ஹல்த்வானி கலவரம் : இசுலாமியர்கள் மீது ஏவப்பட்ட உத்தராகண்ட் பாஜக அரசின் பாசிச பயங்கரவாதம்

சமரன்

ஹல்த்வானி கலவரம் : இசுலாமியர்கள் மீது ஏவப்பட்ட உத்தராகண்ட் பாஜக அரசின் பாசிச பயங்கரவாதம்

பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்களின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிகளுக்கு நாட்டை கூறுபோட்டு வருகின்றன மத்திய மாநில அரசுகள். நெருக்கடியின் சுமைகளை அனைத்து உழைக்கும் மக்கள் மீதும் திணிக்கின்றது; இசுலாமியர்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடித்து அகதிகளாக்கி வருகிறது பாசிச மோடி அரசு. இந்து ராஜ்ஜியத்தை கட்டியமைப்பதில் அடுத்தக்கட்ட பாய்ச்சலில் ஈடுபட்டுள்ளது பாஜக. ஆம்! குஜராத் மாடல் கலவரத்தை விட ஒரு கொடூரமான கலவரத்தை ஹல்த்வானியில் அரங்கேற்றியுள்ளது உத்தராகண்ட் மாநில பாஜக அரசு.  

ஹல்த்வானியில் மாநில பாஜக அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரம்

உத்தராகண்ட் மாநிலத்தின் முக்கிய வளரும் நகரங்களில் ஒன்று ஹல்த்வானி. இது நைனிடால் மாவட்டத்தில் உள்ளது. ஹல்த்வானி ரயில் நிலையம் அருகே நெருக்கமான குடியிருப்புகளை கொண்டுள்ள பன்பூல்புரா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இருக்கும் சுமார் 5000 குடியிருப்புகளில் 4000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இசுலாமிய உழைக்கும் மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழந்து வருகின்றனர். அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்க சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது மாநில பாஜக அரசு. 

பிப்ரவரி 8ம் தேதியன்று மாலை 4 மணியளவில் அப்பகுதியின் குடியிருப்புகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கத் துவங்கியது நகராட்சி நிர்வாகம். வீடுகள், சிறிய கடைகள் உள்ளிட்டவற்றை இடித்து வந்தது. பெரும்பான்மையான ஆண்கள் வேலைக்கு சென்றிருந்ததால் வீட்டில் இருந்த பெண்கள் செய்வதறியாது அச்சம் பீறிட்டு திகைத்து நின்றனர். தொடர்ந்து மரியம் மசூதியையும், அப்துல் ரசாக் ஷக்கரியா மதர்சா பள்ளிக் கூடத்தையும் இடிக்க ஆரம்பித்தது. அப்போது 30- 40 பெண்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்பெண்களை குண்டாந்தடியால் தாக்கி அப்புறப்படுத்த முயற்சித்தது போலீஸ். அவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். ஆண்களும் வந்துவிட அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க சங்பரிவார குண்டர்களையும் காவல்துறையையும் ஏவியது மாநில பாஜக அரசு.

பன்பூல்புரா பகுதியின் அருகில் உள்ள காந்திநகரில் வசிக்கும் வால்மீகி என்ற சாதியைச் சார்ந்த காவி குண்டர்களை போராட்டத்தில் ஊடுருவ விட்டது அரசு. அக்கும்பல் கருங்கற்களை வீசி தாக்குதலை தொடங்கியது; இசுலாமியர்களின் வீடுகளை கொளுத்தியது; அவர்களின் வாகனங்களை தீக்கிரையாக்கியது. இசுலாமிய இளைஞர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையை ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடங்கியது. கலவரத்தை மூட்டிவிட்டது இந்த பாசிச அரசு. 

"கலவரத்தில் ஈடுபடுவோர் ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்" என்று ரவுடித்தனமாக பேசிய உத்ராகண்ட மாநில முதலமைச்சர் புஷ்கர் தாமி இசுலாமியர்களை கண்டதும் சுட உத்தரவிட்டான். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதி இருட்டில் மூழ்கடிக்கப்பட்டது. இண்டெர்நெட் இணைப்பையும் துண்டித்தது. ஊரடங்கு உத்தரவு போட்டது. வெளிஉலகத் தொடர்பில் இருந்து அப்பகுதியை துண்டித்தது. அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டது. இருட்டில், சங்பரிவார குண்டர்கள் மற்றும் காவல்துறை துணைகொண்டு இசுலாமியர்களை நரவேட்டையாடியது. பால், காய்கறிகள் வாங்க வெளியில் சென்றவர்களை சுட்டுக் கொன்றது. வெளியில் வர பயந்து வீடுகளுக்குள் பதுங்கியிருந்தவர்களை தேடிப் பிடித்து தாக்குதல் தொடுத்தது; பெண்கள் மீதும் பாலியல் தாக்குதல் தொடுத்தது இந்த ஓநாய் கூட்டம். அந்த இருட்டில் துப்பாக்கிச் சத்தங்களும் மரண பீதியும் நகரத்தின் நால் திசைகளிலும் ஓலமிட்டன. இவ்வாறு இசுலாமியர்களை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து விரட்டியடிக்க திட்டமிட்டு ஓர் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டுள்ளது இந்த பாசிச புஷ்கர் தாமி அரசு. இக்கலவரத்தில் 6 இசுலாமியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 500க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

அச்சத்தின் பிடியில் இருந்து மீளாத அப்பாவி இசுலாமிய மக்கள்

ஆரிப் என்பவர், தனது 45 வயது தம்பியான முகமது ஷாகீத்தை பிரச்சினையை கூறி வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். அவரும் உடடியாக வீட்டிற்கு வந்தடைகிறார். வந்தவுடன் தனது பேரக் குழந்தைக்கு பால் பாக்கெட் வாங்க வெளியில் செல்கிறார். பிரச்சினை இந்த அளவுக்கு வன்முறை வடிவம் எடுத்திருக்கும் என அவர் அறிந்திருக்கவில்லை. வெளியில் சென்றவர் நேரம் ஆகியும் வரவில்லையே என அவரின் இளைய மகன் 16 வயதுடைய முகமது அனஸ் தேடி செல்கிறார். வெகு நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. நெரிசலான அந்த இருண்ட பன்பூல்புரா வீதியில் இருவரின் உடலும் கேட்பாரின்றி கிடந்தது. அவர்கள் போலீசாரால் சுடப்பட்டிருந்தனர். ஷாகீத்தின் மார்பிலும், அனஸ்ஸின் வயிற்றுலும் தோட்டாக்கள் துளைத்திருந்தன. 

"நான் சென்று பார்க்கையில் என் தம்பியின் உடலை சுற்றி இரத்தம் குளம் போல தேங்கியிருந்தது. அவன் என் தந்தையின் உடலை பாதுகாக்க முயற்சித்துள்ளான். அவனையும் போலீஸ் சுட்டுள்ளனர். குண்டடிப்பட்ட அவனை தரதரவென இழுத்துச் சென்று லத்தியால் அடித்தே கொன்றுள்ளனர். 200 மீட்டர் தூரத்தில் அவனை இரத்த வெள்ளத்தில் அப்படியே போட்டு சென்றுவிட்டனர்" என்றார் அனஸ்-ன் அண்ணன் முகமது அமன். மேலும், "ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் ஷாப்-இ-பரத் (Shab-e-Barat) என்ற நிகழ்ச்சி நடைபெறும். இறந்தவர்களின் சமாதிக்கு சென்று அவர்களிடம் மன்னிப்பு வேண்டி பிரார்த்திப்பது வழக்கம். இந்த முறை என் தந்தையையும் என் தம்பியையும் சமாதியாக பார்ப்பேன் என்று நான் கனவிலும் கூட நினைக்கவில்லை. அவர்களை ஏன் கொன்றார்கள்? பால் வாங்க சென்றது குற்றமா?" என்று தேம்புகிறார் அவர்.

ஷாகீத்தின் அண்ணனான ஆரிப் கூறுகையில், "நாங்கள் செல்லும் முன்பே ஷாகீத் இறந்துவிட்டான். அனஸ் இரத்தத்தில் மூழ்கியிருந்தான், ஆனால் மூச்சு இருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தோம். போலீஸ் எங்களை செல்ல விடவில்லை. அருகில் இருந்தவர்களிடம் துணியை வாங்கி அனஸ்-ன் வயிற்றில் கட்டினோம். இரத்தப்போக்கை நிறுத்த முயற்சித்தோம். தோல்வியடைந்தோம். அவன் இறந்துவிட்டான். அவனை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவன் இன்று உயிரோடு இருந்திருப்பான்" என்று கண்ணீர் மல்க கூறுகிறார். மேலும் அவர், "மறுநாள் காலையில் பிணக்கூராய்வு செய்து முடித்து இரவு 10 மணிக்குதான் உடல்களை தந்தனர். அவர்களை அந்த இருட்டிலேயே உடனடியாக புதைக்க வலியுறுத்தியது அரசு. செல்போன் டார்ச் லைட்கள் வெளிச்சத்தில் புதைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. என் தம்பியையும், தம்பி மகனையும் புதைத்த இடத்தின் அருகில், கலவரத்தில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத 3 உடல்களும் புதைக்கப்பட்டிருந்தது" என்றார். 

  • 30 வயதுடைய ஃபயீம் குரேஷியின் வீடு மற்றும் வாகனங்களை வால்மீகி குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசி கொளுத்தியுள்ளனர். மாடியில் இருந்து கீழிறங்கி வாளியில் தண்ணீர் கொண்டு ஊற்றி தீயினை அணைக்க முயற்சித்துள்ளார் அவர். போலீஸ் அவரையும் சுட்டுள்ளது. அவரின் உடலை 3 துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்துள்ளன. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்து விட்டார் என்கிறார் அவரின் சகோதரர் ஜாவீத். 
  • 23 வயதுடைய முகமது சபான் கலவர செய்தி கேட்டு மீன்மார்க்கெட்டில் உள்ள தனது கடையை மூடிவிட்டு வரும்போது போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் வீட்டைச் சுற்றி 3 டஜனுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். எங்களை கூட அவரின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எங்கள் மீது லத்தி சார்ஜ் செய்து விரட்டியடித்தனர் என்கிறார் சபானின் மாமா முகமது ஃபுர்கான்.
  • நசீர் ஹுசைன் பேசுகையில், வால்மீகி குண்டர்கள் குரேஷியின் வீட்டினையும், எனது உறவினர் வீடுகள் உள்ளிட்ட 5 வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். நாங்கள் உயிருக்கு பயந்து பக்கத்து வீடு மாடியில் ஒளிந்திருந்து தப்பினோம். நான் வால்மீகி சாதியினரையும் எங்கள் குடும்பமாகதான் பார்த்து வந்தேன். ஆனால் அவர்கள் எங்களைக் கொல்லவும் துணிந்துவிட்டனர் என்றார்.
  • யூனுஸ் ரஷா, நான் அன்று மாலை பால் வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது போலீஸ் எங்களைச் சூழ்ந்து தடியடி நடத்தியது. நான் உயிருக்கு பயந்து ஓடியபோது எனது வலது காலில் சுட்டது. நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன் என தனது இரத்தம் படர்ந்த துணி சுற்றப்பட்ட காலை காண்பிக்கிறார். போலீஸ் கண்மூடித்தனமாக கிடைத்தவர்களையெல்லாம் கைது செய்து வருகிறது. ஏற்கெனவே 30க்கும் மேற்பட்டோரை கைது செய்துவிட்டது. நான் வெளியில் சென்றால் என்னையும் கைது சிறையில் தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று அச்சம் பீறிட கூறினார். மேலும் என் குடும்பம் என் சம்பாதியத்தை நம்பிதான் வாழ்கிறது. என்னால் வெளியிலும் செல்ல முடியவில்லை, எப்படி என் குழந்தகளுக்கு உணவளிப்பது என்கிறார் அந்த கட்டுமான தொழிலாளி.
  • கலவரம் முடிந்தாலும் போலீசின் அடக்குமுறை தொடர்கிறது என்கிறார் முகமது கைஃப்பின் தாய் ரஹைனா, "என் 17 வயது மகனை வீடுபுகுந்து லத்தியால் அடித்து மண்டையை பிளந்துள்ளனர்" என அவனது காயத்தை காண்பிக்கிறார். 
  • அவரின் அண்டை வீட்டுக்காரர் ஃபிர்டௌசா மைக்ராணி, "காய்கறி விற்கும், எனது கணவர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். அவரை போலீஸ் கைது செய்துவிட்டது" என்கிறார். 
  • அபித் சித்திக் என்பவர், "அந்த அநீதியான வன்முறையின் தாக்கத்தில் இருந்து என்னால் இன்னும் வெளியில் வரமுடியவில்லை" என்றார். மேலும், "ஒரு பெண் போலீஸ் கலவரத்தில் தாக்கப்பட்டார். நான் தாவி ஓடி அவரை மீட்டு வந்து எனது வீட்டில் வைத்து பாதுகாத்தேன். எனது இந்த பணியை பாராட்டுவதற்கு மாறாக மறுநாளே போலீஸ் என் வீட்டையும் தாக்கி சேதப்படுத்தியது" என்று கவலைப்பட்டுக் கொண்டார் அவர். 

கலவரம் மெல்ல ஓய்ந்தாலும் தீயின் நெடியும், எரிக்கப்பட்ட சாம்பல்களும் காற்றில் கலந்து இன்னும் அப்பகுதியில் அச்சத்தை ஊட்டி வருகின்றன. புல்டோசரும், குண்டாந்தடிகளும் எப்போதும் வரலாம்; பெட்ரோல் குண்டுகளும், துப்பாக்கித் தோட்டக்களும் தங்கள் உயிர்களை பலியெடுக்க சுற்றி வளைத்து காத்திருக்கின்றன என்ற பீதியில் உறைந்துள்ளனர் அந்த அப்பாவி இசுலாமிய உழைக்கும் மக்கள். 

கலவரத்திற்கு முன்பு வரையிலான உரிமைக் கோரல்களும் நீதிமன்ற தீர்ப்புகளும்

அப்பகுதியில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக வீட்டுவரி, தண்ணீர் வரி உட்பட அனைத்து வரிகளையும் செலுத்தி வருகின்றனர்.‌ ரயில்வேத் துறை தீடிரென்று ஒரு வரைபடத்தை காண்பித்து இந்த பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2016ல், அப்போது ஆட்சியிலிருந்த உத்தராகண்ட் மாநில காங்கிரசு அரசு, இது "நசுல் சொத்து" (வருவாய் துறைக்கு சொந்தமான சொத்து) என பிரமாணப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், தற்போது அந்த சொத்து ரயில்வேக்கு சொந்தமானது எனக் கூறி மக்களை விரட்டியடிக்கிறது மாநில பாஜக அரசு. 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் அப்பகுதி மக்கள் தங்களிடம் உள்ள பல்வேறு ஆவணங்களை சமர்பித்த போதும் ஏற்றுக்கொள்ள மறுத்து ரயில்வேக்கு ஆதரவாக 2022 டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது உத்தராகண்ட் உயர் நீதிமன்றம்.

"நிலம் ரயில்வேக்கு சொந்தம் என்றால் இவ்வளவு காலம் எப்படி வரி வசூலித்தார்கள்? ஹல்த்வானி ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் 29 ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே ரயில்வே உரிமை கோரியிருந்தது. ஆனால் தற்போது 78 ஏக்கர் பரப்பளவில் உள்ள அனைவரும் வெளியேறவேண்டும் என்று அறிவித்துள்ளது. குளிர்காலத்தில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவவரையும் வெளியேற்றுவது நரகத்தில் எங்களை தள்ளிவிடுவதற்கு சமம்" எனக் கூறி அப்பகுதி மக்கள் சார்பாக மனித உரிமை ஆணையத்தினர் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்ச நீதிமன்றம் ஜனவரி 5 ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. அதோடு 50,000க்கும் மேற்பட்ட மக்களை இரவோடு இரவாக வேரோடு அகற்றுவது சாத்தியமில்லை; நடைமுறையில் சாத்தியமான தீர்வோடு பதிலளிக்க மாநில அரசையும், ரயில்வே துறையையும் கேட்டுக் கொண்டது. 

அதே சமயம், இந்த நிலம் 1937-ல் பிரிட்டிஷ் அரசால் குத்தகைக்கு விடப்பட்டதாகவும் 1994-ல் தனது குடும்பத்திற்கு அது விற்கப்பட்டதாகவும் உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் சாஃபியா மாலிக் வழக்கு தொடர்ந்துள்ளார். சாஃபியா மாலிக்கின் தந்தை இக்குத்தகையை புதுப்பிப்பதற்காக 2007ல் மாவட்ட வருவாய் துறைக்கு மனு அளித்தார். ஆனால், அது விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாலிக் தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 8ம் தேதி விசாரித்த உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 14ம் தேதிக்கு அவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

ஆனால் அன்று மாலையிலேயே இந்த கொடூர கலவரத்தை அரங்கேற்றியுள்ளது பாசிச புஷ்கர் தாமி அரசு.

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் புஷ்கர் தாமி அரசு

இண்டெர்நெட் இணைப்புகளை துண்டித்தும் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டும் பொய்யான பிரச்சாரத்தை கட்டியமைத்தது.  அப்பகுதியில் வாழும் இசுலாமியர்கள் அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவி வந்து 20 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த நிலத்தை ஆக்கிரமித்து குடியேறினர் என்றும்; ஆக்கிரமிப்பை அகற்ற வந்த காவலர்களை பெட்ரோல் குண்டுகள், கற்கள் கொண்டு வீசியதாகவும் கலவரத்திற்கு அவர்களையே பொறுப்பாக்கியது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கியது. பிப்ரவரி மாதத்திற்குள்ளாகவே 75க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை கலவரத்திற்கு காரணம் என குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. 5000க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்குகளை பதிந்துள்ளது. சேதமடைந்த உடமைகள் 2.44 கோடி ரூபாய் என மதிப்பிட்டு காவல்துறை அறிக்கையை சமர்பித்துள்ளது. அத்தொகை முழுவதையும் மசூதிக்கு சொந்தகாரரான மாலிக்கை சேதத்திற்கு ஈடாக கட்ட சொல்லியுள்ளது அரசு. 

மேலும் மார்ச் 4ம் தேதி, பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு (அவசர) சட்டம்-2024 (Public (Government) and Private Prperty Damage Recovery (Ordinance) Law-2024) எனும் கொடூர சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது உத்தராகண்ட் மாநில அரசு. இதன்படி சேதமடைந்த உடமைகளுக்கான மதிப்பீட்டு தொகையோடு கூடுதலாக 8 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். அது கலவரத்திற்கு பொறுப்பானவர்கள் மீது சுமத்தப்படும் என்கிறது இந்த அவசரச் சட்டம். கலவரத்தை இவர்களே உருவாக்குவார்கள்; மக்களை சுட்டுக் கொல்வர்; அடித்து துன்புறுத்தவர்; பாலியல் பலாத்காரம் செய்வர். ஆனால் தண்டனைகளும் அபராதங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு - கொடுமை(!!). 

இந்த கொடிய சட்டம் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் ஒடுக்குவதற்கு பயன்படபோகிறது; இசுலாமியர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களை - எவ்வித எதிர்ப்பும் அவர்கள் காட்டாதவாறும் - விரட்டியடிப்பதற்கு அரசுக்கு கருவியாக பயன்படப் போகிறது. இந்த கொடூர சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் அபாயத்தையும் இந்த கலவர மாடல் மூலம் உருவாக்கியுள்ளது பாசிச தாமி அரசு. 

இனி இந்துத்துவ பாசிசத்திற்கு முன்னுதாரணம் குஜராத் மாடல் அல்ல! உத்தராகண்ட் மாடலே! யார் தீவிர பாசிசவாதி என அமெரிக்க ராமனுக்கு தங்களை நிரூபித்துக் கொள்வதில் இந்த ஆர்.எஸ்.எஸ். - பாஜக முதல்வர்களுக்கிடையேயே கடும் போட்டி நிகழ்கிறது போல. 

கலவரத்திற்கான பொருளியல் அடிப்படை

உலக பொது நெருக்கடியின் விளைவாக, அமெரிக்கா-நேட்டோ முகாமுக்கும் சீன-ரஷ்ய முகாமுக்கும் பனிப்போர் தீவிரமைடந்துள்ளது. உலகில் காலனி நாடுகளை மறுபங்கீடு செய்யும் போட்டி தீவிரமடைந்துள்ளது. காலனி நாடுகளின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக இரண்டு முகாம்களும் உலகளாவிய கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு போட்டியாக அமெரிக்கா மாபெரும் உலகாளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கட்டமைப்பு (Parternership for Global Infrastructure and Investment - PGII) எனும் மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (India-Middle East-Europe Corridor - IMEC) எனும் திட்டத்தில் ஆசியாவில் இந்தியாவை முக்கிய பங்காளியாக இணைத்துள்ளது. அதற்கு சேவை செய்யும் வகையில் நாடு முழுவதும் உள்ள சாலைகள், ரயில்பாதைகள், துறைமுகங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன; நகரங்களின் சாலைகள் விரிவாக்கப்படுகின்றன; ஸ்மார்ட் நகரங்கள் எனும் பெயரில் மக்கள் தங்களது பூர்வீக குடியிருப்புகளில் இருந்து எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படாமல் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

உத்தராகண்ட் மாநில பாஜக அரசு கடந்த 2023 டிசம்பரில் மட்டும் அம்மாநில உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தங்களை விரைந்து நடைமுறைப்படுத்தவே குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது புஷ்கர் தாமி அரசு. தன்னுடைய இந்துத்துவ கொள்கைகளுக்கு இசைவாக உழைக்கும் இசுலாமியர்களின் வாழிவிடங்களை குறிவைத்து அப்புறப்படுத்தி வருகிறது. 2022ம் ஆண்டில் 2 மாதங்களுக்கு உள்ளாகவே 128 இசுலாமியர்களின் வீடுகளை அப்புறப்படுத்தி 617 இசுலாமியர்களை வீடற்றவர்களாக ஆக்கிவிட்டதாக மனித உரிமைக் கழகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனில், இதுவரை பல்லாயிரம் இசுலாமியர்களின் இருப்பிடங்களை குறிவைத்து காலி செய்திருக்கும் என்பதே நிதர்சனம். உத்தராகண்ட்டில் மாங்கனீசு, பிளேசர் கோல்டு, காப்பர் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவைப்படும் முக்கிய தனிமங்கள் படிமங்களாக கிடைக்கின்றன. அவற்றை கொள்ளையடிப்பதற்கு இவர்களுக்கு இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. மேலும், ஹல்த்வானி நகரின் மிக அருகாமையிலேயே கார்ப்பரேட் நலன்களுக்காக பல்லுயிர்பெருக்க பூங்கா (Bio-deversity park) நிறுவப்பட்டுள்ளது. அதை சுற்றியுள்ள குடியிருப்புகளை அகற்றும் நோக்கத்திற்காகவும் பன்பூல்புராவை குறிவைத்துள்ளது இந்த தாமி அரசு.

லவ் ஜிகாத் பழைய ஒடுக்குமுறை - லேண்ட் ஜிகாத் புதிய ஒடுக்குமுறை 

இந்த ஆண்டு ஹல்த்வானி போல சென்ற ஆண்டு புரோலா என்ற சிறிய நகரத்தில் இசுலாமியர் ஒருவர் இந்து பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக 'லவ்ஜிகாத்' எனும் பெயரில் சங்பரிவார அமைப்புகள் மகா 

பஞ்சாயத்தைக் கூட்டியது. பஞ்சாயத்து முடிவில் இனி 'லவ் ஜிகாத்' அல்ல 'லேண்ட் ஜிகாத்' என முடிவெடுக்கப்பட்டது. அதாவது காதலில் ஈடுபட்ட இசுலாமிய ஆணை தண்டிப்பது அல்ல. அதற்கு பதிலாக இசுலாமியர்களையே அவர்களது இருப்பிடங்களில் இருந்து விரட்டியடிப்பது என முடிவெடுத்தன. அவர்களை விரட்டியடிப்பதற்காக தாக்குதல் நடத்தினர். தாமி அரசும் போலீசை குவித்து ஆதரவளித்தது. இது அப்பகுதியின் மகா 

பஞ்சாயத்தில் மட்டும் முடிவு செய்யப்பட்டதல்ல. இது இந்துராஜ்ஜியத்தின் கொள்கைகளுள் ஒன்றாகும். நாடு முழுவதும் மோடி அரசு இதைத்தான் அமல்படுத்தி வருகிறது. உத்தராகண்ட்டிலும் தெஹ்த்ரான், ஹரித்துவார், உத்தம்சிங் நகர், ஜவுன்பூர், நைன்பாக், ஜகார், நக்டிப்பா, தாட்யூர், சக்லானா, தாம்டா, பர்கோட், உத்தர்காசி போன்ற நகரங்களில் நைனிடால் மாவட்டத்திலும் இதுபோன்ற இசுலாமியர்களுக்கு எதிரான லேண்ட் ஜிகாத்களை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது. "உத்தராகண்ட்டில் நாங்கள் மசூதிகளை இடிப்போம். இது புதிய உத்தராகண்ட். யாரும் இங்கே நிலங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம், நாங்கள் மட்டுமே அதை செய்வோம்" என 2023 ஏப்ரல் 7 ம் தேதிய டிவிட்டர் பதிவில் தாமி கொக்கரித்தான். அப்பதிவில் மோடியையும், அமித்ஷாவையும் கூட டேக் செய்திருந்தான். 2023ல் குறிப்பிட்ட 3 மாதங்களில் மட்டும் 150 ஆண்டுகள் பழமையான 330 மசூதிகளை இடித்துள்ளது தாமி அரசு. 2018-2022ம் ஆண்டுகளில் மட்டும் 3.3 லட்சத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்களை உத்தராகண்ட்டிலிருந்து விரட்டியடித்துள்ளது அம்மாநில பாஜக அரசு. இப்படி இசுலாமியர்களை குறிவைத்து 'லேண்ட் ஜிகாத்'தை ஏவி வருகின்றன மத்திய மாநில அரசுகள்.

அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கும், அம்பானி அதானிகளுக்கும் சேவை செய்யவே சொந்தநாட்டு இசுலாமிய உழைக்கும் மக்களின் இரத்தம் குடிக்கிறது மோடி அரசு. தாமி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக அரசுகளின் முதல்வர்களிடையே யார் அடுத்த மோடி  என்ற தீவிரமான போட்டி நடைபெறுவது போல் தெரிகிறது. அதற்காக இவை இரத்தவெறி கொண்டு அம்மணமாக அலைகின்றன. இவ்வளவு கொடூரமான கலவரத்தை பற்றிய விவாதமே எழாமல் ஊடகங்களை பாசிச முறையில் கையாண்டு வருகிறது மோடி அரசு. பிரதான ஊடகங்கள் அனைத்தும் பாஜக அரசின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன.

இந்த இரத்தவெறி பிடித்த மோடி - தாமி - பாஜக ஓநாய் கூட்டத்தை மிச்ச மீதியில்லாமல் எரித்து சாம்பலாக்காமால் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களுக்கும் விடிவு கிடையாது. 

- சமரன் (மே 2024 இதழில்)