உலகளாவிய ஜென்-ஸி போராட்டங்களை ஆதரிப்போம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாக வளர்த்தெடுப்போம்!!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
நவ-25 - ஏஎம்கே - 8 ஆம் ஆண்டு நினைவுநாள்!
முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை எதிர்த்து அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் உலகு தழுவிய மாணவர் - இளைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!
இந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விடிவெள்ளியாக திகழ்ந்த நமது ஆசான் ஏஎம்கே நம்மை விட்டுச் சென்று 8 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற கடமைகள் நம் கண் முன்னே இன்றும் அப்படியே இருக்கின்றன. அவர் வழிகாட்டிச் சென்ற மார்க்சிய-லெனினிய வெளிச்சத்தில் அந்த கடமைகளை நிறைவேற்றுவோம் என உறுதியேற்கும் நாளே நவ- 25 - ஏஎம்கே நினைவுநாள். 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய பாசிசத்தின் அடிப்படைகளை வரையறுத்துக் கொடுத்து இந்திய அரசியல் துறைக்கு வெளிச்சம் காட்டினார். 30 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் - பாஜக இரண்டும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள் மாநில கட்சிகள் அதன் தொங்குசதைகள் என வரையறுத்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தார். இன்று உலக அளவிலும் இந்தியாவிலும் பாசிச அடக்குமுறைகள் வளர்ந்து வரும் நிலையில், அவர் நமக்கு புகட்டிச்சென்ற மார்க்சிய-லெனினிய தத்துவ-அரசியல் ஞானத்தில் இருந்து இந்தியாவில் மோடி அரசை தூக்கியெறிவது மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மைகொண்ட பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது என்ற உடனடி கடமைகள் நம் முன்னே உள்ளது. அதற்கு சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் நிகழும் அரசியல் மாற்றங்களை முன்வைத்து புரட்சிகர - ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பற்றி பரவியிருக்கும் மாணவர்-இளைஞர் போராட்டங்கள்
இந்தாண்டு பிரான்சில் துவங்கி அல்பேனியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், டென்மார்க் உள்ளிட்ட 23 ஐரோப்பிய நாடுகளில், மில்லியன் கணக்கான மாணவர்-இளைஞர்கள் திரண்டு நடத்தும் ஜென்-ஸி தலைமுறை போராட்டங்கள் பற்றி பரவி உள்ளன. இவ்வகை போராட்டங்கள் கடந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாக மட்டும் 70க்கும் மேல் நடந்துள்ளது. குறுகிய கால போராட்டங்கள், வார இறுதி போராட்டங்கள், தொடர் போராட்டங்கள் என ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அமைதியின்மையில் (European unrest) சிக்கித் தவிக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் மிகக் கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டியும் இந்த போரட்டங்கள் தொடர்கின்றன.
அதேபோல, பிரேசில், செர்பியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடந்துள்ள தேர்தல்களில் அமெரிக்க ஆதரவு அரசுகள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன. பிரேசில் தேர்தலில் அமெரிக்க ஆதரவு போல்சொனாராவை லூலா தலைமையிலான இடதுசாரி கட்சி வீழ்த்தியுள்ளது. செர்பியாவில் ஸ்டூடண்ட்ஸ் லிஸ்ட் (Students List) எனும் ஜென்ஸி தலைமுறை இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது. 2024 ல் துவங்கப்பட்ட இந்த இயக்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததன் வாயிலாக, அமெரிக்க ஆதரவு பெற்ற "புல்டோசர் புரட்சி"யின் மூலம் 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அலெக்சாண்டர் வூசிக் அரசை தனிப்பெரும்பான்மையுடன் தேர்தல் களத்தில் வீழ்த்தியுள்ளது. அடுத்ததாக இஸ்ரேல். இஸ்ரேலில் மொத்தமுள்ள 120 இடங்களில் அமெரிக்க அடிவருடி பாசிச நெதன்யாகு அரசு வெறும் 27 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அங்கே எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் புதிய அரசு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. தற்போது அங்குள்ள அரபு கட்சிகள் எதிர்கட்சித் தலைவர் ஐசன்கோட்டிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. இதனால் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இவற்றுக்கு அப்பால், அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலிலேயே டிரம்ப்பின் குடியரசு கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. இவை யாவும் டிரம்ப், மோடி உள்ளிட்ட அனைத்து பாசிச அரசாங்கங்களுக்கும் கிலி ஏற்படுத்தியுள்ளன.
ஜென்-ஸி மாணவர் - இளைஞர்களின் இந்தப் போராட்டங்களுக்கான அடிப்படை
பிரான்சில் நடக்கும் மாணவர்களின் போராட்டங்கள் நான்கைந்து கோரிக்கைகளை முன்வைத்து துவங்கப்பட்டுள்ளது. 1) கல்லூரிகள், பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மோசமடைந்துள்ளது 2) கட்டண உயர்வு 3) ஆசிரியர்கள் பற்றாக்குறை 4) பணவீக்கம் - விலைவாசி உயர்வு 5) வீட்டு வாடகைகள் - வரிகள் உள்ளிட்ட வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு - இவற்றை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியே இப்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாணவர் -இளைஞர்களுடன் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பொதுசேவைத்துறை ஊழியர்களும் களத்தில் ஆங்காங்கே இறங்கியுள்ளனர். ஏறக்குறைய இதே பொதுத்தன்மைக் கொண்ட பொருளாதார - வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளிலும் குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் அக்டோபர் 17 இயக்கம், ஃபிளமிங்கோ இயக்கம் என பல்வேறு பெயர்களில் டெலிகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களின் துணையுடன் தன்னெழுச்சியாக ஒருங்கிணைக்கப்படும் ஜென்-ஸி தலைமுறை மாணவர்-இளைஞர் போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளன.
இந்த போராட்டங்கள் அனைத்தும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அரசியல்-பொருளாதார நெருக்கடிகளையே நமக்கு அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் ஜென் - ஸி தலைமுறை இளைஞர்கள் யார் என்றால் இந்த நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே!. நெருக்கடியினால் உயர்கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், வேலை கிடைக்காத - வேலை பறிப்புக்குள்ளான இளைஞர்கள், மிக சொற்ப ஊதியத்தால் வீட்டு வாடகை உள்ளிட்ட தங்களின் வாழ்வாதார அடிப்படைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத இளைஞர்களே ஆவர். ஐரோப்பிய நாடுகளின் இந்த சமீபத்திய நெருக்கடிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்னவென்றால், உக்ரைன் போரை ஒட்டி அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே வெடித்து கிளம்பிய முரண்பாடுகளும் அதைத் தொடந்த ஐரோப்பிய யூனியனின் இராணுவ - பொருளாதாரக் கொள்கைகளுமே ஆகும். சென்ற ஆண்டு மார்ச் மாதம் அறிவித்த 2030க்குள் இராணுவ - தொழில்நுட்ப கட்டமைப்பை பலப்படுத்தும் "ஐரோப்பிய யூனியன் ஆர்மி ரெடினெஸ் 2030 (EU Army Readiness 2030)" திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனை இராணுவமயக்கும் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இராணுவ நிதி ஒதுக்கீட்டில் ஷாங்காய் கூட்டமைப்பை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவுக்கு அடுத்த இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் செலவிடுகிறது. ஷாங்காய் கூட்டமைப்பு சுமார் 480 பில்லியன் டாலர் செலவிடுகிறது. ஏற்கெனவே 350 பில்லியன் டாலருக்கு குறைவாக நிதி ஒதுக்கி வந்த ஐரோப்பிய யூனியன் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 866 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. அவற்றின் ஜிடிபியில் இது 5% சதவிகிதத்திற்கும் மேலாகும். இதில் உக்ரைன் போருக்கு மட்டும் சுமார் 260 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனின் இராணுவ டெக்னோ கார்ப்பரேட்களின் லாபம் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் மோசமான கடன் சுழலில் சிக்கியுள்ளது. அதன் ஒட்டுமொத்த கடன் ஜிடிபியில் 83% சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக பிரான்சின் கடன் அதன் ஜிடிபியில் 113% சதவிகிதம், இத்தாலி 137% சதவிகிதம், ஜெர்மனி 139% சதவிகிதம் என கடன் விகிதம் அதிகரித்தும் அவற்றின் ஜிடிபி வளர்ச்சி நேர்மறைக்கு பதிலாக எதிர்மறையில் சரிந்தும் வருகிறது. இந்த சூழலில் ஐரோப்பிய நாடுகளை மேலும் கடன் சுழலில் சிக்க வைக்கிறது. ஐரோப்பிய யூனியனின் மிலிட்டரி இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் (military industrial complex) கொள்கையை நிறைவேற்ற சேஃப் (SAFE - Security Action for Europe) எனும் கடன் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வழங்கப்படும் கடனை இராணுவ தொழில்நுட்ப செலவினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர ஏனைய பொது செலவினங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 130 பில்லியன் யூரோ முதல் 150 பில்லியன் யூரோ வரை கடன் வழங்கவுள்ளது. 130 பில்லியன் யூரோ கடன் வாங்க முடியாத சிறு பொருளாதார நாடுகள் சேர்ந்து கூட்டுக் கடன் (Joint loan) வாங்கும் முறையையும் அறிவித்துள்ளது. இதுவரை பிரான்ஸ், இத்தாலி, பல்கேரியா, போலாந்து, ருமேனியா, ஹங்கேரி, அல்பேனியா உள்ளிட்ட 19 ஐரோப்பிய நாடுகள் இந்த கடன்களுக்காக விண்ணப்பித்துள்ளன. மேலும் இராணுவ தளவாட உற்பத்திகளுக்கு மானியம் வழங்கும் ஈடிஐபி (EDIP - European Defence Industry Programme) திட்டம், இராணுவ துறைகளில் ஏஐ உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆராய்ச்சிகளை மேம்படுத்த ஈடிஎஃப் (EDF - European Defence Funding) திட்டம், 18 வயதான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய இராணுவச் சேவை சட்டம் என ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இராணுவமயமாக்கி வருகிறது.
இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியனின் டெக்னோ கார்ப்பரேட் கொள்கை. அதாவது தொழில்நுட்பத் துறையில் அமெரிக்கா, சீனாவை விஞ்சி ஐரோப்பிய யூனியன் டெக்னோ கார்ப்பரேட்களை முதன்மையாக்கும் கொள்கை. இதற்காக டிஜிட்டல் சந்தை சட்டம் (Digital Markets Act), டிஜிட்டல் வலையமைப்பு சட்டம் (Digital Networks Act), டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம் (Digital Security Act), செயற்கை நுண்ணறிவு சட்டம் (AI Act), விண்வெளி சட்டம் (Space Act) என 5 சட்டங்களை அமல்படுத்தி ஐரோப்பிய யூனியனை அமெரிக்க - சீன சார்பில்லாத சுயச்சார்பு தொழில்நுட்பக் கூட்டமைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. தொடர்ந்து, கஃபாம் வார் (GAFAM war) எனும் பெயரில் Google, Apple, Facebook, Amazon, Microsoft ஆகிய அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட்களின் ஏகபோக ஆதிக்கத்திற்கு எதிரான யுத்தத்தை அறிவித்துள்ளது. மேலும் சீனாவின் அலிபாபா, YUI உள்ளிட்ட கார்ப்பரேட்களின் சிப் - செமிகண்டக்டர் ஏகபோகங்களை முறியடிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ஆற்றல் நெருக்கடி. ரஷ்யாவுடன் அதிகரித்திருக்கும் முரண்பாடு காரணமாக எண்ணெய்-எரிவாயு இறக்குமதியில் ரஷ்ய சார்பை குறைத்து அமெரிக்க சார்பை அதிகரித்துள்ளது. 2025க்கு முன்பு 44% சதவிகிதமாக இருந்த ரஷ்ய இறக்குமதி தற்போது 17% சதவிகிதமாக குறைந்துள்ளது. இதை அமெரிக்காவிடம் ஈடுகட்டி அதன் இறக்குமதியை 63% சதவிகிதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. 2027க்குள் ரஷ்யாவிடமிருந்து வரும் இறக்குமதியை பூஜ்ஜியமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் எரிபொருள் செலவினங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு நிதிவெட்டு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஊதியம் குறைப்பு, பணி நியமன குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் செலவினங்களை இராணுவக் கட்டமைப்புக்கும் ஆற்றல் தட்டுப்பாட்டுக்கும் திருப்பி விட்டுள்ளது. இதை கொள்கையாக அறிவித்துள்ளது ஐரோப்பிய யூனியன். இதனால் பணவீக்கம் 9.2% சதவிகிதம் வரை அதிகரித்து பொதுமக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.
ஐரோப்பிய யூனியனின் இராணுவ - டெக்னோ கொள்கைகளால், ஒருபக்கம் ஐரோப்பிய யூனியன் கார்ப்பரேட்கள் கொழுப்பது மறுபுறம் ஐரோப்பிய நாடுகளின் பொதுமக்கள் அன்றாட செலவினங்களால் இன்னல் அடைவது என்ற இரு துருவ முரண்பாடுகள் கூர்மையடைந்து நெருக்கடி முற்றியுள்ளது. இதுவே ஐரோப்பிய நாடுகளின் இன்றைய அமைதியின்மைக்கு அடிப்படையாகும்.
தீவிரமடையும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள் - மும்முனை மறுபங்கீட்டுப் போட்டிகள்
அமெரிக்கா - ஷாங்காய் - ஐரோப்பிய யூனியன் என மூன்று முகாம்கள் தனித்த ஏகாதிபத்திய முகாம்களாக உருவாகி உலகளாவிய மறுபங்கீட்டுப் போட்டியை தீவிரப்படுத்தியுள்ளன. இராணுவம், தொழில்நுட்பம், வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் தங்கள் அணிகளின் கார்ப்பரேட்களை முன்னிறுத்தி புதிய புதிய அரசியல் -பொருளாதார கொள்கைகளை உருவாக்கி தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. மும்முனைப் போட்டியில் இறங்கியுள்ளன.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே:
ஐரோப்பிய யூனியனை கட்டுப்படுத்த டர்ன்பெர்ரி (Turnberry) ஒப்பந்தத்தை மேற்கொண்டது அமெரிக்கா. இது இந்தாண்டு ஜூலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்குமான வர்த்தகப் பற்றாக்குறையை சமன் செய்யவே இந்த ஒப்பந்தம் என அமெரிக்கா கூறினாலும் இது ஐரோப்பிய யூனியனை நெருக்கடிக்குள் தள்ளும் மற்றுமொரு ஒப்பந்தமாகும். 2028ம் ஆண்டிற்குள் அமெரிக்காவிடமிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்பிற்கு எண்ணெய் - எரிவாயு கொள்முதல் செய்யவேண்டும்; அமெரிக்க பாதுகாப்புத் துறை உபகரணங்களின் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்; 600 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்க உற்பத்தி துறையில் ஐரோப்பிய கார்ப்பரேட்களின் நிபந்தனையில்லா முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்; அமெரிக்க தொழிற்துறை பொருட்களை வரியில்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்ய வேண்டும்; இவற்றின் மூலமே ஐரோப்பிய பொருட்களின் மீதான அமெரிக்காவின் வரியை 15% சதவிகிதத்திற்கும் மேல் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதே போல, கனடாவை ஐரோப்பிய யூனியனில் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், "கனடா என்னுடைய மிக தீவிர வர்த்தகக் கூட்டாளி. அதை எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக்கொள்ள முடியும்? (Canada is my terrible trade partner. How can you accept in European Union?" என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் விசயத்தில், அதன் கனிம வளங்களை பங்கிட்டுக் கொள்ள ரஷ்யாவுடன் சில சமரசங்கள் மேற்கொண்டு ஐரோப்பிய யூனியனை தனிமைப்படுத்தியது என்று ஏற்கெனவே நாம் பார்த்துள்ளோம். இவ்வாறு ஐரோப்பிய யூனியனின் உலக மேலாதிக்க நடவடிக்கைகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
ஐரோப்பிய யூனியனுக்கும் ஷாங்காய் முகாமுக்கும் இடையே:
உக்ரைன் விசயத்தில் ஐரோப்பிய யூனியனின் ரஷ்யாவுக்கு எதிரான முரண்பாடுகள் முன்பைவிட அதிகரித்திருக்கும் நிலையில் அந்த முரண்பாடு தற்போது சீனாவுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீது சுமார் 45% சதவிகிதம் வரை கூடுதல் வரியை அதிகரித்துள்ளது. சீன ஹைபிரிட் வகை கார்களை அதிகபட்சமாக ஆண்டுக்கு 3.5 லட்சம் வரை மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்குள் இறக்குமதி செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவின் பங்களிப்பை குறைக்க ஜப்பானின் இறக்குமதியை அதிகரிப்பது மற்றும் மேட் இன் யூரோப் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளது. இது சீனாவின் எதிர் நடவடிக்கைகளையும் தூண்டியுள்ளது. அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக சீனா தனது காப்புக்கொள்கைகளை முன்வைத்துள்ளது.
ஐரோப்பிய கார்ப்பரேட்களுக்கான அருமண் தனிம ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்துள்ளது. அதற்கான லைசன்ஸ் விதிமுறைகளை கடினமாக்கியுள்ளது. 14க்கும் மேற்பட்ட ஐரோப்பிய கார்ப்பரேட்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. குறிப்பாக ஜெர்மனியின் ரெய்ன்மெட்டைல் ஏஜி, பிரான்சின் III-V லேப் ஆகிய நிறுவனங்களின் பாதுகாப்புத்துறை உபகரணங்கள், செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் அதிநவீன உற்பத்திப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. ஐரோப்பிய பொருட்களின் இறக்குமதி கூடாரமாக சீனா மாற்றப்படுவதை தடுக்க ஐரோப்பிய கெமிக்கல், டெக்ஸ்டைல், விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றுக்கும் கூட தடை விதித்துள்ளது. சீனா தனது பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளை பைபாஸ் செய்யும் வகையில் அதன் வழித்தடத்தை திருத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஷாங்காய் முகாமுக்கும் இடையே:
ஒருபுறம், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது லிண்ட்சே கிரகாம் சட்டத்தை ஏவி 100% சதவிகிதம் வரை அநியாய இறக்குமதி வரியை திணிக்கும் அதிகாரத்தை டிரம்பிற்கு வழங்கியது அமெரிக்க நாடாளுமன்றம். மறுபுறம் தங்கள் ஏஐ - டெக்னோ கார்ப்பரேட்களின் நலன்களிலிருந்து ரஷ்யாவுடன் ஆற்றல்துறை ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக 15 லட்சம் டன் டீசல் துவங்கி பல மில்லியன் டன் அளவிலான டீசல் கொள்முதல் ஒப்பந்தம், இயற்கை எரிவாயு கொள்முதல் ஒப்பந்தம், ரஷ்ய எரிபொருட்களுக்கு வரிவிலக்கு என இந்த சமரச ஒப்பந்தம் அமைந்துள்ளது. புதினுக்கு டிரம்ப் வழங்கிய பிறந்தநாள் பரிசு என்று ஜெலன்ஸ்கி விமர்சிக்கும் அளவுக்கு இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. ரஷ்ய எண்ணெய்-எரிவாயுவை நேரடியாக விநியோகிக்க கட்டுப்பாடு விதித்துவிட்டு அமெரிக்கா மூலமாக சந்தையை உருவாக்கி கொடுக்கும் ஒப்பந்தத்தையும் ரஷ்யாவுக்கு சில வரிச்சலுகைகளையும் வழங்கியுள்ளது அமெரிக்கா. இது எலான் மஸ்க் போன்ற டெக்னோ கார்ப்பரேட்களின் டேட்டா சென்டர்கள் இயங்க தேவையான தடையில்லா மின் உற்பத்திக்கு அடிப்படையாக விளங்கும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் வாங்குவது - ஷாங்காய் மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்புகளில் ரஷ்யா - சீனா இடையே முரண்பாடுகளை உருவாக்கும் உத்தியாகவும் அமெரிக்கா இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது எனக் கொள்ளலாம். அதேபோல, ஷாங்காய் முகாமின் கட்டுப்பாட்டில் இருந்த வெனிசுலாவின் மதுரோவை கைது செய்து கடத்திச் சென்றது டிரம்ப் அரசு. அது குறித்து ரஷ்யா அமைதியே காத்தது. தற்போது இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் என திமிராக அறிவித்துள்ளது டிரம்ப் அரசு.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பார்த்தோமானால், வர்த்தகப் போரை விட தொழில்நுட்பப்போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் NVIDIA சிப்பின் ஏகபோகம் உலக அளவில் முதல் இடத்தில் இருந்தாலும் அதன் உற்பத்தி பெருமளவில் தைவானின் TSMC நிறுவனத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதன் மூலமே சாத்தியமாகியுள்ளது. எதிர்நிலையில் இந்த சிப் உற்பத்திக்கு அடிப்படையான அருமண் தனிமம் உள்ளிட்ட கனிம வளங்களில் ஏகபோகத்தை கொண்டுள்ளதன் காரணமாக தைவானை கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கிறது. இதன் காரணமாக தைவான் இவ்விரு ஏகபோகங்களின் யுத்த தயாரிப்பு களமாக தொடர்ந்து வருகிறது. பல பிராந்தியங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மறைமுகமான மோதல்கள் இருந்தாலும் தைவான்தான் நேரடி மோதலுக்கான களமாக உள்ளது. ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் அதன் சந்தைக்கான போட்டிகளும் இந்த முரண்பாட்டை கூர்தீட்டியுள்ளன.
சீனாவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை முறியடிக்க ஜப்பான், கொரியா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி "பாக்ஸ் சிலிக்கா (Pax Silica)" பிரகடனத்தின் மூலம் "டெக் கிளப் / டெக் பிளாக்" எனப்படும் சர்வதேச கூட்டணியை உருவாக்கியுள்ளது அமெரிக்கா. இந்த கூட்டணியில் இணைந்துள்ள நாடுகள் ஏஐ அடிப்படையிலான சிப் லித்தோகிராபி, HBM எனப்படும் உயர் சேமிப்பு திறன் கொண்ட மெமரி சிப்கள் உருவாக்குவது, ஏஐ கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தற்போதைய உயரிய தொழில்நுட்பத் தேவைகளுக்கான அமெரிக்காவின் உற்பத்திக் களமாக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், Comprehensive Outbound Investment Security Act எனும் மூலதன காப்புக் கொள்கையை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 50000 டாலருக்கு அதிகமான மூலதன முதலீடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்கா ஒருபுறம் அமெரிக்க முதன்மைக் கொள்கையை செயல்படுத்துகிறது என்றால் சீனா மறுபுறம் சீன முதன்மைக் கொள்கையை செயல்படுத்தி வருகிறது.
அமெரிக்காவைப் போல சீனாவும் காப்புக் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. இதன் அடிப்படையில் இருந்து சீனா, பகாசுர டெக் நிறுவனங்களுக்கான கொள்கையை (Tech Giant Policy) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சீன மூலதனம் வெளிநாடு சென்றாலும் சீன அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், தங்கள் நிறுவனங்கள் வெளிநாட்டு மூலதனத்தை பெற்றாலும் சீன அரசிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும் என்ற அம்சங்களை கண்டிப்பாக்கியுள்ளது. அதேபோல சீனாவின் அருமண் தனிமங்கள் மீதான ஏற்றுமதி விசயத்திலும் லைசென்ஸ் விதிகளை கடுமையாக்கியுள்ளது. மேலும், தரவுகளை ஆயுதமாக்குவது (weaponisation of data) எனும் கொள்கையிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வந்த டீப்சீக் உள்ளிட்ட ஓபன் ஏஐ சேவைகளை நிறுத்தி கட்டண சேவைகளாக மாற்றியுள்ளது. இதனை ஏஐ டீஸ்கேலிங் (AI De-scaling) என்கிறது. ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டையும் சந்தையையும் விரிவுபடுத்த பட்டுச்சாலை திட்டத்தை மேலும் வலுவானதாக்கி விரிவுபடுத்தவுள்ளது.
இவை அனைத்தும் மூன்று முகாம்களுக்கிடையிலான மறுபங்கீட்டுப் போட்டி தீவிரமடைந்துள்ளதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
நெருக்கடியைத் தீர்க்காத தொழில்நுட்ப வளர்ச்சி
உலகளாவிய மாணவர்-இளைஞர்களின் போராட்டங்கள் வெளிப்படுத்தும் உண்மை முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகள் தீவிரமடைந்திருக்கிறது என்பதையே!. அவை அனைத்தும் பாசிச முறையில் மக்கள் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. இவை உலகமயமாக்கலின் அப்பட்டமான தோல்வியை பறைசாற்றுகின்றன. நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதுவும் முதலாளித்துவ நெருக்கடியை தீர்க்கவில்லை; அவை அதை முன்னிலும் அதிகரிக்கவே செய்துள்ளன என்பது கண்கூடு. ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக அமையாமல் அவை சிறுகும்பலின் ஏகபோகமாக மாறியுள்ளதே இந்த நெருக்கடிகளுக்கான காரணம்.
லெனின் கூறியது போல, "முதலாளித்துவ சமூகத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் ஒரு படி முன்னேறுகிறது என்றால், உழைப்புச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் ஒரு படி முன்னேறுகிறது என்று அர்த்தமாகும்" (1913, மார்ச் 13 அன்று பிராவ்தா பத்திரிக்கையில் வெளியான கட்டுரை, நூல்திரட்டு, தொகுதி 18, பக்கங்கள் 594-595). நடைபெற்று வரும் சம்பவங்கள் லெனினின் இக்கூற்றை தீர்க்கத்தரிசனம் ஆக்கிவருகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் 2,23,000 ஊழியர்களில் சுமார் 30% சதவிகிதம் பேரை அதாவது 60000க்கும் மேற்பட்ட ஊழியர்களை விருப்ப ஓய்வு எனும் பெயரில் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. அதே நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் சுமார் 700 பில்லியன் டாலர் புதிய முதலீடுகளை செலுத்தியுள்ளது. அதே போல் உலகின் பல்வேறு துறைகளில் - அதாவது சிறு குறு நிறுவனங்கள் முதல் டெக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை - ஏஐ வருகையால் வேலை பறிப்புகள் அதிகரித்துள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடந்து கூகுள் நிறுவனமும் இத்தகைய வேலை பறிப்பு அறிவிப்பை வெளியிட்டு ஐடி தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபக்கம் பணியில் இருக்கும் ஊழியர்கள் ரோபோக்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வேலைசெய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் பண்ணையடிமைகளை விட மோசமான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான வளர்ச்சியானது தொழிலாளர்களின் - மக்களின் கடுமையான உழைப்பை எளிதாக்க பயன்படுத்துவதற்கு மாறாக இந்த ஏகபோகங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு அவர்களை மேலும் இழிவான நிலைக்குத் தள்ளியுள்ளது. வேலையில்லா பட்டாளத்தை அதிகரித்துள்ளது. ஏகபோகங்கள் கொள்ளை லாபமடிக்கும் அதேவேளையில் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இவர்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து நெருக்கடி மென்மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்த நெருக்கடியே மூன்று ஏகாதிபத்திய முகாம்களுக்கும் இடையேயான தீவிரமடையும் முரண்பாடுகளுக்கும் உலகளாவிய ஜென்-ஸி இளைஞர்களின் போராட்டங்களுக்கும் அடிப்படையாகும்.
ஜென்-ஸி இளைஞர்களின் போராட்டங்கள் ஐரோப்பாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. உலகம் முழுவதும் பற்றி பரவி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், நைஜீரியா, சூடான், காங்கோ உள்ளிட்ட நாடுகளிலும் ஜென் -ஸி தலைமுறை போராட்டங்கள் நடந்து வருகின்றன - சில நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் நடந்துள்ளன. அதே போல கடந்த சில ஆண்டுகளில் வங்காள தேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கூட இவ்வகை போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்கின. இவை ஷாங்காய் முகாமின் சுரண்டல் கொள்கைகளின் விளைவே ஆகும். பெல்ட் அண்ட் ரோடு - வளர்ச்சி எனும் பெயரிலான திட்டங்கள் மூலமும், அமைதி வழி ஒப்பந்தங்களின் மூலமும் சீனா ஆப்பிரிக்க நாடுகளை கபளீகரம் செய்து வருகிறது. அமெரிக்க - ஐரோப்பிய யூனியன் சார்பு நாடுகளில் மட்டுமல்லாமல் ஷாங்காய் முகாம் சார்பு காலனி நாடுகளிலும் கூட இத்தைகைய மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருவதை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு இவை உலக முதலாளித்துவத்தின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளன.
இந்தியாவிலும் அத்தகைய போராட்டங்கள் வெடித்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது.
மோடி அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டங்கள்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள என்.சி.ஆர் மண்டலத்தில் நொய்டாவை மையமாகக் கொண்டு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் தனியார் நிறுவன தொழிலாளர்களால் துவங்கப்பட்டன. இப்போராட்டங்களை மோடி அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. போராடிய இளைஞர்களை - வேலையில்லாத மாணவர்களை சமூகத்தின் கரப்பான் பூச்சிகள் என்று இழிவுபடுத்தினார் மோடி அரசின் நீதிபதி சூரியகாந்த். இதை பகடி செய்யும் விதமாகவே காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் பெயரில் சமூக வலைதளப் பக்கம் துவங்கப்பட்டு அது ஜென்-ஸி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இன்று தனிப்பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய ஜென்-ஸி இளைஞர்கள் போராட்டம் மோடிக்கு ஒருபக்கம் பீதியை கிளப்பியிருந்தாலும், சிஜேபி உள்ளிட்ட இந்திய ஜென்-ஸி இளைஞர்களின் போராட்டங்கள் மோடி அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளன.
இந்தாண்டு நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் - ஊழல் மோசடிகள் நடைபெற்றதால், துறை அமைச்சர் பிரதானை பதவி விலகக் கோரி சிஜேபி தலைமையில் ஜூன் மாதம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் துவங்கப்பட்டன. அப்போராட்டங்களை அடக்க முயற்சித்தது மோடி அரசு. எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளும் நாடு முழுவதும் சிஜேபி போராட்டங்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கவும் மோடி அரசு பணிந்தது. அமைச்சர் பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது. இதுவரை எஸ்.ஐ.ஆர்.-ல் 13 கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்துள்ளது மோடி அரசு. மோடி அரசின் ஒற்றைக் கட்சி பாசிச ஆட்சிமுறைக்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தையும் அதன் தலைவர் ஞானேஷ் குமாரையும் பதவி விலகக் கோரி தற்போது மீண்டும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதில் சிஜேபியை விட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ.எம்.எல். - லிபரேஷன் அமைப்பின் கை ஓங்கியுள்ளது.
இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகளின் கோரிக்கைகள் சீர்திருத்தவாத கோரிக்கைகளாக இருந்தாலும், மோடி அரசின் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வியை வெளிச்சம்போட்டு அம்பலப்படுத்துகின்றன. தன்னெழுச்சியான போராட்டங்களாக இருப்பினும் இவை ஆதரிக்க வேண்டிய போராட்டங்களே ஆகும். மோடியின் இந்துத்துவாவுடன் வளர்ச்சி எனும் பிம்பம் சுக்குநூறாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் கூட மோடி கும்பல் அமெரிக்காவுக்கும் -அதானிகளுக்குமான சேவையை துளியளவும் கைவிடவில்லை.
பணமாக்கல் 2.0 உள்ளிட்ட மோடி அரசின் பாசிச கொள்கைகள்
அமெரிக்காவிக்கு நாட்டை காம்பாக்ட் எனும் அடிமை சாசனத்தின் மூலமாக அடகு வைத்த மோடி அரசு, அதன் அடிப்படையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பேரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்காக சென்ற மாதம் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தது மட்டுமில்லாமல், மும்பை சென்று டாடா மற்றும் அதானியையும் சந்தித்து வர்த்தக முதலீடுகள் குறித்து விவாதித்துள்ளார். அங்கிருந்து குஜராத் சென்றவர், அம்பானியின் ஜாம்நகர் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுவிட்டு, வெனிசுலாவில் இருந்து கொள்ளையடிக்கப்படும் எண்ணெயை சுத்திகரித்து அமெரிக்காவுக்கு வழங்கவும் - அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் சுத்திகரிப்பு ஆலைக்கு ரிலையன்சின் பங்கை உறுதி செய்யவுமான உடன்படிக்கையில் ஈடுபட்டு சென்றுள்ளார். இவ்வாறு இந்தியாவின் வர்த்தகத்திலும் ஆற்றல் துறைகளிலும் அமெரிக்காவின் பிடியை இறுக்கி அதானி -அம்பானிகளை அதன் தரகு சேவகர்களாக உத்திரவாதம் செய்யும் விதமாக இந்த சந்திப்புகள் அமைந்துள்ளன.
மேலும், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா - டெக் கிளப்பில் இந்தியா இணைந்ததானது குவாட், குவாட் பிளஸ் கூட்டமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட தொடர்ச்சியே ஆகும். இந்த கிளப்பின் நோக்கம் இந்தியாவை அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட்களின் சிப் உற்பத்திக் கூடமாகவும், "பாக்ஸ் சிலிக்கா" திட்டங்களின் சுரங்கமாகவும், டேட்டா சென்டர் ஹப்பாகவும், ஏஐ சந்தையாகவும், இதனால் ஏற்படும் கழிவுகளின் குப்பைக்கூடமாகவும் மாற்றுவதே ஆகும்.
இத்தகைய நாசகர திட்டங்களை தான் வளர்ச்சி எனும் பெயரில் மோடி அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 2047ல் விக்சித் பாரத் (வளர்ச்சி பெற்ற இந்தியா) என்று கூவிக்கொண்டே இந்தியாவை அமெரிக்காவுக்கு படையலிடுகிறது. இத்தகைய நாசகரத் திட்டங்களுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க அமெரிக்க சேவகர்களான அதானி-அம்பானிகளை கொழுக்க வைக்க பணமாக்கல் 2.0 கொள்கையை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே 2022ம் ஆண்டில் 70 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை சொத்துகளை வெறும் 6 லட்சம் கோடிக்கு விற்று பணமாக்கியது. தற்போது பணமாக்கல் 2.0 எனும் பெயரில் மிச்சமீதமிருக்கும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே, விமான நிலையங்கள், சுரங்கங்கள், மின்பகிர்மான தடங்கள் என அனைத்தையும் தாரை வார்த்து 16.72 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது மோடி அரசு. விக்சித் பாரத் என்று பேசி இந்திய வளங்களை அம்பானிகளுக்கும் - அதானிகளுக்கும் தாரை வார்த்து கொண்டிருக்கிறது மோடி அரசு. மறுபுறம் இளைஞர்கள் வேலையில்லாமல் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்; விவசாயிகள் நொந்து வெந்து மடிந்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அற்ப ஊதியத்திற்காக கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். ரூபாயின் மதிப்பு மண்ணைக் கவ்வி விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. மிகப்பெரிய நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. இந்த நெருக்கடியை மறைக்க முடியாமல்தான் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது மோடி அரசு.
விலைவாசி உயர்வில் கோட் (GOAT) ஆக மாறிய தவெக அரசு
அண்ணன், தாய்மாமன், தூய சக்தி என பாப்புலிச வேடங்கள் அணிந்து ஆட்சியைப் பிடித்த டெக்னோ சேவகன் விஜய் அரசு, இன்று அனைத்து துறைகளையும் கார்ப்பரேட் மயம் - ஏஐ டெக்னோ மயம் - தனியார் மயமாக்கி வருகிறது. இதன் வாயிலாக அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் சென்று முதலீடுகளை ஈர்க்க முயற்சி எடுத்து வருகிறது. அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளின் காப்புக் கொள்கைகளால் எதிர் பார்த்த முதலீடுகள் வரவில்லை. இதுவரை ஆண்ட கட்சிகள் அனைத்தும் சுயசார்பு தொழில் உற்பத்திக் கொள்கையை வளர்த்தெடுக்காததன் விளைவே இப்படியான கையேந்தும் நிலை என்பதை துளியும் உணராமல் செயல்படுகிறது. தான் அவர்களை விஞ்சிய கார்ப்பரேட் சேவகன் என்பதை செயலில் நிரூபித்து வருகிறது தவெக அரசு. மாநகராட்சி, மின் துறை, போக்குவரத்து துறை, பத்திரப்பதிவு துறை என அனைத்தையும் டெக்னோ கார்ப்பரேட்களின் சந்தையாக மாற்றி வருகிறது. இதனால் ஏற்படும் கடன் மற்றும் பணவீக்கம் நாட்டில் வேறேந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உச்சத்தை தொட்டுள்ளது. விலைவாசி உயர்வில் Greatest of all time - GOAT (இதுவரை இல்லாத உச்சம்) எனும் அளவிற்கு சாதனையை படைத்துள்ளது உச்ச நடிகர் விஜய் ஆட்சி.
பாஜக அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்து வருகிறது. அதை எதிர்த்து போராடாமல் மத்திய அரசுடன் ஒத்துழைப்பு எனும் பெயரில் அதன் திட்டங்களை சிரம் தாழ்த்தி நிறைவேற்றி வருகிறது. தொடர்ச்சியான சாதியப் படுகொலைகள், குழந்தைகள் மீதான வன் தாக்குதல்கள், லாக்கப் மரணங்கள் என எந்த சட்ட-ஒழுங்கு மற்றும் சமூக குற்றங்களும் தாய் மாமன் விஜய் ஆட்சியில் குறைந்தபாடில்லை. அதை கட்டுப்படுத்த குறைந்தபட்ச சட்ட நடவடிக்கைகள் கூட செய்ய வக்கில்லாமல் வேடிக்கை பார்க்கிறது தவெக அரசு. ஆனால் போராடும் மாணவர்-இளைஞர்களை மட்டும் முந்தைய அரசுகளின் பாணியிலே இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது.
பாசிச எதிர்ப்பு முகமூடிகளை களைந்து உண்மையான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போதே திமுக - அதிமுக - பாஜகவின் கள்ள உறவுகள் அம்பலப்பட்டு அதன் கூட்டணி கட்சிகள் பல திமுக கூட்டணியிலிருந்து வெளியேறின. தற்போது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக நாதக சீமான் அறிவித்துள்ளார். தவெக வை எதிர்த்துப் போட்டியிட திமுக-அதிமுக-பாஜக முக்கூட்டின் ஆதரவை வேண்டி வெட்கங்கெட்டு நிற்கிறார் இந்த தமிழினப் புலி வேடம் தரித்த பச்சோந்தி. அறிவாலய முற்போக்குகளால் புகழப்பட்ட பாசிச எதிர்ப்பு கூட்டணி இப்போது கதம்பவாத பாயாசக் கூட்டணியாக மாறி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது. சிபிஎம் - சிபிஐ கட்சிகள் நாடாளுமன்றப் பாதை மட்டுமே ஒரே பாதை என்று புதைசேற்றில் மூழ்கி மக்களை திரட்ட முடியாமல், நாடாளுமன்ற வழியிலும் கூட மிகப்பெரிய தோல்வியைத் தழுவி மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நிற்கின்றன.
ஒருபுறம் இவர்களின் தேர்தல் ஒட்டுண்ணி அரசியல் நாடகங்கள் இருந்தாலும், மறுபுறம் தீரம் மிக்க இளைஞர்களும் - பெண்களும் மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராடி வருகின்றனர்.
இருக்கும் அமைப்புக்குள்ளே சீர்திருத்தத்தைக் கோரும் தன்மைக் கொண்ட இப்போராட்டங்களை மோடி ஆட்சியைத் தூக்கியெறியும் வகையிலான போராட்டங்களாகவும் ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்புத் தன்மைகொண்ட போராட்டங்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு புரட்சிகர - ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், சிறுகுறு முதலாளிகள் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். இத்தகைய ஐக்கிய முன்னணிக்கு பாட்டாளி வர்க்கம் மட்டுமே தலைமை தாங்க முடியும்; அதை கைவிட்டால் ஏதாவது ஒரு தரகுமுதலாளித்துவப் பிரிவுக்கு வாலாக போவதில்தான் கொண்டு நிறுத்தும். அது பாசிசத்தை வீழ்த்துவதற்கு மாறாக இன்னொரு பாசிச சக்திக்கு சேவகனாக ஐக்கிய முன்னணியை மாற்றி விடும். இன்று பல்வேறு மார்க்சிய-லெனினிய குழுக்கள் இத்தகைய பாட்டாளி வர்க்கத் தலைமை எனும் கொள்கையை கைவிட்டு விட்டனர். ஏஎம்கே சுட்டிக்காட்டியது போல செயல்தந்திர துறையிலும் கலைப்புவாதத்திற்குப் பலியாகி விட்டனர். எனவே மார்க்சிய- லெனினிய வழியில் சரியானதொரு செயல்தந்திரத்தை முன்னெடுப்பதன் மூலமே இத்தைகைய கலைப்புவாத -திருத்தல்வாதப் போக்குகளை களைந்து பாசிச எதிர்ப்பில் ஓரணியில் திரள முடியும்.
எனவே கீழ்க்கண்ட முழக்கங்களின் பால் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை எதிர்த்து அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் உலகு தழுவிய மாணவர் - இளைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் !
ஜென் ஜி தலைமுறையினரின் போராட்டங்களை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களாக வளர்த்தெடுப்போம் !
* உலக மேலாதிக்கம் - மறுபங்கீட்டிற்காக அமல்படுத்தப்படும் இராணுவப் பொருளாதார - டெக்னோ பாசிச கொள்கைகளே ஐரோப்பிய யூனியன் நெருக்கடிக்கும், போராட்டங்களுக்கும் காரணம் !!
* செயற்கை நுண்ணறிவு மற்றும் டெக்னோ கார்ப்பரேட் கொள்கைகள் உருவாக்கும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறைகள் புறக்கணிப்பு, வீடற்ற வாழ்க்கை ஆகியவற்றை எதிர்த்து போராடுவோம் !
* மூலதனத்தின் ஒடுக்குமுறைக் கருவியாக நவீன தொழில்நுட்பம் மாற்றப்படுவதை எதிர்ப்போம் ! மக்கள்மயமாக்கப் போராடுவோம் !
கூர்மையடையும் அமெரிக்க, ஐரோப்பிய, ஷாங்காய் முகாம்களுக்கு இடையிலான முரண்பாடுகள் ! தீவிரமடையும் போர் தயாரிப்புகள் !
* உலக மேலாதிக்கம் - மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய முகாம்களின் பாதுகாப்புவாத - முதன்மைவாத கொள்கைகள், ஏ.ஐ - டெக்னோ யுத்தம், வர்த்தகப் போர் மற்றும் பனிப்போர் தயாரிப்புகளை எதிர்ப்போம் !
* ஏகாதிபத்தியங்களின் பாலஸ்தீனம் மீதான யுத்தம், ஈரான் இசுரேல் யுத்தம், தைவான் மீதான யுத்த தயாரிப்புகளை எதிர்ப்போம் !
* வெனிசுலாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக அறிவிக்கும் டிரம்ப் ஆட்சி ஒழிக !
மோடி கும்பலே !
* அமெரிக்காவின் போர்வெறிக்கு நாட்டை காவுகொடுக்காதே ! காம்பாக்ட், குவாட், குவாட் ப்ளஸ் அமைப்புகளில் இருந்து வெளியேறு !
* அமெரிக்காவின் பாக்ஸ் சிலிக்கா ( Pax Silica) டெக்னோ குழுமத்தில் இருந்து வெளியேறு !
* நீட், SIR , பணமயமாக்கல் 2.0 உள்ளிட்ட பாசிச கொள்கைகளை திரும்ப பெறு !
* மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக் கூட தீர்க்க வக்கற்ற மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம் !
தவெக அரசே !
* அமெரிக்க - ஐரோப்பிய டெக்னோ கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக்கம்பளம் விரிக்காதே !
* பணவீக்கம், மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சாதியப் படுகொலைகள் உள்ளிட்டவற்றை தீர்க்காத தவெக அரசை எதிர்த்துப் போராடுவோம் !
* தவெக எதிர்ப்பில் ஒன்றிணையும் திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளின் சமரசவாத- சந்தர்ப்பவாத கூட்டணியை அம்பலப்படுத்துவோம் !
* திமுக உள்ளிட்ட முதலாளித்த்துவ கட்சிகளுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டே பாசிச எதிர்ப்பு வேசம் போடும் அறிவாலய கம்யூனிஸ்ட்டுகளை அம்பலப்படுத்துவோம் ! அடிப்படை வர்க்கங்களைச் சார்ந்து பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்போம் !
நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
சமரன் (நவம்பர் - டிசம்பர் 2026 இதழ்)