பொது சிவில் சட்டம்: வெறுப்பு அரசியலின் புதிய கட்டம்
மோடியின் அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு அது தேவை. அதன் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அச்சத்திலும், கொந்தளிப்பிலும் வைப்பது. அதனைப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களிடம் வெறுப்பரசியலை ஊட்டி தன் கீழ் திரட்டுவது என்பதே அதன் நோக்கம். - தீக்கதிர்
மோடி தலைமையிலான பாஜக அரசு தற்போது கையிலெடுத்துள்ள புதிய ஆயுதம் பொது சிவில் சட்டம். இது ஒன்றும் புதிதானது அல்ல. ஆர்.எஸ்.எஸ். எனும் வகுப்பு வாத அமைப்பு இந்தியாவில் துவங்கிய காலத்திலேயே இது அத னுடைய பிரச்சார இலக்குகளில் ஒன்றாக இருந்தது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பது அவர்களின் முழக்கமாக இருந்தது. ஆனால் ஒரே சாதி என்பது என்றைக்கும் இல்லை. காரணம் வருணா சிரம தர்மம் எனும் சனாதனத்தைக் கட்டிக் காப்பதே அவர்களது லட்சியம், குறிக்கோள் எல்லாம். இந்து மதம் என்ற பெயரால் பிராமணிய மேன்மையை, பிராம ணிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதே அவர்களது மறைமுகத் திட்டம். அதற்கேற்ப தங்களது நிகழ்ச்சி நிரலை சாதுர்யமாக வடிவமைத்தவர்கள் சங் பரிவா ரத்தினர். ஆர்.எஸ்.எஸ்-ஆல் துவங்கப்பட்டு, இன்றைக்கும் வழி நடத்தப்படும் பாஜக அதன் நோக் கங்களை நிறைவேற்றுவதே தனது லட்சியமாகக் கொண்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட அவை களே பிரதான இடம் வகிக்கின்றன. பாஜகவினால் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிரதமர் மோடியும் அதை நோக்கியே தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதை ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வருகிறோம். அதில் தற்போது கையிலெடுத்துள்ள ஆயுதம் தான் பொது சிவில் சட்டம்.
2023 ஜூன்23-இல் பிரதமர் மோடி போபாலில் பாஜக ஊழியர்கள் மத்தியில் பேசும் போது இந்தியா விற்குத் தேவை பொது சிவில் சட்டம் என்றார். இந்தியா வேறுபட்ட சமூகங்களுக்கான வேறுபட்ட சட்டங்களுடன் செயல்பட முடியாது என்றார். அவரது பேச்சு அவரது அரசின் அடுத்த செயல்திட்டம் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது என்ற நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலை நாடும், மக்களும் எதிர் நோக்கியுள்ள நிலையில் மோடியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு பல மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக மோடி தலைமையிலான அரசினால் அமைக்கப்பட்டுள்ள 22 ஆவது சட்ட ஆணையம் 2023 ஜுன் 14இல் வெளியிட்ட அறிவிப்பில் பொது சிவில் சட்டம் குறித்த கருத்துக்களை ஜுலை 14க்குள் அனுப்புமாறு மத அமைப்புகளையும், பொது மக்களையும் கேட்டுக் கொண்டுள்ள பின்னணியில் மோடியின் இந்த பேச்சு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவேறாத வாக்குறுதிகள்
2014இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை. 2019இல் மற்றொரு வாய்ப்பு மோடி தலைமையிலான அரசுக்குக் கிடைத்தது. அதுவும் தனிப் பெரும்பான்மையுடன். 2024இல் பத்தாண்டுக ளைக் கடந்து விடும் இந்த ஆட்சிக்கு மக்களிடம் தனது சாதனைகளாகக் கூற எதுவுமில்லை. மோடியின் வாக்குறுதிகளெல்லாம் நீர்க் குமிழிகளாக மாய்ந்து விட்டன. மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவது என்பது வெற்று வாய் ஜாலம் என்பதை மக்கள் புரிந்துள்ளனர். வெற்றி பெற்ற பின்னர் அது குறித்து மோடி வாயே திறக்கவில்லை. மாறாக கறுப்புப் பணத்தைக் கண்டறிந்து மக்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதாகக் கூறிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை நய வஞ்சனை என்பதை மக்கள் அனுபவ ரீதியாக உணர்ந் தனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்த 56 இஞ்ச் மார்பு கொண்ட தன்னால்தான் முடியும் என்ற மோடியின் முன்னாலே ரூபாயின் மதிப்பு தினசரி குப்புற வீழ்ந்து கிடப்பதை மறைக்க இயலவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தாலும் அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொண்ட மோடி ரஷ்ய- உக்ரைன் போரின் காரணமாக பாதி விலையில் ரஷ்யா விடமிருந்து கிடைக்கும் எண்ணெய்யின் பலனும் மக்களுக்குக் கிடைக்காமல் தனது குஜராத் நண்பர்க ளான கார்ப்பரேட்டுகளுக்கு லாபமாகக் கொட்டிக் குவிவதை உத்தரவாதப்படுத்தியுள்ளார். சமையல் எரிவாயு விலை ஏறியும் மானியம் கூட கிடைக்காமல் அன்றாடம் குடும்பப் பெண்கள் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு , மீண்டும் விறகு அடுப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் மக்களிடம் கூற மோடிக்கு எந்த விளக்கமும் கைவசம் இல்லை.
வேலை வாய்ப்புகள் குறித்த கதைகளெல்லாம் ஏமாற்று வித்தை என்பதை இளைஞர்களும் உணர்ந்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் வளர்வ தாக பீற்றிக் கொண்டாலும் பண மதிப்பு நீக்கம், தாறுமாறான ஜிஎஸ்டி அமலாக்கம், கொரோனா கொடும் தொற்றின் போது முன் யோசனையின்றி அம லாக்கப்பட்ட முழு முடக்கம் போன்றவை இந்தியப் பொருளாதாரத்திற்கு மரண அடியாகவே விழுந்தது. இத்தகைய சூழலிலும் கூட பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் பார்த்தனர். மோடியின் குஜராத் நண்பரான அதானி, மோசடி மூலம் உலகப் பணக்கா ரர் வரிசையில் முன் பந்திக்கு வந்ததன் ரகசியம் கசிய மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது. எதிர்க்கட்சிக ளெல்லாம் வற்புறுத்தியும் அதன் மீது எவ்வித விசார ணையும் இல்லை. அதானியையும், இதர கார்ப்பரேட்டு களின் நலனையும் காக்கவே ஆட்சி என்ற நிலை யினை மோடி தினசரி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிரதிபலன் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமும், இதர வழிகளிலும் வந்தடைகிறது. ஊழலை ஒழிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளை மிரட்ட தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றைப் பயன் படுத்தி ரெய்டுகளும், வழக்குகளும் தொடரும் மோடி ஆட்சியில் பாஜகவில் இணைந்தால் ஒரே நொடியில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சூரிய ஒளி கண்ட பனித் துளி போல் மறைந்து விடுவது மக்களுக்கே ஆச்சரி யமாக உள்ளது.
தொடரும் தாக்குதல்
உண்மை இப்படியிருக்கையில், எதைச் சொல்லி வாக்குகள் கேட்பது, மக்களை அணுகுவது? சிறு பான்மை மக்களை எதிரிகளாகக் கட்டமைத்து வெறுப்ப ரசியலை வளர்ப்பது மட்டுமே அனைத்துப்பகுதி மக்களை, துயரங்களை எல்லாம் மறந்து தங்களை நோக்கி வர வைக்கும் என சங் பரிவாரத்தினர் நம்பு கின்றனர். அதற்கான செயல் திட்டங்களைத் தான் மோடி அரசாங்கம் மூலம் இத்தனை ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கின்றனர். பசுக் குண்டர்கள் மூலம் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர் மீது நடைபெறும் கொலை வெறித் தாக்குதல்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்கின்றன; சற்றும் குறையவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க அத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தற்போதைய சம்பவங்கள் காட்டுகின்றன. 8.06.2023இல் பசுக் குண்டர்கள் தாக்குதலில் 23 வயது லுக்மான் அன்சாரி கொல்லப்பட்டார். 26.06.2023இல் 32 வயது அபான் அன்சாரி கொல்லப் பட்டார். நசீர் குரைசி படுகாயப்படுத்தப்பட்டார். 28.06.2023இல் சகீருத்தீன் எனும் மாற்றுத் திறனாளி பீகாரில் கொல்லப்பட்டார். தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களில் சிறுபான்மையினர் கொல்லப்படு கின்றனர். இச்சம்பவங்களிலெல்லாம் பசுக் காவலர்கள் எனும் பெயரில் சங் பரிவார குண்டர்களே ஈடுபடுகின்றனர். ஜூன்14 இல் உத்தரப்பிரதேசம் வயர் எனும் கிராமத்தில் சாஹில் கான் எனும் 28 வயது இளைஞர் மரத்தில் கட்டி வைத்து ஜெய் ஸ்ரீராம் எனக் கூறச் சொல்லி தாக்கப்பட்டார். காஷ்மீரில் பள்ளி வாசலில் தொழுகையில் இருந்த முஸ்லீம்க ளைச் சுற்றி வளைத்த ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடச் சொன்ன செய்தி மக்க ளனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. கடந்த ஆண்டு இறுதியில் சத்தீஷ்கரில் கிறிஸ்தவர்கள் தாக்கப் பட்டதோடு, அவர்களது தேவாலயங்களும் தாக்குத லுக்கு உள்ளாயின.
பாப்ரி மசூதியைத் தொடர்ந்து வாரணாசி மசூதி மற்றும் மதுரா மசூதி குறிவைக்கப்படுகிறது. நாடு முழு வதும் மசூதிகளும், தேவாலயங்களும் சங் பரிவார குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இது குறித்தெல்லாம் மோடி வாய் திறப்பதில்லை. வெளி நாட்டில் சென்று இங்கு சிறுபான்மை மக்கள் மிகுந்த பாதுகாப்போடு இருப்பதாக பொய் பேசி உண்மைகளை மறைக்க முயற்சிக்கும் மோடியைப் பார்த்து அனைவரும் எள்ளி நகையாடுகின்றனர். ஏன் பாஜக அரசின் இரட்டை நாக்கு அரசியல் சூழ்ச்சியின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்க ணக்கான மக்கள் கலவரத்தில் பலியாகியுள்ளனர். பல்லாயிரம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிக ளாக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான தேவா லயங்கள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அமைதி பூமியாக இருந்த மணிப்பூர் எனும் கவின் மிகு மாநிலம் எரிமலையாக வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் போது இத்தனை நாட்களாகியும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. அமைதிக்காகக் கூட குரல் எழுப்ப வில்லை. மாறாக அவரது வாய் வெறுப்பரசியலுக்குத் தீனி போடும் பொது சிவில் சட்டம் குறித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொன்றாக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை அமலாக்கி வரும் மோடி அரசு அதன் ஒரு பகுதியாகவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்ததோடு, மாநிலத்தையும் இரண்டு யூனியன் பகுதிகளாகக் கூறு போட்டது. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் இல்லை. ஜனநாயகப் படி தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு இல்லை. ஜனநாயக உரிமைகள் இல்லை. காஷ்மீர் மக்களை என்றைக்கும் எதிரிக ளாக மாற்றியுள்ளது இந்த அரசு. வெறுப்பு அரசியலின் அடுத்த கட்டம் தான் குடியுரிமை திருத்தச் சட்டம். மத அடிப்படையில் குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதி வேட்டிற்கு எதிராகவும் நாடு தழுவிய போராட்டங்கள் கிளம்பின. இருந்தும் அரசு பின் வாங்கவில்லை. தற்போது அச்சட்ட அமலாக்கம் கிடப்பில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அது மந்திரவாதியின் பூதமென எழுந்து வரலாம். சிறுபான்மை முஸ்லீம் களை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்கும் நோக்கம் கொண்டது அச்சட்டம்.
அரசியல் சட்ட விரோதம்
அதன் அடுத்த கட்டம் தான் பொது சிவில் சட்டம். அனைத்து மத மக்களுக்கும் ஒரே சட்டம் எனும் மோடி, அனைத்து சாதியினருக்கும் ஒரே சட்டம், ஒரே உரிமை என்பது குறித்து வாய் திறப்பதில்லை. காரணம் வருணாசிரம தர்மம் அனைத்து சாதியின ருக்கும் ஒரே விதி என்பதை மறுதலிக்கிறது என்பதும், வருணாசிரம தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதே சங் பரிவாரம் தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவின் அரசியல் சட்டம், பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது என்பது உண்மை. அது வழிகாட்டும் நெறிமுறைகளில் குறிப்பிட்டி ருந்தாலும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 முதல் 28 வரை மத சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது. அரசியல் சட்டம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதுடன், அம்மத மக்கள் தங்களது வாழ்க்கை நெறிகள் குறித்த விசயங்களில் அவர்களே தீர்மானிக்கவும் வகை செய்கிறது. பொது சிவில் சட்டம் என்பது மதங்களைப் பின்பற்றும் மக்களின் தனிச் சட்டங்களில் தலையிடு வதால் இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதே யாகும். இந்தியா பல மதங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் கொண்ட நாடு. வேற்றுமை யில் ஒற்றுமை என்பதே தாரக மந்திரம். ஆனால் மோடி அரசோ பொது சிவில் சட்டம் எனும் அஸ்திரத்தை சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிடுகிறது. இதை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன.
மோடியின் விருப்பம்
2016 ஜூன்மாதத்தில், பாஜக ஆட்சியின் கீழ், ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித் துறை 21 ஆவது சட்ட ஆணையத்தை பொது சிவில் சட்டம் அமலாக் கத்திற்கான வழி முறைகள் குறித்து ஆய்வு செய்யப் பணித்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுஹான் தலைமையிலான 21 ஆவது சட்ட ஆணையம் 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பொது சிவில் சட்டம் தேவையா னதுமல்ல, விரும்பத் தக்கதுமல்ல என்று குறிப்பிட்டி ருந்தது. எனவே மோடி அரசால் அந்த சிபாரிசின் அடிப்ப டையில் பொது சிவில் சட்டம் நோக்கி நகர இயல வில்லை. தற்போது 22ஆவது சட்ட ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டு, இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அதனிடம் பொது சிவில் சட்டம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. இந்தப் பின்னணியில் தான் பிரதமர் மோடி சிவில் சட்டம் குறித்துப் பேசியுள்ளார். தனது நோக்கத்தையும், விருப்பத்தையும் தனது அணிகளுக்கு மட்டுமல்ல, சட்ட ஆணையத்திற்கே தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேச்சு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 22ஆவது சட்ட ஆணையம் தனது அறிவிப்பில் 21ஆவது சட்ட ஆணையம் அறிக்கை சமர்ப்பித்து 3 ஆண்டுகள் கடந்து விட்டதால் தற்போது சட்ட ஆணையம் அது குறித்து விசாரணை நடத்துவது அவசரத் தேவை எனத் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. என்ன அவசரம்? மோடியின் அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு அது தேவை. அதன் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அச்சத்தி லும், கொந்தளிப்பிலும் வைப்பது. அதனைப் பயன் படுத்தி பெரும்பான்மை மக்களிடம் வெறுப்பரசியலை ஊட்டி தன் கீழ் திரட்டுவது என்பதே அதன் நோக்கம். எனவே சட்ட ஆணையம் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒன்றுபடுவோம்
பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது என்றும், அரசியல் நோக்கத்துக்காகவே தற்போது மோடி அரசு கையில் எடுத்துள்ளது என்றும் எதிர்க் கட்சிகள் விமர்சித்துள்ளன. சி.பி.ஐ.(எம்)., சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளும் எதிர்த்துள்ளன. 370 ரத்தான போது ஆதரித்து தற்போது தங்களது அதிகாரம் தில்லியில் பறிக்கப்பட்ட போது கூக்குரலிடும் ஆம் ஆத்மி கட்சியோ, பாஜகவின் நிலைபாட்டை ஆதரிப்பது ஆச்சரியமல்ல. அதுவும் பெரும்பான்மை அரசியல் மூலம் ஆதாயம் பெற முயலும் ஒரு கட்சி என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. 3.07.2023இல் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தின் போது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் அதை எதிர்த்ததோடு , தேவையற்றது என்ற கருத்தை யே பதிவு செய்துள்ளனர். எத்தனை எதிர்ப்பு வந்தா லும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை அமலாக்குவது என்ற அடிப்படையிலும், பெரும்பான்மை மக்களை மத அடிப்படையில் வெறியூட்டி அதன் மூலம் அர சியல் ஆதாயம் அடையத் துடிக்கும் மோடி அரசு, தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை தனது பெரும் பான்மையை வைத்து நிறைவேற்றவே முயற்சிக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான கருத் துக்கள் சட்ட ஆணையத்துக்குச் செல்ல வேண்டும். மதச்சார்பற்ற மக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி மாற்றுக் கருத்துக்கள் சென்றா லும் முன்னாள் கர்நாடக நீதிபதி தலைமையிலான சட்ட ஆணையம் மோடியின் கட்டளைக்குப் பணிந்து அதற்குச் சாதகமான அறிக்கையை சமர்ப்பிக்கும் வாய்ப்பே அதிகம். அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி மோடி அரசு இதை அமலாக்க முனையும் போது சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி இந்த நாட்டின் அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச்சார்பின்மை, ஜன நாயகம், நாட்டின் பன்மைத்துவம் ஆகியவற்றில் உறுதி யுடன் உள்ள மக்கள் திரளிடம் இதற்கு எதிரான பிரச்சா ரத்தை முன்னெடுத்து, இச்சட்டத்துக்கு எதிரான மக்கள் அனைவரையும் அரசியல் மற்றும் மத வேறு பாடுகளின்றி ஓரணியில் திரட்டிப் போராடுவதன் மூலமே மோடி அரசின் இந்த வஞ்சக முயற்சியை வீழ்த்திட முடியும். அதற்கான முயற்சிகளை அனைவரும் ஒன்றிணைந்து செய்வோம்.
கட்டுரையாளர்: - எஸ்.நூர்முகம்மது ,சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்
- தீக்கதிர்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு