G20 மாநாடு 2023 : அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் இளைய பங்காளியாக மோடி அரசு

சமரன்

G20 மாநாடு 2023 :  அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் இளைய பங்காளியாக மோடி அரசு

உலக பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்கா-நேட்டோ முகாமுக்கும் சீனா-ரஷ்ய முகாமுக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்து வருகிறது. அது உலகம் உழுவதும் அனைத்து அரசியல்- பொருளாதார துறைகளிலும் வெளிப்படுகிறது. நெருக்கடியின் சுமைகள் பல்வேறு புதிய காலனியத் திட்டங்கள் மூலம் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு சூழலில்தான் 20 கூட்டு நாடுகளின் (Group 20) மாநாடு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10 ம் தேதிகளில் டெல்லியில் மோடி அரசின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு புதிய காலனிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் - புதுப்பிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவை டெல்லி தீர்மானங்கள் (New Delhi Declaration) என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் யாவும் அமெரிக்காவுக்கு போட்டியாக வளரும் சீனாவுக்கு சவால் விடுவதற்காகவும், இந்தியா உள்ளிட்ட காலனிய நாடுகளின் ஐரோப்பிய சார்பை குறைத்து அமெரிக்காவின் பிடியை மேலும் இறுக்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்கள் குறித்து பார்ப்பதற்கு முன்பு ஜி 20 நாடுகள் யாவை என்பதை பார்ப்போம்.

ஜி 20 உறுப்பு நாடுகள்

பொருளாதார அளவில் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு 1999ம் ஆண்டு ஜி20 என்ற பெயரில் உருவாக்கப்பட்டது அதில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பட்டியல்: 

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. ஐரோப்பிய யூனியன்
  5. இங்கிலாந்து
  6. பிரான்ஸ்
  7. கனடா
  8. மெக்சிகோ
  9. ஜெர்மனி
  10. ஜப்பான்
  11. இத்தாலி
  12. அர்ஜெண்டினா
  13. பிரேசில்
  14. இத்தாலி
  15. தென் ஆப்பிரிக்கா
  16. சவுதி அரேபியா
  17. துருக்கி
  18. இந்தியா
  19. இந்தோனேஷியா
  20. தென் கொரியா

இக்கூட்டமைப்பிற்கு வழிகாட்டியாக திகழ்வது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை உள்ளடங்கிய ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 2008ல் ஏற்பட்ட உலக பொது நெருக்கடிக்குப் பின்பு ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜி20 கூட்டமைப்பைக் கூட்டி பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு என்ற பெயரில் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பிரிட்டன் உட்ஸ் உடன்படிக்கை, ஐ.எம்.எஃப்., உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்று ஏகாதிபத்திய கட்டமைப்பையும் காலனியாதிக்கத்தையும் பாதுகாக்கவும், பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளை ஏகாதிபத்தியங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவுமான முயற்சிகளில் இக்கூட்டமைப்பும் செயல்பட்டு வருகிறது. 

ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய காலனியத் திட்டங்கள்

2023ம் ஆண்டின் ஜி-20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில:

  1. ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் இணைப்பது
  2. உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுதல்
  3. உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டமைப்பை (Partnership for Global Infrastructure and Investment - PGII) வலுபடுத்துதல்
  4. இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய யூனியன் பொருளாதார வழித்தடத் (India-Middle East-Europe Corridor - IMEC) திட்டத்தை நிறைவேற்றுதல்
  5. டிஜிட்டல் பொது கட்டமைப்பை (Digital Public Infrastructure - DPI) உருவாக்குதல்
  6. சர்வதேச நிதி நிறுவனங்களை மறுசீரமைத்தல்
  7. வரி அமைப்பை புனரைமைத்தல்
  8. உலகளாவிய உயிரி-எரிபொருள் கூட்டணியை (Global Bio-fuels Allianace) உருவாக்குதல்
  9. உலகளாவிய சுகாதார கட்டமைப்பு உருவாக்குதல் 

உள்ளிட்ட சில புதிய காலனிய திட்டங்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இவற்றோடு மட்டுமல்லாமல், அங்கேயே சில நாடுகள் இத்திட்டங்களின் அடிப்படையில் இருதரப்பு - பலதரப்பு ஒப்பந்தங்களையும் செய்து கொண்டன.

ஆப்பிரிக்க யூனியனை ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் இணைப்பது : ஆப்பிரிக்க யூனியன் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டது அதில், சோமாலியா, மாலி, கினியா, சூடான், பர்கினா ஃபேசோ, நைஜீரியா, கேபான் ஆகிய நாடுகளை தவிர அக்கண்டத்தின் பெரும்பான்மையான நாடுகள் (55 நாடுகள்) உறுப்பினர்களாக இணைந்துள்ளன. அவை 140 கோடி மக்கள் தொகையும் 3.4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் கொண்டுள்ளன. அந்நாடுகளின் மூல வளமும் மனித வளமும் அளப்பரியது. உலகின் கனிம வளங்களில் 3ல் 1 பங்கையும்; உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் (Renewable energy resources) 3ல் 2 பங்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைய நவீன மின்சார வாகனங்களுக்கு அடிப்பட்டையான தேவைகளுள் ஒன்றான லித்தியம்-அயன் மின்கலத்தை உருவாக்க உதவும் கோபால்ட் எனும் தனிமத்தின் ஒட்டுமொத்த உலக வளங்களில் 50% சதவிகிதத்தை காங்கோ குடியரசு மட்டும் கொண்டுள்ளது. இத்தகைய வளங்களை கொள்ளையடிக்கவும் - அங்கு அமெரிக்காவின் நிதிமூலதன ஏற்றுமதியை அதிகரிக்கவும் ஜி-20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக இணைத்துள்ளது. ஏற்கெனவே உலகளவில் 75% சதவிகிம் ஜிடிபியைக் கட்டுப்படுத்தி வந்த இந்த கூட்டமைப்பு இதன் மூலம் 85% சதவிகிதம் ஜிடிபியைக் கட்டுப்படுத்தும் கூட்டமைப்பாக வலுபெற்றுள்ளது. இது அப்பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் முக்கியமானதொரு நடவடிக்கையாகும்.

உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுதல் : உலக பொது நெருக்கடியில் - குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதர நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதை தீர்த்துக் கொள்ளும் முயற்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா நேரடி யுத்தத்திலும் அமெரிக்கா-நேட்டோ முகாம் உக்ரைனைக் கொண்டு பதிலிப்போரிலும் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முகாம் நிறைவேற்றி வந்தது. அவை எதற்கும் அடிபணியாமல்தான் ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. கருங்கடல் பகுதியில் உணவு தானியங்கள் மற்றும் உரம் சார்ந்த சரக்குப் போக்குவரத்துகளை எவ்வித தடையும் இல்லாமல் கொண்டு செல்ல அமெரிக்கா, துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் 2022ம் ஆண்டு ஜூலையில் கருங்கடல் தானிய திட்டம் (Blacksea grain initiative) எனும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டன. அதே ஆண்டு நவம்பரில் ரஷ்ய கப்பலின் மீதான அமெரிக்க - நேட்டோ தரப்பின் டிரோன் விமானத் தாக்குதலுக்கு பிறகு அந்த ஒப்பந்தத்தை ரஷ்யா விலக்கிக் கொண்டது. பிறகு சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் அவ்வொப்பந்தம் முதலில் மார்ச் 2023 வரையிலும் பின்னர் மே மற்றும் ஜூலை 2023 வரையிலும் தவணை முறையில் நீட்டிக்கப்பட்டன. ஜூலை 2023 க்குப்பின் ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு அடிபணியாததால் உடன்பாடு எட்டப்படாமல் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இது உலக அளவில் அரிசி உள்ளிட்ட உணவு தானிய பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடையாக அமைந்ததுடன் அவற்றின் விலை உயர்வுக்கும் வித்திட்டது. ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் ஈடுபடுவதை வலியுறுத்தியும், உக்ரைனில் நடந்து வரும் போருக்கு கவலை தெரிவித்தும் ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடாமல் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஷ்ய அதிபர் புதினும், சீன அதிபர் ஜிங்பிங்கும் இந்த ஜி20 மாநாட்டில் பங்கெடுக்கவில்லை; அவ்விரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டுமே பங்கெடுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ரஷ்ய -சீன முகாமுக்கும் அமெரிக்க - நேட்டோ முகாமுக்கும் இடையில் முரண்பாடுகள் கூர்மையடைவதை எடுத்துக்காட்டும் விசயங்களில் இதுவும் ஒன்றாகும். 

உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டமைப்பை வலுபடுத்துதல்: சீனாவின் உலகளாவிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சவால் விடும் போட்டி உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்க அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. 2019ம் ஆண்டில் டிரம்ப் காலத்தில் உருவாக்கப்பட்ட ப்ளூ டாட் நெட்வொர்க் (Blue Dot Network - BDN) திட்டம், 2021ம் ஆண்டில் பைடன் ஆட்சியில் மீண்டும் மேலான உலகத்தை கட்டியமைப்பது (Build Back Better world - BBBW) எனும் வடிவம் பெற்றது. இந்த மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டமானது, 2022ம் ஆண்டில் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டமைப்பாக (Partnership for Global Infrastructure and Investment - PGII) மேம்படுத்தபட்டது. இக்கூட்டமைப்பு 48வது ஜி-7 நாடுகளால் உருவாக்கப்பட்டது. அக்கூட்டமைப்பு இந்த ஜி-20 மாநாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பே உலகளாவிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதோடு அவற்றை கட்டுப்படுத்தவும் செய்யும். இந்த கூட்டமைப்பானது வெறுமனே உள்கட்டமைப்பு திட்டங்களை மட்டும் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. பருவமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் பசுமை ஆற்றல் திட்டங்கள், 6ஜி நெட்வொர்க், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத் திட்டங்கள், சைபர் பாதுகாப்பு திட்டங்கள், சுகாதார கட்டமைப்புத் திட்டங்கள், ௐம்னிவோர் அக்ரிடெக் (Omnivore Agritech) உள்ளிட்ட புதிய வேளாண் தொழில்நுட்பத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை நிறுவ முயலும் புதிய காலனியத் திட்டங்களையும் கட்டுப்படுத்தி கண்காணிக்கும் ஒரு கூட்டமைப்பாகும். 2027ம் ஆண்டு வரை 600பில்லியன் டாலர் நிதியினை இதற்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானங்களும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்தியா - மத்திய - கிழக்கு - ஐரோப்பிய யூனியன் பொருளாதார வழித்தடத் திட்டத்தை நிறைவேற்றுதல் : சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு (Belt and Road Initiative - BRI) எதிராக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் ஆசிய நாடுகளையும் ஆப்பிரிக்க நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளுடன் தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் இணைக்கும் பரந்த கட்டமைப்புத் திட்டம் ஆகும். அது அப்பிராந்தியங்களில் தனது நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்து அங்குள்ள மூல வளங்களையும் கொள்ளையடிக்கவும் தனது மேலாதிக்கத்தை நிறுவவும் சீனாவால் ஏற்படுத்தப்பட்டது. அதற்கான கட்டமைப்பு பணிகள் ஏற்கெனவே பாதிக்கும் மேலாக நிறைவேற்றப்பட்டு விட்டது. இதற்காக சுமார் 1300 பில்லியன் டாலர் நிதிமூலதனத்தை கடனாக ஏற்றுமதி செய்துள்ளது. மலிவான கூலி உழைப்பை பயன்படுத்தி சீனா உருவாக்கிய தொழில்நுட்பங்களுடன் போட்டிப்போட அமெரிக்க முகாம் திணறி வருகிறது. இச்சூழலில்தான் அதற்கு சவால் விடும் நோக்கில் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய யூனியன் பொருளாதார வழித்தடத் (India-Middle East-Europe Corridor - IMEC)) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தில் இந்தியாவை முக்கியப் பங்காளனாக மாற்றியுள்ளது அமெரிக்கா. அதனுடன் இணைந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இஸ்ரேல் இத்திட்டத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. 

இத்திட்டம் இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

  1. கிழக்கு வழித்தடம்
  2. வடக்கு வழித்தடம்

கிழக்கு வழித்தடம் - இந்தியாவிலிருந்து அரபு வளைகுடா நாடுகள் வரை செல்கிறது. இந்தியாவின் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் (மும்பை) தொடங்கி குஜராத்தின் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை இணைத்து கடல் வழியாக அரபு வளைகுடாவை சென்றடைகிறது. 

மத்திய கிழக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா, ஜெபெல் அலி, அபுதாபி துறைமுகங்கள், சவுதி அரேபியாவின் டம்மம், ராஸ்-அல்-கஃயிர் ஆகிய துறைமுகங்களை ரயில்வே பாதைகள் மற்றும் சாலைகள் மூலமாக இணைக்கிறது.

வடக்கு வழித்தடம் - வளைகுடா நாடுகளில் தொடங்கி ஐரோப்பா வரை செல்கிறது. இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம், கிரீஸின் பைரேயஸ் துறைமுகம், இத்தாலியின் மெசைனா துறைமுகம் வழியாக பிரான்சின் மெர்செய்ல்லி துறைமுகம் வரை நீள்கிறது.

இவற்றில் சாலை வழித்தடங்கள், ரயில் பாதைகள், கடல் மார்க்கங்கள், துறைமுக கட்டுமானங்கள், மின்சார வழித்தடங்கள் மற்றும் கட்டுமானங்கள், கண்ணாடி இழை தகவல் கடத்தி வழித்தடங்கள் (Fibre-optic Cable projects), தகவல் வலையமைப்புகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல், ஹைட்ரஜன் மற்றும் எரிவாயு குழாய்களை பதித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்குவதை இந்த திட்டம் மூலம் அமல்படுத்தவுள்ளது. PGII கூட்டமைப்பின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சீனா இதுபோன்ற திட்டத்தில் பலபடிகள் தொழில்நுட்பரீதியாகவும் விரிந்த அளவிலும் முன்னேறி விட்டது. இருப்பினும், அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தானும் களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இத்திட்டம் பயணிக்கும் பாதை நெடுகிலும் நிலைநாட்டுவதையும் அப்பகுதிகளில் அதன் புதிய காலனிய ஆதிக்கத்தை சீனாவைத் தாண்டி கெட்டிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

டிஜிட்டல் பொது கட்டமைப்பை உருவாக்குதல்: இது அ) டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து மக்களின் அடையாளங்களை பதியும் தளங்களை உருவாக்குதல், ஆ) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், இ) தகவல் பரிமாற்று சேவைகள் உள்ளிட்ட உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டமாகும். முதலாவதாக, மனித அடையாளங்களை பதிவு செய்தல் என்பது ஆதார், டிஜிலாக்கர் போன்ற அதிநவீன அடையாள மற்றும் ஆவண சேகரிப்புத் தளங்களை உருவாக்குவதாகும். ஆதாரிலாவது கைரேகை, கருவிழி ரேகைதான் எடுக்கப்பட்டது. இதில் ஒருவரின் மூளை செயல்படும் விதம், டிஎன்,ஏ, விந்தணு மாதிரிகள், இரத்த பிரிவு, நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடலியல் மற்றும் அந்தரங்க அம்சங்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கவும் அதனை கட்டாய நிபந்தனையாக்கவும் இது உருவாக்கப்படுகிறது. இரண்டாவதாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் - ஏற்கெனவே ஜிபே, போன்பே, பே.டி.எம். போன்ற எண்ணற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் நம் அன்றாடத் தேவைகளுக்கான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறோம். அப்பயன்பாடுகளை விரிவுபடுத்தவும், பொருளாதாராத்தில் உயர் மட்டத்தில் உள்ள 1% சதவிகிதம் பேர் பயன்படுத்தும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி (டிஜிட்டல் பணம்) களையும் அதன் பரிவர்த்தனைகளையும் ஊக்குவிக்கவும் இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இது மக்களின் அன்றாட பரிவர்த்தனைகளையும் கூட பங்கு மார்க்கெட்டில் ஈடுபடுத்தும் மோசடியான முறையாகும். (உதாரணத்திற்கு, நீங்கள் 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளீர்கள் என கொள்ளுங்களேன், அதனை நீங்கள் செலவு செய்யும் நேரம் வரை அதன் மதிப்பு ரூ.500தான். நீங்கள் வாங்கும் பொருளின் விலை சந்தையில் ஏறும் இறங்கும். ஆனால் அந்நியசெலாவணியில் மாற்றம் ஏற்படும் அளவு மட்டும்தான் நீங்கள் வைத்திருக்கும் 500ரூபாயின் மதிப்பும் மாறும். ஆனால் கிரிப்டோ கரன்சி அப்படியில்லை. அது சூதாட்டத்தில் நீங்களும் ஈடுபடுவதற்கு சமம். நீங்கள் வைத்திருக்கும் கிரிப்டோ கரன்சியின் பங்கு வீழ்ச்சியடைந்தால் அந்த ரூ.500 மதிப்பு பணம் ரூ200 ஆக குறையலாம் அல்லது காணாமல் போய் பூஜ்ஜியமாகவும் மாறலாம்). எனவே இது வழிபறியை விட மோசமான பரிவர்த்தனை முறையாகும். இதில் பங்குச் சந்தை சூதாடிகள் மட்டுமே லாபமடைவர். மக்கள் பட்டப்பகலிலேயே அதிநவீன முறையில் கொள்ளையடிக்கப்படுவர். மூன்றாவதாக, தகவல் பரிமாற்று சேவைகள் - இதன் மூலம் மக்களின் அடையாளங்கள் மற்றும் அந்தரங்கம் பற்றிய தகவல்கள், அவர்களின் வர்த்தகம் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றி தகவல்கள், நாட்டின் இராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட தகவல்கள் என அனைத்தும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நாடுகளுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஏற்பாடு. இத்தகைய மோசடித் திட்டங்களை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்புதான் இந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு. இதில் எலான் மஸ்கின் நிறுவனங்களும், பில்கேட்ஸ் ஃப்வுண்டேசன் உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட்களும் அம்பானியின் ஜியோ, அதானியின் டேட்டா ஒன் - டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் போன்ற தரகுமுதலாளித்துவ நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் காலனிய நாடுகளின் நிதிநிலை சூறையாடப்படுவதோடு அவற்றின் இறையாண்மை பறிக்கப்படும்; ஜனநாயகத்திற்கான - சுதந்திரத்திற்கான - ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களும் கண்காணிக்கப்பட்டு ஒடுக்கப்படும். 

சர்வதேச நிதி நிறுவனங்களை மறுசீரமைத்தல்: நிதி முலதன ஆதிக்கம் தங்குத்தடையின்றி உலகின் கடைசி மைல் வரை சென்று சேர்வதற்கு ஏற்கனவே உள்ள நிதிநிறுவன கட்டமைப்புகள் போதுமானதாக இல்லை. அவற்றை மறுசீரமைக்கும் பணிக்கான திட்டம் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டன் -உட்ஸ் உடன்படிக்கை படி 1944ம் ஆண்டில் உலக வங்கியும் ஐ.எம்.எப்.-ம் நிறுவப்பட்டன. பிறகு அவை ஐரோப்பிய முதலீட்டு வங்கி, ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய புனரமைப்பு வங்கி, அமெரிக்க நாடுகள் வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இசுலாமிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட 15 பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் (Multilateral Development Banks) உருவாக்கப்பட்டு புதிய காலனியாதிக்கம் வலுப்படுத்தப்பட்டது. அந்த வங்கிகளையும் நிதிநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வதற்காக உலகவங்கி குழுமம், அமெரிக்க நாடுகள் வளர்ச்சி வங்கி, இசுலாமிய வங்கி உள்ளிட்ட 10 பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் முன்னிலையில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இவை 2030ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 3 டிரில்லியன் டாலர் வீதம் நிதியினை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளன. இந்த நிதிகள் அமெரிக்கா மற்றும் ஐ.எம்.எப்.-ன் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் செலவிடப்படுகிறதா என்பதை கண்கானிக்க மூலதன தேவைகளுக்கான கட்டமைப்பையும் (Capital Adequacy Framework -CAF) ஏற்கனவே உருவாக்கியுள்ளது. 

வரி அமைப்பை புனரைமைத்தல் : உலக வர்த்தக கழகத்தின் (WTO) வழிகாட்டுதலில் பல்வேறு நாடுகளில் ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. அந்த வரியின் கொடுமைகளையே மக்கள் தாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Organaization of Economic Cooperation and Development - OECD) என்ற புதிய காலனிய நிறுவனம் மூலம் வரி விதிக்கும் முறைகளை உலகம் முழுவதும் சீர்செய்ய வேண்டி வரி ஒப்பந்த கட்டமைப்பு (Inclusive Framework tax deal), வரிவிதிப்பு மற்றும் நிதிச் சேர்க்கை கட்டமைப்பு (Framework for Base Erosion and Profit shifting) போன்ற திட்டங்களை 2021 ஜூலையில் அறிமுகப்படுத்தியது. அதனை நடைமுறைப்படுத்துவதை இந்த ஜி-20 மாநாட்டில் ஒரு தீர்மானமாக எடுத்துக் கொண்டது. இந்த வரிவதிப்பு முறை கார்ப்பரேட் வரியை 15% சதவிகிதத்திற்கும் குறைவாக மாற்றுவது. இறக்குமதி வரிகளை ஏற்கெனவே இருப்பதை விட மூன்றில் ஒரு பாகமாக குறைப்பது அல்லது சில பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது. ஒரு பொருள் அதிக அளவில் காலனிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறதென்றால் அந்நாட்டில் அதன் உற்பத்திக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கிறது. இதன் மூலம் காலனிய நாடுகளில் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை ஆரம்பத்தில் விலை குறைவாக இறக்குமதி செய்யப்படலாம். அது தொடருமானால் அத்தியவாசிய பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி ஒழிக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களிடம் உணவுப் பொட்டலங்களுக்காக கையேந்த வேண்டிய நிலையை ஏற்படுத்தும். இந்த மாநாட்டின் போதே மோடி அரசு அமெரிக்காவுடன் கோழி வளர்ப்பு, உரம், வேளாண்பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கான இறக்குமதி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுவிட்டது. 2024 மார்ச் 11 அன்று ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, லைச்டென்ஸ்டெய்ன் 4 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய திறந்த வர்த்தக சங்கத்துடன் (European Free Trade Associaton) இந்த வரிவிதிப்புத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் கடல் உணவு, பழங்கள், காபி, சமையல் எண்ணெய்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ஸ்மார்ட் போன்கள், வாகன உதிரிப் பாகங்கள், மருந்துகள், ஜவுளிகள், இயந்திர பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அடங்கும். இப்பொருட்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் இறக்குமதி வரி மெல்ல குறைக்கப்பட்டு தற்போது இருப்பதை விட 3ல்1 பங்காக மாற்றப்படும் என்கிறது இந்த ஒப்பந்தம். வரிகுறைப்பு மூலம் கார்ப்பரேட்டுகள் லாபமடைவதற்கு மட்டுமல்லாமல், அவை இங்கு முதலீடு செய்து உற்பத்தி செய்யும் பொருட்களையும் அதன் லாபங்களையும் சிதறாமல் வாரி செல்லவும் இருந்த சிறு தடைகளையும் இந்த வரி புனரமைப்பு திட்டம் தகர்க்க கோருகிறது. அதேபோல ஒரு நாடு இன்னொரு நாட்டில் முதலீடு செய்யவும் அங்கிருந்து லாபங்களை எடுத்துச் செல்லவும் நிபந்தனை விதிக்கிறது; அதனையும் OECD மூலம் அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது இத்திட்டம். எனவே, இத்திட்டம் நாட்டின் விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் 

எஞ்சியிருக்கும் கொஞ்சம் நஞ்சம் சுதேசியத் தன்மையையும் ஒழித்து அனைத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. 

உலகளாவிய உயிரி-எரிபொருள் கூட்டணியை உருவாக்குதல் : காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது இன்று உலகிற்கு பெரும் சவலாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு காரணமான இந்த ஏகாதிபத்திய ஓநாய்களே அந்த வாசகத்தை பயன்படுத்தி காலனிய நாடுகளில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றன. கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுமைக் குடில் வாயுக்களை வெளியிடும் உற்பத்திகளை காலனிய நாடுகளிலேயே குவிக்கின்றன. மேலும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய சுமைகளையும் காலனிய நாடுகள் மீதே சுமத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக எனக் கூறி ஒருபக்கம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பது மறுபக்கம் பயோ டீசல், பயோ பெட்ரோல், பயோ கேஸ், விறகுகள் பயன்பாடு போன்ற பயோ (உயிரி) எரிபொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தும் வருகிறது. அதற்காக அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற 19 நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மத்தியகிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற எண்ணெய்-எரிவாயு வளம் கொண்ட நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை தவிர்ப்பதற்காகவும், பயோ எரிபொருளில் தனது மேலாதிக்கத்தை நிறுவவும் இக்கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதில் இந்தியாவும் பிரேசிலும் தன்னிறைவு பெற்ற நாடுகளாக வளரும் வாய்ப்பு இருந்தாலும் அவற்றை கட்டுப்படுத்தி தனது பிடிக்குள் கொண்டுவரவும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இதில் மற்றொரு அபாயமும் உள்ளது. விவசாயம் உணவு தேவைக்கு என்பது குறைக்கப்பட்டு பயோ எரிபொருள் தேவைக்காக மாற்றப்படும் வாய்ப்புள்ளது. உணவுப் பொருட்களுக்கும் ஏகாதிபத்திய சார்பு நிலையை உருவாக்கும்; பயோ எரிபொருளின் ஏற்றுமதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆதிக்கம் செலுத்தும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விவசாயம் மேலும் அழிக்கப்படும் அல்லது ஏகாதிபத்திய சார்பை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும். 

உலகளாவிய சுகாதார கட்டமைப்பு உருவாக்குதல்: கொரோனா நோய் தொற்று உலக மக்களை கொன்று குவித்தது என்றால், அது ஏகாதிபத்தியங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. அந்த பெயரை பயன்படுத்தியே பல்வேறு மருத்துவத்துறைச் சார்ந்த கொள்ளைத் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா போன்ற கொள்ளை நோய்களுக்கு எதிராக போராடுவது என்ற பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வர்த்தகத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா போட்டியிட்டு வருகிறது. அதற்காக இந்த ஜி-20 மாநாட்டில் ஒரே சுகாதார அணுகுமுறை (One Health approach) எனும் கொடிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக சுகாதார மையத்தின் (WHO) ஆலோசனையின் அடிப்படையில் உலகளாவிய சுகாதார கட்டமைப்பு உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாக கூறப்படுகிறது. அதாவது, உலகாளாவிய சுகாதார பாதுகாப்பு, பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்ள தயாராக இருப்பது, ஏற்கனவே இருக்கும் தொற்று நோய்களுக்கான கண்காணிப்பை வலுப்படுத்துதல், எய்ட்ஸ், மலேரியா, காசநோய், காமாலை போன்ற தொற்று நோய்களுக்கு முடிவு கட்டுவது போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறுகிறது. அடிப்படை சுகாதாரம் முதல் மருத்துவ ஆராய்ச்சி வரை, அலோபதி முதல் பாரம்பரிய மருத்துவ முறைகள் வரை அனைத்தையும் இந்த கட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது; அதிலும் குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலை (Antimicrobial Reistance -AMR) உருவாக்கும் ஆராய்ச்சி துறையில் வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடுகளை கட்டுப்படுத்தி அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதே இத்திட்டத்தின் உண்மையான நோக்கம். குவாட் கூட்டமைப்பில் ஏற்கனவே இது குறித்து திட்டமிடப்பட்டு அதன் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இந்த மாநாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய்கள் மீண்டும் ஒரு பெருவெடிப்பை ஏற்படுத்துமாயின் இந்தியா போன்ற காலனி நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் கையசைவுக்காக ஏங்கி தவிக்க வேண்டும். மருத்துவ உதவி தேவையெனில் அது விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் கொத்து கொத்தான மரணங்கள்தான் நமக்கு மிஞ்சும். இது மக்களை கூண்டோடு கொலை செய்யும் நாசகர திட்டமாகும். 

மேலே பார்த்த அனைத்து திட்டங்களும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் இந்தியா போன்ற காலனிய நாடுகளை பிணைக்கும் புதிய காலனிய அடிமை சாசனங்களாகும்; இவை காட் - டங்கல் திட்டங்களின் பரிணாமங்களாகும். 

ஜி-20 மாநாட்டின் போதே இந்திய ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வியை அமெரிக்காவிடம் அடகுவைக்கும் இருதரப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இந்திய தொழில்நுட்ப நிறுவன (Indian Institute of Technology -IIT) கவுன்சிலும் அமெரிக்க பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பும் (Association of American Universities - AAU) இணைந்து இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதில் ஐஐடி மட்டுமல்லாமல் இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதற்கும் சேர்த்தே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக குளோபல் சேலஞ்சஸ் இன்ஸ்டிடியூட், முதல் கட்டமாக 10 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் விவசாயம், சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு, குறைக்கடத்தி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, குவாண்டம் அறிவியல் போன்ற முக்கிய வளரும் துறைகளில் இந்திய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியை அமெரிக்காவின் கட்டுபாட்டிற்குள் கொண்டு செல்வதையே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஒப்பந்தம். 

இவையன்றி, ஜி20 மாநாட்டிற்கு முன்பான மோடியின் அமெரிக்க பயணத்தின் போதும் கனிமவளங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் உள்ளிட்ட சில புதிய காலனியத் திட்டங்களும் ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. அவை பற்றிய செய்திகள் கூட மக்கள் பார்வையில் படாமல் பாதுகாக்கிறது பாசிச மோடி ஆட்சி. 

ஜி20 திட்டங்களுக்கு சேவை செய்யும் 2024 இடைக்கால பட்ஜெட்

2024 -25 ம் நிதி ஆண்டுக்கான தேர்தல் வரைக்குமான இடைக்கால பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. இதன் அனைத்து அம்சங்களையும் நாம் இங்கு பார்க்கப் போவதில்லை. ஓரிரு முக்கியமான விசயங்களை மட்டும் பார்ப்போம். அவை எவ்வாறு ஜி-20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு சேவை செய்கிறது என்பதை மட்டும் பார்ப்போம். 

  • உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 11.11 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11% அதிகமாகும். இது அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கு சேவை செய்யும் திட்ட செலவினங்களுள் ஒன்று. 
  • மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அதற்கு 1.3 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு எதை வழிகாட்டுகிறதோ அத்திட்டங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற நிபந்தனையுடந்தான் வழங்குகிறது. வட்டி இல்லா கடன் என்ற பெயரில் மாநிலங்களின் மூல வளங்களை கொள்ளையடித்து செல்வதை வேடிக்கைப் பார்க்கவே இந்த நிதி ஒதுக்கீடு. 
  • ஸ்டார்ட்-அப் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதிஒதுக்கியுள்ளது. இவை டிஜிட்டல் பொது கட்டமைப்பை உருவாக்க சேவை செய்யும் திட்டத்தின் பகுதியாகும். 
  • வீட்டின் மொட்டை மாடியில் சோலார் பேனல்களை அமைத்தால் 300யூனிட் மின்சாரம் இலவசம். ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து சோலார் பேனல்களை அதானி எனர்ஜி போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து இங்கு சந்தையில் கொட்டி குவிக்க இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
  • நாடு முழுவதும் வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அமைப்பது, 40000 சாதாராண ரயில் பெட்டிகளை வந்தேபாரத் பெட்டிகளாக மாற்றுவது என ஏகாதிபத்தியங்களின் உற்பத்திக் கூடமாகவும் அதற்கான சந்தையாகவும் இந்தியாவை மாற்றுவதற்கே இந்த திட்டங்கள்.
  • இவை போன்ற புதியகாலனிய சேவை திட்டங்களுக்கு ரூ.11.75 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் கடன் 205 லட்சம் கோடியை கடந்த நிலையில் மேலும் கடன் சுமையை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்த உள்ளது. 
  • உள்நாட்டு உற்பத்திக்கான கார்ப்பரேட் வரியை 22% சதவிகிதமாக குறைத்துள்ளது. 
  • இறக்குமதி வரியை இந்த இடைக்கால பட்ஜெட்டில் குறைக்கவில்லை. தேர்தலை கணக்கில் கொண்டு இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவில்லை. ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டதால் அவை தேர்தலுக்கு பிறகு கட்டாயமாக அமல்படுத்தப்படும்.
  • விவசாயத்திற்கும், சிறுகுறு தொழில்களுக்கும் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 5% சதவிகிதம் அளவிற்கு குறைத்துள்ளது. 
  • உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியை 16% வரை குறைத்துள்ளது. மொத்த ஜிடிபியில் வெறும் 0.5% சதவிகிதமே மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒதுக்குகிறது. குறைந்த பட்சம் 2% சதவிகிதமாவது ஒதுக்கினால்தான் ஆராய்ச்சியே செய்ய முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த நிதிவெட்டு என்பது ஒன் ஹெல்த் திட்டத்தின் அம்சமாகும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இந்த இடைக்கால பட்ஜெட் பன்னாடு - உள்நாட்டு கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்கும் ஏகாதிபத்திய புதிய காலனிய திட்டங்களுக்கும் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது. 

"வசுதைவ குடும்பகம் (Vasudhaiva kutumbakam - The world is One Family)" என்ற பெயரில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் இளைய பங்காளியாக மோடி அரசு

வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதோடு அவைகளின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. அவைகளின் ஜிடிபி வளர்ச்சி 3% சதவிகிதத்திற்கும் குறைவாக சரிந்து வருகின்றன. 2030 ம் ஆண்டு வாக்கில் அவற்றின் பொருளாதார வளர்ச்சி 2% க்கும் கீழ் குறையலாம் என IMF எச்சரித்துள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும், ஒரு சில ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே ஜிடிபி வளர்ச்சியை சீராக மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. அதற்கு மலிவான கூலி உழைப்பு, மூல வளங்கள், இளைஞர் பட்டாளம் என பல்வேறு காரணங்களை அடுக்குகிறது. எனவேதான் இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை தனதாக்கி கொள்ள பல்வேறு அடிமை ஒப்பந்தங்களின் மூலம் அடிபணிய வைக்கவும் அவற்றை தனது முகாமைச் சார்ந்த பங்காளனாக மாற்றவும் அமெரிக்க முயற்சித்து வருகிறது. இதற்கு சேவை செய்யவே ஜி-20 மாநாட்டின் திட்டங்கள். 

இவை, "ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற முழக்கத்தின் மூலம் "வசுதைவ குடும்பகம் (Vasudhaiva kutumbakam - The world is One Family)" என்ற பெயரில் மோடி முன்னிலையில் அனைத்து ஜி-20 நாடுகளாலும் தீர்மானங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த அடிமை சாசனங்களை அவை மண்டியிட்டு பெற்றுக் கொண்டன. ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே நோக்கம் என்ற பெயரில் அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சிகளுக்கு சேவை செய்ய தன்னை இளைய பங்காளனாக மாற்றிக் கொண்டுள்ளது மோடி அரசு. நிதிமூலதனம் தனது ஆக்டோபஸ் கரங்கள் மூலம் உலகம் முழுவதும் அமைதி வழியிலும் பாசிச திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதற்கு இந்திய உழைக்கும் மக்களும் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா சீனாவுக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகிறது.

பாஜகவின் பாசிசத்திற்கு மாற்றாக முன் நிறுத்தப்படும் காங்கிரசு, ஒருவேளை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியிலேறினால் இந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து விடுமா என்ன? நிச்சயம் செய்யாது. பாஜக விட்ட இடத்திலிருந்து ரிலே ரேசில் ஓடுவது போல குச்சிகளை கைமாற்றிக் கொண்டு தொடர்ந்து ஓடும்; அதன் அடிமை சேவகம் தொடரும்; மக்களை மேலும் பாசிச முறையில் சுரண்டலுக்கு உட்படுத்தும். 

இன்று தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக கூட்டணியும் இதே திட்டங்களுக்கு சேவை செய்தே வருகிறது. அதற்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்களுடன் நடந்து முடிந்த வர்த்தக மாநாட்டில் போட்டுள்ளது. ஜனவரி 7 ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. மத்திய பாஜக அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், திமுக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

அவற்றுள்,

  1. ரூ.177 கோடி மதிப்பில் அமெரிக்க குவால்காம் நிறுவனத்தின் செமிகண்டக்டர் வடிவமைப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம்
  2. ரூ.12,082 கோடி மதிப்பில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் உடனும், ரூ.70,800 கோடிக்கு டாட்டா பவர்ஸ் நிறுவனத்துடனும் 
  3. ரூ.5000 கோடி மதிப்பில் டிவிஎஸ் குழுமத்துடன்
  4. ரூ.1000 கோடியில் பெகட்ரோன் நிறுவனத்துடன் செங்கல்பட்டில் ஆலை அமைக்க ஒப்பந்தம்
  5. ரூ.16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம்
  6. ஹூண்டாய் நிறுவனத்துடன் - ரூ.6000 கோடியில் நீண்ட கால உத்திரவாதங்களுக்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரஜன் வள மையம் அமைக்க ரூ.1180 கோடியில் ஒப்பந்தம் மற்றும் ரூ.20,000 கோடியில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஒப்பந்தம் 
  7. ஏ.பி. மொல்லெர் மேர்ஸ்க் நிறுவனத்துடன் 
  8. மிட்சுபிச்சி நிறுவனத்துடன் ரூ.200 கோடியில் கும்மிடிபூண்டியில் ஆலை அமைக்க ஒப்பந்தம்
  9. ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனத்துடன் ரூ.12000 கோடியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உருக்காலை அமைக்க ஒப்பந்தம்
  10. கோத்ரேஜ் நிறுவனத்துடன் ரூ.515 கோடியில் செங்கல்பட்டில் ஆலை அமைக்க ஒப்பந்தம்
  11. ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் ரூ.5600 கோடியில் காஞ்சிபுரத்தில் ஆலை அமைக்க ஒப்பந்தம்
  12. அமெரிக்கா, அம்பானி நிறுவனம் மற்றும் கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் கூட்டில் தொடங்கவிருக்கும் தகவல் மையம் அமைப்பதற்கு ரூ.378 கோடியில் ஒப்பந்தம்
  13. சில்லறை வர்த்தகத்தில் ரூ.25,000 கோடியிலும், டெலிகாம் துறையில் ரூ.35,000 கோடியிலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 
  14. அதானி டோட்டல் ரூ.1568 கோடிக்கும், அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடிக்கும், அம்புஜா சிமெண்ட்ஸ் ரூ.3500 கோடிக்கும், அதானி கிரீன் எனர்ஜி ரூ.24500க்கும் ஒப்பந்தம்

என மொத்தம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பில் 630 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாக மாற்றியுள்ளது திமுக அரசு. 

மோடி அரசு அமெரிக்கா தலைமையில் இணைந்துள்ள குவாட் கூட்டமைப்பு மற்றும் ஜி-20 மாநாட்டு தீர்மானங்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற மோசடி வார்த்தை முலாம் மூலம் சுதேசிய தொழிற் உற்பத்தியை ஒழித்து நாட்டின் வளங்களை நிதியாதிக்க கும்பல் சுரண்டி கொண்டு போக சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. அதற்கு தடையாக இருந்த சட்டங்கள் அனைத்தையும் மோடி கும்பலுடன் சேர்ந்து நிறைவேற்றிவிட்டு கொள்கைப் போராட்டம் நடத்துவதுபோல நாடகமாடுகிறது. கார்ப்பரேட் சேவையில் குஜராத் மாடலும் திராவிட மாடலும் எந்த வகையிலும் சளைத்ததில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

- சமரன்

ஏப்ரல் 2024 இதழில்