ரூ. 25 லட்சம் கோடி ரூபாய்: முதலாளிகளுக்கு மோடி அரசு ‘அள்ளிக் கொடுத்தது’ 14 லட்சம் கோடியல்ல

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த உண்மை - தீக்கதிர்

ரூ. 25 லட்சம் கோடி ரூபாய்: முதலாளிகளுக்கு மோடி அரசு ‘அள்ளிக் கொடுத்தது’ 14 லட்சம் கோடியல்ல

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, கடந்த 9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த கடன் தொகை 25 லட்சம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், கடந்த ஜூலை 20 துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற நாடாளு மன்றக் கூட்டத் தொடரின்போது, இவ்வாறு பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 14 லட்சம் கோடி ரூபாய் என்று மோடி  அரசின் நிதியமைச்சகம் கூறியிருந்தது, அப்பட்டமான பொய் என்பதும் அம்பல மாகி இருக்கிறது. பொதுவாக வங்கிகள் தொழில்  நடத்துவதற்கு கடன் கொடுக்கின்றன.  இவ்வாறு வழங்கப்படும் கடன்கள்  இரண்டு வகையாக பிரிக்கப்படு கின்றன.  ஒன்று பிணையுடன் கூடிய  கடன் (SECURED LOAN) இன்னொன்று பிணையில்லாக் கடன் (UNSECURED LOAN). சாதாரணமாக சிறு, குறு நிறுவனங் கள் கடன் கேட்டால் அதற்கு எந்த சொத்தை ஈடாக தருகிறீர்கள்.. என்று கேட்டு, அந்த சொத்தின் மதிப்பு அடிப் படையிலேயே வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. நாளை ஏதேனும் கார ணங்களால் அந்த கடனைக் கட்ட முடி யாவிட்டால் ஈடு வைக்கப்பட்ட சொத்தி னை ஜப்தி செய்து ஏலம் விட்டு அதில் வரும் பணத்தின் மூலம் அந்த கடன் தொகையில் வரவு வைப்பார்கள். இவ்வாறு சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர் பலர் தங்களின் சொத்துக் களை ஜப்தியில் இழந்திருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு பிணை எதுவும்  இல்லாமல் பல ஆயிரம் கோடி கடன்  பெற்ற பெருமுதலாளிகள், அந்தக் கட னைத் திருப்பிச் செலுத்துவதும் இல்லை - இவர்கள் ஆட்சியாளர் களுக்கு வேண்டியவர்கள் என்பதால்- வங்கிகளும் அவர்களை நெருக்கிப் பிடித்து கடன்களை வசூலிக்க முடிவது மில்லை. ஒரு கட்டத்தில் அந்தக் கடன் கள் வராக்கடன்கள் ஆக்கப்பட்டு -ஆட்சி யாளர்களின் ஆசியுடன்- தள்ளுபடி செய்யப்பட்டு விடும். 

இவ்வாறு தள்ளுபடி செய்யும் பணம் அனைத்தும் வங்கிகளுக்குச் சொந்த மானவை அல்ல. அவை, 140 கோடி இந்திய மக்களும் அன்றாடம் பல்வேறு வகைகளில் அரசாங்கத்திற்குச் செலுத் திய வரிப்பணம். அவை மோடி அரசால், பெருமுதலாளிகளுக்கு அநாமதேய மாக அள்ளி வீசப்பட்டு வருகிறது. இப்படி பிணையில்லாக் கடன்களை  வாங்கி, மோசடி செய்தவர்களின் பட்டி யலைக் கேட்டால், அது ‘இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு எதிரானது’ என்று நாடாளுமன்றத்திலேயே பதிலளித்து, ‘முதலாளிகளைக் காட்டிக் கொடுக்க மாட்டோம்’ என்று, ராஜவிசுவாசத்தை காட்டினார் நிதியமைச்சர். எனினும், கடந்த ஜூலை 20 துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத்தொட ரின்போது, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை மட்டும் எவ்வளவு என்று மோடி அரசு கூறியது.  07-08-2023 அன்று திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி கருணா நிதி, வராக்கடன் தள்ளுபடி குறித்து எழுப்பிய கேள்விக்குப் (கேள்வி எண்  2983) பதிலளித்த ஒன்றிய அரசின் நிதித் துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் காரத், “கடந்த ஒன்பது நிதி ஆண்டு களில், 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி  ரூபாய் மதிப்பிலான வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன” என்று கூறியிருந்தார்.  மொத்தத் தொகையில் கார்ப்பரேட் தொழில்கள் மற்றும் சேவை களுக்கான கடன் தள்ளுபடி மட்டும் 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் என்று  கூறியிருந்தார்.  இதுவே அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய வரிப் பங்கீட்டுத் தொகை  உரிய காலங்களில் வழங்கப்படுவ தில்லை. நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி, சுகாதாரத்திற்கான நிதி வெகு வாக வெட்டிக் குறைக்கப்பட்டுவிட்டது. மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன்களை அல்லது குறைந்த பட்சம் அந்தக் கடனுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண் டும் என்ற கோரிக்கை 9 ஆண்டுகளி லும் ஏற்கப்படவில்லை. கேட்டால், நிதி யில்லை என்று மோடி அரசு காரணம் கூறுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுவதற்குத் தேவையான 1500  கோடி ரூபாய் கூட, ஒன்றிய அரசிடம் இல்லை என்று கூறி, ஜப்பான் நிறு வனத்திடம் கையேந்தச் சொன்னது.  அவ்வாறிருக்கையில் முதலாளி களுக்கு மட்டும் 14.56 லட்சம் கோடி ரூபாயை எப்படி தள்ளுபடி செய்ய முடிந்தது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.  இந்நிலையில்தான், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ. 14 லட்சத்து 56 ஆயிரம் கோடியல்ல. அதை விடவும் அதிகம். சுமார் 25 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது, என்ற அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உண்மை விபரம் தந்த  ரிசர்வ் வங்கி

கேரள மாநிலம் ஆழப்புழையில் பிறந்தவர் சஞ்சய் ஈழவா. குஜராத் மாநிலத்தில் வசிக்கும் இவர், ஒரு சமூக  செயற்பாட்டாளர் ஆவார். அவர், ‘கடந்த 9 ஆண்டுகளில் தள்ளுபடி செய் யப்பட்ட வராக்கடன்கள் எவ்வளவு?’ என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இந்திய ரிசர்வ் வங்கி  (RBI) அக்டோபர் 11 அன்று பதிலளித்து ள்ளது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் தனியார் முதலாளிகளுக்கு மோடி அரசு கடன் கொடுத்து, வராக்கடன் எனும்  பெயரில் தள்ளுபடி செய்த தொகை  மட்டுமே ரூ. 25 லட்சம் கோடிகள் என்ற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்து ள்ளது. (அட்டவணையில்) சராசரியாக ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய்களை, வராக்கடன் என்று கூறி மோடி அரசு தள்ளுபடி செய்து, முதலாளிகளை மனம் குளிரச் செய்து ள்ளது. இதில், 2023-24 நிதியாண்டிற் கான வராக்கடன் சேர்க்கப்படவில்லை.

இது 9 ஆண்டுகளுக்கான கணக்கு மட்டுமே ஆகும். 2014-ஆம் ஆண்டு மே மாதம், மோடி பிரதமரானபோது, பெட்ரோல் மீது லிட்டருக்கு 9 ரூபாய் 20 காசுகளாகவும், டீசலுக்கு 3 ரூபாய் 46 காசுகளாகவும் இருந்த கலால் வரியை, மோடி அரசு பெட்ரோல் லிட்டருக்கு 27 ரூபாய் 90 காசு களாகவும், டீசல் லிட்டருக்கு 21 ரூபாய் 80 காசுகளாகவும் உயர்த்தியது. இதன் மூலம் 2014 முதல் 2022 வரையிலான 8  ஆண்டுகளில் மட்டும் மோடி அரசு இந்திய மக்களிடமிருந்து ரூ. 26 லட்சம்  கோடி ரூபாய் அளவிற்கு வரி என்ற  பெயரில் வசூலித்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகின.  அவ்வாறு இந்திய மக்களை வரிகள்  மூலம் கசக்கிப் பிழிந்த மோடி அரசு, அவற்றை கார்ப்பரேட் முதலாளி களுக்கு கடனாக தூக்கிக் கொடுத்து, தற்போது அந்த கடன்களை ரூ. 24 லட்சத்து 95 ஆயிரத்து 80 கோடி அள விற்கு தள்ளுபடி செய்திருப்பது, இந்திய மக்கள் மீதான மிகப்பெரிய கொள்ளையாக அமைந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் காரத், 25 லட்சம் கோடி ரூபாய் கடனை, வெறும் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்துக்  காட்டியது, நாட்டை - நாடாளு மன்றத்தை தவறாக வழிநடத்துவது ஆகாதா என்ற கேள்வியை எழுப்பி யுள்ளது. மேலும், கார்ப்பரேட் முதலாளி களுக்கு சேவகம் செய்வதற்காக எந்த  அளவிற்கும் பொய்யிலும் புரட்டிலும் மோடி அரசு புரண்டெழும் என்பதற்கு வராக்கடன் தள்ளுபடி விவகாரம் மற்று மொரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

(சமூக ஆர்வலர் ஆர்.எம்.பாபு அளித்த விபரங்களுடன்)

- தீக்கதிர்

https://theekkathir.in/News/states/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/a-fact-brought-to-light-by-the-right-to-information-act

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு