பாரதியும் தேசிய விடுதலைப் போரும்

தெய்வசுந்தரம் நயினார்

பாரதியும் தேசிய விடுதலைப் போரும்

பாரதிபற்றி 40 ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய ''பாரதியும் தேசிய விடுதலைப் போரும்'' என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில செய்திகள்  .... 

------------------------------------------------------------------- 

1) விடுதலைப் போரில் பாரதியின் பங்கு 1904-இல் தொடங்கி 1907, 1908 -இல் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தது; 1910-இல் பின்னடைவுக்கு உட்படுகிறது. 1918-இல் அவர் ஆங்கிலேய அரசுக்கு அளித்த உறுதிமொழிகள் அவருடைய அரசியல் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

2) ஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுய ஆட்சி அரசாங்கமே தேவை என்று காங்கிரசின் தலைவர்கள் தாதாபாய் நவுரோஜி, கோகலேயும் திரும்பத் திரும்பத் திரும்பக் கூறிவந்தபோது, பாரதியார் முழுவிடுதலை என்ற கொள்கையைத்தான் கொண்டிருந்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட அரசாங்கம் என்பது நாடகத்தில் வரும் ராஜாவை உண்மையான ராஜா என்று நினைப்பதற்குச் சமமானது என்று கூறினார்.

3) செய்கை எதிர்ப்பு, மானசீக எதிர்ப்பு என்ற இரண்டு போராட்டமுறைகளில் , முதல்வகையானது பலாத்காரவழி என்றும் இரண்டாவது வகையானது சாத்வீகவழி என்றும், தான் இரண்டாவது வழியையே எற்றுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

4) வருடந்தோறும் மனுக்கள் தயார்செய்துகொண்டு, லண்டன் சென்று ஆங்கில அரசிடம் பிச்சை கேட்கும் வழிமுறையைக் காங்கிரஸ் கைவிடவேண்டும் என்று கூறினார்.

5) திலகர், லஜபதிராய் போன்றோர் இந்துமதத் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டு, இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்குப் பங்கம் வரும்வகையில் செயல்பட்டபோது, பாரதியார் இந்து முஸ்லீம் ஒற்றுமை விடுதலைப்போரில் மிக அவசியமான தேவை என்று கூறினார். தான் ஒரு இந்துவாக இருந்தாலும் , பிற எல்லா மதத்தினரும் ஒன்றே என்று கூறினார்.சிவாஜி, கணபதி பண்டிகைகளைக் கொண்டாடுவதுபோல் அக்பர் விழா போன்றவற்றையும் இந்துக்கள் கொண்டாடவேண்டும் என்று கூறினார்.

6) திலகர் விதவைத் திருமணம், எல்லா சாதியினரும் ஒன்று என்பவற்றை ஏற்றுக்கொள்ளாதபோது, பாரதி மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

7) முழுவிடுதலை என்ற கொள்கையைக் கொண்ட பாரதி, தன் அரசியல் வாழ்வில் 1905 முதல் 1910 வரை தான் வளர்ச்சியைப் பெற்றிருந்தார். அதன்பின் அவர் அரசியல் வாழ்வில் வீழ்ச்சியே ஏற்பட்டது. முழுவிடுதலைதான் தேவை என்ற பாரதி, பின்னால் ஆங்கிலேயரை விலக்குவது கிடையாது என்று கூறுவதும் காங்கிரசின் மிதவாதத் தலைமை ஆங்கில அரசிடம் மனுகொடுத்து கோரிக்கை கேட்பதைக் கடுமையாக சாடிய பாரதி, தானே பின்னால் ஆங்கிலேய அரசுக்கு விடுதலைக்காகப் பணிந்துபோனதும் விண்ணப்பதும் அவரது வீழ்ச்சியைக் காட்டுகின்றன. 

8 ) பாரதியின் கொள்கைக்கு ஏற்ற இயக்கம் காங்கிரஸ் அல்லாத ஏனைய புரட்சிகர அமைப்புகளே. அவைதான் ஆங்கிலேயரை அடியோடு தகர்க்க விரும்பின. ஆனால் பாரதியின் அகிம்சாவழிப் போராட்டமுறை, அவரை அப்புரட்சிகர அமைப்புகளுடன் இணைவதைத் தடுத்துவிட்டது. மேலும் அப்புரட்சிகர அமைப்புகளும்கூட தெளிவான பார்வையையும் நாடுதழுவிய ஒரு அமைப்பும் தொழிலாளி வர்க்கத் தலைமையும் இல்லாத காரணத்தால் தோல்வியையே தழுவின.

9) பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அவர் வாழ்ந்த காலகட்ட சமூக , அரசியல் சூழ்நிலையே அடிப்படைக் காரணமாகும். பாரதியின் ஆன்மீகப் பிடிப்பும் தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையும் பிற காரணங்கள் ஆகும். 

10) பாரதி உண்மையாகவே விடுதலையை விரும்பியவர்; அதற்காகச் செயல்படமுன்வந்தவர்; அந்நியருக்கு எதிரான போராட்டமே இந்திய மக்களின் அன்றைய அடிப்படை பிரச்சினை என்று மக்களுக்கு எடுத்துக்காட்டி, அந்நியருக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைத் தொடர்ந்து வலியுறுத்தியவர்; திலகர் போன்றவர்களின் இந்துமத வெறிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாதவர்; ஆன்மீகப் பிடிப்பின் காரணமாகவும் தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையாலும் எது சரியான , உண்மையான இயக்கம் என்று பார்க்கத் தவறியவர்; அதன்விளைவாகத் தவறான இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு, தோல்வி கண்டு, தளர்ச்சி அடைந்தவர்.

11) பாரதியின் வீழ்ச்சிக்கு அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியே காரணமாகும். வ.உ.சிதம்பரனாரின் வீழ்ச்சிக்கும் காங்கிரசே காரணம். 

எனவே, பாரதியின் ஆன்மீகப் பிடிப்பு, அவர் பிறந்த பிராமணக் குடும்பம், வாழ்வில் இறுதியில் அரசியலிருந்து விலகியது ஆகியவற்றை மட்டுமே காரணங்களாகக் கூறி, அவரைப் பாராட்டக் கூடாது என்று கூறுவது சரி இல்லை என்பது எனது கருத்து. 

அவர் உண்மையில் ஆங்கிலேய அரசின் ஆட்சிக்கு எதிராக இருந்தவர்; போராட்டக் களத்தில் இருந்தவர்; அதனால் பல பாதிப்புகளுக்கு உட்பட்டவர். ஆனால்  அவர் தனது இறுதி வாழ்க்கையில் அரசியலில் இருந்து ஒதுங்கியது அல்லது பின்னடைவுக்கு உட்பட்டதற்கு ஆங்கிலேய அரசுக்குச் சாதகமாகச் செயல்பட்ட காங்கிரசே காரணம் என்றுதான் நான் கருதுகிறேன். 

அவர் ஒரு மிகப் பெரிய கவிஞர் என்பதைத் தாண்டி, மதவிரோதப்போக்கு, இந்துமதவெறி, விதவைத் திருமண எதிர்ப்பு, பெண்ணடிமை போன்றவற்றிக்கு எதிராக இருந்தவர் என்பதில் ஐயம் இல்லை.

- தெய்வசுந்தரம் நயினார் (முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02c7NPc9GHV8uWskfFpQ7GBb7GiWQmP36fVswwzRqjyXZQERfuKuRHAYt8psnHC4pil&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு