தேவதாசி மரபின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

அறம் இணைய இதழ்

தேவதாசி மரபின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

யாருக்கான தேவையாக தேவதாசி மரபு உருவாக்கப்பட்டது…? இதற்கு எப்படி புனித பிம்பம் கட்டமைக்கப்பட்டது? இதில் பலனடைந்தவர்கள் யார்? யார்? தமிழ் கலாச்சார செழுமைக்கு தேவதாசி மரபின் பங்களிப்பு எத்தகையது? இது ஏன் வீழ்த்தப்பட்டது?  ஆய்வறிஞர் பொ.வேல்சாமியின் ஒரு அபூர்வமான வரலாற்று அலசல்;

தேவதாசி மரபின் தோற்றமானது உலகளாவிய பண்பைக் கொண்டதாகவும்,  மத நிறுவனங்களினூடே தோன்றி வளர்ந்தாகவும் உள்ளது.  இதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தேவதாசி 6 ஆம் நூற்றாண்டில் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கி வளர்ந்த காலத்தில் உருவானதேயாகும்;

இத்தகைய கோவில்களில் பணியாற்றிய மகளிர்,  கோவில் வேலைகளை  செய்த பணியாட்களா? அல்லது அக்கோவில் தெய்வங்களுக்கு அடிமைகளாக சேவை புரிந்தவர்களா? என்பது  தெளிவுபடுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் இப்பொருள் பற்றி ஆராய்ந்தவர்கள் பரத்தையர்கள்,  காமகிழத்தியர், கொண்டிமகளிர், பாடினியர் போன்றவர்களிடமிருந்து இம்மரபு தோன்றியிருக்கக்கூடும் என்கின்றனர்.  ஆனால், அக்காலத்து மக்களால் புனிதமாக கருதப்பட்ட கோவில்களில் பரத்தையர்கள்  என மக்களாலும், புலவர்களாலும் இழிவாகப் பேசப்பட்டவர்களை  புனிதத் திருத்தொண்டுக்காக நியமித்திருப்பார்களா ? என்ற கேள்வியும், குழப்பமும் எழுகிறது

மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மணிமேகலை, சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி போன்ற நூல்களில் ஆடல் மகளிர், சமண மதம் சார்ந்த பெண்பாற் துறவிகள் போன்றவர்களிடம் இருந்து தேவதாசி மரபு தோன்றியதாகக் கருத்துரைத்துள்ளனர். “பெருங்கதை” போன்ற இலக்கியங்களில் “கோவில் மகளிர்” என்று குறிப்பிடப்படுகின்ற பெண்களை தேவதாசி மரபு மகளிருடன் இணைப்பது பொருந்தாது.

ஏனென்றால் பெருங்கதையில் இந்தத் தொடர் வருகின்ற இடங்களில் எல்லாம் அப்பெண்கள் அரசனுடைய அரண்மனை பணிப்பெண்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். அப்படியானால் தேவதாசிகளின்  தோற்றம் எங்கிருந்து தொடங்கியது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

இதற்கான தரவுகளை சங்க நூலாகிய புறநானூறு நமக்குக் கொடுக்கின்றது.  புறநானூற்றுப் பாடல்களில்  காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சி என்று துறை குறிக்கப்பட்டுள்ள 21  பாடல்களில் சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களைப் பற்றியும், குறுநில மன்னர்கள் சீறுர் மன்னர்கள் தொல்குடி தலைவர்களைப் பற்றியும் பாடப்பட்டுள்ளன.

மூவேந்தர்கள் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் ஆட்சி செய்த தலைவர்களின் பெண்களை தங்களுக்கு மணமுடித்து தரும்படி கேட்கின்றனர். குறுநில மன்னர்களும் சீறுர் தலைவர்களும் தொல்குடி தலைவர்களும் வேந்தர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்துத் தர மறுக்கின்றனர். இதனால் பெரும் போர் நடத்தி, பேரழிவுகளை நிகழ்த்தி தாங்கள் விரும்பிய பெண்களை சிறை எடுத்துள்ளனர்.

நமது புறநானூற்றுப் பாடல்களின் வழியாக மூவேந்தர்கள்  மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும்தான் இத்தகைய போர்களை நடத்தினார்கள் என்பதை நாம் அறிகின்றோம். இத்தகைய போர்களின் விளைவாக அன்று மக்களின் பொதுச் சொத்தாக இருந்து கூட்டுறவு முறையில் பயிரிடப்பட்ட நிலங்களை அபகரித்து, அரசர்கள் ஏராளமான அந்தணர்களுக்கு பகிர்ந்தளித்து பொது நிலத்தைக் கொண்டிருந்த பல்லாயிரம் உழவர்களை விவசாயக் கூலிகளாக்கினர். அப்படி அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க முயற்சிப்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றும் அடுத்த பிறவியில் பன்றிகளாக பிறப்பர் என்றும் அச்சுறுத்தும் வகையில் வேள்விகுடி செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது.

இச்செப்பேடுகள் வெளிவந்த காலங்களில் தான் தமிழ்நாட்டில் “தேவதாசி மரபும்” உருவாகியிருக்கின்றது என்பதை இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள கல்வெட்டுச் செய்தி புலப்படுத்துகின்றது.

சேர சோழ பாண்டியர்கள் மற்ற தொல்குடி தலைவர்களை தங்களுக்கு அடங்கியவர்களாக்கி அடக்குவதற்கு அவர்களுடைய பெண்களைத் தங்களுக்கு உரிமையானவர்களாக்க   படை நடத்தி செல்லும் போது தோற்கும் சூழல்களும் ஏற்பட்டன. அதை தவிர்க்க விரும்பினர். (களப்பிரர் காலம் தான் இதில் விதி விலக்கு)

இந்தச் சூழலில் பேரரசர்கள் தங்களுடைய மண்ணாசையையும், பெண்ணாசையையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான தக்க காலமாக “பக்தி இயக்கம்“ உருவானது. இக்காலத்தில் தமிழ்நாட்டின் பல்லாயிரம் ஏக்கர் வளமான நிலங்களை எத்தகைய போருமின்றி கோவில்களுக்கு உடைமை ஆக்கியதுடன் உயர்சாதி பெண்களும்,  பல குறு நில மன்னர்களின் பெண்களும் கோவில்களுக்கு தேவதாசிகளாக ஆக்கப்பட்ட குறி்ப்புகளை நாம் பார்க்கின்றோம்.

அதாவது வன்முறையான படையெடுப்புக்களால் சென்ற காலங்களில் சாதிக்க முடியாததை கருத்தியலான மதத்தைக் கொண்டு வெற்றிகரமாகச் சாதித்து முடித்த வரலாறுதான்  கோவில்கள் நிலவுடைமையாக்கப்பட்டதும், புனித தேவதாசி மரபு உருவானதுமாகும்.  இந்த காலகட்டத்தில் சமூக, பொருளாதார மற்றும் ஆலய கட்டுமானங்களில் தேவதாசிகளின் முழுமையான பங்களிப்பு இருந்துள்ளது. நாட்டிய கலைக்கும், இசை கலைக்கும் தேவதாசி மரபு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளது. தமிழ் கலாச்சாரச் செழுமைக்கு தேவதாசி மரபு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இவர்களின் சதிராட்டமே தற்போது பரத நாட்டியம் என்ற பெயரில் தற்போதைய சமூக தளத்தில் சற்று மாற்றங்களுடன் அறியப்படுகிறது.

சுமார் கி.பி.7ம் நூற்றாண்டில் நிறுவப்பெற்ற இந்த அமைப்பு 20ம் நூற்றாண்டுவரை கடவுளின் பெயரால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இம்மரபு பின் வந்த காலங்களில் தெய்வீகம் சார்ந்து மட்டுமில்லாமல், வேறு வடிவங்கள் எடுத்ததையும் குறிப்பிட வேண்டும்.  “தமிழகத்தில் தேவதாசிகள்” என்ற நூலில் முனைவர் கே.சதாசிவன் “பிரிஜேஷ் பானர்ஜி என்ற அறிஞரின் கூற்றைப் பதிவு செய்கிறார்.. “தேவதாசி முறையின் வரலாற்றில் மூன்று நிலைகளை இனம் காண்கிறார்.

முதல்நிலை என்பது, இறைத் திருமேனிக்கு அவர்களின் சுய அர்ப்பணிப்பு,

இரண்டாவது நிலை, அரசர்கள் பூசாரிகளின் இன்பத் துய்ப்பிற்கு அவர்கள் ஆளாக நேர்ந்தது. மூன்றாவது நிலை, பொது மனிதர்களுக்கு என்று அவர்கள் ஆனது,

இவர்களின் சீர்குலைவு நிலை இரண்டாவது கட்டத்தில் தொடங்கிவிடுவதாக இவர் கருதுகிறார்”

இந்த மரபின் இரண்டாவது கட்டத்தை இராசராசசோழனுடன் இணைக்கின்றனர். இராசராசசோழன்  தஞ்சை பெரிய கோவிலுக்கு பெண்களையும் மற்ற கலைஞர்களையும் நிரந்தரமாக நியமித்து அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கிக் கொடுத்த கல்வெட்டுச் செய்திகளை பலரும் குறிப்பிடுவர். அதே நேரத்தில் “முதலாம் இராசராசனும், முதலாம் இராஜேந்திரனும் தேவதாசிகளில்  சிலரைத் தங்களின் காமக்கிழத்தியராக்கிக் கொண்டனர்” (தமிழகத்தில் தேவதாசிகள்)   பின்வந்த காலங்களில் ஏழிசை வல்லபி என்ற தேவதாசியும் தியாகவல்லி என்ற தேவதாசியும் முதலாம் குலோத்துங்கனின் துணைவியராயினர். திருவாணைக்காவல் கோவிலின்  கணிகையான சொக்கத்தாண்டாள்,  ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மனைவியும் பட்டதரசியுமானாள்.

தமிழின் முதல் உலா நூலான “திருக்கைலாயஞான உலா”வில் “சேரமான் பெருமாள் நாயனார்” சிவபெருமானான இறைவனுடைய வீதி உலாவில் நடனமாடும் பெண்களைக் குறிப்பிடுவதை ஒட்டக்கூத்தர் விக்கரசோழனுலா, குலோத்துங்கசோழனுலா, இராசராசசோழனுலா போன்ற உலாக்களில் ஏழு பருவங்களைச் சேர்ந்த பெண்களை அரசர்களின் உலாவில்  நடனமாடி வருவதாகக் கவிதைப் புனைந்துள்ளார்.

புனித பெண்களாகக் கட்டமைக்கப்பட்ட இவர்களுடைய வாழ்வு உண்மையில் அரசர்களுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்த அதிகாரம் மிக்கவர்களுக்கும் காமகிழத்தியர்களாகவும், வைப்பாட்டிகளாகவும் மாறிவிட்டதை காண்கின்றோம்.

இதனுடைய மற்றொரு விளைவு தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட காலங்களில் எல்லாம் இவர்களுடைய வாழ்வு சிதைக்கப்பட்டதையும் நாம் காண்கின்றோம். கி.பி.1310 லிருந்து கி.பி.1386 காலக்கட்டங்களில் இஸ்லாமிய படையெடுப்புகளால் அரசர்களையும், கோவில்களையும் அண்டி வாழ்ந்த தேவதாசிகளின் வாழ்க்கை நிலைகுலைந்தது. இந்த நிலையிலிருந்து இவர்களுடைய வாழ்வு மாற்றமடைந்ததை அடுத்து வந்த நாயக்கர்கால ஆட்சியில் காண்கின்றோம்.  அதே நேரத்தில் தேவதாசிகள், தேவரடியார் என்ற புனிதபெயர்கள் “தேவடியாள்” என்று மாற்றம் பெற்றதையும் காண்கின்றோம்.

இந்தப் பெண்களைப் பேசும் போது பொதுவாக எல்லோர் மனதிலும் பருவ பெண்களே  நினைவுக்கு வருவர். உண்மையில் பச்சிளம் குழந்தைகளையே தேவதாசிகளாக்குவதற்கு விற்பனை செய்யப்பட்ட வரலாற்றுப் பதிவுகளை நாம் மராட்டியர்கால ஆவணங்களில் காண்கின்றோம். 3 வயது குழந்தையிலிருந்து 12 வயது சிறுமிகள் வரை விற்பனை செய்யப்பட்ட பதிவுகளை மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன . இந்தக் குழந்தைகளை கோவிலுக்கு நேர்ந்து விடும் போது செய்யும் சடங்குகளைப் பற்றிய குறிப்புகள் நம்முடைய இரத்தத்தை உறைய வைப்பனவாக உள்ளன. பெண்களை தேவதாசிகளாக்கும் நடைமுறையில் ஒன்று, அந்தப் பெண் கல்துளையுள் செருகப்பட்டிருந்த கூர்முனையுள்ள குச்சியைக் கொண்டு தனது கன்னித் திரையைத் தானே கிழித்துக் கொள்வாள்; கசியும் குருதியை அந்தக் கற்களின் மேல் சிறிய துளிகளாகத் தெளித்து விடுவாள்; அதோடு அவர்களின் அந்த விக்கிரக ஆராதனை நிறைவடையும். மேற்கண்ட இதனைப் பற்றி “மேயோ“ என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் படிப்பவர் மனம் பதறும்படி எழுதிய நூல் தான் “கடவுளின் அடிமைகள்“.

தமிழ்நாட்டு கலைகளின் வரலாற்றில் இவர்களுடைய பங்கு பெருமையானதாக இருந்தாலும், இவர்களுடைய வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாகவே இருந்துள்ளது. குறிப்பாக பாலியல் தேவைக்கு தோதாக ஆதிக்கசாதிகளாலும், அதிகாரத்தில் உள்ளவர்களாலும்  இந்தப் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இதன் விளைவாக பெண்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டில் இந்த அமைப்பை எதிர்த்து பல கிளர்ச்சிகள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் போன்றவர்களால் நிகழ்த்தப்பட்டது. இதனால் அரசு தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு நிர்பந்தப்படுத்தப்பட்டது. அதனால் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றவும்பட்டது.

இதற்கும் முன்னதாக மைசூரு அரசாங்கம் தேவதாசிகளின் அமைப்பை ஒழிக்க முதன்முதலில் ஆணையை வெளியிட்டது. அதன்படி, கோவில்பணி செய்வதற்காக வரி விலக்கி, தேவதாசிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டு வந்த, தேவதாசிகளின் இனாம் என்ற வகை நிலங்கள் ஒழிக்கப்பட்டு அந்நிலங்கள், தேவதாசிகளுடைய, நிரந்தர சொந்த சொத்தாக மாற்றப்பட்டு, கோவில்களில் பணிசெய்யவும் தடைவிதிக்கப்பட்டது. 1910 முதல் 1920 வரையில் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன. ( தென் இந்திய வரலாறு – நொபோரு கராஷிமா)

ஆக மாறிய காலச் சூழல் – மக்களாட்சியில் ஏற்பட்ட மனமாற்றங்கள் காலத்தின் தேவையாக தேவதாசி ஒழிப்பு சட்டத்தை சாத்தியப்படுத்தியது. அதே சமயம் மரபு வழியாக பல நூற்றாண்டுகள் பேணி வளர்க்கப்பட்ட அந்த அற்புதக் கலைகளையும், அந்த உன்னதக் கலைஞர்களையும் நாம் கண்ணியத்தோடு பாதுகாக்க  தவறிவிட்டோம்.

கட்டுரையாளர்; பொ.வேல்சாமி

ஆய்வறிஞர், எழுத்தாளர், மாற்று சிந்தனையாளர்.

‘இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்’ ‘சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/33003/history-and-tration-of-devadasi/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு