கிரீஸ் நிதியமைச்சர் மூடச் சொல்கிறார் பிரதமர் மோடி திறக்க முனைகிறார் - பிரபீர் புர்கயாஸ்தா
தீக்கதிர்
சந்தை முறை மின்சாரம்
“உலக மின்சார வலைப் பின்னலுக்கு சந்தை அடிப்படை வாதத்தால் என்ன கதி ஏற்படும் என்பதற்கு ஐரோப்பிய இணைய அனுபவமே உதாரணம். செயற்கை ஊக்க சந்தை முறைமைக்கு முடிவு கட்டுவதற்கு இதுவே நேரம்”
ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் மின் கட்டண உயர்வு வரலாறு காணாத அளவில் இருப்ப தற்கு ரஷ்யா மீது பழி போடப்படுகிறது. ஐரோப்பிய மின் கட்டண உயர்வு முழி பிதுங்க செய்துள்ளது. ஓராண்டில் 4 மடங்கு, இரண்டு ஆண்டுகளில் 10 மடங்கு என்றால் எப்படி மக்கள் தாங்குவார்கள்?
இதுவா உண்மை?
இதற்கு ஐரோப்பிய இணையம் சொல்கிற காரணம், சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயு (Natural Gas) விலைகள் அதிகரித்து விட்டன; ரஷ்யா போதுமான அளவிற்கு சந்தைக்கு இயற்கை எரிவாயு வை (Natural Gas) கொண்டு வரவில்லை என்பதே. ஆனால் இதுவா உண்மையான காரணம்? ஜெர்மனியில் 4 மடங்கு மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் அந்த நாட்டில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே மின்சார உற்பத்தியில் இயற்கை எரி வாயுவின் பங்கு உள்ளது. பிரிட்டன், தான் நுகர்கிற இயற்கை எரி வாயுவில் பாதியை அதுவே உற்பத்தி செய்யும் நிலையிலும் மின் கட்டணம் ஏன் செங்குத்தாக உயர வேண்டும்? ரஷ்யா மீது பழி போடுவது உண்மையை மறைப்பது ஆகும். தனியார் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வானத்தைப் பொத்துக் கொண்டு லாபம் கொட்டுவதே காரணம். ஏற்கெனவே பேரிடர் இன்னல்களால் ஒரு மூலைக்கு தள்ளப்பட்டுள்ள ஏழை நுகர்வோர் செய்வது அறியாமல் திகைத்துப் போய் இருக்கிறார்கள். வீட்டு பட்ஜெட்டில் 20 முதல் 30 சதவீதம் வரை மின்சார கட்டணத்திற்கே செல்கிற நிலைமை உள்ளது.
மாயத் திரை வில்லன்
மாயத் திரைகளை விலக்கி தேடிப் பார்த்தால் ஒளிந்து கொண்டிருக்கிற வில்லனை பார்க்கலாம். அது வேறு யாருமில்லை. “மின்சாரச் சந்தை சீர்திருத்தங் கள்” தான். கடந்த 30 ஆண்டுகளாக நவீன தாராள மயம் மின்சாரத் தொழிலில் கொண்டு வந்துள்ள மாற்றங்களே. சந்தை தீர்மானிக்கும் என்ற வகையில் மணி நேர ஏலங்கள், நாள் ஏலங்கள்தான் விலைகளை நிர்ண யிக்கின்றன. இது சிலியில் பினோச்செட் கொண்டு வந்த “சீர்திருத்தம்”. பினோச்செட் கொண்டு வந்த திருத்தங்களின் குரு மில்டன் பிரைட்மென். அது சிலியின் அரசியல் சாசனத்திலேயே இடம் பெற்றது. சிலி மாடலை பின்னர் பிரிட்டன் மார்கரெட் தாட்சர் காப்பி அடித்தார். மத்திய மின்சார உற்பத்தி ஆணை யத்தையே அவர் கலைத்தார். அமெரிக்க கலி போர்னியா சீர் திருத்தங்களும் இதே வகைதான். இதுவெல்லாம் இந்தியாவிற்கு பொருந்தாது; நாம்தான் உள்நாட்டு நிலக்கரி, ஆற்று நீரை சார்ந்து தானே மின் உற்பத்தி செய்கிறோம் என்று நினைக்க லாம். ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத் திருத்தம் இதே “சந்தை விலை முறைமை” யையே இந்தியாவிலும் கொண்டு வரப் பார்க்கிறது. சிலியை பிரிட்டன் காப்பி அடித்தது எனில் பிரிட்டனை இந்தியா காப்பி அடிக்க முனைகிறது.
இந்தியாவுக்கு பாடம்
2003 மின்சாரச் சட்டம், தனியாருக்கு மின்சார உற் பத்தியை திறந்து விட்டது. அந்த தனியார் நிறுவனங்கள் எல்லாம் அரசு வங்கிகளிடம் இருந்து பெருமளவு கடனை வாங்கி முதலீடு செய்தன. ஆனால் மின் அளிப்பு, கிராக்கியை விஞ்சியதால் நட்டம் ஏற்பட்டது. இதனால் கடன் வசூல் ஆகவில்லை. வங்கிகள் வராக் கடன்கள் என்று அறிவிக்க வேண்டி வந்தது. சிக்க லில் மாட்டின. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு பக்கம் அரசு வங்கிகளுக்கு பெப்பே காட்டின என்றால் இன்னொரு பக்கம் அரசு மின் பகிர்மான நிறுவனங்கள் தலையில் அதிகவிலை மின்சாரத்தை கட்டி அவர்க ளுக்கும் பெப்பே என்றது. இதனால் அரசு நிறுவனங்க ளின் நிதி நிலை பாதிக்கப்பட்டது. என்றாலும் அதிக விலைக்கு வாங்கி இல்லங்களுக்கு, விவசாயிகளுக்கு தர வேண்டி வந்தது. விலையில் ஓரளவு நிலைத்த தன்மையை கொண்டு வர நீண்ட கால ஒப்பந்தங்கள் போட்டார்கள்.
புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் - தற்போது நாடாளு மன்ற நிலைக்குழு பரிசீலனையில் இருப்பது - இது வரை எந்த நாடும் செய்யாத ஒன்றை செய்யத் துணிந்துள்ளது. மின்சாரத்தை சுமந்து செல்லும் வயர்களில் இருந்து உடமையை “விவாகரத்து” செய்து வியாபாரிகள் கைகளில் தரப் போகிறது. அரசு கட்டமைப்பை நிர்வகிக்கும். மின்சாரம் வியாபாரிகள் கைகளில் இருக்கும். அரசுக்கு பொறுப்பு இருந்தாலும் விலையைக் கட்டுப்படுத்துகிற திறன் இருக்காது. எல்லாம் சந்தையின் கைகளில்... ஐரோப்பாவில் எப்படி விலைகள் நிர்ணயிக்கப் பட்டன? குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் தருவதற்கு என்ன ரேட் என்பதை தனியார் உற்பத்தியாளர்கள் அறிவிப்பார்கள். அதற்கு எவ்வளவு உச்ச பட்ச விலைக்கு ஏலத்தில் கேட்கப்படு கிறதோ அதுவே அந்த நேர மின் அளிப்பிற்கான விலை யாக மாறும். எந்த வகை மின்சாரம் ஆக இருந்தா லும் - காற்று, சூரிய ஒளி ஆகிய குறைந்த செலவினம் கொண்டவை எனினும் - ஒரே விலைக்குள் விழுந்து விடும்.
சூதாட்டம்
முன்னாள் கிரீஸ் நிதி அமைச்சர் யானிஸ் வரோபாகீஸ் வார்த்தைகளில் சொல்வதென்றால், “உலக மின்சார வலைப் பின்னலுக்கு சந்தை அடிப்படை வாதத்தால் என்ன கதி ஏற்படும் என்பதற்கு ஐரோப்பிய இணைய அனுபவமே உதாரணம். செயற்கை ஊக்க சந்தை முறைமைக்கு முடிவு கட்டுவ தற்கு இதுவே நேரம்” அவர் மூடச் சொல்லும் நேரத்தில், மோடி திறக்க முனைகிறார். கடந்த ஆண்டு உச்சவரம்பு விலை ஒரு யூனிட் ரூ.12 ஆக இருந்த போதும் மின்சார “ஸ்பாட் மார்க்கெட்” டில் ரூ.20 வரை போனது என்பதில் பாடம் கற்க வேண்டாமா? மின்சாரச் சீர் திருத்தம் என்ற திரை மறைவில் “சந்தைக் கடவுளுக்கு” பலி கொடுக்க முனைவது ஏன்? இது சூதாட்டத்திற்கு மக்கள் வாழ்க்கையை பலியாக்குவது இல்லையா? ஒன்றிய அரசு கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள் நுகர்வோருக்கும் நல்லதல்ல. மாநிலங்களுக்கும் நல்லதல்ல.
When Market Fundamentalism Overcomes Common sense:
The Myth of Electricity Markets”
பீப்பிள்ஸ் டெமாக்ரசி செப். 5 - 11, 2022 இதழ் கட்டுரை சுருக்கம்
தமிழில்: க.சுவாமிநாதன்
- தீக்கதிர்
கட்டுரையாளரின் பக்கத்திற்குச் செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு