பெரியார் எனும் ஆளுமை
Karpagavinayagam Subbiah
பார்ப்பனியத்தை, சாதி இழிவை, பெண்ணடிமைத்தனத்தை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு எனப் பிளந்தார்.. என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பாட்டாளி வர்க்கம் பற்றிய அவரின் புரிதல் என்னவாக இருந்தது...?
வாசிக்கக் கிடைக்கும் குடி அரசு தொகுதிகள் முழுவதையும் வாசித்த அனுபவத்தில் கீழ்க்கண்ட கருத்தை முன் வைக்கிறேன்.
தொழிலாளி வர்க்கம் பற்றியோ, ஆலைத்தொழிலாளிகளாக அணிதிரண்ட வர்க்கம் பற்றியோ, அவர்களின் வர்க்க உணர்வு பற்றியோ பெரியாருக்கு புரிதல் இருந்ததாகத் தெரியவில்லை.
குடி அரசு தொகுப்புகள் அனைத்தையும் வாசித்த வரையில் கொத்தனார், தச்சு வேலை செய்வோர், ஈயம் பூசுவோர் போன்ற கைவினைஞர்களை மட்டுமே மனதில் கொண்டு தொழிலாளி, அவன் செய்யும் வேலைக்குக் கூலி.. கூலியை நாலணா உயர்த்துவதால் புரட்சி மாற்றம் வராது... இந்த மாதிரிதான் அவரின் புரிதல் இருந்ததாகக் கருதுகிறேன்.
சங்கமாகத் திரட்டப்பட்டு, அவர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளோடு, புரட்சிகர அரசியலைப் பயிற்றுவிப்பது என்ற லெனினிய வழிமுறை குறித்து அவருக்கு எவ்விதமான யோசனைகளும் இல்லை.
தனது திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதுகிறார். என்ன திட்டம் என்றால் கூட்டுறவு ஸ்தாபனங்களை உருவாக்குவது, தொழில்களை அரசுமயமாக்குவது.. இது போன்றவற்றை தன்னளவில் அவர் சமதர்மம் என்று கருதியுள்ளார்.
அவரின் நெருங்கிய நண்பரான திரு விக வோ போர்க்குணமிக்க தொழிற்சங்கம் கட்டி பின்னி மில் ஸ்ட்ரைக்கை முன்னெடுத்தவர்.. அவருக்கு மார்க்சியம் ஹெகலின் சித்தாந்தம் எல்லாம் தெரிந்திருந்ததை அவரின் எழுத்துக்களில் பரக்கக் காணலாம்.
பெரியார் எப்போதுமே அரசு எனும் கருவி மீது தாக்குதல் வரக்கூடாது என்பதில் காந்திய பாதையை முன்வைத்தவர்.
பாசிசம், நாசிசம் இரண்டும் உலகை அச்சுறுத்திய இருபதாண்டுகளில் அதற்கு எதிராக அவர் எதையும் எழுதவில்லை.
தெலங்கானா எழுச்சியை ஒடுக்கவும் ஐதராபாத்தை இந்தியாவோடு இணைக்கவும் இந்திய அரசு நடவடிக்கை அறிவித்தபோது, திராவிட நாடு கோரி வந்த பெரியார், அரசின் போலீஸ் நடவடிக்கையையொட்டி நாம் ஏற்கெனவே அறிவித்திருந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கிறோம் என்று 1948 குடி அரசு இதழில் அறிக்கை தந்துள்ளார்.
இந்திய அரசு நிஜாமை அடிபணிய வைத்ததுடன் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடியது பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்களும் தெலங்கானா விவசாயிகளும் படேலின் ராணுவத்தால் படுகொலை செய்ய எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்தவராகத்தான் பெரியார் இருந்தார்.
ஆளும் வர்க்க நலனுக்கு எதிராக அவர் ஒருபோதும் இயங்கியதில்லை. அரசு கொண்டு வரும் இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு இவற்றை தீவிரமாக ஆதரித்தார். அந்த வகையில் முதலாளித்துவ சீர்திருத்தத்தை வரவேற்றவர் என்பதே அவரின் வரலாற்று பாத்திரம்.
பெரியாரின் தளபதி பேரறிஞர் அண்ணாதுரையின் வர்க்க சார்பு என்னவாக இருந்தது?
“உற்பத்திப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கொடுக்கும் விலைதான் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முறையே கூலியாகவும் இலாபமாகவும் போய்ச் சேருகிறது. அதைப் பங்கு போட்டுக் கொள்வதில் தொழிலாளி, முதலாளி ஆகிய இரு சாராருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவில் தலையிட்டுத் தீர்த்து வைக்கும் உரிமை பொதுமக்களுக்கு வேண்டும். இந்த உரிமையைப் பொதுமக்கள் உணரவும், உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்க முன்வருமாறும், பொதுமக்களை அழைக்கும் பணியை கழகம் செய்கிறது. தொழிலாளருக்கும் முதலாளிக்கும் இடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் ஓர் அரிய காரியம் அது” என்று அண்ணா சொன்னார்.
வர்க்க சமரசத்தைக் கொள்கையாகக் கொண்ட அண்ணாவின் தி.மு.க.வோ தன்னையே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் “மாஸ்கோவிற்கு செல்வோம். மாலங்கோவைச் சந்திப்போம். நாங்களே உண்மையான கம்யூனிஸ்டுகள் என்போம்” என்றும் சொன்னது.
லாபம் என்பது எப்படி உருவாகிறது என்பதை அண்ணாதுரை பிறப்பதற்கு முன் 60 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் கண்டறிந்து உலகுக்கு அறிவித்து விட்டார். தொழிலாளியின் உழைப்புக்கு சமமான கூலியைத் தராமல் சுரண்டுவதும், கூலிக்கு சமமான வேலை நேரத்தை விட அதிகமாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தி உறுஞ்சுவதன் மூலம் திரளும் உபரியே முதலாளியின் லாபமாக உருத்திரள்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கி விட்டார்..
வர்க்க சமரசத்தில் ஊன்றி நிற்கும் பேரறிஞர் சொன்ன லாபம் குறித்த வரையறையைக் கேட்டால் முதலாளித்துவ அறிஞர்களே கைகொட்டிச் சிரிப்பர்.
Karpagavinayagam Subbiah
https://www.facebook.com/100009022035568/posts/4275133389464020/?rdid=IM7ouUYODneDNsJk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு