விஜய்: டெக்னோ கார்ப்பரேட்களின் நண்பன்
சமரன்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தலைமையிலான தவெக கட்சி வெற்றி பெற்று இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
திமுக, அதிமுக, விசிக, நாதக உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு வங்கியை கணிசமாக பதம் பார்த்ததுடன், புதிய தலைமுறையினரையும் கணிசமாக ஈர்த்து தவெக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுடனான திமுகவின் சமரசப்போக்கால் வெறுப்புற்ற கிறித்துவ-இசுலாமிய சிறுபான்மையினரும், திமுகவின் தலித் விரோத ஆதிக்க சாதியவாத ஆட்சியால் வெறுப்புற்ற ஒடுக்கப்பட்ட சாதியினரும் (SC/ST பிரிவினர்) தவெக பக்கம் திரும்பினர். இரு திராவிட கட்சிகளின் 50 ஆண்டுக்கும் மேலான ஊழல் மலிந்த, மக்கள் விரோத சுரண்டல் கொள்கைகளால் வெறுப்புற்று மாற்றைத் தேடி வந்த மக்களும் தவெகவுக்கு வாக்களித்தனர். கணிசமான மக்களிடமிருந்து அன்னியப்பட்ட திராவிட கட்சிகளின் இத்தகு தோல்வியே தவெகவின் வெற்றிக்கு பிரதானமான காரணம் ஆகும்.
இவ்வாறாக, முதலாளித்துவத்தின் ஒரு புதிய முகமாக தவெக உருவெடுத்துள்ளது.
தவெக ஆட்சி குறித்து மூன்று விதமான மதிப்பீடுகள் நிலவுகின்றன.
- தவெக ஆட்சியும் திமுக ஆட்சியின் தொடர்ச்சியே. எவ்வித மாற்றமும் இல்லை.
- திமுக ஆட்சியில் கோலோச்சிய ஜனநாயகம் தவெக ஆட்சியில் இல்லை. அக்கட்சி பாஜகவின் கூட்டாளி. பாசிச ஆட்சி நடத்துகிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் எனும் பாஜகவின் திட்டத்தை செயல்படுத்துகிறது.
- திராவிட கட்சிகளுக்கும் பாஜக ஆட்சிக்கும் மாற்றாக தவெக ஆட்சி அமையும். அது ஒரு ஜனநாயக இயக்கம்.
இதில் எது உண்மை?? அல்லது மூன்றும் உண்மையில்லையா?? என்பதை மதிப்பிட தவெக ஆட்சி குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்வது அவசியம். அது குறித்து சுருக்கமாகக் காண்போம்.
எந்தவொரு ஆட்சியையும் மதிப்பிடுவதற்கு (1) அதன் வர்க்கத்தன்மை என்ன? அதன் பின்புலமுள்ள மூலதன சக்திகள் எவை? அதாவது அதன் அரசியல் பொருளாதாரக் கொள்கை என்ன??
(2) அதன் ஆட்சி வடிவம் என்ன? அதாவது பாசிச ஆட்சியா? ஜனநாயக ஆட்சியா? பாசிச ஆட்சி எனில் என்ன வகை வடிவம்??
ஆகிய இரு முக்கிய அம்சங்களை ஆராய்வது அவசியம். அதுவே மார்க்சியத்தின் அடிப்படை.
1) தவெகவின் அரசியல் பொருளாதாரக் கொள்கை
தவெகவின் தேர்தல் அறிக்கை, விஜய் - அமெரிக்க தூதர் சந்திப்பு, விஜய் ஆட்சியை ஆதரித்து பேசும் ஸ்ரீதர் வேம்பு, விஜய் - தொழிற்துறை கூட்டமைப்பு சந்திப்பு, தவெக ஆட்சியின் பட்ஜெட் ஆகியவை விஜய் ஆட்சியின் அரசியல் பொருளாதார திசைவழியை நமக்கு காட்டுகின்றது.
அ) தவெகவின் தேர்தல் அறிக்கை
தவெக தேர்தல் அறிக்கையை தேர்தலின்போது வழக்கமான ஒன்றாகப் பார்த்தோம். காரணம், அக்கட்சி மக்கள் மத்தியில் பெற்றிருந்த செல்வாக்கு பற்றி குறைவாக மதிப்பிட்டிருந்தோம். தேர்தல் அறிக்கையை தற்போது மீள்வாசிப்பு செய்யும்போது அதன் பொருளாதாரக் கொள்கையை அறிந்துகொள்வதுடன், தேர்தலுக்கு பிந்தைய அதன் மூலதன திரட்டல் கொள்கையுடன் அது சரியாக பொருந்துவதைப் பார்க்கலாம்.
அதன் தேர்தல் அறிக்கை தொழில்துறை வளர்ச்சிக்கு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கான (AI Growth, AI Governance and Techno - industrial push) தீவிர முன்னெடுப்புகளை முன்வைத்துள்ளது.
தேர்தல் அறிக்கையின் தாரக மந்திரமாக,
"தமிழகத்தில் உற்பத்தி செய்வோம். உலகத்திற்காக உற்பத்தி செய்வோம்" (Make in Tamilnadu- Make for the world) எனும் கொள்கை இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் கும்பல் சீனாவின் போட்டியை எதிர்கொள்ளும் பொருட்டு முன்வைத்த செயற்கை நுண்ணறிவு சார் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கொள்கையுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது, அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கான நேரடி கேந்திர மையமாக தமிழகத்தை மாற்றும் முனைப்பு தவெக ஆட்சியிடம் தெரிகிறது.
தவெகவின் தேர்தல் அறிக்கை தொழில்துறை வளர்ச்சிக்கு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான (AI Driven Growth, Governance and Techno industrial push) தீவிரமான திட்டங்களை முன்வைக்கிறது. சென்னை மட்டுமல்லாது எல்லா மாவட்ட தலைநகரங்களுக்கும் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துவது என்ற அம்சம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவை வருமாறு:
- உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையமாக செயல்படும் வகையில் செயற்கை நுண்ணறிவு நகரங்கள் (AI Cities) உருவாக்கப்படும்.
- இந்தியாவிலேயே கேரளாவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் உருவாக்கப்படும்.
- மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் AI புத்தாக்க மையங்கள் அமைத்து, 1,000 Deep-Tech ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
- இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் AI பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
- AI Innovation Hubs உருவாக்கப்படும்.
- பன்னாட்டு, உள் நாட்டு தொழிற்துறைகளை நவீனப்படுத்துவதற்காக, ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் ₹50 லட்சம் வரை 35% நேரடி மூலதன மானியம் வழங்கப்படும்.
- Peak Hour மின்சாரக் கட்டணம் நீக்கம், 5 ஆண்டுகளுக்கு 100% மின்சார வரிவிலக்கு, மேலும் மின்சாரக் கட்டணங்கள் அறிவுபூர்வமாக மாற்றியமைக்கப்படும்.
- முதலீட்டாளர்களுக்கான தொழில் உரிமங்கள் 21 நாட்களுக்குள் வழங்கப்படும். அவ்வகை உரிமங்கள் ஒற்றைச்சாளர அனுமதி முறையில் (Single window clearance) 21 நாட்களுக்குள் வழங்கப்படும். (இது உலக வங்கியின் Ease of doing business கொள்கைக்கு சேவை செய்யக்கூடியது)
- திருச்சியில் விண்வெளி மற்றும் கனரகப் பொறியியல் மண்டலம் அமைத்து, முதலீட்டாளர்களை ஈர்க்க 10 ஆண்டுகள் வரிவிலக்கு வழங்கப்படும்.
- திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி உதிரிபாக உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட்டு, உலகளாவிய விமானத் தொழில்துறை விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்படும்.
- திருச்சி-தஞ்சாவூர் பகுதியில் ₹300 கோடி மதிப்பிலான மருத்துவத் தொழில்நுட்பப் பூங்கா அமைத்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் மருத்துவ சாதன உற்பத்திக்கும் ஆதரவு வழங்கப்படும்.
- உலகளாவிய திறன் மையம் (Global Capability Centres (GCCs)) உருவாக்கப்படும்; இதில் 2030க்குள் திருச்சியிலும் GCC அமைக்கப்படும்.
- நிதி நெருக்கடியில் உள்ள MSME நிறுவனங்களை மீட்க ₹15,000 கோடியில் மாநில கடன் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும். அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் 30% உதிரி பாகங்களை சிறு குறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும்.
- ஆரம்பநிலை தொழில்களுக்கு ₹25 லட்சம் வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
- சுய உதவிக் குழுக்களை MSME நிறுவனங்களாக மாற்றி, அவற்றுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படும்.
- 2036ஆம் ஆண்டுக்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது திமுக முன்வைத்த 2030ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியன் இலக்கைவிட பெரிய இலக்காகும்.
- ஏற்றுமதி மற்றும் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்த உலர் துறைமுகங்கள் (Dry Port) அமைக்கப்படும்.
- வேளாண் சார்ந்த தொழில்களை வளர்க்க உணவு பதப்படுத்தும் தொழில்துறை கிளஸ்டர்கள் உருவாக்கப்படும்.
- 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தவெகவின் பெரும்பாலான பொருளாதார கொள்கைகள், அமெரிக்காவில் ட்ரம்ப் கும்பல் முன்வைத்துள்ள தொழில்நுட்ப கார்ப்பரேட் பாசிச ஆட்சி முறையுடன் (Techno Corporate fascist Governance) கச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது, சீனாவின் AI மேலாதிக்கத்தை வீழ்த்த அமெரிக்கா முன்வைத்துள்ள AI - டெக்னோ கார்ப்பரேட் பாசிச ஆட்சியின் நேரடி கேந்திர மையமாக தமிழகத்தை மாற்றும் கொள்கையை தவெக முன்வைத்துள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பது (MSME), அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவை பார்ப்பதற்கு சரியான அம்சமாக தோன்றினாலும் அதன் பின்னாலும் கார்ப்பரேட்டுகளின் நலன் உள்ளது. MSME என்பது தனித்து இயங்கும் நிறுவனங்கள் அல்ல. மத்திய-மாநில ஆட்சிகள் இந்தியாவின் சந்தையை பெரும் கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமிக்க வழி ஏற்படுத்தியதானது, MSME துறையில் பெரும்பாலானவை பெரும் கார்ப்பரேட்டுகளை சார்ந்து இயங்கும் நிலையில்தான் ஏற்கனவே உள்ளது. தவெகவின் கொள்கையும் கார்ப்பரேட்டுகளை, குறிப்பாக AI மற்றும் டெக்னோ கார்ப்பரேட்டுகளின் வழங்கல் வலையமைப்பை (Supply chain ecosystem) பலப்படுத்தவே உதவும். ஆகவே MSME சார் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பதும் கார்ப்பரேட்டுகளுக்கான மலிவான கூலி உழைப்பை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டதே ஆகும்.
ஆ) தொழிற்துறை கூட்டமைப்புடன் விஜய் நடத்திய பேச்சுவார்த்தை
தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் முகமாக, முதல்வர் விஜயை தொழிற்துறை கூட்டமைப்பு மே 16 அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தென் மண்டலத் தலைவர் பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி. தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இந்தக் கூட்டத்தில் MSME தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்த்தல், கொள்கை ஆதரவு மற்றும் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து யமாஹா (Yamaha Motor India) நிறுவனம், பி.எம்.டபுள்யூ (BMW Group) மற்றும் டாஃபே (TAFE) நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். Yamaha Motor India Group தலைவர் ஜிம் அயோட்டா, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகளில் அந்நிறுவனம் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து விளக்கினார்.
BMW Group India நிர்வாக இயக்குநர் தாமஸ் டோஸ், தமிழ்நாட்டில் நிறுவனத்தின் மின்சார வாகன (EV) உற்பத்தி முன்னேற்றம் மற்றும் மாநிலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசினார்.
TAFE நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா ஸ்ரீனிவாசன், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்து ஆலோசித்தார்.
இந்த சந்திப்புகளின்போது, நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு ஆதரவு வழங்கும் என விஜய் உறுதியளித்ததுடன், தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் தொழில் நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் TIDCO அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பில், அதன் தலைவர் சந்தியா வெங்கோபால் சர்மா மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு வெளியிட்ட 2025 LEADS தரவரிசையில் தமிழ்நாடு "முன்மாதிரி மாநிலமாக" (Exemplar State) தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து TIDCO அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கினர்.
இவை அரசாங்க செய்திக்குறிப்பின் சுருக்கமாகும்.
திமுக ஆட்சியில் இருந்ததை விட எளிதான வர்த்தக மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கான வாய்ப்பிருக்கும் எனும் பொருளில் தென்னிந்திய கூட்டமைப்பின் தலைவர் பாராட்டு தெரிவித்தார். அதன் பொருள், விஜய் கார்ப்பரேட்டுகளின் நல்ல நண்பன் என்பதே.
திமுக கட்சியில், ஆட்சியில் பல அதிகார மையங்கள் உள்ளன. கருணாநிதி குடும்பம் என்பது தலைமை அதிகார மையமாகும். அக்குடும்பத்திலும் கூட துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் என பல அதிகார மையங்கள் உள்ளன. கார்ப்பரேட்டுகள் எல்லா அதிகார மையங்களுக்கும் கப்பம் கட்டவேண்டிய நிலைமை இனி இருக்காது என்பதே தொழிற்துறை கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்த பாராட்டின் உள்ளடக்கம். என் ஆட்சியில் - கட்சியில் ஒரே அதிகார மையம், அது நான் மட்டுமே என்று, விஜய் பதவி ஏற்ற அன்று சொன்னார். அதன் பொருள் தொழிற்வளர்ச்சிக்கு திமுகவின் பல அதிகார மையம் தடையாக இருந்தது; என் ஆட்சி அவ்வாறு இருக்காது என்பதே. அதிமுகவில் ஒற்றை அதிகார மையமாக ஜெயா-சசிகலா கூட்டு இருந்தது. அது மாதிரியான ஒற்றை அதிகார மையத்தை விஜய் முன்வைத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் திட்ட அனுமதி விரைவாக நடக்கிறது என்று கருத்து தெரிவித்ததும் அது சர்ச்சையானதும் நாம் அறிவோம். தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் குற்றச்சாட்டும் திமுக அதிகார மையங்களுக்கு Party Fund எனும் பேரில் கப்பம் கட்ட வேண்டும் என்பதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே, அமெரிக்காவின் AI-டெக்னோ கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், உள்நாட்டு தரகுமுதலாளித்துவ சந்தையை மாற்றியமைப்பதே விஜயின் உள்நாட்டு வர்த்தகக் கொள்கையாகும்.
இ) விஜய், அமெரிக்க தூதர் சந்திப்பு
அடுத்து ஜூன் 22, 2026 அன்று முதல்வரை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் வர்த்தகம் மற்றும் முதலீடு (trade & investment), தொழில் நுட்பம் (technology), வழங்கல் வலையமைப்பு (supply chains), உற்பத்தி (manufacturing), மருந்துத் துறை (pharmaceuticals), ஆற்றல் துறை (energy) ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பேசப்பட்டதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
விஜய்-அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்திப்பை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு அல்ல; தமிழ்நாட்டை அமெரிக்க முதலீடு மற்றும் உலகளாவிய வழங்கல் (supply-chain) வலையமைப்பில் இன்னும் ஆழமாக இணைப்பது என்ற பொருளாதார நோக்கத்தைக் கொண்ட சந்திப்பாகப் பார்க்கவேண்டியுள்ளது.
பின்வரும் அம்சங்கள் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
1. அமெரிக்க முதலீட்டை ஒன்றிய அரசு மூலமாக அல்லாமல் நேரடியாக தமிழ்நாட்டுக்கு இழுப்பது
தவெக அரசின் தொழில் கொள்கை - பெரிய தொழில்கள் மட்டுமல்லாமல், முக்கியமாக நவீன தொழில்நுட்ப உற்பத்தி (high-tech manufacturing), விண்வெளி(aerospace), மருத்துவ தொழில்நுட்பம் (medical technology), செயற்கை நுண்ணறிவு (AI), மின்னணு பொருட்கள் (electronics) போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களை முதலீட்டு சுற்றுக்குள் கொண்டு வருவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
2. வர்த்தக வழங்கல் வலையமைப்பின் மையமாக ("Supply-chain hub") தமிழ்நாட்டை மாற்றுதல்
சந்திப்பில் supply chains பற்றிய வாதம் முக்கிய இடம்பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்க நிறுவனங்கள் சீனா போன்ற ஒரே நாட்டைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தமிழ்நாட்டை அமெரிக்காவுக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யும் மாற்று உற்பத்தி மையமாகப் பயன்படுத்துவதாகும். அதற்கும் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில் நுட்பம் போன்ற துறைகள் முக்கிய அங்கம் வகிக்க போகின்றன.
3. அமெரிக்காவின் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்றுவதுடன், அதன் தொழில்நுட்ப தேவைகளையும் பூர்த்தி செய்தல்.
4. மருந்துதுறை மற்றும் ஆற்றல் துறை (Pharmaceuticals / Energy)
இத்துறைகளில் IT முதலீட்டைத் தாண்டி மருந்து உற்பத்தி, மருத்துவத் தொழில்நுட்பம், clean energy / renewable energy, energy infrastructure போன்ற அம்சங்களும் அடங்கும்.
5. முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது.
இது அமெரிக்காவின் - உலக வங்கியின் "investor-friendly state" எனும் அணுகுமுறையின் நடைமுறை வடிவமே.
ஆகஸ்ட் 18-ல் அமெரிக்க தூதர் கோர், இந்திய-அமெரிக்க வர்த்தகத்தை அதிகரிக்க, கார்ப்பரேட்டுகள் விரும்புகிற வரிவிதிப்பு முறை (predictable taxation) மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு உகந்த அமைப்பு முறையை சீரமைத்து நிறுவுதல் (business-friendly regulatory framework) தேவை என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஜயுடனான சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்க தூதர் தனது டிவிட்டர் பதிவில் அமெரிக்கா மற்றும் தமிழகம் இரு தேசங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அவசியம் என்று குறிப்பிட்டது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. RSS மற்றும் பாஜகவினர் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இரு தேச உறவு என்பது ஒன்றிய அரசின் வழியாக இல்லாமல் நேரடி மூலதன - வர்த்தக உறவைக் குறிப்பதாகும்.
தேசம் என்பது தமிழகத்தை அமெரிக்காவைப் போன்ற தேசமாக உருவாக்குதல் எனும் பொருளில் அமெரிக்கா சொன்னதே பாஜக எதிர்ப்பிற்கான காரணம் ஆகும். ஆனால் தவெகவின் கொள்கை தமிழகத்தை அமெரிக்கா போல ஒரு தேசமாக மாற்றாது. மாறாக தமிழகத்தை அமெரிக்காவின் உற்பத்திக் கூடாரமாக - நவீன காலனியாகவே மாற்றும்.
அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் விஜய் ஆட்சி, முந்தைய ஆட்சிகளைவிட முனைப்பாக உள்ளது என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் நடந்த 250வது அமெரிக்க சுதந்திர தின நிகழ்வில் தவெக அரசின் சார்பாக ஆதவ் அர்ஜூனா பங்கு பெற்றார். அமெரிக்க தூதர் கோர், தூதரக ஜெனரல் மரியானா ஆகியோருடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் யுத்ததந்திர ரீதியான டெக்னோ வளர்ச்சி, விளையாட்டுத்துறை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சி சார் ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. விண்வெளி சார்ந்த பயிற்சி மையம் அமெரிக்கன் சென்டரில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் பொருட்டு, அன்னிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த (FDI Lobbying) அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கென பிரத்யேகமாக தவெக கட்சி சார்பாக NRI குழுக்களை நியமித்துள்ளார் விஜய்.
மேலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலுள்ள திருச்சபைகள், அதன் நிதியில் இந்தியாவில் இயங்கும் திருச்சபைகளின் ஆசிர்வாதமும் விஜய்க்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
தேர்தலுக்கு முன்னதாக, புஸ்ஸி ஆனந்த் சென்னையில் பிஷப்புகளை சந்தித்து பேசியது; தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழக திருச்சபை பிஷப்புகள் ஏறி விஜய்க்கு வாழ்த்து சொன்னது; கிறித்துவரான விஜய் தேர்தலின் போது முட்டி போட்டு திருச்சி அந்தோணியார் சர்ச்சில் பிரார்த்தனை செய்தது; பால் தினகரனை விஜய் சந்தித்து பேசியது; சபாநாயகர் ஒரு கிறித்துவர்; கருக்கலைப்புக்கு எதிரான திருச்சபைகளின் நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் கலந்துகொண்டு பாதிரியார்கள் கருத்தை ஆதரித்தது; நிதி அமைச்சரான மரிய வில்சன் ஒரு கிறித்துவர்; என விஜய் ஆட்சிக்கும் திருச்சபைகளுக்கும் உள்ள உறவை எடுத்துக்காட்டும் அம்சங்களாக இவை உள்ளன. இது இன்னும் பல கோணத்தில் ஆராயவேண்டிய பகுதியாகும்.
திருச்சபை ஆதரவு அல்லது ஆசி என்பது ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதமாகும். அமெரிக்க மூலதனத்தை ஈர்க்கும் லாபி மையமாக திருச்சபைகள் விளங்குவதைப் புரிந்துகொண்டால் விஜயின் மூலதன ஈர்ப்புக் கொள்கையும் புரியும். திருச்சபை மற்றும் NRI குழுக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கை மூலதன ஈர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்து செய்யப் போகிறது. பிறகு விஜய் நேரடியாக மூலதன ஈர்ப்புக்கு அமெரிக்க பயணத்தை அடிக்கடி மேற்கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது.
ஈ) தவெக அரசின் நிதிநிலை அறிக்கை
அமெரிக்காவிற்கான நவீன முதலாளித்துவ மாடல் கொள்கை, தவெக ஆட்சியின் பட்ஜெட்டிலும் இடம்பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு தனி தொழில்நுட்பத் திட்டமாக மட்டும் இல்லாமல், தொழில் வளர்ச்சி, திறன் பயிற்சி மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய மூன்று தளங்களிலும் பயன்படுத்தப்படும் கொள்கையாக வைக்கப்பட்டுள்ளது.
1) அறிவகம் உருவாக்குதல்
அறிவகம் எனும் பெயரில் செயற்கை நுண்ணறிவு முனையங்களை/ மையங்களை ( AI - Innovation Hubs) உருவாக்குதல்.
இதில்:
AI computing infrastructure
AI மற்றும் Deep-Tech நிறுவனங்கள்
AI பல்கலைக்கழகம் (University)
Quantum technology நிறுவனங்கள்
Global Capability Centres
ஆராய்ச்சி நிறுவனங்கள்
Semiconductor hardware testing lab
Innovation incubator
International skill-development centre
ஆகியவற்றை ஒரே பொருளாதார மண்டலத்திற்குள்/ ஒத்த சூழல் அமைப்பில் (Ecosystem) கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வுக்கு ரூ 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2) AI Mission - அரசாங்க துறைகளில் AI பயன்படுத்தப்பட வேண்டிய துறைகளாக
சுகாதாரம்
விவசாயம்
கல்வி
நகர்ப்புற நிர்வாகம்
குடிமக்கள் சேவைகள்
சமூக நலத்திட்டங்கள்
ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது, AI-ஐ தனியார் IT துறைக்கு மட்டும் விட்டுவைக்காமல் அரசு நிர்வாகத்திலும் பயன்படுத்துவது தவெக கொள்கையின் முக்கிய அம்சம். இதுவும் AI Driven Governance எனும் அமெரிக்க மாடல் நிர்வாக முறையாகும்.
3) AI தொழிற்துறை வளர்ச்சி திட்டம்
2031க்குள் 5 லட்சம் மாணவர்களுக்கு AI திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Engineering colleges, Polytechnic மற்றும் ITI மாணவர்களை இதில் இணைத்து, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும். AI பாடத்திட்டங்களை உருவாக்க தொழில் மற்றும் கல்வித்துறை நிபுணர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்படுகிறது.
AI சார் கல்வி முறையை உருவாக்குவதில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ நிறுவனத்திற்கு (Sridhar vembu) ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4) AI கொள்கையை மட்டும் தனியாகப் பார்க்காமல்,
AI + குவாண்டம் தொழில் நுட்பம் (Quantum Technology) + Animation + VFX + Gaming + XR என்ற விரிவான digital-technology ecosystem உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
AI/IT/Digital Services துறைக்கு ₹398 கோடி திருத்தப்பட்ட பட்ஜெட் கணக்கீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக New Indian Express தெரிவித்துள்ளது.
5.) தமிழ் மொழிக்கான AI
இன்னொரு முக்கியமான அம்சம் Tamil Large Language Model (Tamil LLM).
தமிழில்:
அரசு தகவல் தொடர்பு
AI language tools
தமிழ் அடிப்படையிலான AI model
உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல்கலைகழகங்களுடன் இணைந்து இதை உருவாக்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜோஹோ நிறுவனத்தின் AI கல்விக்கொள்கைக்கு உதவும் வகையில் இருக்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தவெக பட்ஜெட்டின் AI தொழில் கொள்கை: "AI உள் கட்டமைப்பு - டெக்னோ தொழிற்கொள்கை (Techno Corporate push)- ஆய்வுத்துறை -திறன் மேம்பாடு- ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சி -AI நிர்வாகம்" என்ற ஒரு முழு சங்கிலியை உருவாக்க முயல்கிறது.
அதாவது, அமெரிக்காவின் AI நிறுவனங்களை மட்டும் வரவழைப்பது அல்ல; AI உழைப்பு சக்தியை உருவாக்கி (Workforce), AI நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு, உற்பத்தி, சுகாதாரம், வேளாண்மை மற்றும் அரசு நிர்வாகத்துடன் இணைப்பது என்ற அமெரிக்க மாடல் டெக்னோ கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக அரசின் பட்ஜெட், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திட்ட அனுமதி முறை, புதிய வீட்டு வசதித் திட்டத்தை அறிவித்துள்ளது.
1) MY-HOME திட்டம்
இது பாஜக அரசின் ஸ்மார்ட் நகர திட்டத்தின் வேறுவகை என சொல்லலாம்.
பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைக்கும் AI அடிப்படையிலான திட்ட அனுமதி அமைப்பையும், சென்னையில் அடுத்த ஏழு ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகளை உருவாக்கும் புதிய வாடகை வீட்டு வசதித் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
MY-HOME -Metropolitan Youth and Family Housing திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) சென்னை பெருநகரப் பகுதியில் ஒரு புதிய திட்டத்தை முன்னோடித் திட்டமாக செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அடுத்த 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள் உருவாக்கப்படும். பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக சுமார் ₹15,000 கோடி அன்னிய முதலீடு மற்றும் உள் நாட்டு முதலீடு ஈர்க்கப்படும் என தெரிகிறது.
2) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
2026-27 திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ₹8,852 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த ₹7,547 கோடியைவிட அதிகம். 2025-26 நிதியாண்டில் இந்தத் துறைக்கு ₹8,737.71 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
இத்திட்டமும் தனியார்மயம் - கார்ப்பரேட்மயத்திற்கான PPP மாடலில் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
3) AI அடிப்படையிலான திட்ட அனுமதி - SPEED
திட்ட அனுமதிகளை விரைவுபடுத்துவதற்காக SPEED (Single Platform for Efficient Expedited Development) என்ற AI அடிப்படையிலான இணையவழி திட்ட அனுமதி அமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), நகர் மற்றும் ஊரமைப்புத் துறை (DTCP), ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
4) சென்னை பெருநகரப் பகுதியின் புதிய மாஸ்டர் பிளான்
CMDA, தற்போதுள்ள 1,189 சதுர கி.மீ. பரப்பளவிலான சென்னை பெருநகரப் பகுதிக்கு (CMA) 2027-2046 காலத்திற்கான மூன்றாவது மாஸ்டர் பிளானை தயாரித்து வருகிறது.
மேலும், விரிவாக்கப்பட்ட 5,904 சதுர கி.மீ. சென்னை பெருநகரப் பகுதிக்காக முழுமையான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும். இதற்காக ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள 24,131 பல அடுக்கு குடியிருப்புகள் இந்த ஆண்டில் முடிக்கப்படும். மேலும் 14,194 புதிய குடியிருப்புகளுக்கான பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும். இதற்காக ₹1,253 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவும் தனியார்மயத்தை, ரியல் எஸ்டேட்டை, ஊக மூலதன சக்திகளை ஊக்கப்படுத்தும் திட்டமே.
5) Digital Rental Voucher திட்டம்
MY-HOME திட்டத்தின் முக்கிய அம்சமாக Digital Rental Voucher முறை அறிமுகப்படுத்தப்படும்.
எனவே, My Home, சென்னை பெரு நகரத் திட்டம் மற்றும் வீட்டுவசதி சார்ந்த இத்திட்டங்கள் பார்ப்பதற்கு சாதகமான ஒன்றாகத் தோன்றினாலும், அதன் நோக்கம் இத்திட்டங்களில் கட்டுமானத்துறை முதலாளிகளையும், ரியல் எஸ்டேட் முதலாளிகளையும் தனியார் - அரசு பங்கேற்பு எனும் PPP மாடலில் உள்ளிழுப்பதே.
தேர்தல் அறிக்கையில் உள்ளவாறு உள் நாட்டு தரகு முதலாளிகள் மற்றும் சிறு குறு நடுத்தர முதலாளித்துவச் (MSME) சந்தையை வளர்ப்பதற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தவெகவின் MSME ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது AI மற்றும் டெக்னோ கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும். எவ்வாறு??
1) தவெகவின் MSME ஊக்குவிப்புக் கொள்கை, கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கல் வலையமைப்பை (MSME Supply chain) மலிவாகவும் வேகமாகவும் உருவாக்கும்.
2) பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு supplier base வலுப்படும். உதாரணமாக ஒரு பெரிய கார்ப்பரேட் (auto/electronics/aerospace) நிறுவனம் தமிழ்நாட்டில் நிறுவனம் தொடங்குகிறது எனில், அது ஆயிரக்கணக்கான சிறிய உதிரி பாகம் வழங்குவோரைச் (suppliers) சார்ந்திருக்கும்.
தவெகவின் மானியம், ஊக்கத்தொகை மூலம் MSME நிறுவனங்கள், பன்னாட்டு டெக்னொ கார்ப்பரேட்டுகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு உள்ளூர் சந்தையில் தேவையான உதிரி பாகங்கள் கிடைக்கும்; இதனால் இறக்குமதி மற்றும் வழங்கல் வலையமைப்பில் கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்படும் (supply chain cost) செலவும் குறையும்.
3) அடுத்ததாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்பந்த பணியமர்வுக்கான செலவும் (outsourcing cost) குறையலாம். மேலும் கார்ப்பரேட் நிறுவனம் ஒரு component-ஐ தானே தயாரிப்பதற்குப் பதிலாக MSME-க்கு outsource செய்யலாம்.
4) பெரும் கார்ப்பரேட்டுகள் நிறுவனம் தொடங்கும்போது, அதைச்சுற்றி component suppliers, logistics, maintenance, packaging, software, testing, fabrication, skilled manpower என்ற ecosystem தேவை.
MSME வலுவாக இருந்தால், ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் நிறுவனம் அமைப்பதற்கான நுழைவுக் கட்டணச் செலவு (entry cost) குறையும். நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கான வாய்ப்பும் அதிகமாகும். நிறுவனம் முடங்குவதற்கான ஆபத்து (operational risk) குறையும்.
உள் நாட்டு கார்ப்பரேட் கொள்கை குறித்த விஜய் அரசின் அணுகுமுறையானது, இங்குள்ள பெரும் தரகு முதலாளிகள் மற்றும் சிறு குறு நடுத்தர முதலாளிகளின் தொழில்களுக்கு அனுகூலமாக இருப்பது; அதன் மூலமாக பன்னாட்டு AI மற்றும் டெக்னோ கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு திட்டமிடுவது என்பதாக உள்ளது. இவ்வாறு பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை சார்ந்து இயங்கும் வகையில் உள்நாட்டு சந்தையை முழுவதுமாக மாற்றுவது என்பது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாட்டின் நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை முழுவதுமாகக் கொண்டுசெல்வதே; தமிழகம் மீதான அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தை தீவிரப்படுத்துவதே.
அதேபோல், தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலையுயர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற அம்சங்களில் எதிர்பார்த்த அளவு இல்லை என விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மண்வளம், பருவநிலை மீள்தன்மை, வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகிய துறைகளில் ஏஐ மற்றும் டெக்னோ கார்ப்பரேட்களை அனுமதிக்கும் கொள்கை வேளாண் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்புத் திட்டம், உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம், தென்னை மர சாகுபடியை நிறுவனமயமாக்கும் திட்டம், பருத்தி மறுமலர்ச்சித் திட்டம், சிறுதானிய மீட்புத் திட்டம் போன்ற திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் - குறிப்பாக ஏஐ மற்றும் டெக்னோ கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இத்திட்டங்கள் நடைமுறைக்கு வருமானால், விவசாயத்திலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்படுவது இன்னும் அதிகரித்து கடும் விவசாய நெருக்கடி ஏற்படும்.
எனவே, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வளர்ச்சியானது, செயற்கை நுண்ணறிவு (AI) கார்ப்பரேட்டுகள், டெக்னோ கார்ப்பரேட்டுகள், ஊக மூலதன ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும்.
உ) தவெக ஆட்சியில் AI சார் கல்விமுறைக்கு திட்டமிடும் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
AI கல்வி எனும் பெயரில் டெக்னோ தொழிற்துறைக்கு மலிவான கூலி உழைப்பை தயார் செய்யும் ஜோஹோ கல்வி அற்க்கட்டளையின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு தவெக ஆட்சியில் AI சார் கல்வியின் முகமாக உள்ளார்.
ஜோஹோவின் கல்விக் கொள்கை:
ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ நிறுவனம் ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கான கலைவாணி கல்வி மையம் மற்றும் ஜோஹோ கற்றறிதல் பள்ளி (Zoho schools of learning) போன்ற திட்டங்களை தென் மாவட்டங்களில் துவக்கிவிட்டது.
கிராமப்புற திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கல்வி, தொழில் சார்ந்த பயிற்சி, AI/Deep-Tech திறன் வளர்ப்பு போன்றவற்றை ஜோஹோ நிறுவனம் நடைமுறைப்படுத்த தவெக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் கிராமப்புற மாணவர்களை நகரங்களுக்கு இடம்பெயராமல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புடன் இணைத்தல், பள்ளி முடித்த மாணவர்களுக்கு பட்டப்படிப்பு இல்லாமலேயே தொழில்நுட்பப் பயிற்சி வழங்குதல், AI, software, cloud computing, cybersecurity போன்ற துறைகளில் திறன் மேம்பாடு, அவர்களுக்கு Tier-2/Tier-3 நகரங்களில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், அரசு கல்வி மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பயிற்சி என்ற Public-Private Partnership (PPP) மாதிரியை உருவாக்குதல், மெய்நிகர் (Virtual education) கல்வி முறை போன்ற இலக்குகளை அடைய திட்டமிட்டுள்ளது தவெக அரசு.
அதாவது செயற்கை நுண்ணறிவு மற்றும் டெக்னோ கார்ப்பரேட்டுகளுக்கு மலிவான உடல் உழைப்பையும், மலிவான மூளை உழைப்பையும் தயார் செய்து கொடுப்பது தவெக - ஜோஹோ கூட்டணியின் கல்விக்கொள்கையாகும்.
கிராமப்புறங்களில் ITI பாலிடெக்னிக் முறை மலிவான கூலி உழைப்பை சிறு குறு பெரு நிறுவனங்களுக்கு தயார் செய்து தந்தது போல, ஜோஹோ நிறுவனம் AI Techno கார்ப்பரேட்டுகளுக்கு தயார் செய்து தரும்.
இது அல்லாமல், ஸ்ரீதர் வேம்பு பின்வரும் துறைகளில் முதலீடு செய்யவுள்ளார்.
1) தென்காசியில் Zoho Tech Hub
2011-லேயே தென்காசியில் Zoho அலுவலகம் ஆரம்பித்தார். இப்போது தவெக ஆட்சியில் 10 கிராமங்களில் 200 பொறியாளர்கள் - ஒரு கிராமத்திற்கு 20 பேர் என உலகத்திற்கான Software-ஐ கிராமத்தில் இருந்தே உருவாக்கப் போகிறாராம்.
2) குறை மின்கடத்தி திட்டம் (Semiconductor Design Project) - ரூ.5800 கோடி மதிப்பில் தென்காசியில் Semiconductor Chip Design Project ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். Intel நிறுவனத்தில் பணிபுரிந்த தென்காசி ஆனந்தன் இதில் இணைந்து பணி செய்யவிருக்கிறார். மத்திய அரசிடம் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பித்து, $700 Million (ரூ.5800 கோடி) முதலீட்டில் Chip தயாரிக்கும் திட்டமும் உள்ளது. இது தவெகவின் AI City திட்டத்திற்கு சேவை செய்யும்.
3. கலைவாணி கல்வி மையம் - கோவிந்தபேரி, தென்காசியில் 130 மாணவர்கள் படிக்கும் பள்ளி, தேனியில் ஒரு பள்ளி - இரண்டிலும் திறந்த வெளி கல்வி (NIOS - National institute of open schooling) முறையில் இலவசக் கல்வி தரப்படுமாம்.
NIOS என்பது வீட்டில் இருந்து கல்வி கற்கும் முறையாகும். 1) யார் வேண்டுமானாலும் சேரலாம் - வயது வரம்பு இல்லை - 14 வயதுள்ளவர் நேரடியாக பத்தாம் வகுப்பில் சேரலாம் (2) வருடத்திற்கு இரு முறை மட்டுமே தேர்வு (3) தேர்ச்சி மட்டுமே. மதிப்பெண் முறை இல்லை. (4) 8 வயது குழந்தையும், 14 வயது பிள்ளையும் ஒரே வகுப்பில் படிக்கலாம். (5) வீட்டில் இருந்தே படிக்கலாம் .
நிலவும் அரைகுறை அரசுக் கல்வியை ஒழித்துக்கட்டி, திட்டவகைப்படாத ஒரு கார்ப்பரேட் கல்வி முறையை, AI டெக்னோ கார்ப்பரேட் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாற்றுவதே இதன் நோக்கம்.
ஜூன் 25, 2026-ல் வேம்பு X தளத்தில் "DMK ஆட்சியில் எங்கள் பள்ளி கட்டிடத்திற்கு DTCP அனுமதி கிடைக்கவில்லை. TVK ஆட்சி வந்ததும் தானாகவே அனுமதி வந்தது. அரசு அதிகாரிகளே 'யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்' என்று சொன்னார்கள்" என்று பதிவிட்டார். இதனால் DMK IT Wing சமூக வலைதளத்தில் அவரை தாக்கியது.
தவெக அரசின் மாவட்ட வாரியான Master Plan, AI நகரம், 21 நாள் அனுமதி கொள்கைக்கு வேம்பு மாடல்தான் உதாரணம். கேரளாவில் கூட கொட்டாரக்கராவில் 1000 பேருக்கு ஆய்வு மையம் அமைக்க (R&D Centre) கேரள அரசு அவரை அழைத்துள்ளது.
தொகுத்துச் சொல்வதெனில்...
1) தவெக ஆட்சியானது மேற்கத்திய பாணியிலான முதலாளித்துவ ஆட்சிமுறையை, குறிப்பாக சொல்வதெனில் அமெரிக்காவில் நிலவும் டெக்னோ கார்ப்பரேட் பாசிச ஆட்சிமுறையைப் போன்றதொரு கார்ப்பரேட் ஆட்சிமுறையை வளர்ச்சி எனும் பேரில் இங்கு நிறுவ முயல்கிறது;
2) AI - டெக்னோ கார்ப்பரேட் ஆட்சிமுறையின் (AI Driven Corporate Governance) மூலம், அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் நலன்களுக்காகவும், உள் நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும் ஒரு கார்ப்பரேட் அரசை (Corporate state) நிறுவ முயல்கிறது;
என்று கூறலாம்.
தவெகவின் இக்கொள்கை பாஜகவின் மையப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் நிதி மூலதன பாசிச ஆட்சிக்கு மாற்றாக இல்லை. நிலவும் போலி ஜனநாயக அமைப்பில் அது சாத்தியமும் இல்லை. சொல்வதெனில் கார்ப்பரேட் சேவையில் குஜராத் மாடலுடன், ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் மாடலுடன் போட்டி போட்டு அதை விஞ்ச நினைக்கிறார்.
மத்திய அரசுகளால் அனைத்து துறைகள், வளங்கள் மீதான மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை நிறுவப்பட்டு வருகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை - தனியார்மய-வணிகமய-கார்ப்பரேட்மயக் கொள்கை வாயிலாக ஒன்றிய அரசின் கீழ், மாநிலங்களின் சந்தை மையப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும், இந்த அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்துக்கும் இட்டுச்செல்கிறது.
ஆகவே மத்தியில் நிலவும் இத்தகைய மையப்படுத்தப்பட்ட பாசிச ஆட்சிமுறையின் ஏவலாகவோ, தொங்குசதையாகவோதான் தவெக அரசோ அல்லது எந்தவொரு மாநில அரசோ செயல்படும்; செயல்பட முடியும். அரசியல் அமைப்பு சட்டத்தின் எல்லை அவ்வளவுதான். இது இந்திய ஜனநாயகத்தின் போலித்தன்மையின் உண்மை சொரூபம்.
ஒன்றிய அரசின் கார்ப்பரேட் பாசிச மாடலை, திமுகவின் கார்ப்பரேட் மாடலை விஜய் எல்லோரையும் விட முனைப்பாக அமல்படுத்த விரும்புகிறார். அதுவும் AI டெக்னோ கார்ப்பரேட் வளர்ச்சி எனும் அமெரிக்க நலன்களுக்கான AI - டெக்னோ கார்ப்பரேட் மாடலை தீவிரமாக அமல்படுத்த முனைகிறார்.
ஒன்றிய பாஜக ஆட்சி மற்றும் திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் இடையே முதலாளித்துவ கொள்கையில் உள்ள வேறுபாடு இதுவே ஆகும்.
பாஜக மற்றும் திமுக ஆட்சிகள் வழமையான தொழிற்கொள்கையுடன் டெக்னோ கார்ப்பரேட் கொள்கையை ஒரு அம்சமாக பார்த்தன. ஆனால் தவெக ஆட்சியோ AI - டெக்னோ கார்ப்பரேட் வளர்ச்சியை தனது பிரதான கொள்கையாக முன்வைத்துள்ளது. அவ்வகையில் விஜய் இன்றைய அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட் நிதி மூலதனத்தின் நவீன முகமாக நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக விளங்குகிறார் அல்லது விளங்க முயல்கிறார்.
தவெக அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல்தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் குமார், "எமது இலக்கான 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை AI என்ற ஒரே துறையின் மூலமாகவே எங்களால் அடைய முடியும். இங்குள்ள அனைத்து துறைகளை விடவும் இந்த செயற்கை நுண்ணறிவு டெக்னோ வளர்ச்சித்துறைதான் மிக முக்கியம்" என்று சட்டமன்றத்தில் பேசியது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. இது தவெக ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையை துலக்கமாக எடுத்துக்காட்டும் அறிக்கையாகக் கொள்ளலாம்.
இதுவரை தவெக அரசின் அரசியல் பொருளாதாரக் கொள்கை - அதன் வர்க்க அடித்தளம் ஆகியவற்றை சுருக்கமாகக் கண்டோம். இனி தவெக அரசு கார்ப்பரேட் அரசை நிறுவுவதற்கு எத்தகைய ஆட்சிவடிவத்தை மேற்கொள்கிறது?? அக்கட்சியின் சித்தாந்தம் என்ன?? மூலதன ஒடுக்குமுறையை மூடிமறைக்க எவ்வகை பாசிச வடிவத்தை கைக்கொள்கிறது?? சாதியா? மதமா?? இனமா?? என்பதை காணலாம். விஜய் ஆட்சி, சாதி- மதத்துறையில் பாஜக, திமுக, அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே பின்பற்றுகிறதா? இல்லை வேறு வடிவத்தை கைக்கொள்கிறதா?? எனவும் காணலாம்.
2) தவெக ஆட்சியின் பாசிச வடிவம் என்ன??
தனது கொள்கைத் தலைவர்களாக பெரியார், காமராஜர், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், வேலு நாச்சியார் ஆகியோரை அறிவித்துள்ளது தவெக தமிழ்தேசியம், திராவிடம், இந்திய தேசியவாதம் என அனைத்தின் கலவையாக அக்கட்சியின் சித்தாந்தம் உள்ளது. இதை கதம்பவாதம் எனலாம்.
தவெக ஆட்சி, பாஜகவின் கார்ப்பரேட் கொள்கையுடன் ஒத்துப்போயிருந்தாலும் பாசிச வடிவத்திற்கு பாஜகவின் இந்துத்துவக் கொள்கையை தவெக அரசு பின்பற்றுவதாக நாளது தேதி வரை தெரியவில்லை. அது ஒரு மதச்சார்பற்ற பாசிச வடிவத்தை (Secular fascism) முன்வைப்பதாகத் தெரிகிறது.
கார்ப்பரேட் கொள்கையிலும் கூட அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட் பாசிசத்திற்கு சேவை செய்வதில் மோடியை, மு.க.ஸ்டாலினை விஞ்ச நினைக்கிறார் விஜய். அமெரிக்காவின் இன்றைய மேலாதிக்கத்திற்கு உகந்த டெக்னோ கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு சேவை செய்யவேண்டும் என்பதில் துல்லியமான இலக்குடன் இருக்கிறார். கீழ்நிலை ஊழலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மேல்நிலையில் உள்ள முதலாளித்துவ ஊழலுக்கு வலு சேர்க்கிறார். முதலீட்டாளர்கள் அதிகாரத்துறைக்கு, அமைச்சர்களுக்கு தரவேண்டிய கப்பம், கையூட்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதும், திட்ட அனுமதியை எளிதாக்குவதும் முதலாளித்துவ ஊழலை வலுவாக்கும். அதாவது ஒற்றை அதிகார மையத்திற்கு கப்பம் கட்டினால் போதுமானது எனும் நிலைமை உருவாகும் என்பது அரசைக் கட்டுப்படுத்த தரப்படும் இலஞ்சம் - ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு திடப்படும்.
விஜய் ஒரு கார்ப்பரேட் CEO மாதிரிதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அவ்வாறுதான் நடந்து கொள்கிறார். அதாவது ஒரே பவர் சென்டர், அது நான் மட்டுமே என அவர் சொன்னது கார்ப்பரேட் நலன்களுக்கானதே. கார்ப்பரேட்டுகளை அனுமதிப்பதில் ஒற்றைச்சாளர முறை எனும் எளிதான முறை (Single window clearance system) என்பதே அதன் வர்க்க உள்ளடக்கம்.
காங்கிரசு மதச்சார்பற்ற கட்சி என தன்னை சொல்லிக் கொண்டாலும் அது மென் இந்துத்துவக் கொள்கையை பின்பற்றும் கட்சியே. மேலும் அது பெருந்தேசியவெறி பாசிச வடிவத்தை கைக்கொண்டது. தன்னை மதச்சார்பற்ற கட்சி என சொல்லும் தவெக, காங்கிரசின் மென் இந்துத்துவக் கொள்கை குறித்து எதுவும் பேசியதாகத் தெரியவில்லை.
திமுக, அதிமுக கட்சிகள் கார்ப்பரேட் வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தாலும், பாசிச வடிவத்தில் ஆதிக்க சாதியமைப்பு, நிலவுடமை கூறுகள் அதன் உள்ளார்ந்த ஆன்மாவாக இருந்தன. ஆகவே அவை தலித் விரோதத் தன்மையை இயல்பாகவே கொண்டிருந்தன. அதிமுக பாஜகவின் இயல்பான வெளிப்படையான கூட்டாளியாக மாறிய போது, திமுக மறைமுக உறவுகளை பேணிவந்தது. கடந்த ஆட்சியில் திமுக இந்துத்துவத்துடனும் சமரசப் போக்கை கையாண்டது. அதாவது ஒருவகை மென் இந்துத்துவக் கொள்கையை திராவிட மாடலின் பேரில் பின்பற்றியது. சிறுபான்மையினரிடம் இருந்து அன்னியப்பட்டது.
தவெக தனது கொள்கை எதிரி பாஜக என அறிவித்துள்ளதால், அது இந்துத்துவக் கொள்கையை பின்பற்றவில்லை எனும் பொருளில் நாம் சொல்லவில்லை. மாறாக அதன் நடைமுறையில் இருந்து சொல்கிறோம். தேர்தல் முடிந்தவுடன் அதிமுக ஆதரவளித்தும் அதை நாடவில்லை. மாறாக விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவையே நாடியது. தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் அமைச்சரவையில் அதிகபட்சமாக இடம் தந்ததையும் பார்த்தோம். இதுவே சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு எனும் கற்பனாவாதம் நமக்கு ஏற்புடையதல்ல. நிலவும் முதலாளியத்துக்கு முந்தைய பிற்போக்கான உற்பத்தி முறை சாதி, மத சச்சரவுகள் நீடிக்கும் என்பதையே காட்டுகிறது. அதில் தவெக சமரசப் போக்கையே கையாளும். சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மேலும் விஜய் அரசே கிறித்துவ மதத்தை ஊக்கப்படுத்தும் அரசாக அமையவும் வாய்ப்பு நிரம்ப உண்டு.
விஜயை பொறுத்தவரையில் சாதியின் ஆட்சியா?? மதத்தின் ஆட்சியா?? எனும் கேள்விக்கு, நான் சாதி- மதமற்ற நேரடியானதொரு மூலதனத்தின் ஆட்சி நடத்தவே விரும்புகிறேன் என்று தனது நடைமுறைகளில் இருந்து சொல்லாமல் சொல்கிறார்.
சுருக்கமாகச் சொல்வதெனில்,
தவெக அரசு அமெரிக்காவின் டெக்னோ கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கும் உள்நாட்டு கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கும் சேவை செய்யும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் டெக்னோ கார்ப்பரேட் ஆட்சியை நடத்தத் திட்டமிடுகிறது. அது நிச்சயம் கார்ப்பரேட் பாசிச ஆட்சியாகவே இருக்கும். அது தனது பாசிச வடிவத்தை சாதி - மதச்சார்பற்றதாக (Secular fascism) அமைத்துக்கொள்ள முயல்கிறது.
100 நாள் விஜய் ஆட்சி
100 நாள் விஜய் ஆட்சி நாம் மேற்சொன்ன வழியில் செல்வதை உறுதிப்படுத்துகிறது. தூய்மைப் பணியாளர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கோரிக்கை கிடப்பில் இருப்பதாக ஊழியர் சங்கங்கள் அதிருப்தியில் உள்ளன.
கரப்பான் பூச்சி அமைப்பின் போராட்டத்தை கடுமையாக பாசிச முறையில் தவெக அரசு ஒடுக்கியது. இதை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் வேலை செய்வோரின் பட்டியலைச் சேகரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. குஜிலியம்பாறை தாசில்தார் அனுப்பிய இவ்வகை சுற்றறிக்கை அம்பலமாகி கண்டனங்களுக்கு ஆளானது.
டாஸ்மாக் வசூல் குறைந்தபாடில்லை. மது இல்லாத மாநிலம் எனும் அதன் கொள்கை கேள்விக்குறியாக உள்ளது. டாஸ்மாக்கில் புதிய கார்ப்பரேட்டுகளை உள்ளிழுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குதல், மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சிகளை தனியார்மயமாக்குதல், மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வு, விலையேற்றம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அவை மேலும் தீவிரமாகும் போக்கே உள்ளது.
கடந்த ஆட்சிகளில் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் சேலம் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு டென்டர் விடப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் அத்திட்டத்தை ரத்து செய்வதற்கு மாறாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக விஜயின் 100 நாள் ஆட்சி வரப்போகும் 5 ஆண்டுகால கார்ப்பரேட் ஆட்சிக்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் பணி என்ன??
விஜய் கடந்த அதிமுக, திமுக ஆட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கையான உலகமயக் கொள்கையைப் பின்பற்றினாலும், அவர் இன்றைய சர்வதேச மூலதனச் சக்திகளின் குறிப்பான தேவையின் -AI டெக்னோ நிதி மூலதனத் தேவையின் பிரதிபலிப்பாக விளங்குகிறார்.
அமெரிக்காவின் டெக்னோ கார்ப்பரேட் ஆட்சிக்கு உகந்ததொரு கார்ப்பரேட் பாசிச ஆட்சியை, தானே ஒரு கார்ப்பரேட் CEO போல நின்று கறாராக நிறுவ முயல்கிறார். அதற்கு சாதி மதமற்ற - மதச்சார்பற்ற வடிவம் தர முயல்கிறார்.
எனவே விஜய் திமுகவின் தொடர்ச்சி என்பதும் அல்லது பாஜகவின் பி டீம் என்பதும், திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதும் ஆய்வுகளற்ற அகநிலைவாதம்.
பாஜக, அதிமுக, திமுக கட்சிகளுக்கும், தவெகவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை முன்பே பார்த்தோம்.
இரு திராவிட கட்சிகளும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தைச் சுரண்டி ஊழலில் திளைத்தன. மத்திய ஆட்சியாளர்களுக்கு தமிழகத்தை காட்டிக்கொடுத்தன. அதன் மீதான வெறுப்பே விஜய் பக்கம் திரும்பியுள்ளது. விஜய் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தனது இலக்காக திமுகவை நிர்ணயித்து அதை நோக்கி பிரச்சார யுக்திகளை மேற்கொண்டார். அதிமுகவும் திமுகவை எதிர்த்து இயக்கம் நடத்துவதில் கோட்டை விட்டதானது விஜய்க்கு வாய்ப்பாக அமைந்தது. அதிமுக இடத்தை அவர் பிடித்துக்கொண்டு, தனக்கு எதிரி திமுகதான் என அரசியல் வழியை நிலை நிறுத்தினார். அதற்கு அவரது திரைப்படம் வழியிலான பாப்புலிசம் நன்றாக உதவியது. ஆனால் வெறும் திரைக்கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்தார் என்பதும், வாக்களித்தவர்கள் தற்குறிகள் என்பதும் தோல்வியை ஏற்கமறுக்கும் ஆதிக்க மனப்பான்மை. மக்களை இழிவுபடுத்தும் தற்குறித்தனம்.
தேர்தலின் போதும், அதன் பிறகும் பாஜக - திமுகவின் கள்ள உறவு அம்பலமாகி நாடெங்கும் நாறிய பின்பும் திமுக மீதுள்ள விசுவாசத்தில் CPI, CPM, VCK கட்சிகள் மீதும், திமுகவை விமர்சிப்போர் மீதும் பாய்ந்து பிராண்டி குரைத்துக் கொண்டிருக்கும் அறிவாலய கம்யூனிஸ்ட்டுகள் பூமிக்கு பாரம்.
முதலாளித்துவ ஆட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் மாறி மாறி ஆளும் வர்க்க கட்சிகளுக்கு காவடி தூக்குவதே பாராளுமன்றவாத இடதுகளின் சரிவுக்கு காரணம். தவெக ஆட்சிக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அக்கட்சி பற்றிய ஆய்வும் இல்லாமல் இடதுசாரிகள் ஆதரவு தந்துள்ளனர். திமுகவிடம் வாக்கப்பட்டு கிடந்தார்கள். இனி தவெகவிடம் கிடப்பார்கள். பாசிசம் பற்றிய புரிதல் இல்லாமல் மதவாதமே பாசிசம், ஒடுக்குமுறை மட்டுமே பாசிசம் எனும் கருத்தில் இருந்து விஜய் ஆட்சியை ஆதரிக்கின்றனர்.
இன்றைய உடனடி தேவை கீழிருந்து பாட்டாளி வர்க்க தலைமையிலான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பதே. அடிப்படை வர்க்கங்கள், நட்பு சக்திகள், ஜனநாயக சக்திகளை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் திரட்டி ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பதே இடதுசாரிகளின் இன்றைய கடமையாக இருக்க வேண்டும். அதுவே ஏகபோக நிதிமூலதனத்தின் ஆட்சியான மத்திய -மாநில பாசிச ஆட்சிகளை வீழ்த்தி ஜனநாயகம் படைக்கும்.
- சமரன்
(ஆகஸ்ட் - செப் 2026 இதழ்)