உயர் கல்வித் துறையா? உயர் களவாணித் துறையா?
அறம் இணைய இதழ்
அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது கொஞ்சம் தான்! அண்ணா பல்கலை அங்கீகரித்த சுயநிதி பொறியல் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனங்களில் எத்தனையோ தகிடுதத்தங்கள்! இதன் பின்னணி என்ன? தமிழக உயர் கல்வித் துறையை பணம் கறக்கும் காமதேனுவாகப் பார்க்கும் அமைச்சர் பொன்முடிக்கு இதில் என்ன சம்பந்தம்..?
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் முழு நேரமாகப் பணிபுரியும் 353 பேராசிரியர்கள் மூன்று முதல் 11 கல்லூரிகள் வரை ஒரே நேரத்தில் பணிபுரிவதாக போலியாக கணக்கு காட்டி இருப்பது அறப்போர் இயக்கத்தால் அம்பலப்பட்டு பெரும் கவனம் பெற்றுள்ளது.
இது நம் நாட்டில் உயர்கல்வித் துறையின் சீழ் வடியும் சீரழிவின் ஒரு துளி தான். கடந்த 40 ஆண்டுகளாக பணம் கொழிக்கும் ஒரு வியாபாரமாக மட்டுமே உயர்கல்வித் துறை அணுகப்பட்டு வருவதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.
நம்மை பொறுத்த வரை இது புதிய செய்தியல்ல. கடந்த இரு தசாப்தங்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தனியார் சுய நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான லைசென்ஸுக்கு பல கோடி பணம் பெற்று அனுமதிக்கும் அணுகுமுறை எம்.ஜி.ஆர் காலத்திலே ஆரம்பமானது. கருணாநிதி ஜெயலலிதா காலத்தில் புற்றீசல்களைப் போல சுயநிதி பொறியியல் கல்லூரிகள் – கற்பிக்கும் நோக்கத்தை பின்னுக்கு தள்ளி காசுபார்க்கும் நோக்கத்திற்காக – உருவாக்கப்பட்டன. ஆட்சியாளர்களுக்கு கையூட்டு தந்து கை நாட்டுப் பேர்வழிகள் கூட கல்வித் தந்தைகளாக மாற்றம் கண்டனர்.
சரி, தற்போதைய விவகாரத்திற்கு வருவோம். கட்டிட கட்டுமானங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்க முடிந்த கல்வி வியாபாரிகள் கல்வி கட்டுமானத்தை உருவாக்க தகுந்த ஆசிரியர்களை நியமிக்க கஞ்சத்தனம் காட்டி வருவதன் விளைவே, வேலையில் இல்லாத ஆசிரியர்களை இருப்பதாக கணக்கு காட்டும் தகிடுதத்தங்கள் அரங்கேறக் காரணமாகும்.
இன்னும் சொல்வதென்றால், தனியார் கல்லூரிகள் மட்டுமல்ல, அரசு கல்லூரிகளின் நிர்வாகமே இந்த தில்லுமுல்லுகளை செய்து வருகின்றன.
இந்தக் கல்வியாண்டு தொடக்கத்தில் தமிழகத்தின் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கிகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி கேட்டிருந்ததும், இதைத் தொடர்ந்து மேலும் சுமார் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்து கல்லூரி சேர்க்கைக்கு தடை போட்டதும் நினைவிருக்கலாம். இதற்கு சொல்லப்பட்ட காரணம், அந்தந்தப் பாடப் பிரிவுக்கான தகுதியான ஆசிரியர்களும் இல்லை. போதுமான எண்ணிக்கையிலும் இல்லை.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 1,400 பேராசிரியர் பணியிடங்களில் ஏறக்குறைய 450 பணியிடங்களும், 1,600 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 550 பணியிடங்களும் காலியாக இருந்தது அப்போது தான் அம்பலத்திற்கு வந்தது. இதை மறைப்பதற்காக குறிப்பிட்ட சில பேராசிரியர்களை தமிழக அரசே இன்ஸ்பெக்ஷன் நடக்கும் போது வேறு இடங்களில் இருந்து அழைத்து வந்து கணக்கு காட்டியது அம்பலமானது.
தமிழக அரசே நடத்தும் அரசு பொறியியல் கல்லூரிகளின் நிலைமைகள் என்ன? அங்கு பேராசிரியர்கள் பணி இடங்கள் எத்தனை நிரப்பப்படாமல் உள்ளன…? அடிப்படை கட்டமைப்புகளின் இல்லாமைகள் என்னென்ன…? முறையான லேப் வசதிகள் உள்ளனவா? அதை பராமரிக்க தொழில் நுட்ப பணியாளர்கள் உள்ளனரா…? என்றால், இல்லாமைகளின் பட்டியல் வெகு நீளமாக நீண்டு கொண்டே போகும்..? அரசு கல்லூரிகளின் நிலைமையை இவ்வாறு அவல நிலையில் வைத்துக் கொண்டு, தனியார் கல்லூரிகளின் தரத்தை கேள்வி கேட்கும் தார்மீகத் தகுதி அரசுக்கு எப்படி வரும்..?
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சட்ட அமைச்சர் ரகுபதி, துரைமுருகன், எ.வ.வேலு.. போன்ற பல திமுக முக்கியஸ்தர்கள் பெரிய கல்வி வியாபாரிகள் தாம். இவர்கள் நடத்தும் கல்லூரிகளின் லட்சணமே இந்த தில்லு முல்லு பாணி தான். தமிழகத்தில் பல முக்கியமான பொறியியல் கல்லூரிகள் அரசியல்வாதிகளால் நடத்தப்படுபவை. இதில் ஆளும் கட்சியும் உண்டு, ஆண்ட கட்சியும் உண்டு. இரு தரப்பும் மாறி,மாறி ஆட்சிக்கு வருவதால் இந்த குற்றச் செயல்களுக்கு ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்கின்றனர். இதில் தேசிய கட்சிகள், சாதிக்கட்சிகளும் விதிவிலக்கல்ல.
குறைந்தபட்ச ஒப்பந்த கூலி முறையில் ஆசிரியர் நியமனம் என்பதே இவர்களின் கொள்கை. தகுதியான, திற்மையான ஆசிரியர் என்றால் நியாயமான சம்பளம் தராமல் வரமாட்டார் என்பதால் கடந்த ஆண்டு முட்டி மோதி எப்படியோ பாஸான ஒரு மாணவனை பிடித்து அதே கல்லூரியின் ஆசிரியராக்கிவிடுகிறார்கள். பாட திட்டம் குறித்த முழுமையான புரிதலோ, கற்பிக்கும் ஆற்றலோ கடுகளவும் இல்லாத இந்த ஒப்பந்த கூலி ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்…?
பெரும்பாலான தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி என்பது இருபது சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது கவனத்திற்கு உரியது. இப்படி தகுதியற்ற கல்லூரிகளை தடை செய்வதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்..? சில ஆயிரம் மாணவர்களின் எதிர்காலமாவது காப்பாற்றப்படுமே. அவர்கள் குடும்பத்தின் பொருளாதார சுமையாவது குறையுமே.
கட்டுமான தொழில் செய்யச் செல்லும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழிலாளி கூட, நாள் ஒன்றுக்கு ரூ 1,500 தராவிட்டால் வேலை செய்ய ஒப்புக் கொள்ளமாட்டார். ஆனால், இந்த சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களோ நாளொன்றுக்கு ரூ 500க்கும் குறைவான ஊதியத்தில் தான் நியமிக்கப்படுகின்றனர். மொத்த பொறியியல் கல்லூரிகளில் சுமார் 10 சதவிகிதமே சிறப்பாகச் செயல்படுகின்றன. மற்ற 20 சதவிகிதம் சுமார் ரகம். ஆனால் 70 சதவிகிதமானவை கவலைக்கிடமாகத் தான் உள்ளன. இதிலும் சரிபாதி படுமோசமான நிலையில் உள்ளன.
தனியார் கல்லூரிகளின் மோசடிகளுக்கு துணை போன அண்ணா பல்கலைக் கழக ஆய்வுக் குழு உறுப்பினர்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை சி.ஏ.ஐ. பிரிவு ஆய்வுக்காக செல்வது என்பது பெரும்பாலும் ஒரு சடங்கு தான். இவர்களுக்கு முன் கூட்டியே எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன குறைபாடுகள், பிரச்சினைகள் உள்ளன என்பது அத்துப்படி. கலெக்ஷ்ன், கரப்ஷன், கமிஷன் என்ற அடிப்படையில் தான் இந்த இன்ஸ்பெக்ஷன்கள் நடக்கின்றன. இப்படி இன்ஸ்பெக்ஷன் பண்ணியவர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தினாலே போதும், அனைவரும் கம்பி எண்ண வேண்டியிருக்கும்.
ஒரு பாட பிரிவுக்கு 1:2:6 எனும் விகிதாச்சாரப்படி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியாற்றுகிறார்களா?, அந்த கல்லூரியில் போதுமான லேப் இருக்கின்றதா? அதில் இருக்கும் பேராசிரியர்கள் பி.எச்.டி முடித்தவர்களா? அவர்களின் யூனிக் ஐடி சரியாக உள்ளதா? அவர்களின் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் கார்டு உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டதா? என்ற கேள்விகளை எழுப்பினால், இவற்றை சரி பார்க்காமல் விடுவதற்கு தான் அவர்கள் சரிகட்டப்பட்டனரே என்பார்கள்!
யார், யார் இந்த இன்ஸ்பெக்ஷனுக்கு போனார்கள் எனக் கேள்வி எழுப்பினாலே அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் அதிர்ச்சியாகி, ”அதையெல்லாம் சொல்லமாட்டோம். நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார் பொத்தாம் பொதுவாக.
நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், அந்த இன்ஸ்பெக்ஷன் குழுவினர் மாத்திரமல்ல, அந்த குழுவை உருவாக்கிய துணை வேந்தர், துணைவேந்தராக அவருக்கு வாய்ப்பளித்த அதிகார மையம்..என அடுத்தடுத்து குற்றப்பட்டியல் விரியும்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை பொறுத்த வரை தனியார் பொறியியல் கல்லூரிகளை பணம் கறக்கும் காமதேனுவாக மட்டுமே பார்க்கிறார். ஒவ்வொரு சுய நிதிக் கல்லூரிகளிலும் புதிய பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கும், ஆண்டுக்காண்டு அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும்.. ஒரு விலை வைத்து கறாராக வாங்குவதில் மட்டும் தான் கவனம் காட்டுகிறார்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனங்களைக் கூட நியாயமாக நடத்தி உரிய தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய அனுமதிப்பதே இல்லை. இதற்கு தற்போது சரியான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், பச்சையப்பன் அறக்கட்டளை சார்ந்த கல்லூரிகளில் நியாயமான முறையில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப நீதிமன்றமே ஆணையிட்டும் உயர் கல்வித் துறை அனுமதி மறுத்து, ஒவ்வொரு ஆசிரியர் நியமனத்திற்கும் முப்பது லட்சம் டிமாண்ட் வைத்து அலைக்கழிப்பதே சாட்சியாகும்.
அந்த காலத்தில் பேரரசர்கள், சிற்றரசர்களிடம் கப்பம் வசூலிப்பதை போல, இந்த கல்வி அமைச்சரோ கல்வி நிறுவனங்கள் தனக்கு கப்பம் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார். இந்த லட்சணத்தில் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டில் கல்வி நிறுவனங்கள் கழிசடை நிறுவனங்களாகத் தான் இருக்க முடியும். இதில் விதிவிலக்கானவை தான் தகுதியான ஆசிரியர்களை நியமித்து, தரமான மாணவர்களை உருவாக்குகின்றன.
(சாவித்திரி கண்ணன்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/18737/higher-education-high-corruption/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு