ஈரான் மீது தாக்குதல் தொடுத்து மத்திய கிழக்கில் பனிப்போர் தீயை பற்ற வைத்திருக்கும் போர்வெறியன் ட்ரம்ப்
சமரன்
பிப்ரவரி 28 2026 அன்று உச்சக்கட்ட போர்வெறியை வெளிப்படுத்தும் வகையில் “ஆப்பரேஷன் எபிக் ஃப்யூரி (Operation Epic Fury)” என பெயரிட்டு ஈரான் மீது திட்டமிட்ட தாக்குதலை தொடுத்தது டிரம்ப் - நெதன்யாகு கும்பல்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானை ஊடுருவி போர்விமானங்கள் மூலம் ராட்சத குண்டுகளை வீசியது. இதில் ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனி, உயர்மட்ட பாதுகாப்புத் துறை தலைவர்கள் அலி ஷம்கானி, அலி லாரிஜானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே, உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயி கதீஃப், ஆர்.ஜி.சி (IRGC) முதன்மை தளபதி முகமது பக்பூர், ஆயுதப் படை தலைமை அதிகாரி சையது அப்துல்ரஹீம் மௌசாவி, பஸ்ஜி (Basji) துணை இராணுவப்படை தளபதி கோலாம்ரெசா சுலைமானி, இராணுவப்படை தலைவர் முகமது ஷிராஜி, உளவுப்பிரிவு தலைவர் சாலா ஆசாதி, நவீன ஆயுதத் திட்டத்தின் தலைவர் ஹசான் ஜாபல் அமெலியன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை துல்லியத் தாக்குதல் என மார்தட்டிக் கொண்டது அமெரிக்க உளவுத்துறை. ஆனால் கண்மூடித்தனமாக போர்வெறி கொண்டு, மினாப் நகர பள்ளிக்கூடத்தின் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகள் மீதும்கூட கொத்து குண்டுகளை வீசி கொன்றன இந்த இரத்தவெறி பிடித்த ஓநாய்கள். அக்கொடுமையை கண்டு உலக மக்கள் வெதும்பிக் கொண்டிருந்த தருணத்தில்தான், இத்தகைய துயரத்தை தவிர்க்க முடியாத இணைசேதம் (Collateral damage) என்று கூறி கொக்கரித்தன.
மக்கள் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என தொடர்ச்சியான திடீர் தாக்குதல் தொடுத்து சுமார் 1500 உயிர்களை நான்கு நாட்களுக்குள் படுகொலை செய்தது ட்ரம்ப்-நெதான்யாகு கும்பல். இதுவே வாஷிங்டன்னிலோ அல்லது அமெரிக்காவின் வேறு ஏதேனும் நகரிலோ நடந்திருந்தால் பயங்கரவாதம் – உலகத்திற்கு அச்சுறுத்தல் என ஊளையிட்டிருக்கும்; அனைத்து ஊடகங்களும் அமெரிக்க அடிவருடி உலக நாடுகளும் கூட கொந்தளித்திருக்கும். ஆனால், ஈரான் போன்ற மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் என்றால் மட்டும் இந்த கேடுகெட்டவர்களுக்கு இணைசேதம்(?!).
ஈரானில் மக்கள் நலன்களுக்காக ஆட்சி மாற்றம் – ஜனநாயகத்திற்காக போர் தொடுக்கப் போகிறோம் என்று அறைகூவல் விடுத்தது டிரம்ப் –நெதன்யாகு கும்பல். ஆனால் அவை பள்ளிக் குழந்தைகளின் இரத்தத்தை குடித்தன. இவை ஜனநாயக முகமூடி போர்த்திய பிணந்தின்னி கழுகுகள்; போர்குற்றவாளிகள். ஈரான் ஆளும் வர்க்கத்தை காட்டிலும் ஈரான் மக்களுக்கு மோசமான கேடு விளைவிக்க கூடியவர்கள்.
உண்மையில் உலக பயங்கரவாதிகள் யார்? யுத்தவெறி பிடித்த நிதிமூலதன ஏகாதிபத்திய ஓநாய்களே!! இவர்கள்தான் உலக மக்களுக்கு அச்சுறுத்தலான பயங்கரவாதிகளாகவும், பிற பயங்கரவாதங்களின் ஊற்றுக்கண்களாகவும் உள்ளனர்.
ஆகையால், ஈரான் தலைவர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகள் மற்றும் குடிமக்கள் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறியர்களின் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. அதனை கண்டிக்கும் வேளையில் ஈரானின் பதில் தாக்குதல் யாருடைய நலன்களிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது அதனை நாம் எவ்வாறு அணுகுவது என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ஈரானின் பதில் தாக்குதல்
ஈரான் ஆட்சியாளர்கள் தங்களது முக்கியமான தலைவர்களை இழந்த பின்னும் அமெரிக்காவிடம் சரணடைந்துவிடவில்லை. அடுத்தக் கட்ட தலைவர்களை முன்னிறுத்தினர். ஈரானின் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு (Mosaic Defence Doctrine) எனும் அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஆட்சி மற்றும் இராணுவ வடிவமைப்பின் காரணமாக பதில் தாக்குதல்களை வெவ்வேறு திசைகளில் உடனடியாக தொடுத்தனர். ஈரானை சுற்றி நாலாபுறமுமிருந்த அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கினர்.
• ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாயின் பாம் தீவுகள், பாம் ஜுமேரா பகுதிகள்
• பஹ்ரைனின் மனாமாவில் அமைந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் 5-வது படைப்பிரிவின் தலைமையகம்
• குவைத்தில் அலி அல்-சலேம் விமானத் தளம், ஆரீஃப்ஜான் முகாம்
• கத்தாரில் அல் உதைத் (Al Udeid) இராணுவ விமானத் தளம்
• சவுதி அரேபியாவில் ரியாத் நகரம் உள்ளிட்ட கிழக்கு பிராந்திய பகுதிகள், இளவரசர் சுல்தான் விமானத் தளம்
• வடக்கு ஈராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள அர்பில் விமான நிலையம், ஜுர்ஃப் அல்-நஸ்ர் இராணுவத் தளம்
• ஜோர்டான் முவாஃப்பாக் சால்டி விமானத் தளம்
போன்றவை வளைகுடா பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் கடற்படை, விமானப்படை, ரேடார் நிலையங்கள் உள்ளிட்ட இராணுவ தளங்களாகும். இந்த தளங்களே தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்பாட்டுத்துணையாக இருந்ததாக ஈரான் கருதியது. ஆகையால்தான் இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பதில்தாக்குதல் கொடுத்தது ஈரான். இவற்றில் AN/TPY-2, AN/FPS-117, FPS-132, RADAR DOMES உள்ளிட்ட முக்கியமான ரேடார் நிலையங்கள் தகர்க்கப்பட்டன. இவைதான் ஈரான் மீதான தாக்குதலுக்கும் தாட் (THAAD) உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தரவுகளை கொடுத்துவந்த முக்கியமான கண்காணிப்பு மையங்களாகும். இவற்றை ஈரான் தாக்கியதால் அமெரிக்க இராணுவப்படை மத்திய கிழக்கில் கண்ணை இழந்தது போல் ஆகிவிட்டது. ஈரானின் இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவின் அடிவருடிகளான வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் அதிர்ச்சியளித்தது.
அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தியது ஈரான்:
• இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்-ல் உள்ள நெதன்யாகு அலுவலகம் மற்றும் இருப்பிடம்
• அராத் நகரின் முக்கிய அலுவலகங்கள், குடியிருப்புகள்
• இஸ்ரேலின் டிமோனா (Dimona), அராத் (Arad) பகுதிகளில் உள்ள அணு ஆராய்ச்சி நிறுவனங்கள்
• இஸ்ரேலின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள ஹைஃபா (Haifa) துறைமுக பகுதிகள்
போன்றவை ஈரானின் முக்கிய தாக்குதல் இலக்குகளாக அமைந்தன. ஈரான் ஆத்திரங்கொண்டு தாக்குதல் தொடுப்பது என்ற நிலை எடுக்காமல் நிதானமாக பதிலுக்கு பதில் எனும் ரீதியிலான தாக்குதல் (Reciprocal attack) நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது.
தொடர்ச்சியாக மாறி மாறி இருதரப்பும் குண்டுமழை பொழிந்தன. மத்திய கிழக்கில் பிராந்தியப் போராக உருவெடுக்கும் அளவுக்கான அபாயத்தை இந்த தொடர் தாக்குதல்கள் தீவிரப்படுத்தின. இருப்பினும் அதுவரை, இவ்விரு நாடுகளிலும் உள்ள சீன கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் – எரிவாயு ஆற்றல் நிலையங்கள் குறிவைக்கப்படவில்லை. இந்த நிலை மார்ச் 18ல் மாறியது.
இஸ்ரேல் மார்ச் 18ம் தேதி, ஈரானில் உள்ள உலகின் பிரதான எண்ணெய் – எரிவாயு மையமான சவுத் பார்ஸ் (South Pars) நிலையத்தில் குண்டு வீசியது. அதே நாளில் பதிலுக்கு ஈரான், சவுத் பார்சுக்கு வடபுறம் கத்தாரில் உள்ள மற்றொரு உலகின் பிரதான எண்ணெய் – எரிவாயு வயலான ரஸ்லஃபான் (Ras Laffan) நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதல்கள் போரின் போக்கையே மாற்றியது. அமெரிக்காவை பின்வாங்கும் நிலை எடுக்க வைத்த்து. ஏனெனில், சீனாவின் CNPC நிறுவனம் சவுத் பார்ஸ் எரிவாயு நிலையத்தை 80% சதவிகிதம் பங்குகளை கொண்டு இயக்கி வருகிறது. அதே போல, அமெரிக்காவின் எக்ஸான் மொபில் (ExxonMobil), செவ்ரான் (Chevron) கார்ப்பரேட்கள் ரஸ்லஃபான் எரிவாயு வயலை தலா 30% சதவிகிதம் பங்குகளுடன் இயக்கி வருகின்றன. ஆகையால்தான் “சவுத் பார்ஸ் தாக்குதலை நாங்கள் தொடுக்கவில்லை இஸ்ரேல் ஆத்திரத்தில் செய்துவிட்டது, இதற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை; மீண்டும் ரஸ்லஃபானை தாக்கினால் ஈரான் மோசமான விளைவை சந்திக்க நேரிடும்” என உதார் விட்டார் டிரம்ப்.
இந்த தாக்குதல்கள் மற்றும் ஹார்மூஸ் நீரிணையின் (Strait of Hormuz) மீதான ஈரானின் கட்டுப்பாடுகள் போன்றவை இந்த போரை உலகளாவிய ஆற்றல் நெருக்கடியாகவும் – ஆற்றல் போராகவும் (Energy war) மாற்றியுள்ளது என்று போரியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த போரின் துவக்கமே ஆற்றல் மற்றும் இராணுவ கார்ப்பரேட்களின் ஏகபோகத்திற்கானதே ஆகும்.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலுக்கான பொருளியல் அடிப்படை
சிலர் இந்த இராணுவ நடவடிக்கை டிரம்பின் கோமாளித்தனம் என்கின்றனர். சிலர் இது அமெரிக்காவில் உள்ள யூத செல்வாக்கின் (lobby) காரணமாக நடத்தப்படும் போர் என்கின்றார்கள். வேறு சிலர் இது எப்ஸ்டீன் பைல்ஸ் விவாதங்களை திசைதிருப்ப டிரம்ப் நடத்தும் போர் என்கின்றனர். இன்னும் சிலர் அமெரிக்கா ஏதும் தெரியாமல், இஸ்ரேல் மொசாட் (Mossad) உளவுப்பிரிவு மற்றும் நெதன்யாகுவின் சூழ்ச்சியால் இந்தப் போரில் சிக்கிக் கொண்டது என்கின்றனர்.
உண்மையில் இந்த போருக்கான அடிப்படை என்ன?
போரோ அல்லது அரசியல்-பொருளாதார நடவடிக்கைகளோ, எந்தவொரு தனிநபரின் விருப்பு-வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். புறநிலை காரணங்களின்றி யாரோ ஒருவரின் சிந்தையால் மட்டும் தூண்டப்படுவதில்லை. இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில், எந்தவொரு போருக்கோ அல்லது பாசிச நடவடிக்கைகளுக்கோ அடிப்படையாக அமைவது நிதிமூலதன நெருக்கடியும் மறுபங்கீட்டுப் போட்டியுமே ஆகும். மத்தியகிழக்கில் உக்கிரமடைந்திருக்கும் இப்போருக்கும் அடிப்படை அமெரிக்க - இஸ்ரேல் (Vs) சீன-ரஷ்யா - ஈரான் அணிகளின் மறுபங்கீட்டுப் போட்டியே ஆகும். அமெரிக்கா மற்றும் சீன-ரஷ்யா ஆகியவை ஏகாதிபத்திய கார்ப்பரேட்களின் நலன்களுக்காகவும், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆட்சியாளர்களின் பிராந்திய துணை மேலாதிக்க நலன்களிலிருந்தும் இந்த போர் நடத்தப்படுகிறது.
“கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் ஒப்பந்த முறைகளில் மறுபங்கீட்டில் ஈடுபடுகிறது. மத்திய கிழக்கில் சீனாவின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த ஒப்பந்த முறைகளில் ஈடுபட வாய்ப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி மறுபங்கீட்டில் ஈடுபடுகிறது. தைவானில் சீனாவுடன் இராணுவ நடவடிக்கைக்குத் தயார் என அறிவித்துள்ளது டிரம்ப் அரசு” என ட்ரம்ப் அரசு பதவியேற்ற பின் அதன் போர் கொள்கைகள் இவ்வாறு இருப்பதாக நாம் கூறினோம். ஈரான் மீதான அமெரிக்காவின் கடந்த ஆண்டு ஜூன் மாத ‘12 நாள்’ யுத்தமும் தற்போதைய யுத்தமும் ட்ரம்ப் அரசின் ஈரான் மீதான போர்க் கொள்கைகளின் தொடர்ச்சியே ஆகும்.
சண்டையில் யார் கத்தியை முதலில் தூக்கியிருந்தாலும் சண்டை யாருக்கானது/ எதற்கானது என்பதேயே அடிப்படையாக பார்க்க வேண்டும். இந்த யுத்தத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் அணி முதலில் தாக்குதலை துவங்கி இருந்தாலும் இந்த போர் யாருடைய நலன்களுக்கானது என்பதை ஆய்வதே சரியாகும்.
இந்த போருக்கான காரணங்களாக நாம் கணக்கில் கொள்பவை:
1. உலகின் எண்ணெய் வளத்தில் 55%க்கும் அதிகமான இருப்பு, இயற்கை எரிவாயுவில் 3 ல் 1 பங்கை தன்னகத்தே கொண்டிருப்பது, பாஸ்பேட் இருப்பை உலக அளவில் பாதிக்கும் மேலான இருப்பை கொண்டுள்ளது, சூரிய மின் ஆற்றல் துறையின் மையமாக விளங்குவது என உலகின் ஆற்றல் தேவைக்கான வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
2. ஆற்றல் துறையில் குறிப்பாக மத்திய கிழக்கில் எண்ணெய் - எரிவாயு வளங்களின் மீதான சீன -ரஷ்ய ஏகபோகங்களின் வளர்ச்சி மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் நாணயங்களில் செய்யப்படும் எண்ணெய் - எரிவாயு வர்த்தகம் – இது அமெரிக்க ஆற்றல்துறை கார்ப்பரேட்களுக்கு நெருக்கடியாகவும், பெட்ரோ டாலர் ஆதிக்கத்தின் சரிவுக்கும் காரணமாகியுள்ளது. அதை மீட்டெடுக்க வேண்டிய அவசரநிலை அமெரிக்காவுக்கு உருவாகியுள்ளது.
3. அமெரிக்காவின் உள்நாட்டு நெருக்கடி மற்றும் அமெரிக்க ஆயுத கார்ப்பரேட்களின் தேக்கநிலை. இதனை போக்க ஓர் உடனடி யுத்தம் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அவசியமாகியுள்ளது.
4. இஸ்ரேலின் உள்நாட்டு நெருக்கடி மற்றும் இஸ்ரேலின் துணைமேலாதிக்கத்திற்கு சவால்விடும் ஈரானின் பிராந்திய துணைமேலாதிக்க நடவடிக்கைகள்.
இவற்றின் காரணமாகத்தான் ஈரானில் தாக்குதல் தொடுத்து ஆட்சிமாற்றத்தை கொண்டு வருவதோடு ஈரான் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்கிட்டு இந்த போரை அமெரிக்க–இஸ்ரேல் அணி துவக்கியது.
ஈரானுக்கான உதவிகளும் மத்திய கிழக்கில் வளர்ந்துவரும் சீனா-ரஷ்யாவின் மேலாதிக்கமும்
சீனா, ஈரானுடன் அணுநிலையம், எண்ணெய்- எரிவாயு வர்த்தகம் மட்டுமில்லாமல் அதிவேக ரயில் கட்டமைப்பு, பெல்ட் அண்ட் ரோடு உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஆயுத தளவாட சப்ளை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் (CNPC) வடக்கு ஆஜாதிகான் மற்றும் மஸ்ஜித்-ஐ-சுலேமான் எரிவாயு வயல்களில் முதலீடு செய்து வருகிறது. மேலும் சைனோபெக் (Sinopec) நிறுவனம், யாதாவரன் எண்ணெய் வயல்களில் ஏற்கெனவே 5 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக முதலீடு செய்துள்ளது. சீனாவின் குன்லுன் (Bank of Kunlun) வங்கியுடன் ஈரானின் மத்திய வங்கி (Central Bank of Iran) நேரடியாக பரிவர்த்தனை செய்துவருகிறது. 2026ம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையே 600 பில்லியன் டாலர் அளவில் வர்த்தக உறவை மேம்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.
ரஷ்யா - ஈரான் இரண்டும் முக்கியமான வர்த்தக – இராணுவக் கூட்டாளியாக விளங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு இரசியா முதலீடு செய்துள்ளது. ரோஸ்நெஃப்ட் (Roseneft) மற்றும் காஸ்புரோம் (Gazprom) போன்ற ரஷ்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் 10 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக முதலீடு செய்துள்ளன. ஜாருபெழ்நெஃப்ட் (Zarubezhneft) நிறுவனம் பிரௌன்ஃபீல்ட்ஸ் (Brown fields) எண்ணெய் வயல்களில் 4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா, சிஎஸ்டிஓ (CSTO – Collective Security Treaty Organisation) ஐ 2007ல் உருவாக்கிய போதே அதில் பங்கேற்ற ஒரே மேற்காசிய நாடாக ஈரான் விளங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்க - இஸ்ரேல் உறவு எப்படியோ அதேபோல் எதிர் முகாமில் ரஷ்யா-ஈரான் உறவு விளங்குகிறது. 2000 கி.மீ.க்கும் அதிகமாக உள்ள இலக்கை ரேடார் கண்காணிப்பில் கூட சிக்காமல் ஒலியை விட 25மடங்கு வேகத்தில் - வெறும் 10 நிமிடங்களில் சென்று தாக்கும் அதி நவீன ஹைப்பர்சானிக் ஏவுகனைகளை இந்த முகாம் தங்கள் வசம் கொண்டுள்ளது.
சீனா, ரஷ்யா, ஈரான் மூன்றும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சென்ற (பிப்ரவரி) மாத மத்தியில் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்மூஸ் நீரிணை பகுதிகளில் கடற்படை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டன. இதில் சீனாவின் O52D destroyer வகை போர்கப்பல்கள், ரஷ்யாவின் மார்ஷல் ஷபோசினிகோவ் (Marshal Shaposhinikov), போரிஸ் பியூட்டோமா (Boris Butoma) வகை போர்கப்பல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், ரஷ்யா ஈரானுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகள்:
• கையாம் உளவு செயற்கைக்கோள் (Khayyam Spy Satellite): இது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் கண்காணிக்க, ஈரானுக்கு உயர்-தெளிவுத்திறன் (High Clarity) கொண்ட படங்களையும் தரவுகளையும் வழங்குகிறது.
• நாஹித்-2 என்ற செயற்கைக்கோளை ஏவுவதற்கு ரஷ்யா உதவிள்ளது. ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் சிமோர்க், காசெட், காயம்-100 போன்ற ஏவுகணைகளையும் ஈரான் உருவாக்கியுள்ளது.
• அமெரிக்காவின் F-35 போன்ற ஸ்டெல்த் விமானங்களைக் கூட கண்டறியும் வகையிலான “Su-35 பிளாங்கர்-E” போர் விமானங்கள் சுமார் 6.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 48ஐ விநியோகத்து வருகிறது. இந்த விமானங்கள் தன்னகத்தே Khibiny-M மின்னணு போர் கருவிகள் மற்றும் Irbis-E ராடர்களைக் கொண்டுள்ளன.
• S-400 வகை வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. 9K336 verba வகை வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தமும் இறுதியாகியுள்ளது.
• Rezonans-NE ராடர்: இது தொலைதூரத்தில் உள்ள ஸ்டெல்த் விமான்ங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் அதிநவீன ராடர் அமைப்பாகும்.
• ஷாகித் டிரோன்களின் மேம்படுத்தப்பட்ட ரஷ்ய வகையான கர்பியா-3 (Garpiya-3) வகை டிரோன்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருகிறது.
• ஏற்கெனவே புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கான எரிபொருளை வழங்குகிறது. ரஷ்ய ரோசாடம் அணுசக்தி கழகம், ஈரானில் நான்கு அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான 25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை நவம்பர் மாதம் இறுதி செய்தது.
சீனா ஈரானுக்கு அளித்து வரும் இராணுவ உதவிகள்:
• பெய்டூ-3 ஜிபிஎஸ் அமைப்பு (BeiDou-3 Navigation System): இதில் கூடுதலாக உள்ள குறுஞ்செய்தி சேவை, உள்ளூர் நெட்வொர்க்குகள் முடங்கினாலும் கூட ஈரானிய கட்டளை மையங்களை தொடர்புகொள்ள இயலும்.
• பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை நகர்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து வரும் சீனாவின் 500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஈரானுக்குத் தொடர்ச்சியான உளவுத் தகவல்களை (SIGINT – Signals Intelligence) வழங்குகிறது.
• விமானந்தாங்கி கப்பல்களை அழிக்கவல்ல CM-302 ஏவுகணைகளுக்கான ஒப்பந்தத்தை ஈரான் சீனாவுடன் இறுதிசெய்துள்ளது.
• ஆன்டி-ஸ்டெல்த் ராடர் (YLC-8B): குறைந்த அதிர்வெண் அலைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் ஸ்டெல்த் போர் விமானங்கள் போன்றவற்றின் ஊடுருவலை கண்டறியும் திறனுள்ளது.
• ஏவுகணைகளுக்குத் தேவையான சோடியம் பெர்குளோரேட் (Sodium Perchlorate) எரிபொருள்கள்; ஏவுகணை மற்றும் டிரோன் உற்பத்திகளுக்கு தேவையான செமிகண்டக்டர் சிப்கள், கைரோ நேவிகேசன் கருவிகள் (Gyro navigation devices) உள்ளிட்ட உதிரிபாகங்களையும் சீனா வழங்கி வருகிறது
இவ்வாறு சீனாவும் –ரஷ்யாவும் ஈரானுக்கு எலக்ட்ரானிக் யுத்த நடவடிக்கைகளுக்கு (Electronic warfare) உதவி வருகின்றன. இத்தகைய இராணுவ – தொழில்நுட்ப உதவிகள் மட்டுமல்லாமல் இராஜதந்திர ரீதியான உத்திகளையும் வழங்கி ரஷ்யா – சீனா இந்தபோரில் ஈரானுக்கு வழிகாட்டியாக பின்னிருந்து செயல்படுகின்றன; ஈரான் ஆளும் வர்க்கத்தை இயக்குகின்றன.
ஈரானில் மட்டுமல்ல, அமெரிக்காவின் அடிவருடிகளான வளைகுடா நாடுகளிலும் கூட ரஷ்ய – சீன மூலதனங்கள் விரிவடைய ஆரம்பித்துவிட்டன. சவுதி அரேபியாவுடன் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தானிய வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவது; சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து தடத்தை (INSTC) மேம்படுத்த ஒப்பந்தம். கத்தாருடன் ஹலால் சுற்றுலா சந்தையை உருவாக்குவது; கத்தார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவை (QSTP) ரோஸ்நெஃப்ட் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நேரடியாகவே இயக்குகிறது. கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன் நாடுகளுடன் தானிய, தொழிற்துறை உலோக வர்த்தகங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. தங்கம், வைரம் உள்ளிட்டவற்றில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ரஷ்யாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது. அதேபோல, சவுதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகியவை சீனாவுடனான எண்ணெய் - எரிவாயு வர்த்தகத்திற்கான முக்கிய ஆதாரங்களாகவும் உள்ளன. இந்தாண்டில் கல்ப் கவுன்சிலும் சீனாவும் இணைந்து உச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளன. அவை பல்வேறு வர்த்தக விரிவுபடுத்தலுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பானது 2024ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு பிரிக்ஸ் பிளஸ் (அல்லது அவுட்ரீச்) (BRICS Plus / Outreach) கூட்டமைப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சீனா, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் 385 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை யுவானாக மாற்றியுள்ளது. இது யுவான் (ரென்மென்பி) நாணயத்தின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. ஈரான் சீனாவுடனான தனது எண்ணெய் – எரிவாயு வர்த்தகம் முழுவதையும் யுவானிலேயே செய்து வருகிறது. சவூதி அரேபியா கூட சீனாவுடன் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு நாணய மாற்று ஒப்பந்தம் மேற்கொண்டது. இவை பெட்ரோ டாலர் ஆதிக்கத்துக்கு அடியை கொடுத்துள்ளன.
இவ்வாறு மத்திய கிழக்கில் சரிந்துவரும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை தக்கவைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டு நெருக்கடி மற்றும் அமெரிக்க ஆயுத கார்ப்பரேட்களின் தேக்கநிலை
2001 முதல் இராணுவ தளவாட உற்பத்தி சார்ந்த கார்ப்பரேட்களை முன்னிறுத்தி இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்பு எனும் பெயரில் இராணுவ பொருளாதாரத்தை கட்டியமைத்து சுமார் 10 டிரில்லியன் டாலர்களை செலவழித்தது அமெரிக்கா. இது அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது:
• இது வரை அமெரிக்கா வரலாற்றில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் 2% சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது; விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
• வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து 5% சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது
• நடப்புக் கணக்கு பற்றாக்குறை 1 டிரில்லியன் டாலர்களை நெருங்கிவிட்டது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 3.33% சதவிகிதமாகும்.
• அமெரிக்காவின் கடன் 38 டிரில்லியன் டாலர்களுக்கும் மேலாக அதிகரித்துவிட்டது. அதன் மொத்த ஜிடிபியான 30 ட்ரில்லியன் டாலரை விட சுமார் 25% சதவிகிதம் அதிகமாகும்
டெக்னோ - ஆயுத கார்ப்பரேட்களுக்கு நிதிகளை வாரி வழங்கும் அரசு, அமெரிக்க மக்களுக்கான நலத்திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்தியுள்ளது. சொத்துகள் கார்ப்பரேட்களிடம் குவிக்கப்பட்டு ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இதனால்,
• 60% சதவிகிதம் மக்கள் புதிய சேமிப்புகள் ஏதுமின்றி ஏற்கெனவே சேமித்த அனைத்தையும் செலவழித்து வாழும் மோசமான உருவாகியுள்ளது. 25% சதவிகிதம் முதியவர்கள் எவ்வித வாழ்நிலை உத்திரவாதமும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
• 8.5 கோடி மக்களின் காப்பீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 8.5 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்
• குழந்தைகள் வறுமையில் வாடும் நிலை ஐரோப்பாவை விட அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
மேலும், உக்ரைன் போரில் ரஷ்யாவுடனான ட்ரம்ப் அரசின் சமரச பேச்சுவார்த்தை முயற்சிகள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க ஆயுத தளவாட கார்ப்பரேட்களின் வியாபாரத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆயுத வியாபாரத்தை அதிகரிக்க உடனடி யுத்தம் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலின் “ஆப்பரேஷன் எபிக் பியூரி” தாக்குதலில் படம் -1 ல் கொடுக்கப்பட்டுள்ள வகையான போர் விமானங்கள், போர்கப்பல்கள், டிரோன்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பட்டியலுள்ள அமெரிக்க ஆயுத கார்ப்பரேட்களே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்:
1. லாக்கீடு மார்ட்டீன்
2. நார்த்ரொப் க்ரும்மென்
3. ஆர்டிஎக்ஸ்
4. போயிங்
5. எல்3ஹாரிஸ்
6. ஸ்பெக்டிரிஒர்க்ஸ்
7. ஹண்டிங்டன் இங்கல்ஸ் இண்டஸ்டிரீஸ்
8. ஜெனரல் டைனமிக்ஸ்
இவற்றின் பங்குசந்தை ஈரான் மீதான 2025 மே - ஜூன் மாத தாக்குதலுக்கு பிறகு தொடர்ச்சியாக உயர்ந்து வந்தாலும் கடந்த ஆண்டின் இறுதியில் லேசான சரிவை சந்தித்துள்ளன. இவற்றை ஈடுசெய்ய இவர்களின் வியாபாரத்தை அதிகரிக்க போர் நடக்க வேண்டும். அதன் ஒரு பகுதியாகத்தான் ஈரான் மீதான போரில் இந்த அம்சமும் முக்கிய பங்காற்றுவதாக நாம் பார்க்கிறோம். ஈரான் மீதான போர் முயற்சிகள் மற்றும் பிப்ரவரி 28 தாக்குதல்களுக்கு பிறகு உடனடியாக, லாக்கீடு மார்ட்டீன், நார்த்ரொப் க்ரும்மென், ஆர்டிஎக்ஸ், ஜெனரல் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குச்சந்தை புதிய உச்சத்தை பெற்றுள்ளதை படம் -2ல் காணலாம்.


அமெரிக்கா போலவே, இஸ்ரேலின் பொருளாதாராமும் இராணுவப் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து அது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2022ம் ஆண்டில் 6.7% சதவிகிதமாக இருந்த இஸ்ரேலின் பொருளாதாரம் கடந்த ஆண்டில் துவங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்புப் போருக்கு பின்பு தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. சென்ற நிதியாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி 2% சதவிகிதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது. நடப்பாண்டில் அது மேலும் சரிந்து 0.3% சதவிகிதத்திற்கும் குறைவாக வீழ்ந்தது. தொடர் யுத்தத்தில் 70 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இழந்துள்ளது. இது இஸ்ரேலின் மொத்த ஜிடிபியில் சுமார் 20% சதவிகிதமாகும். அதே போல் அரசு நிர்வாக செலவுகள் 4% சதவிகிதத்தில் இருந்து 8% சதவிகிதமாக இரு மடங்காகியுள்ளது. ஏற்கெனவே போரில் சேதமடைந்த இஸ்ரேலின் உள்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கு மட்டுமே அதன் ஜிடிபியில் 15% சதவிகிதம் தேவைப்படுகிறது. கட்டுமானத் துறை 4 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தது. எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் திவாலாயின. இஸ்ரேலின் சுற்றலாத் துறை சுமார் 5 பில்லியன் டாலர்களை இந்த ஓராண்டில் இழந்துள்ளது. எனவே நடப்பு ஆண்டில் அதன் ஜிடிபி மேலும் 10% சதவிகிதம் அளவிற்கு சரியும் அபாயம் உள்ளது. அதன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 40 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகியுள்ளதோடு அதன் மொத்த கடன் சுமையும் அதிகரித்து விட்டது.
இந்த நெருக்கடியின் சுமைகளை இஸ்ரேல் மக்கள் மீது சுமத்தி வருகிறது நெதன்யாகு அரசு. உள்நாட்டில் மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளது. சுமார் 60000க்கும் மேற்பட்ட சிறுகுறு நிறுவனங்கள் இஸ்ரேலில் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஹோட்டல் நிர்வாகம், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 25% க்கும் மேற்பட்டோர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மறுபக்கம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைத் துறைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதில் ஈடுபட்டு வந்த சுமார் 1.6லட்சம் பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கி வெளியேற்றியதே இதற்கு காரணம். பணவீக்கம் கடந்த ஓராண்டில் 4% சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 30% சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தனது உள்நாட்டு நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அகண்ட இஸ்ரேல் திட்டத்தை முன் வைத்து மத்திய கிழக்கில் தொடர் போர்களை நடத்தி வருகிறது நெதன்யாகு அரசு.
மறுபுறம், ஈரான் ஆளும் வர்க்கம் தனது துணைமேலாதிக்க நலன்களிலிருந்து அணு ஆற்றல் கட்டமைப்புகளை உருவாக்குவது; சீன-ரஷ்ய உதவியுடனோ அல்லது தனித்தோ நவீன/மலிவான ட்ரோன்களை – ஏவுகனைகளை உருவாக்குவது; ஹவுதி, ஹிஜிபுல்லா, ஹமாஸ், பஸ்ஜி போன்ற இராணுவக் குழுக்களுக்கு நிதி, இராணுவ – தொழில்நுட்ப உதவிகள் செய்வது போன்றவை இஸ்ரேல் ஆளும் வர்க்க நலன்களுக்கான “அகண்ட இஸ்ரேல்” திட்டத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் மத்திய கிழக்கு ஆதிக்கத்திற்கும் இது சவாலாக அமைந்துள்ளது. அமெரிக்காவும் – இஸ்ரேலும் இயற்கை கூட்டாளியாக மாறியுள்ள காரணங்களுள் இதுவும் முக்கியமான அம்சமாகும்.
ஈரான் ஆளும் வர்க்கம் தனது துணைமேலாதிக்க நலன்களிலிருந்து அணு ஆற்றல் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. JCPOA ஒப்பந்தத்தில் இருந்து முந்தைய ஆட்சி காலத்தில் டிரம்ப் அரசு வெளியேறி ஈரானுக்கு பொருளாதார தடைகளை அதிகரித்தது. அந்த ஒப்பந்தத்திற்கு முன்பு 20% சதவிகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருந்த ஈரான், ஒப்பந்தம் இரத்தான பிறகு யுரேனியம் செறிவூட்டலை 60% சதவிகிதம் வரை அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணு ஆற்றல் வசதிகளுக்கான உதவிகளை ரஷ்யா நிறுவனங்கள் செய்து வருகின்றன என்பதை நாம் மேலேயே பார்த்தோம். இந்த வளர்ச்சிப் போக்கில் மேலும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கொண்டு அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலைக்கு செல்லக்கூடும் என அமெரிக்கா மட்டுமல்லாமல் இஸ்ரேலின் ஆளும் வர்க்கமும் அஞ்சி வருகிறது. ஏற்கெனவே “12 நாள் போர்” எனப்படும் கடந்த ஆண்டு ஜூன் மாத போரில் ஈரானின் இரண்டும் முக்கிய அணுஆற்றல் நிலையங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் தளங்களில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியது. அதில் சுமார் 600 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதும் ஈரான் வசம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாகவும் அது அணு குண்டுக்கு தேவையான 90% சதவிகித செறிவூட்டலை விரைவில் எட்டிவிடக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஆளும் வர்க்கமும் அதன் உளவுப்பிரிவான மொசாட்டும் அச்சம் தெரிவித்துள்ளது.
சீன-ரஷ்யா உதவியுடன் எவ்வாறு ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருகிறது என்று மேலே பார்த்தோம். ஈரான் தனித்து உலகிலேயே மலிவான (சுமார் 20000 டாலர் செலவிலேயே) ஷாஹித் – 136 வகை ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. இவ்வகை டிரோன்களை ஒன்று-இரண்டல்ல ஆயிர கணக்கில் உற்பத்தி செய்து இசுரேலை மிரட்டியுள்ளது. மேலும் ஈரானின் ஆயுத தயாரிப்புகளை ஹவுதி, ஹிஜிபுல்லா, ஹமாஸ், பஸ்ஜி போன்ற இராணுவக் குழுக்களுக்கு வழங்கி வருகிறது; அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதோடு இராணுவ பயிற்சிகளும் தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கி வருகிறது. இந்த குழுக்கள் ஈரானின் ஆளும் வர்க்கத்திற்கு துணையாக லெபனான், ஏமன், பாலஸ்தீனம், ஈரானின் சில பகுதிகளில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. இவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு ஆதிக்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளது மட்டுமல்லாமல், இஸ்ரேல் ஆளும் வர்க்க நலன்களுக்கான “அகண்ட இஸ்ரேல்” திட்டத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதுவரை மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களே ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேலின் “ஆப்பரேஷன் எபிக் பியூரி” தாக்குதல்களுக்கான பொருளியல் அடிப்படையாகும்.
“ஆப்பரேஷன் எபிக் பியூரி” - ன் வெற்றிகளும் தோல்விகளும்
என்னதான் அமெரிக்கா உலக இராணுவ வல்லரசு – சீனா நவீன தொழில்நுட்பங்களின் பிதாமகன்; அமெரிக்காவின் போர் விமானங்களை எந்த ராடாராலும் கண்டுபிடிக்க முடியாது; அதி நவீன வான் தடுப்பு அமைப்புகள் – இரும்புக் கவசம்; துல்லிய செயற்கைகோள் தொழில்நுட்பம்; AI உதவியுடன் நடக்கும் யுத்தம் என பல்வேறு அதீத பிம்பங்கள் கட்டியமைக்கப்பட்டாலும் அவை இருபக்கமும் பலவீனங்களும் இருக்கதான் செய்கின்றன. அதனால்தான் ஈரானின் ரேடார் கண்காணிப்புகளையும் வான் தடுப்பு அமைப்புகளையும் தாண்டி ஈரானின் முக்கியத் தலைவர்களை அமெரிக்கா - இஸ்ரேலால் ஒரே தாக்குதலில் குண்டுகட்டாக கொல்ல முடிகிறது. ஈரானால் அமெரிக்காவின் ராடார் அமைப்புகளையும், புகழ்பெற்ற F35 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்களையும் கூட தகர்க்க முடிகிறது. இவை இருதரப்பிலும் அவற்றின் உளவுத்துறை மட்டும் டெக்னோ துறைகளின் தோல்வியையே காண்பிக்கிறது. எனவே இரு தரப்பிலும் பலங்களும் பலவீனங்களும் நிரம்பியே உள்ளன.
ஈரான்
ஆப்பரேஷன் எபிக் பியூரி தாக்குதலினால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, ஈரான் இராணுவ ரீதியாகவும் உள்கட்டமைப்பு ரீதியாகவும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது.
மார்ச் 3வது வார நிலவரப்படி
• ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உள்ளிட்ட சுமார் 3500 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களே 1500க்கும் மேற்பட்டோர்.
• 5000க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகள் தகர்க்கப்பட்டுள்ளன.
• ஷாஹித் சுலைமானி போர்க்கப்பல் உள்ளிட்ட ஈரானின் முக்கிய போர்க்கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 140க்கும் மேற்பட்ட கடற்படை கலன்கள் அழிக்கப்பட்டுள்ளன.
• ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவும் அமைப்புகள் பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளன.
• தகவல் தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. 96% இண்டெர்நெட் சேவை முடக்கப்பட்டது.
• அணுசக்தி திட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
• சவுத் பார்ஸ் எண்ணெய்-எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதி தாக்கப்பட்டது
தாக்குதலின் ஆரம்பக் கட்டத்தில் ஈரான் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தாலும், (12 நாள் போர் எனப்படும் ஜூன் 2025 போர் போல அல்லாமல்) இம்முறை ஈரான் மொசைக் பாதுகாப்பு உத்தி மற்றும் ஹார்மூஸ் நீரிணையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது உள்ளிட்ட இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் போரின் போக்கை மாற்றியது ஈரான். (ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஹார்மூஸ் நீரிணையின் வழியாகத்தான் உலகில் 25% சதவிகித வர்த்தகம் நடைபெறுகிறது. குறிப்பாக உலகின் 20% எண்ணெய்-எரிவாயு வர்த்தகம் – அதாவது நாளொன்றுக்கு 21மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இந்த நீரிணையின் வழியாகத்தான நடைபெறுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). இதன் காரணமாக அமெரிக்காவே தானாக முன்வந்து ஈரான் எண்ணெய் மீதான பொருளாதார தடையை நீக்கியுள்ளது.


ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் சீனாவும் நேரடியாக களத்தில் இறங்காவிட்டாலும் ஏவுகணை உற்பத்திக்கான சிப்கள் மற்றும் அவை இயங்குவதற்கான எரிபொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகள் செய்து வருவது; ஈரானின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என பின்னிருந்து போரை இயக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தொடர்ச்சியாக பல்வேறு இழப்புகளை சந்தித்தாலும் ஈரானால் நீடித்த பதில்தாக்குதல் கொடுக்க முடிகிறது.
• ஈரானால் ஏவுகனைகளையும் – ஷாகித்-136 போன்ற மலிவு விலை டிரோன்களையும் விரைவாக அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிகிறது.
• ஷாகித்-136 டிரோன்கள், இதன் மலிவான விலை மற்றும் தாழ்வாக பறந்து தாக்கும் திறன் காரணமாக இந்த போரில் முக்கிய பங்காற்றுகின்றன. ஏனெனில் வெறும் 20000 டாலர் மதிப்பிலான டிரோனை தாக்க அமெரிக்கா அதை விட 200 மடங்கு அதிகமுள்ள சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலுள்ள ஏவுகணைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதுவும் ஒரு டிரோனை வீழ்த்த பல ஏவுகணைகள் ஏவப்பட வேண்டும்.
• அமெரிக்கா-இஸ்ரேல் உள்ளிட்ட எதிரிகளும் ஈரான் போரில் அவர்களுக்கு உதவுபவர்களின் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்மூஸ் நீரிணையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மற்றவர்கள் நீரிணைய பயன்படுத்த வேண்டுமெனில் பெட்ரோ டாலர் தவிர்த்த நாணயங்களில் குறிப்பாக யுவானில் எண்ணெய் வர்த்தகம் செய்ய வேண்டும். அவ்வாறான வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் சரக்கு போக்குவரத்துக்கு ஹாரிஸ் நீரிணையை கடக்க எவ்வித தடையும் இல்லை என்கிறது ஈரான். இந்த அறிவிப்பானது ஈரான் சீனாவின் பதிலியாக செயல்படுவதை அப்பட்டமாக்குகிறது.
• போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமெரிக்காவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த தருணத்தில் / அடுத்த 2வது நாளே அமெரிக்காவும் – இஸ்ரேலும் கூட்டு சேர்ந்து எங்கள் மீது மோசமான தாக்குதலை தொடுத்தன. இத்தனைக்கும் அந்த பேச்சு வார்த்தையில் நாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று ஒப்புதல் அளிக்க தயாராக இருந்தோம். ஆனால் அமெரிக்கா நடக்கவியலாத சிலவற்றுக்கும் (ஏவுகணை தயாரிப்பு முழுவதையும் முடக்க வேண்டும், பெட்ரோ டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டும்) பேரம் பேசியது. அதை நாங்கள் ஏற்கவில்லை; தற்போதும் அதை ஏற்க முடியாது என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், துணை வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் பாகேயும் தெரிவித்து வருகின்றனர். தாங்கள் இதுவரை எந்த நாடு மீதும் தாக்குதல் நிலை எடுத்ததில்லை; நாங்கள் எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை; எங்கள் மீதான தாக்குதல்களுக்குதான் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறோம் என அவர்கள் மீது அமெரிக்கா குத்திய பயங்கரவாத முத்திரையை போக்குவதற்கு தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.
போன்ற ஈரானின் செயல்பாடுகள் போர்களத்தில் இஸ்ரேல்-அமெரிக்காவுக்கு எதிராக தாக்குப்பிடித்து நிற்பதை வெளிபடுத்துகின்றன.
அமெரிக்கா - இஸ்ரேல்
இந்த கூட்டணியின் இழப்புகளை பார்த்தோமானால்,
• குவைத், சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட அமெரிக்கா இராணுவ தளங்கள் மற்றும் டெல் அவிவ் மீதான தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்; 300 பேர் காயமடைந்துள்ளனர்.
• வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் ரேடார் தளங்கள் குருடாக்கப்பட்டுள்ளன.
• பஹ்ரைனில் உள்ள அமேசான் டேட்டா சென்டர் தகர்க்கப்பட்டுள்ளது.
• KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம், F-35 வகை போர் விமானங்கள் தாக்கப்பட்டுள்ளன.
• USS ஆபிரகாம் லிங்கன் போர்கப்பல் தாக்குதலுக்குள்ளாகி 1000 கிமீ தொலைவுக்கு வெளியே பின்வாங்கப்பட்டுள்ளது.
• இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன.
• இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் மற்றும் எண்ணெய் - எரிவாயு கிடங்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
• டிமோனா (Dimona) அணுநிலைய பகுதிகள் தாக்கப்பட்டுள்ளன
இராணுவ ரீதியான பெரிய இழப்புகளை அமெரிக்கா சந்திக்காவிட்டாலும் அரசியல் – பொருளாதார ரீதியாக இந்த போரில் பின்னடைவை சந்தித்து வருகிறது:
• ஈரானை தாக்கப் போகிறோம், ஈரான் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிமாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்தார் டிரம்ப். ஆனால் அமெரிக்காவின் CIA, இஸ்ரேலின் Mossad உளவுப்பிரிவுகளின் தகவல்களும் அமெரிக்கா – இஸ்ரேலின் கணிப்புகளும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தன. அமெரிக்க ஆதரவு குழுக்களை தவிர இஸ்ரேலின் பெரும்பாலான மக்கள் அமெரிக்காவின் இந்த அநீதி தாக்குதலை ஏற்கவில்லை; ஆட்சி மாற்றமும் நிகழவில்லை; தங்களுக்கு சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவலாம் என்ற கனவும் தவிடு பொடியாகியது.
• இந்த தாக்குதலினால் அமெரிக்க ஆயுத கார்ப்பரேட்களின் பங்குகள் உயர்ந்தாலும், அமெரிக்க அரசின் இராணுவ செலவினங்கள் அதிகரித்துள்ளன. இந்த போர் ஆரம்பித்த 5 – 6 நாட்களிலேயே சுமார் 11 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. மேற்கொண்டு நாளொன்றுக்கு 1 பில்லியன் டாலர் வரை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா கூறியது போல இந்த போர் 4 -5 வாரங்கள் நீடிக்குமானால் சுமார் 95 பில்லியன் டாலர் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு 200 பில்லியன் டாலர் (சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்) நிதியை கேட்டுள்ளது பென்டகன். (இத்தொகை ஈரானின் ஒட்டுமொத்த ஜிடிபியில் கால்வாசியும், இஸ்ரேலின் ஜிடிபியில் ஏறக்குறைய பாதியுமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). இவ்வளவு தொகையை செலவளித்தும் இதுவரை ஈரானை தங்களுக்கு கீழ் அடிபணிய வைக்க முடியவில்லை என்பது டிரம்ப் அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். ஏற்கெனவே ஜார்ஜ் புஷ் அரசு துவங்கிய ஆப்கன் போரில் சுமார் 2 டிரில்லியன் டாலர்களை இழந்தும் அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மீண்டும் அப்படியான நிலை திரும்புவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக பைடன். டிரம்ப் மற்றும் நெதன்யாகு அரசுகள் ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கு முயன்று வருகின்றன – அவை அனைத்தும் தோல்வியையே தழுவி வருகின்றன.
• ஹார்மூஸ் நீரிணை பகுதியளவில் மூடப்பட்டதால், பிரெண்ட் (Brent) உள்ளிட்ட சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை 4 மடங்கு அதிகரித்துவிட்டது. கத்தாரின் ரஸ்லஃப்பான் எரிவாயு மீதான ஈரானின் பதில் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க எண்ணெய்-எரிவாயு கார்ப்பரேட்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
• வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் – எரிவாயு – உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் குறிப்பிட்ட அளவில் முடக்கப்பட்டதால் அந்நாடுகள் மத்தியிலும் இப்போரில் குறிப்பிட்ட அளவிலான அதிருப்தி நிலவி வருகிறது. அவற்றில் ஓமன் உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன் நாடுகள் பெருமளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடுகளை சந்திக்கின்றன. அவற்றில் சில ரஷ்யாவுடன் கூட வர்த்தகம் செய்யலாமா என்ற அளவுக்கான நிலைக்கு சென்றுள்ளன.
• ஹார்மூஸ் நீரிணையை திறக்க ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் முதல் நம்மூர் வடிவேலு(!!) வரை அனைவருக்கும் தொடர்பு கொண்டு உதவி கேட்டார். ஒருவரும் ட்ரம்பின் கோரிக்கைக்கு ஒருவரும் செவி மடுக்கவில்லை; யாரும் ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்க தயார் இல்லை என மறுத்துவிட்டனர்.
• கனடா அமெரிக்காவுக்கான மின் ஆற்றல் வழங்கலை குறிப்பிட்ட அளவு நிறுத்தியுள்ளது.
• ஈரான் மீதான தாக்குதலின் இத்தகைய பின்னடைவுகளால் அமெரிக்காவின் செனட் சபையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்கட்சியான டெமாக்ரடிக் கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் டிரம்ப் தனது சொந்த கட்சியான ரீ-பப்ளிக் கட்சியினர் மத்தியிலும் செல்வாக்கை இழந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், இப்போருக்கு ட்ரம்பின் அவசர திட்டமில்லாத நடவடிக்கையே காரணம்; இப்போரில் வெற்றி பெற முடியாது என அறிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். சில உளவுப்பிரிவு அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் கூட இப்போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜினாமாவுக்கும் கைதுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
• அமெரிக்கா - இஸ்ரேல் இருநாட்டிலும் உள்ள பொதுமக்கள் இந்த போர் வெறியர்களின் ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர். கோடிக்கணக்கில் வீதியில் இறங்கி தத்தமது அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. இவை சர்வதேச அளவில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த போரில் சில அமெரிக்கா கார்ப்பரேட்கள் கொழுத்து வருகின்றனர்.
• நாம் ஏற்கெனவே முதலில் பார்த்தது போல, அமெரிக்காவின் ஆயுத கார்ப்பரேட்கள் அமெரிக்காவின் பென்டகனுக்கு மட்டுமில்லாமல், இஸ்ரேலுக்கான ஆயுத தளவாட வியாபாரத்தை அதிகரித்துள்ளனர். அவர்களின் பங்குகள் உயர்ந்தன.
• ஹார்மூஸ் நீரிணை அபாயமானது என அச்சங்களை தூண்டிவிட்டு சரக்குக் கப்பல்களின் பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறும் என்றும் அவற்றுக்கான காப்பீடுகள் அத்தியாவசியம் என்றும் அத்தகைய காப்பீடு கட்டணங்களை இன்சூரன்ஸ் கார்ப்பரேட்டுகள் பல மடங்கு உயர்த்தி விட்டன. குறிப்பாக அமெரிக்காவின் 'கெப்லர்' (Kpler) நிறுவனம் இதில் ஏகபோகத்தை தக்கவைத்துள்ளது.
• பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் நிர்ணயம் விலை 4 மடங்கு ஏறியதால், கச்சா எண்ணெய் இருப்பு வைத்திருந்த அமெரிக்கா நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட்கள் கொள்ளை லாபம் பார்த்துவிட்டனர்.
ரஷ்யா - சீனா
இவர்களை தாண்டி இந்த போரில் சீனா - ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் பெரும் லாபத்தையும் அரசியல் –பொருளாதார ரீதியாக பெரும் செல்வாக்கையும் பெற்று வருகின்றன.
• ஈரான் ஹார்மூஸ் நீரிணையை பகுதியளவு மூடியதால் உலகளவில் ஏற்பட்ட எண்ணெய் – எரிவாயு தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டது ரஷ்யா. அமெரிக்காவே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்-எரிவாயுவை இறக்குமதி செய்து கொள்ள இருந்த தடையை நீக்கியது. இதன் காரணமாக ரஷ்ய கார்ப்பரேட் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்துள்ளது. தடையின் போது மலிவு விலையில் கொடுத்து வந்த ரஷ்ய நிறுவனங்கள் தற்போது எண்ணெய்–எரிவாயு விலையையும் கணிசமான அளவு உயர்த்தி விட்டன. தான் புதினுக்கு நல்லது செய்துள்ளதாக ட்ரம்பே பேசும் அளவுக்கு ரஷ்ய நிறுவனங்கள் இந்த போரில் லாபம் பார்த்து வருகின்றன.
• சீனா சுமார் 70% சதவிகிதம் எண்ணெய் இறக்குமதியை வெளிநாடுகளில் இருந்துதான் பெற்று வருகிறது. அதில் 15% சதவிகிதம் அளவுக்கு ஈரானிடமிருந்துதான் பெறுகிறது. ஹார்மூஸ் நீரிணை மூடலால் சீனாவுக்கான எண்ணெய்–எரிவாயு இறக்குமதியில் எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. மாறாக, அவ்வழியாக நடைபெறும் எண்ணெய்-எரிவாய் வர்த்தகங்கள் சீன நாணயமான யுவானில் இருக்க வேண்டும் என்ற நிலை சீனாவுக்கும் அதன் நாணயத்திற்கும் பெரும் செல்வாக்கை கொடுத்துள்ளது.
• ஈரான் போருக்கு ஆயுத தயாரிப்பு உபகரணங்களையும் எரிபொருளையும் ஏற்றுமதி செய்வதன் மூலம் சீன கார்ப்பரேட்களும் கொழுத்து வருகின்றன. சீன அரசுத்துறை கார்ப்பரேட் ஏவுகணைக்கு தேவையான எரிபொருளான சோடியம் பெர்குளோரேட்டை (Sodium Perchlorate) ஆயிரக்கணக்கான டன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. ZTE, Huawei, Tiandy Technologies, Zhejiang Uniview Technologies, Mizar Vision, Silk road Trading Company Ltd போன்ற சீன நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப உதவி மற்றும் சிப் ஏற்றுமதிகளின் மூலமாக போரினால் லாபமடைந்து வருகின்றனர். ரஷ்யாவின் ரோஸாடாம் (Rosatom), United Aircraft Corporation, Rosetec உள்ளிட்ட அணு ஆற்றல் மற்றும் ஆயுத ஏற்றுமதி நிறுவனங்களும் இப்போரினால் லாபமடைந்து வருகின்றன.
இவ்வாறு இந்த போரில் இருதரப்பிலும் இழப்புகளும் வெற்றிகளும் இருந்தாலும் அமெரிக்கா- இஸ்ரேல் முகாமைவிட ஷாங்காய் முகாமின் கையே இந்த போரினால் ஓங்கியுள்ளது தெளிவாகிறது. சீன – ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் ஈரானை பதிலிப்போரில் பயன்படுத்தி வருவதும் தெளிவாகிறது.
ஈரானினின் தற்காப்பு போரா? அல்லது பனிப்போரா?
ஒருபுறம் ஹார்மூஸ் நீரிணையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி பெட்ரோ டாலருக்கு எதிராக சீனாவின் யுவானை முன்னிறுத்துகிறது என்று மேலே பார்த்தோம். மறுபுறம் அமெரிக்க டெக்னோ நிறுவனங்களை குறிவைக்கிறது. இவை தங்கள் நாட்டு தலைவர்களின் படுகொலைக்கும் தரவுகளை சேகரித்து கொடுப்பதிலும் டெக்னோ யுத்த்த்திலும் ஈடுபட்டு வருவதாக அது அறிவித்தாலும், இதில் ஷாங்காய் ஏகாதிபத்தியங்களின் (ரஷ்யா –சீனா) நலன்கள் புதைந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. எலான் மஸ்கின் ஸ்டார்லிங், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, நிவிடியா, ஐபிஎம், இன்டெல், சிஸ்கோ, ஆரக்கிள், ஹெச்பி, டெல், ப்ளான்டர் டெக்னாலஜீஸ், போயிங், ஜெனரல் எலக்ட்ரிக், ஜேபிமார்கன் சேஸ், அபுதாபியின் ஜி42, துபாயின் ஸ்பைர் சொல்யூசன்ஸ் போன்ற 18 அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை தனது முதன்மை தாக்குதல் பட்டியலில் இணைத்துள்ளது ஈரான்.
இவ்வாறு இதுவரை பார்த்தவற்றில் இருந்து இது ஈரானின் தற்காப்பு போர் என்ற நிலையில் இல்லாமல் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பனிப்போராகவே உள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான ஈராக் சதாம் நிலையையும் தற்போதைய ஈரான் நிலையையும் நாம் ஒன்றாக மதிப்பிட முடியாது. ஏனெனில் அன்று ஷாங்காய் முகாம் வலுபெற்ற ஒன்றாக இல்லை; அப்போதுதான் ஷாங்காய் கூட்டமைப்பு துவக்கநிலையில் இருந்தது; அது போட்டி ஏகாதிபத்திய முகாமாக பரிணமிக்கவில்லை; அது ஈராக்கை முன்வைத்து பனிப்போர் நடத்தவில்லை. சதாம் தனது நாட்டின் இறையாண்மைக்காக அமெரிக்காவை எதிர்த்து நின்றார். அது புறநிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தும் என்ற நிலையில் இருந்துதான் நாம் சதாம் உசேனை நிபந்தனைகளோடு ஆதரித்தோம். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஷாங்காய் முகாம் பலமடைந்துள்ளது; அமெரிக்காவையே தள்ளாட வைக்கும் அளவுக்கு போட்டி முகாமாக வளர்ந்துள்ளது.
பார்ப்பதற்கு ஈரான் தற்காப்பு யுத்தம் நடத்துவது போல தெரிந்தாலும் அதன் நலன்கள் ஷாங்காய் முகாமின் நலன்களுக்குள் புதைந்திருப்பது தெளிவாகிறது. அதனுடன் தனது துணைமேலாதிக்க நலன்களும் கலந்துள்ளது என்பதைதான் காண முடிகிறது. மத்திய கிழக்கில் தனது இழந்தநிலையை மீட்பதற்காகதான அமெரிக்க போர்வெறி கொண்டு மூர்க்கமாக முன் கை எடுத்து தாக்கி வருகிறது. நாம் ஏற்கெனவே கூறியது போல யார் முதலில் கத்தியை தூக்கியது என்பது பற்றிய பிரச்சனை இல்லை இது. போருக்கான அடிப்படை ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையே நடக்கும் மறுபங்கீட்டுப் போட்டியே ஆகும்.
அமெரிக்காவுக்கு எதிராக போர் தொடுப்பதின் பெயாரால் தனது நாட்டின் இறையான்மையை ரஷ்ய-சீன அணியிடம் ஒப்படைக்கிறது ஈரான். ரஷ்யாவும் – சீனாவும் தற்போது குறிப்பிட்ட அளவில் ஈரானுக்கு போரில் உதவி வந்தாலும், ரஷ்யாவும் – சீனாவும் எந்த அளவிற்கு ஈரானுக்காக களத்தில் இறங்கும் என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில், அவை வெறுமனே அறிக்கை மூலம் கண்டனம் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபை தலையிட வேண்டும் என கோருகின்றன. மாறாக, இதுவரை இந்த அமெரிக்கா-இஸ்ரேலின் அடாவடி போருக்கு எதிரான கண்டன வாக்கெடுப்புக்கு அவசரமாக ஐ.நா. சபையை கூட்டுவதற்கோ, அல்லது தங்களது வீட்டோ அதிகாரத்தை கொண்டு இந்த போரை தடுப்பதற்கோ எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. சீன-ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் மத்திய கிழக்குப் பிராந்திய இளையப் பங்காளியாக ஈரான் இருந்தாலும், அவற்றின் மூலதனங்கள் இஸ்ரேலிலும் குவிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்தில் அவை செயல்பட்டாலும் இஸ்ரேலுடனான தங்களது உறவை சமநிலையில் பேணவே விரும்புகின்றன. அதே போல் ஷாங்காய் கூட்டமைப்பானது நேட்டோ (NATO) போல உறுதியளிக்கப்பட்ட இராணுவ கூட்டமைப்பும் அல்ல. அதாவது நேட்டோ உறுப்பு நாடுகள் ஒன்றின் மீதான தாக்குதல் பிற நேட்டோ நாடுகளின் மீதான தாக்குதலாகவும் கொள்ளப்படும் என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டதொரு கூட்டமைப்பு அல்ல. எனவே ஷாங்காய் ஏகாதிபத்தியங்கள், ஈரான் மீதான தாக்குதலை தங்களின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளாது. ஈரான் ஆளும் வர்க்கம் ஷாங்காய் ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் ஈரானுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவைகளுக்கு இல்லை. அதனால்தான், ஷாங்காய் ஏகாதிபத்தியங்களுக்காக ஈரான் பதிலிப்போரில் ஈடுபட்டாலும் அவை பின்புலத்தில் இருந்து உதவிகள் செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றன. நேரடியாக களத்தில் இறங்கவில்லை. (உக்ரைன் விசயத்தில், ஆரம்பத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத - நிதி உதவிகள் செய்து வந்தாலும் சென்ற வருடம் எப்படி ரஷ்யாவோடு சமரசம் செய்துகொண்டு உக்ரைனை பலிகடா ஆக்கியது என்பதை இங்கு நினைவு கூர்வோம்). இது ஏகாதிபத்தியங்களின் நரித்தனங்களுள் ஒன்று; அவை எப்போதும் முழுமையான நம்பிக்கைக்கு உரியவை அல்ல. அவற்றின் நிதிமூலதன நலன்களுக்கு தனக்கு விசுவாசமான நாடுகளை கூட பலிகொடுக்க அவை தயங்காது.
ஈரான் ஏற்கெனவே உள்நாட்டு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. 40 ஆண்டுகால தொடர் பொருளாதாரத்தடையை தாண்டியும் இசுலாமிய குடியரசின் கீழ் குறிப்பிட்ட அளவில் வளர்ச்சி பெற்றிருந்தது. அதன் அந்நிய கடன் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. இருப்பினும் உள்நாட்டில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி – உள்நாட்டு கடன் நெருக்கடியின் காரணமாக பணவீக்கம் 40% சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து ஈரான் மக்களிடையே கொந்தளிப்பான நிலையை உருவாக்கியுள்ளது. ஈரான் நாணயமான ரியால் வரலாறு காணாத அளவுக்கு - அதாவது 1 டாலருக்கு நிகரான மதிப்பு 15 லட்சம் ரியால் என சரிந்துள்ளது. ஈரான் அரசை எதிர்த்து ஜனவரி மாதம் ஈரான் மக்கள் அணிதிரண்டு போராடினர். இதில் அமெரிக்க உளவுத்துறையின் கைங்கரியம் இருந்தாலும், ஈரான் மக்களின் பொருளாதார நெருக்கடி என்பது நிதர்சனம்தான். அப்போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது அலி கொமேனி அரசு. 5000க்கும் மேற்பட்ட மக்களை சுட்டுக் கொன்றது. தற்போதைய போர் சூழல்கள் அந்த நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் ஆளும் வர்க்கத்தின் ஷாங்காய் ஏகாதிபத்திய சார்பு நிலையும் இந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கவே செய்யும். இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வெனிசுலா நாடுகளில் நடந்தவை அதற்கு நேரடி சாட்சியம். எந்தவொரு ஏகாதிபத்தியமும் மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மைக்காக நிற்காது. ஏகாதிபத்தியம் என்பதே ஆதிக்கத்திற்கானதுதான் சுதந்திரத்திற்கானதல்ல.
ஆகையால், ஈரான் தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீதான அமெரிக்க –இஸ்ரேல் அணியின் போர்வெறி தாக்குதலை கண்டிக்கும் அதே வேளையில், ஈரான் ஆளும் வர்க்கத்தின் ஷாங்காய் சார்பு நிலைபாட்டையும் நாம் ஆதரிக்க முடியாது. அணி சேராக் கொள்கையின் அடிப்படையில் (அதாவது அனைத்து ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பு மூலம்) ஒன்று சேர்ந்து நின்று போரிடுவது ஒன்றுதான் ஈரானின் இறையாண்மையை பாதுகாக்கும். அதுதான் ஈரானின் சுதேசிய வளர்ச்சிக்கு அந்நாட்டும் மக்களின் நலன்களுக்கும் உகந்ததாக இருக்கும்.
பனிப்போரை உலகப்போராக மாற்ற நடைபெறும் சதிவேலைகள்
மத்திய கிழக்கில் இந்த பனிப்போரில் உலக நாடுகளை இழுத்துவிடும் முயற்சியிலும் சதிவேலைகளிலும் அமெரிக்க –இஸ்ரேலிய அணி தொடர்ச்சியாக செய்து வருகிறது. ஈரானில் இருந்து சுமார் 4000 கி.மீ தொலைவில் இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க –இங்கிலாந்து இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதை ஈரான் தான் செய்தது; ஈரான் எங்களுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் அச்சுறுத்தல்தான் என நெதன்யாகு பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். இந்த ஏவுகனை தாக்குதலை ஈரான் வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. எங்களிடம் 2000 கி.மீ. தொலைவுக்குட்பட்ட ஏவுகனைள்தான் உள்ளது. அந்த இலக்கை தாண்டி ஏவுகணைகளை தயாரிக்க வேண்டிய தேவையும் எங்களுக்கு எழவில்லை. எனவே இது இசுரேல்-அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என்றும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து தற்போது அமெரிக்காவுக்கு உதவுவதாகும் தங்களது இராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளது. மேலும், குவைத்தில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் கட்டமைப்பின் மீது ஈரான் தாக்கியதாகவும் பொய்பிரச்சாரங்களை செய்து வருகின்றன. அத்தகைய தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என்றும் ஈரான் தரப்பு மறுத்துள்ளது. இவ்வாறு உலக நாடுகளை ஈரானுக்கு எதிராக திருப்பவும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி முயற்சித்து வருகிறது.
ஈரான் சுழலில் சிக்கிக் கொண்ட டிரம்ப் அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவிக்கிறார். நாளொன்றுக்கு வெவ்வேறு எதிரும் புதிருமான நிலைபாட்டை எடுக்கிறார். ஒரு நாள் ஈரானும் நானும் சேர்ந்து ஹார்மூஸ் நீரிணையை கையாள்வோம் என்கிறார். மறுநாள் கார்க் (Kharg) தீவை கைப்பற்றி ஈரானை பிடிக்குள் கொண்டு வருவோம் என்கிறார். ஈரான் போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து நமக்கு ஒரு பரிசை அறிவித்துள்ளது என்கிறார். மறுநாள் ஈரானை ஒன்றுமில்லாமல் அழித்துவிடுவேன் என்கிறார். முதலில், 5 நாள் போர்நிறுத்தம் என அறிவிக்கிறார். மறுகணமே கார்க் தீவை கைப்பற்ற தரைப்படையை வளைகுடா நாடுகளில் இறக்கி வருகிறார்; கராஜ் நகர பாலத்தை தாக்குகிறார். இப்படி வாய்ச்சவடால்களையும் பொய் மூட்டைகளையும் கட்டவிழ்த்து விடுகிறார் டிரம்ப். டிரம்ப் உடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் ஈடுபடவில்லை. போர்நிறுத்தத்திற்காக கூறப்படும் 15 நிபந்தனைகள் பாகிஸ்தான், ஓமன் போன்ற மத்தியஸ்தம் செய்வோர் மூலம் தங்களுக்கு செய்தியாக எட்டியதாக ஈரானின் வெளியுறவுத்துறை டிரம்பின் பொய்கூற்றை மறுத்துள்ளது. ஐ.ஆர்.ஜி.சி. இராணுவ படை தளபதி இன்னும் ஒருபடி மேலே சென்று ட்ரம்ப் தனக்கு தானே போர்நிறுத்த பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டதாக பகடி செய்யும் அளவுக்கு ட்ரம்பின் பொய்சவடால்கள் நிரம்பி வழிகின்றன.
ட்ரம்பின் சவடால்களையும் – இஸ்ரேல் மொசாட்டின் பொய் கூற்றுகளையும் நம்பி யாரும் களத்தில் இறங்க தற்போதைக்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை. தங்களது தளத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கும் இங்கிலாந்து கூட நேரடியாக போரில் இறங்க கூடிய நிலையில் தற்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. ஆகையால், ஈரானை மையப்படுத்தி நடக்கும் இப்போர் உலகப் போராக மாறுமா? என்றால் தற்போதைய நிலைமைகளின் கீழ் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஒருவேளை ரஷ்ய-சீன நிதிமூலதனங்களின் மறுபங்கீட்டிற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுமானால் அது நடக்கலாம். அதுவரை பிராந்திய அளவிலான மோதல்களே நீடிக்கும் என்றே தெரிகிறது. மத்தியகிழக்கில் நடக்கும் இந்த போரும் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் இவற்றால் நெருக்கடி தீராது. மாறாக நெருக்கடி மேலும் ஆழமாகும் என்பதை மட்டும் நாம் திட்டவட்டமாக கூறமுடியும்.
உலக மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் பனிப்போர்
இந்த போரினால் முதலாளித்துவ கார்ப்பரேட்கள் சிலர் லாபமடைந்தாலும் அது அவர்களின் நெருக்கடியை தீர்க்க இயலாது. ஏனெனில் அவர்களின் நெருக்கடியே மிகை உற்பத்தி நெருக்கடிதான். இந்த போரின் சுமைகளையும் மக்களின் மீது மென்மேலும் சுமத்துவதால் நெருக்கடி மேலும் ஆழப்படவே செய்யும். தற்போது ஒரு மாத காலமாக நடந்துவரும் இந்த போரினால் உலகளவில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் எண்ணெய் – எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அவற்றின் விலையும் 40% சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது. இவற்றின் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அது மக்களின் வாங்கும் சக்தியின்மையை மேலும் அதிகரித்து. உற்பத்தி துறைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் நெருக்கடிக்குள் ஆழப்படுத்தும். அமெரிக்காவின் தொடர் நெருக்கடியின் காரணமாக 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலையை விட மோசமான பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கூட எச்சரித்து வருகின்றனர்.
மேலும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள், மருத்துவ வசதிகளுக்கு அத்தியாவசியமான ஹீலியம் வாயு, மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் போன்றவற்றிலும் தட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது. இவற்றால் வேளாண்மை பாதிக்கப்பட்டு வேளாண் பொருட்கள் விலை உயர்வதோடு, மருத்துவ செலவினங்களும் அதிகரித்துள்ளன. கீழே கொடுக்கப்பட்ட படங்களில் விலை உயர்வையும் அனைத்து துறைகளின் பங்குச்சந்தை வீழ்ச்சியையும் காணலாம்.

இந்த நெருக்கடிகளால் பெரிதும் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே ஆவர். அமெரிக்கா – இஸ்ரேலில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் - பொதுமக்களுக்கும் கூட இந்த போரினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அவர்கள் நாட்டு கார்ப்பரேட்கள் கொழுக்க அவர்களின் உழைப்பும் சுரண்டப்பட்டு போருக்கு செலவிடப் படுகிறது. போரின் செலவினங்களும் அவர்கள் தலையிலேயே சுமத்தப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்களுக்கே இந்த நிலை என்றால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மக்களின் நிலையை சொல்லியா தெரிய வேண்டும்.
அமெரிக்க –இஸ்ரேலிய கார்ப்பரேட் பாசிசத்துடன் உறவாடும் பாசிச மோடி ஆட்சி
இந்தியா யாரிடம் எண்ணெய்–எரிவாயு வாங்க வேண்டும் என ட்ரம்ப் கட்டளையிடுகிறார். அமெரிக்க அடிவருடி மோடி அரசோ, சரிங்க எஜமான் நீங்கள் சொன்னால் சரி! என அவரின் கட்டளைக்கு அடிபணிகிறது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்காதே என்றால், நிறுத்திவிடுகிறோம் என்றது. இந்தியா ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய தடையை 30 நாட்களுக்கு மட்டும் நீக்குகிறேன் என பொதுவெளியில் அறிவிப்பு செய்யும் அளவுக்கு இந்தியாவின் இறையான்மையை அமெரிக்காவின் காலடியில் கிடத்தியுள்ளது இந்த கேடுகெட்ட பாஜக அரசு. எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. வீட்டு சிலிண்டர் விலையை சத்தமில்லாமல் உயர்த்திவிட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்படும் கடைகளுக்கான சிலிண்டர் விலை 3 மடங்க் உயர்ந்துவிட்டது. இந்த கேஸ் தட்டுப்பாட்டால் சிற்றுண்டி நிலையங்கள் முதல் உணவகங்கள் வரை பகுதியளவில் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள், வெளியூரில் புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள், மருத்துவமனை நோயாளிகள் உள்ளிட்ட பலர் உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் ஏற்கெனவே பெட்ரோல் - டீசல் விலை கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுவது; நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்கள் இவற்றினால் தற்போதைக்கு இவற்றின் விலை உயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிந்தபின் விட்ட லாபத்தை ஈடுகட்ட அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்த்தப்படக்கூடும். மேலும் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை நம்பி தொழில் செய்யும் விவசாயிகள் உள்ளிட்ட சிறுகுறு உற்பத்தியாளர்களின் நிலையும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. ஈரானில் போர் நடந்தால் அது ஈரோடு குக்கிராமத்தில் உள்ள சமையல் அறை வரைக்கும் பாதிக்கும் என்பதை இந்த போர் நிரூபணம் செய்துள்ளது.
எனவே இந்த போர் மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய மறுபங்கீட்டு நலன்களுக்கான அனைத்து போர்களும் உழைக்கும் மக்களுக்கு எதிரானதே அவற்றை மார்க்சிய- லெனினிய ஆயுதந்தாங்கிய நீதிப் போராலேயே வீழ்த்த முடியும்.
ஈரானின் உச்சத் தலைவர்கள் முதல் பள்ளிக்குழந்தைகள் வரை அமெரிக்க –இஸ்ரேலிய போர்வெறிக்கு பலியிடப்பட்டுள்ளனர். ட்ரம்ப் – நெதன்யாகு அரசுகளை கண்டிக்கவே இல்லை பாஜக அரசு. ஏன் இதை பற்றி மோடி கும்பல் வாய் திறக்க கூட இல்லை; கள்ள மௌனம் சாதித்தது. ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான ஈரானின் பதில் தாக்குதலை கண்டித்தது. ஏற்கெனவே ஜனவரியில், ஈரானுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த ஐ.நா. சபை தீர்மானத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது பாஜக அரசு. ஏனெனில், பாஜக அரசின் – அதானி அம்பானி கார்ப்பரேட்களின் நலன்கள் அமெரிக்க – இஸ்ரேலிய கார்ப்பரேட்களின் நலன்களுடன் கட்டுண்டுள்ளது. இந்தியாவில் ஏட்டளவில் இருந்த அணிசேராக் கொள்கை என்பதை காற்றில் பறக்கவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்காசிய பிராந்திய இளையப் பங்காளியாக அடிமை சேவகம் செய்கிறது பாஜக அரசு. இந்தியாவின் இறையாண்மையை இந்த போர்வெறியர்களுக்கு பலிகொடுத்து வருகிறது. எனவே அமெரிக்க – இஸ்ரேலிய கார்ப்பரேட்களின் போர்வெறிக்கு எதிராக குரல் கொடுப்பதும், அவர்களுடன் உறவாடும் பாசிச மோடி கும்பலை எதிர்த்து போராடுவதுமானது நமது இன்றைய தேசிய கடமையாகியுள்ளது.
சமரன்
(ஏப்ரல் - மே 2026 இதழ்)