உச்சி குடிமியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சி பேன்கள்
துரை. சண்முகம்
சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கட்டப்பஞ்சாயத்து செய்து விட்டது என்று குரல்கள் எழும்புகின்றன. இந்தக் கண்டனங்கள்
சரிதான்.
ஆனால் தங்களுக்கு சாதகமாக வந்தால் அண்ணல் எழுதிய சட்டம் வென்றுவிட்டது என்று கூத்தாடுவதும் தங்களுக்கு எதிராக வரும் போது உச்சி குடிமி மன்றம் என்று போட்டுக் கொடுப்பதும் அரசியலாக இருக்கிறது.
இதன் அரசியல் வர்க்க உறவுகளை அம்பலப்படுத்தினால்தான் உச்சி குடிமியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கட்சி பேன்களையும் காண முடியும்.
இன்றைக்கு தமிழ்நாட்டின் பல கல்வி வள்ளல்களின் கல்வி வளாகங்கள் ஆக்கிரமிப்பு திமிரில் தான் நிமிர்ந்து நிற்கிறது. இதில் எல்லா இன சாதிவாத கும்பல்களும் அடக்கம்.
உண்மையில் இந்த விவகாரத்தில் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு நிலத்தை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து இருந்தபோது , இது தொடர்பான நீதிமன்ற வழக்கில் முதலில் சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவர் இடத்திற்கான தொகையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் இன்னொரு நீதிபதி அவர்கள் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் நிலத்தை திருப்பி தந்துவிட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இரு நீதிபதிகள் இரு வேறு விதமாக சொன்னதால் இது மேல்விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வந்தபோது எஸ். எம் சுப்பிரமணியம் அவர்கள் தீர்ப்பை உறுதி செய்து நிலத்தை குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பித் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.
சாஸ்த்ரா மோடி வம்ச கோத்ரா என்பதால் மேல்மட்டத்தில் வேலை பார்த்து நீதிமன்ற உத்தரவை கூந்தலாக மதித்தது.
அப்போது தஞ்சை பகுதியில் ம.க.இ.க பு.மா.இ.மு அமைப்புகள் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அரசியல் பிரச்சாரம் செய்தன.
உச்ச நீதிமன்றம் மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மட்டுமா?
பார்ப்பார்க்கு அல்லது பணி செய்து அறிகிலயே! எனும் மன்னன் வம்சத்தின் அடுத்தடுத்த ஆட்சிகள் இயற்பகை நாயனாராக நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஒரு குறுக்கு சால் ஒட்டியது.
அதாவது முதலில் அண்ணா திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் சரியாக சொல்லப்போனால் ஆக்கிரமிப்பாளனை பாதிக்கப்பட்டவர் போல கருதி அவருக்கு அரசு வேறு நிலம் கொடுக்கலாம் எனுமாறு நிலவிவகார
அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதையே தொடர்ந்து திமுக அரசும் இது தொடர்பான விவகாரத்தில் இன்னும் தனியார்களுக்கு ஏற்ற தகவமைப்பைச் செய்தது.
இதெல்லாம் நடைமுறையில் முதலாளிகளுக்கான முறை வாசலாக பயன்படுவதற்குதான்.
மக்கள் வாழ்விடங்களாக இருந்தால் ஆக்கிரமிப்பை அடித்து நொறுக்கி துரத்துவதுதான் அரசியின் லட்சியம்.
பின் நாட்களில் அரசே வகுத்த இத்தகைய நிலம் கைமாற்றல் தொடர்பான ஆணைகளை வைத்துக்கொண்டுதான் சாஸ்திரா இப்போது உச்சநீதிமன்றத்தில் பொது சொத்துக்கு பெப்பே காட்டி இருக்கிறது.
அவனைத்தான் ஆரியன் என்று சொல்கிறீர்களே! திராவிட அரசு கிடைத்த வாய்ப்பில் ஆக்கிரமிப்பாளனை அடித்து துரத்தி இருக்க வேண்டாமா!
ஏன் சட்ட வாதத்தின் பின்னே ஒளிந்து கொண்டது.
எல்லாம் வர்க்காஸ்ரம தத்துவப்படி தான் நடக்கிறது!
இப்போது தவெக அரசு இதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
ஆனால் அரசு என்பதன் இயல்புப்படி அப்படி நடந்தால் ஆச்சரியம்தான்.
-துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/1121850790521716/?rdid=pdImBW7CdSeHMuYV
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு