இந்தியா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்க வெளியுறவுத்துறை மிரட்டல்!

தீக்கதிர்

இந்தியா மீது பொருளாதாரத் தடை : அமெரிக்க வெளியுறவுத்துறை மிரட்டல்!

ஈரானுடன் வர்த்தக உறவை மேற்கொண்டால் எங்கள் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என இந்தியாவை அமெரிக்கா மிரட்டியுள்ளது.

ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

வேதாந்த் படேல் கொக்கரிப்பு

"சமஹர் துறைமுகத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானும் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை நாங்கள் அறிவோம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அதனை நாங்களும் செயல்படுத்துவோம். ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களை யார் மேற்கொண்டாலும், அவர்கள் எங்களது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்" என்று வேதாந்த் படேல் கொக்கரித்துள்ளார்.

எரிக் கார்செட்டியும் பகிரங்கமாக மிரட்டல்

இந்தியாவும் ஈரானும் மே 13 அன்று சபஹர் துறைமுகத்தை 10 ஆண்டு நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், "ஈரான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது; அதனுடன் வணிக உறவில் ஆபத்துகள் ஏற்படும்; இதனால் அவர்களுடன் வணிக உறவில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரானுடனான சபஹர் துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் இந்தியாவிற்கு பொருளாதார தடைகள் வரக்கூடிய ஆபத்து உள்ளது" என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் தனது பங்கிற்கு மிரட்டியுள்ளார்.

ஈரான் வழியாக ரஷ்யாவுடன் இணையும் இந்தியா

அதேநேரம் இந்த ஒப்பந்தம் குறித்து பேசியிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "பல ஆண்டு காலத்திற்கு பிறகான இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.

"ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா உள்ளிட்ட பகுதிக்கு இந்தியாவின் முக்கியமான வர்த்தக இணைப்பாக இந்தத் துறைமுகம் செயல்படும். இந்தியாவை ஈரான் வழியாக ரஷ்யாவுடன் இணைக்கும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடன் சபஹர் துறைமுகத்தையும் ஒருங்கிணைக்கும் திட்டம் உள்ளது.

அமெரிக்காவுக்கு என்ன பிரச்சனை?

அந்த துறைமுகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு இந்தியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒரு சாத்தியமான பாதையாக இந்தியா உழைத்து மாற்றியது" எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முதன்மைத் திட்டமாக உருவாகியுள்ள இந்த சபஹர் துறைமுகத் திட்டம். நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்திற்கான போக்குவரத்து மையமாக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலும் இந்தியா முக்கிய பங்காற்றியுஎனது குறிப்பிடத்தக்கது" என்று கூறியிருக்கும் ஜெய்சங்கர். மேலும் சபஹர் துறைமுகத்தால் அமெரிக்காவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

-தீக்கதிர்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு