உலக பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அமெரிக்கா!
அறம் இணைய இதழ்

அமெரிக்காவைச் சார்ந்து தான் உலகப் பொருளாதாரம் உள்ளது. அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும் உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்ற வகையில் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள இறக்குமதி பொருட்களுக்கான அதிரடி வரி விதிப்புகள் இந்தியா உள்ளிட்ட உலக பொருளாதாரத்தையே உலுக்கி எடுக்க உள்ளது;
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாக அறிவித்துள்ளதானது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ‘விடுதலை தினம்’ என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்கள் மீதும் 10 சதவீத வரியும், 60 நாடுகள் மீது கூடுதல் வரியும் அறிவித்துள்ளது.
இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம்
சீனா 34 சதவீத வரி விதிப்பையும்.
இந்தியா 27 சதவீதம் வரி விதிப்பையும்
தென் கொரியா 25 சதவீதம் வரி விதிப்பையும்
ஜப்பான் 24 சதவீதம் வரி விதிப்பையும்
ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும்
சின்னஞ்சிறு நாடுகளான கம்போடியா, வியட்நாம், இலங்கை போன்றவை முறையே 49% , 46%, 44% வரி விதிப்பை எதிர் கொள்கின்றன.
இது மட்டுமின்றி, விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் டிரம்ப்.
இந்த வரி விதிப்பை எதிர்கொள்ளும் நாடுகள் இதே போல தாங்களும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளன. அமெரிக்காவின் இந்த அதிரடி அதிக வரிவிதிப்பு உலக அளவில் இறக்குமதி பொருட்களை பயன்படுத்துகிற அனைத்து நாட்டு மக்களையும் வெகுவாக பாதிக்கும் என்பது மட்டுமல்ல, இறுதியில் இந்த விலையேற்றம் அமெரிக்க மக்களையும் கடுமையாக பாதிக்கும்.
இந்த ரெசிப்ரோக்கல் (Reciprocal tariff) வரி கொள்கைகள் சர்வதேச வர்த்தக போரைத் தீவிரப்படுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருக்கப் போகிறது. எனவே, அமெரிக்கா விரைவில் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து ரெசிஷனை எதிர்கொள்ளும் என்று உறுதியாகத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் பிரபல தொழில் அதிபர் ஜிம் ரோஜர்ஸ் கூறியுள்ளது கவனத்திற்கு உரியதாகும்.
டொனால்டு டிரம்பின் இந்த அறிவிப்பு இந்தியாவிலும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் 27 சதவிகித வரி விதிப்பைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் நேற்றைய தினம் (ஏப்ரல்-4) ஈடுபட்டன. மத்திய அரசு தனது முதுகெலும்பை நிமிர்த்தி தேசத்தின் நலனை காக்க வேண்டிய நேரம் இது.. என்று இந்திய எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தின் மகர் துவார் படிக்கட்டுகளில் நின்றவாறு சுமார் 50 எம்பிக்கள் இந்த அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மோடி அரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.
இந்த வரி விதிப்பை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நிதி ஆதியோக் மற்றும் வர்த்தகத் துறை,வெளியுறவுத் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் இந்தியாவில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ… போன்ற ஐ.டி நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளதால் பங்கு சந்தையில் சில நிறுவனங்கள் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஆட்டோ மொபைல் இண்டஸ்டிரியும் இதில் கடுமையாக பாதிக்கும். இதனால் அங்கு உற்பத்தி குறையும், வேலை வாய்ப்புகளும் குறையும்.
ஜவுளித் துறையில் நம்மைவிட பல நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு இருப்பதாலும், உயிர் காக்கும் மருந்துகளுக்கு அதிக வரியைத் தவிர்த்திருப்பதாலும் இந்த இரு துறைகளை பொறுத்த வரை இந்தியா அதிகம் பாதிக்கப்படாது எனச் சொல்லப்படுகிறது.
உலகில் எல்லா நாடுகளுமே இன்றைய தினம் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இந்த வகையில் ஒரு நாட்டில் கிடைக்காத ஒன்றைத் தான் அவை மற்ற நாடுகளில் இருந்து தருவிக்கின்றன. சில பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்கள் அமெரிக்காவில் இல்லாத போது மூலப் பொருட்களை தருவித்து உற்பத்தி செய்வதை விடவும் , உற்பத்தி செய்ததை வாங்குவது விலை மலிவாக உள்ளதால் தான் வாங்குகின்றனர். ஏனென்றால், அமெரிக்காவில் உழைப்பவர்களுக்கான கூலி அதிகம், ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாகும். ஆகவே, இறக்குமதியால் அமெரிக்கா நன்மையே அடைகிறது. அதே போல சுற்றுப் புறச் சுழல்களை பாழாக்கும் தோல் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆகவே தங்கள் நலனை காவு கொடுத்து ஏழை நாடுகள் அதை உற்பத்தி செய்து தருவதில் அமெரிக்கா பலன் அடைகிறது.
ஆனால், இதை எதிர்மறையாக புரிந்து கொண்ட டிரம்ப், அமெரிக்கா வஞ்சிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உற்பத்தியாவதை வரவேற்கும் விதமாகவே இந்த அதிக வரி விதிப்பு எனத் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் கடும் விலைவாசி உயர்வை தோற்றுவிக்க உள்ளதால் அமெரிக்க மக்களே டிரம்பிற்கு எதிராக திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.
மற்றவர்களையும் வாழ வைத்து தானும் வாழ விரும்பும் கொள்கையில் இருந்து முற்றிலும் விலகி, தான் வாழ்வதற்கு பிறரை துன்புறுத்துவது தான் சிறந்த வழி என்ற புரிதலைக் கொண்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்! மற்றவர்களை துன்புறுத்தி – உலக நாடுகளை பகைத்து – தான் நன்றாக வாழ முடியாது என்பதை டிரம்ப் உணர்வதற்கு பல கசப்பான அனுபவங்களை பெற வேண்டி இருக்கும். இதில் வேதனை என்னவென்றால், அந்த கசப்பான அனுபவங்களை உலக நாடுகளும் சேர்ந்தே பெற உள்ளது தான்!
(அஜிதகேச கம்பளன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/21233/america-reciprocal-tariffs-trump/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு