மலக்குழி மரணங்களை வெறும் சட்டம் போட்டு தடுத்துவிட முடியுமா?

தீக்கதிர்

மலக்குழி மரணங்களை வெறும் சட்டம் போட்டு தடுத்துவிட முடியுமா?

மலக்குழி மரணங்களுக்கு - படுகொலைகளுக்கு நீதி கேட்டு இடைவிடாத போராட்டத்தை தமிழகத்தில் நடத்தி வருகிறது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. எதிர்காலத்தில் இதுபோன்ற மரணங்கள் நிகழா வண்ணம் சட்ட விதிகளை அமலாக்க வலியுறுத்தியும், அரசு மற்றும் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் விதத்திலும் இன்று (டிசம்பர் 22) மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாபெரும் கருத்தரங்கை நடத்துகிறது.

மனிதர்கள் ஊதியத்திற்காக செய்யும் தொழில்களில் மிகமிக இழிவானது மனிதர்கள் கழிக்கும் மலத்தை வெறும் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு துப்புரவு செய்யும் தொழில்தான். இந்தக் கொடுமை சனாதனத்தின் விளைவான சாதியை அடிப்படையாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சாதியை அடிப் படையாகக் கொண்ட இந்தியாவில், இன்றும் கூட சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட பல இலட்சம் மனிதர்கள் இந்த இழிதொழிலைச் செய்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தொழிலை செய்துதான், தாங்கள் பிழைக்க முடியும் என்று நம்பும் அவலம். வருணாசிரம சாதியக் கட்டமைப்புக்கு வெளியே, சாதியற்றவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கப்பட்ட சில கடைநிலை சமூகத்தினர் மீது இந்த இழிதொழில் திட்டமிட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தத் தொழில் செய்வோர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களை சக்கிலி, மாதாரி, பகடை, தோட்டி என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இங்கு துப்புரவுப் பணி செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவர்களாகவே இருக்கின்றனர்.

மலம் அள்ளும் தொழில்

இந்தியாவில், “மலம் அள்ளும் தொழில்” துப்புரவுப் பணியோடு இரண்டறக் கலந்தது. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. “மலம் அள்ளும் தொழில்” என்பதை சட்டம் வரையறுத்துள்ளது. “மனித மலம் மற்றும் சுகாதாரமற்றக் கழிவறைகள், துர்நாற்றம் வீசக் கூடிய, உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் கழிவுக ளைத் துப்புரவு செய்வது மலம் அள்ளும் தொழில்” என்று அந்த வரையறை அமைந்துள்ளது. இந்தப் பணியில் வெறும் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு ஈடுபடுத்தப்படுவோரை “மலம் அள்ளும் தொழிலாளி” என்றும் சட்டம் வரையறுக்கிறது. இந்த வரையறைப் படி, இந்தியாவில் பணியாற்றும் துப்புரவுப் பணியா ளர்களில் பெரும்பாலானோர் மலம் அள்ளும் தொழி லாளர்களே!. நாடு முழுவதும் துப்புரவுப் பணி செய்ப வர்களுக்கு ஏதோ ஒருவகையில், மனித மலத்தையோ அல்லது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளையோ துப்புரவு செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

2013 ஆம் ஆண்டு சட்டம்

இந்த இழிதொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டி தொடுக்கப்பட்ட ஒரு பொது நல வழக்கு உச்சநீதி மன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்தது. அதில் உச்ச நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அதற்கான சட்டம் இயற்றப்பட்டு 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து சரியாக 9 ஆண்டுகள் கழிந்த நிலையில், அது எத்தகைய தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆய்வு செய்யும்போது, வெறும் ஏமாற்றம்தான்  மிஞ்சுகிறது.

துளியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலை

இந்தச் சட்டம் 2013-இல் நடைமுறைக்கு வந்த போதே அதை தொய்வின்றி நடைமுறைப்படுத்து வதற்காக சட்ட விதிகளும் வகுத்தளிக்கப்பட்டன. மேலும், மாநில அரசுகள் ஓராண்டுக்குள் அந்தந்த மாநிலங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவ தற்கான சட்ட விதிகளை வகுத்து செயல்படுத்தவும் சட்டம் அறிவுறுத்தியது. அவ்வாறு சட்ட விதிகளை உருவாக்கும்வரை ஒன்றிய அரசு வகுத்தளித்த விதிகளையே பின்பற்றலாம் என்பதும் அப்போதே தெளிவு படுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாநிலங்கள் 9 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், தனியாக சட்ட  விதிகளை வகுக்கவுமில்லை; ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதிகளை பயன்படுத்தி இந்த சட்டத்தை நடை முறைப்படுத்தவும் இல்லை. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தில்லி மற்றும் கேரளாவில் மட்டும் இந்த சட்டத்தை அமலாக்குவதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் நிலைப்பாடு

தமிழக அரசைப் பொறுத்தவரை, 2015-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் நாள், அரசு தனது அரசித ழில், இந்த சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்ததாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அன்றைய அரசு துளி முயற்சியும் எடுக்கவில்லை. நடை முறைக்கு வந்ததாக அறிவித்த பிறகும், அதற்கான மாநில விதிகளை வகுக்கவில்லை. இதனால், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தொடர் சிக்கல்கள் நீடித்தன. இந்த நிலையில், “கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிப்போம். அனைவரின் மாண்பை காப்போம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, சென்ற 12.08.2022 அன்று, இந்த சட்டத்திற்கான மாநில விதிகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

விதிகளின் முக்கியத்துவம்

25 பக்கங்களைக் கொண்ட அந்த விதிகளில், சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளும் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள் ளன. இந்த விதிகள் 2013-ஆம் ஆண்டு அந்த சட்டத்தோடு கொடுக்கப்பட்ட அனைத்து விதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. கூடுதலாக இணைப்பு மற்றும் 5 சட்டத்தை 4 நடைமுறைப்படுத்துவதற்கான பல நுணுக்கமான வழிமுறைகளையும் கொண்டுள்ளன. இது மாநில விதிகளுக்கான கூடுதல் சிறப்பு. ஆனால், இந்த விதிகளை தமிழ்நாடு அரசு ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. ஒவ்வொரு சட்டப்பிரிவையும் எப்படி நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை நுணுக்கமாக விளக்கியுள்ள இந்த விதிகள் இன்னும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. குறிப்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு இப்படிப்பட்ட விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது கூட இன்னும் தெரியவில்லை.

கணக்கெடுப்பும்  அடையாள அட்டையும்

இந்த விதிகளில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு கணக்கெடுப்பது குறித்தும், அதற்காக மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நியமிக்கப்பட வேண்டிய கணக்கெடுப்புக் குழுக்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பிற்கு முன் அனைவருக்கும் அது பற்றிய அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். கணக்கெடுப்பில் விடுபட்ட மலம் அள்ளும் தொழிலாளர்கள், அந்தந்த பகுதிகளிலுள்ள கணக்கெடுப்பு அதிகாரியிடம் தங்கள் விவரங்களைக் கொடுத்து தங்களை மலம் அள்ளும் தொழிலாளியாக பதிவு செய்து கொள்ளலாம். இவை தவிர, தன்னார்வலர்களும், கணக்கெடுப்பில் விடுபட்டுப்போன மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கண்டறிந்து, அதன் விவரங்களை கணக்கெடுப்பு அதிகாரியிடம் கொடுத்து பதிவுசெய்யச் சொல்லலாம். கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட “மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு” அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம், அவர்களை மலம் அள்ளும் தொழிலாளர்களாக அறிவித்து, அவர்களுக்குத் தனித்தனியே அடையாள அட்டை வழங்குவது பற்றியும் இந்த விதிகள் விளக்குகின்றன.

மறுவாழ்வுத் திட்டங்கள்

அடையாள அட்டை பெற்றவர்கள் இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளவாறு மறுவாழ்வுத் திட்டங்களையும், மாற்றுப் பணிகளையும் பெறுவதற்கு தகுதி 1பெறுகிறார்கள். அந்த மறுவாழ்வுத் திட்டங்கள் என்ன என்பது பற்றியும், எவ்விதமான மாற்றுப் பணிகளை வழங்க வேண்டும் என்பதையும் விதிகள் தெரிவிக்கின்றன. மலம் அள்ளும் தொழிலாளர்கள் தனியார் துறையிலிருந்தாலும், அரசுத்துறையிலிருந்தாலும் அனைவருக்கும் இந்த சட்டமும், விதிகளும் பொருந்தும். அடையாள அட்டை பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக உடனடி நிவாரணம் ரூ.40,000/-யை ஒரே தவணையில் வழங்க வேண்டும். கூடுதலாக, அவர்கள் அனைவரும், வீட்டுமனைப் பட்டா, வீடு கட்டிக்கொள்ள நிதி, குழந்தைகளுக்கு கல்வி கடன், மாற்றுத்தொழில் செய்வதற்கு உடனடி வங்கிக் கடன், திறன் வளர்ப்பு பயிற்சி பெறுதல் என பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களை பெற தகுதி பெறுகின்றனர். ஏற்கனவே நடைமுறையிலுள்ள மாநில அல்லது ஒன்றிய அரசின் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இவை வழங்கப்படும்.

செயல் அலுவலர்களுக்கு அதிகாரம்

தனியார் மற்றும் அரசு அமைப்புகளில் பயன்பாட்டில் உள்ள சுகாதாரமற்ற கழிவறைகளை, சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதத்திற்குள் நவீன கழிவறைகளாக மாற்றியிருக்க வேண்டும் அல்லது அவற்றை இடித்து தகர்த்திருக்க வேண்டும். இதனைக் கண்காணிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் உரிய அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளின் செயல் அலுவலர்களுக்கு இச்சட்டம் வழங்கி அவர்களை பொறுப்புக்கு உட்படுத்துகிறது. அவற்றிற்கான நடை முறைகளும் மாநில விதிகளில் தெளிவாக கொடுக்கப் பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கருவிகளும், பாதுகாப்பு உபகரணங்களும்

இந்தச் சட்டப்படி, மனிதக் கழிவுகளை துப்புரவு செய்வதற்கு எந்தவொரு மனிதரையும் வெறும் பாரம்பரிய கருவிகளுடன் பணியமர்த்துவது குற்றம். அந்தக் குற்றத்திற்கு தண்டனையையும் அபராதத்தையும் சட்டம் நிர்ணயித்துள்ளது. மனிதக் கழிவுகள் நிறைந்த பாதாளச் சாக்கடைகள், மலக்குழிகள், கழிவுநீர் தொட்டிகள் போன்றவற்றை துப்புரவு செய்வதற்கு தொழில்நுட்ப கருவிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தித்தான் செய்ய வேண்டும் என்பதை சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கான 14 வகை தொழில்நுட்பக் கருவிகளும், 44 வகை பாதுகாப்பு உபகரணங்களும் அடங்கிய பட்டியல் இந்த விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, மனிதக் கழிவுகள் நிறைந்த மேற் சொன்ன இடங்களில் மனிதர்களை உள்ளே இறக்கி ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதைச் செய்வது எப்படி என்ற நுணுக்கமான வழிமுறைகளை இந்த விதிகள் உள்ளடக்கியுள்ளன. தொழில்நுட்ப கருவிகளைக் கையாளுவது மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை பணியாளர்களுக்கு வழங்குவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.

5 இணைப்புகள்

மேற்சொன்ன பணிகளில் பணியாளர்கள் ஈடுபடும் போது, முதலுதவி வசதிகள் முழுமையாக செய்து கொடுக்க வேண்டியதை சட்ட விதிகளின் இணைப்பு 1 சுட்டிக்காட்டுகிறது. இணைப்பு 2-இல் ஒருவர் தானாக முன்வந்து தன்னை மலம் அள்ளும் தொழிலாளியாக பதிவு செய்வ தற்கான படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு 3-இல் சட்டப்பிரிவு 20-இல் சொல்லப்பட்டுள்ளவாறு சுகாதாரமற்ற கழிவறை களை கண்டறிந்து, அவற்றை இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க கொடுக்க வேண்டிய அறிவிப்பின் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு 4 இல் விதி 13 (2)-இல் சுட்டிக்காட்டிய வாறு, பாதாளச் சாக்கடை, மலக்குழி மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி  மரணமடைவோரை பதிவு செய்து, அவர்களுக்கான இழப்பீட்டை பெறுவதற்காக படிவம் தரப்பட்டுள்ளது. இணைப்பு 5-இல் விதி 22-இல் சொல்லப் பட்டுள்ளவாறு, பாதாளச் சாக்கடை, மலக்குழிகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் துப்புரவுப் பணி செய்யும் போது, கடைப்பிடிக்கப்பட வேண்டிய நுணுக்கமான நடைமுறைகள் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

தேவை தீர்க்கமான நடவடிக்கை

மாநில அரசு விதிகளை வகுத்து அரசிதழில் வெளியிட்டவுடன் சட்டம் அமலாகிவிடும் என்று எண்ணுவது அபத்தம்; அது மட்டும் போதாது. அவற்றை முழுமையாக அமல்படுத்துவதற்கான தீர்க்கமான செயல்திட்டம் தேவை. கடந்த 9.12.2022 அன்று மதுரை வந்த தமிழக முதல்வர் அங்குள்ள 4 நகராட்சிகளில், தூய்மைப் பணியாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும் என்பதையும் அறிவித்தார். ஆனால், இந்தத்திட்டத்தின் அம்சங்கள் அவை 2013-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒருசில மறுவாழ்வுத் திட்டங்களே. சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கண்டறிந்து, மறுவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தாலே தமிழ் நாட்டில் ஓரளவுக்கு இந்த இழிதொழிலை ஒழித்திருக்க முடியும். ஆனால், சட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிசெய்த அரசு இதுபற்றி துளியும் அக்கறை செலுத்தவில்லை.  திமுக அரசு “மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013”-ஐ மாநில விதிகளில் சுட்டிக்காட்டியுள்ளவாறு, முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதற்கான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும். மேலும், சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளவாறு மாநிலம், மாவட்டம் மற்றும் கோட்ட அளவிலும், கிராம ஊராட்சிகளிலும் சட்டத்தில் சொல்லியுள்ளபடி கணக்கெடுப்பு நடத்தி மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கண்டறிந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். இந்தச் சட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்க, தகுதியுடைய, அதிகாரம் பெற்ற நேர்மையான அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே இந்த இழி தொழிலை ஒழிக்கவும், விஷவாயு மரணங்களைத் தடுக்கவும் எடுக்கப்படும் சிறந்த முயற்சியாக அமையும்.

- தீக்கதிர்

theekkathir.in /News/articles/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/law-enforcement-can-prevent-poisoning-deaths 

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு