுவனங்களை கந்துவட்டியிடம் தள்ளிவிட்டு, வெறும் 14 சதவீத மேல்தட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மட்டுமே நாட்டின் மூலதனத்தைத் திறந்துவிடுவதில்தான் இந்திய அரசின் தரகு முதலாளித்துவ முகம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
உள்ளபடியாகச் சிறு தொழில்களுக்குத் தேவைப்படும் கடன் அளவிற்கும் அவர்களுக்கு உண்மையில் கிடைக்கும் நிதி உதவிக்கும் இடையிலான இடைவெளி என்பது சுமார் ₹25 லட்சம் கோடியாக இருக்கிறது என்றும் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்துறையின் மொத்த உற்பத்தியையும் கணக்கில் கொண்டால் இந்த இடைவெளி ₹50 லட்சம் கோடியைக் கூடத் தாண்டக்கூடும் என்று ஆளும் வர்க்கத்தின் பொருளாதார வித்துவான்களே எச்சரிக்கிறார்கள். மறுபுறம், குழந்தைகள் நீங்கலாக நாட்டிலுள்ள 89% பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளதாம்; UPI மூலம் மாதம் 2,000 கோடி பரிவர்த்தனைகள் நடக்கிறதாம்; உலகின் மொத்த நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில்தான் நிகழ்கிறதாம்.
ஆனால், இந்தத் தரவுகளின் மறுபக்கத்தைப் பார்த்தால் ஆளும் வர்க்கத்தின் யோக்கியதை விளங்கும். 16% வங்கிக் கணக்குகள் எவ்விதப் பரிவர்த்தனையுமின்றிச் செயலற்றுக் கிடக்கின்றன; வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 15% பேர் மட்டுமே முறையான கடன் வசதியைப் பெற முடிகிறது; காப்பீட்டுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்த விகிதம் – அதாவது, நாட்டின் மொத்த உற்பத்தியான GDP-யில் காப்பீட்டுக்காக மக்கள் செலுத்தும் தொகையின் அளவு வெறும் 3.7% மட்டுமே — இது உலக சராசரியில் பாதியளவே ஆகும்.
தள்ளுவண்டி கடைக்காரர்கூட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டதாகப் பீற்றிக்கொள்வது எந்தளவிற்கு உண்மையோ, 86 சதவீதச் சிறு-குறு நிறுவனங்கள் கடுவட்டி மூலதனத்தின்கீழ் அடிமைபட்டுக் கிடக்கிறார்கள் என்பதும் அதே அளவிற்கு நிதர்சனமான உண்மையே. இந்த 'டிஜிட்டல் இந்தியா' என்பது மக்களின் பணப்புழக்கத்தைக் கண்காணித்துச் சுரண்டுவதற்கான கருவியே ஒழிய, அடித்தட்டு மக்களுக்கு மூலதனத்தை எளிதாகக் கொடுப்பதற்கானதல்ல.
குற்றவாளி யார்? சிறு முதலாளிகளின் 'நிதி அறியாமை'யா, ஒட்டுண்ணி மூலதனமா?
சிறு வியாபாரிகளும், கைத்தொழில் செய்வோரும் ஏன் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்குகிறார்கள்? சமூக ஊடகங்களில் கோட்-சூட் போட்டுக்கொண்டு நிதி ஆலோசனை வழங்கும் ஃபின்-இன்ஃப்ளுயன்சர்களும் (Fin-influencers), கார்ப்பரேட் அறிவுஜீவிகளும் இதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? 'அரசிடம் முறையாகத் தொழிலைப் பதிவு செய்யாதது' (Lack of formalization), 'இணையப் பரிவர்த்தனை வரலாறு இல்லாதது' (Zero digital footprint), 'முறையாகக் கணக்கு வழக்கு பராமரிக்கத் தெரியாதது' (Poor bookkeeping), 'சிபில் விதிகளின்படி கடன்பெறத் தகுதி இல்லாதது' (Low CIBIL score) என்று ஒட்டுமொத்தப் பழியையும் சிறு உற்பத்தியாளர்களின் அறியாமை மீதே சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் காரல் மார்க்ஸ் தனது 'மூலதனம்' மூன்றாம் தொகுதியில், இந்த வாதத்தை வர்க்கப் பார்வையில் அடியோடு நொறுக்குகிறார்.
வட்டி மூலதனம் (Usurer's capital) என்பது சொந்தமாகத் தறி அல்லது நிலம் வைத்திருக்கும் சிறு உற்பத்தியாளர்களையே குறிவைத்து உறிஞ்சுகிறது. ஒரு கறவை மாடு செத்தால் கூட விவசாயியால் மீள முடிவதில்லை; அதுபோன்ற சூழலில்தான் அவன் கந்துவட்டிக்காரனின் பிடிக்குள் விழுகிறான். அவன் வறுமையில் சிக்குவது நிதி மேலாண்மை செய்யத் தெரியாததால் அல்ல; முதலாளித்துவக் கட்டமைப்பில் அவனது உழைப்பின் பலன் முழுவதும் ஒட்டுண்ணி வர்க்கங்களால் உறிஞ்சப்படுவதால்தான்.
உழைப்பவனின் ரத்தத்தை அட்டைப்பூச்சி போல உறிஞ்சுவதே கந்துவட்டியின் வேலை. வட்டிமுறை சிறு உற்பத்தியாளர்களின் தொழிலை எந்த வகையிலும் நவீனமாக்குவதில்லை; மாறாக, ஒரு ஒட்டுண்ணியைப் போல அவனை இறுகப் பற்றிக்கொண்டு அவனது உழைப்பை உறிஞ்சி, அவனை ஓட்டாண்டியாக்குகிறது. இதுதான் மார்க்சியத்தின் அடிப்படைத் தர்க்கம். இன்று வங்கிகளின் கதவுகள் மூடப்படும் இடங்களிலெல்லாம் நுண்கடன் நிறுவனங்கள் உள்ளே நுழைகின்றன. நவீன வங்கி முறை கந்துவட்டியை ஒழிக்கவில்லை; மாறாக கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்கு ஏற்ப அதைச் சட்டபூர்வமாக மாற்றியமைத்துள்ளது. இன்று நுண்கடன் என்ற பெயரில் நிறுவனமயமாக்கப்பட்ட கந்துவட்டிக் கும்பல் வங்கிச் சட்டங்களின் பாதுகாப்போடு இயங்குவதும், அதில் சாமானியர்கள் சிக்கிச் சீரழிவதும் அதே கந்துவட்டி முறையின் நவீன வடிவமே அன்றி வேறில்லை.
அந்த ₹37 லட்சம் கோடி யாருக்கு? நஷ்டம் மக்களுக்கு, லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு!
ஆனால் அரசோ, சிறு தொழில்களுக்குக் கடன் வசதி ஜனநாயகப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறி சாதனைப் பட்டியலை அடுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) நிகழ்வொன்றில் MSME துறையின் செயலர் கூறுகையில், 2014-இல் சிறுதொழில்களுக்கு ₹10 லட்சம் கோடி என்ற அளவில் வழங்கப்பட்டு வந்த கடன் இன்று ₹37 லட்சம் கோடியளவிற்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றார்; பெருநிறுவனங்கள் சிறு தொழில்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தாமதப்படுத்துவது TReDS (தொழில் நிறுவனங்களின் வரவுப் பாக்கிகளை உடனடியாக காசாக்கும் மின்னணுத் தளம் - Trade Receivables Discounting System) மூலம் தீர்க்கப்படுகிறதாம்; கோவிட் கால ECLGS (அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டம் - Emergency Credit Line Guarantee Scheme) திட்டம் மாபெரும் வெற்றி பெற்றதாம்; தடையற்ற வர்த்தக (FTA) ஒப்பந்தங்கள் சிறு தொழில்களுக்கு நிச்சயம் நன்மை பயக்கும் என்றெல்லாம் பீற்றிக்கொண்டிருக்கிறார்.
சிறுதொழில் கடன் 37 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டதென்றால், டெலாய்ட் அறிக்கை கூறுவது போல அதே காலகட்டத்தில் இன்னும் ஏன் 25 முதல் 50 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தேவைக்கான பற்றாக்குறை ஏற்படப் போகிறது? அரசும் வங்கிகளும் கொட்டிக் கொடுக்கும் இந்தக் கடன்களில் பெரும்பங்கு, ஒப்பீட்டளவில் பெரிய அளவிலான நடுத்தர (Medium) நிறுவனங்களுக்கும், மேல்தட்டுத் தொழில்முனைவோருக்குமே சென்று சேருகிறது. அடித்தட்டு சிறு-குறு உற்பத்தியாளர்களெல்லாம் அந்த 86 சதவீத நிராகரிக்கப்பட்ட கூட்டத்திற்குள்ளேயேதான் ஓரங்கட்டப்படுகிறார்கள். வங்கிகள் ஒட்டுமொத்த சமூகப் பணத்தை நிர்வகிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், நிஜத்தில் அது உழைக்கும் மக்களின் பணத்தை முதலாளிகளுக்கு மடைமாற்றும் ஒரு மோசடி வடிவமே என்பதை மார்க்ஸ் அன்றே சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறுதொழில்களைக் காப்பதாகக் கூறி அரசு கொண்டுவந்த கடன் உத்தரவாதத் திட்டங்களால் (ECLGS) லாபம் அடைந்ததும் அதே மேல்தட்டு தொழில்முனைவோர்களே. ஏனெனில், 'ஏற்கெனவே வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தக் கூடுதல் கடன் (ECLGS) வழங்கப்படும்' என்ற அந்தத் திட்டத்தின் அடிப்படை விதியே, வங்கிப் படியேற முடியாத 86 சதவீத அடித்தட்டு உற்பத்தியாளர்களைத் தானாகவே கழித்துக்கட்டிவிட்டது. ஆனால், இந்தக் கடன்களுக்கு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசு 100% உத்தரவாதம் அளிக்கிறது. ஒருவேளை நஷ்டம் வந்தால் அதை மக்கள் தலையில் அரசு கட்டும்; இலாபம் வந்தால் அது தனியார் வங்கிகளின் கஜானாவிற்குச் செல்லும். ஆபத்தைச் சமூகத்தின் தலையில் கட்டுவதும், லாபத்தைத் தனியார் முதலாளிகள் சுருட்டுவதும்தான் நிதிமூலதனத்தின் அப்பட்டமான தந்திரம் என்று லெனின் சொன்னது இங்கே நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.
மலிவான கடன்: விடிவு காலமா அல்லது நிரந்தரக் கடன் பொறியா?
இப்படி டிஜிட்டல் தளங்கள் வழியாகக் கடன் கிடைப்பது உண்மையிலேயே அடித்தட்டு மக்களுக்கான விடிவா அல்லது நிரந்தரக் கடன் பொறிக்குள் சிக்க வைக்கும் தந்திரமா என்றெல்லாம் விவாதம் நடத்த வேண்டியதில்லை. நுகர்வு நெருக்கடி நிலவிய 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டும், மக்களின் கடன் அட்டைப் (Credit card) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவாக மாதம் 1.2 லட்சம் கோடியைத் தாண்டி உச்சம் தொட்டது என்பதை ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. வாங்கும் சக்தி அற்றுப்போன மக்களை, பொருட்களை வாங்குவதற்காகவே நிரந்தரக் கடன் அடிமைகளாக மாற்றுவதுதான் 'எல்லோருக்கும் டிஜிட்டல் கடன்' என்று மார்தட்டும் தரகு-முதலாளித்துவ அரசின் உண்மையான முகமாக இருக்கிறது.
சிறு தொழில் செய்வோரின் அன்றாடப் பணப்புழக்கத்தைக் கண்காணித்து (Cash-flow based lending), கணக்குத் தரவுகளைத் திரட்டும் கட்டமைப்பு (Account Aggregator) மூலமாக அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டிக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று டெலாய்ட் அறிக்கை பரிந்துரைக்கிறது. இது கேட்பதற்கு மாபெரும் தீர்வாகத் தெரியலாம். ஆனால், முதலாளித்துவக் கட்டமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு கடனை மட்டும் மலிவாக்குவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் தனது நூலில் ('பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயிப் பிரச்சனை' - 1894) விளக்கியிருப்பார். ஒரு சிறு விவசாயிக்குக் கந்துவட்டிக்காரனை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அமைப்புரீதியான நெருக்கடி இருக்கும்வரை, வட்டியைக் குறைக்கும் சட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகும்; கந்துவட்டிக்காரன் அவனை உறிஞ்சி எடுக்க எப்படியாவது ஒரு வழியைக் கண்டுபிடித்துவிடுவான் என்று அவர் நிறுவியதே இன்றும் கண்கூடாக நடைபெற்று வருகிறது.
அடிப்படையில், உற்பத்தி முறையை மாற்றாமல் கடன் பெறுவதை மட்டும் எளிதாக்குவது, மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு மாறாக, அவர்களின் அடிமைத்தனத்தின் வடிவத்தை மட்டுமே மாற்றுகிறது. எங்கெல்ஸ் சுட்டிக்காட்டிய அன்றைய விவசாயிக்கு நடந்த அதே கதைதான், இன்றைய சிறு உற்பத்தியாளர்களுக்கும் நடக்கிறது. இது அவர்களைத் தங்களின் சொந்த உற்பத்திச் சாதனங்களிலிருந்து அப்புறப்படுத்தி, தனிச்சொத்துடைமையற்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றுவதையே துரிதப்படுத்துகிறது. "கடன் இடைவெளியை நிரப்புவோம்" என்று அரசும் நிதி மூலதனக் கும்பல்களும் கூக்குரல் எழுப்புவதெல்லாம், உண்மையில் அந்த 86% சிறு உற்பத்தியாளர்களை நிரந்தரமாக நிதி மூலதனத்தின் கடனடிமைகளாக மாற்றி, படிப்படியாக அவர்களைப் பாட்டாளிகளாக்கும் வரலாற்றுப் போக்கையே வேகப்படுத்துகிறது.
2,000 கோடி UPI பரிவர்த்தனைகள்: டிஜிட்டல் புரட்சியா, நவீன கட்டாயச் சுரண்டலா?
முறைசாரா பொருளாதாரத்தை ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் அமைப்பு முறைக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்று ஆளும் வர்க்கம் பீற்றிக் கொள்கிறது. இதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை லெனின் தனது 'ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்' (1916) நூலில் அம்பலப்படுத்துகிறார். சிறு வட்டி மூலதனத்தோடு தன் வளர்ச்சியைத் தொடங்கிய முதலாளித்துவம், மாபெரும் வட்டி மூலதனத்தோடு தன் வளர்ச்சியை முடித்துக்கொள்கிறது. நிதி மூலதனம் ஒருசிலர் கைகளில் குவிந்து, ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்தும் உழைப்பைச் சுரண்டுகிறது. மாதம் நடக்கும் 2,000 கோடி UPI பரிவர்த்தனைகளின் தரவுகளை யார் அறுவடை செய்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தாலே, லெனின் கூறும் இந்தக் கட்டாயச் சுரண்டலின் நவீன வடிவம் புரியும்.
இந்தச் சிக்கலை ஏன் இந்திய அரசு தீர்க்கவில்லை? ஏனென்றால், இங்கிருக்கும் ஆளும் வர்க்கமே ஒரு தரகு முதலாளித்துவ வர்க்கம்தான். உலகளாவிய நிதி மூலதனக் கும்பல்களுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்யும் வேலையைத்தான் இந்த அரசும் செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், சொந்த நாட்டுச் சிறு உற்பத்தியாளர்களுக்குக் கடன் வழங்குவதற்கான கதவுகளை இழுத்து மூடிவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தொழில்துறை முழுவதற்கும் நன்மை பயக்கும் என்று அரசு கூறும்போது, சீனாவிடம் வேண்டுமென்றே மண்டியிடும் மோடி அரசின் கொள்கையால் வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து, நமது சிறு தொழில்களை அழித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ்) குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இன்று கூக்குரலிடும் இந்த எதிர்க்கட்சிகள்தான், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இத்தகைய தாராளமயக் கொள்கைகளுக்கு வித்திட்டன. சிறு தொழில்களின் அழிவு ஒரு கட்சியின் தவறல்ல; அது உலகமயமாக்கல் கொள்கையின் கட்டமைப்பு ரீதியான விளைவு என்பதை இன்று ஆளும் வர்க்கத்தின் பொருளாதார வித்துவான்களே வாய்விட்டுப் பேசும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
வர்க்கப் போராட்டமே தீர்வு !
89 சதவிகிதப் பேருக்கு வங்கிக் கணக்கு இருந்தும், 16 சதவிகிதக் கணக்குகள் செயலற்றுக் கிடப்பதாக டெலாய்ட் அறிக்கை கூறுகிறது. ஜன் தன் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்குக் கணக்குகள் திறக்கப்பட்டனவே தவிர, வறுமையின் காரணமாக அவற்றில் சேமித்து வைப்பதற்குப் பணமில்லாமல் அவை வெறும் காலிக் கணக்குகளாகவே கிடக்கின்றன. வங்கிகள் சமூகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பது போன்ற 'வடிவத்தை' மட்டுமே கொண்டுள்ளனவே தவிர, உண்மையில் அவை சாமானியர்களுக்கு எதையும் பகிர்ந்தளிப்பதில்லை என்ற மார்க்சின் கூற்றுக்கு இதுவே நேரடி எடுத்துக்காட்டு. "நிதி உள்ளடக்கம்" (Financial Inclusion) என்பது, அடித்தட்டு மக்களின் பரிவர்த்தனைகளைத் தரவாக மாற்றி, அவர்களைப் புதிய கடன்-பொறிக்குள் சிக்கவைக்கும் உள்கட்டமைப்பே தவிர வேறல்ல.
வெறும் 14 சதவிகிதத்தினர் மட்டுமே முறையான கடன் பெறும் அவலம், இந்த ஃபின்-இன்ஃப்ளுயன்சர்கள் பிதற்றுவது போல நிதி அறியாமையாலோ, நிதிக் கட்டுப்பாடின்மையாலோ வந்ததல்ல; இது முதலாளித்துவச் சுரண்டல் வர்க்க அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவு. நிதி மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை ஒட்டுண்ணியாய் உறிஞ்சுகிறது; கடனை எளிதாக்குவது அடிமைத்தனத்தின் வடிவத்தை மட்டுமே மாற்றுகிறது; மாபெரும் வட்டி மூலதனம் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் கட்டாயச் சுரண்டலைத் திணித்துள்ளது.
இதற்குச் சேவை செய்யும் அரசும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலையைத் தவிர வேறெதையும் செய்யாது. எனவே, இந்த 86 சதவீதச் சிறு உற்பத்தியாளர்கள், 'தமக்குத் தொழில் நடத்தத் தெரியவில்லை, கணக்கு வழக்கு பராமரிக்கத் தெரியவில்லை' என்று ஆளும் வர்க்கம் தங்கள் மீது திணிக்கும் பொய்க் கற்பிதங்களைப் புறந்தள்ளுவதோடு நில்லாமல், தாங்கள் சுரண்டப்படும் வர்க்கத்தின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வதே இதற்கான ஒரே தீர்வாக அமையும்.
- செந்தளம்