எட்டி உதைக்கும் தி.மு.க.வும் கட்டியணைக்கும் இ.பொ.க.(மா), இ.பொ.க. கட்சிகளும்!
செந்தழல் வலைதளம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு ஜனவரி 3 முதல் 5ந் தேதி வரை விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், ‘ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுகூட்டம் ஆகியவற்றிற்கு கூட தமிழக காவல்துறை அனுமதி மறுக்கின்றது. போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன, காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி விட்டீர்களா?’ என்று திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். எனினும் அதே கூட்டத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தும் போராட்டத்தில் திமுகவோடு இருப்போம் என்றும் அறிவித்தார்.
இந்திய முதலாளி வர்க்கம் நீண்ட காலமாக நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. மக்களின் வரிப் பணத்தை சலுகைகளாக ஏப்பம் விடுவது, வங்கிகளில் பெற்ற கடன்களைக் கட்டாமல் விலக்கு பெறுவது, வரிச்சலுகைகள் எனப் பல்வேறு சீர்த்திருத்தங்களின் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முயற்சி செய்து வருகின்றது. மேலும் உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தி நெருக்கடியைத் தள்ளி வைக்கவும், இலாபத்தைப் பெருக்கவும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அமைத்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசு பழைய தொழிலாளர் சட்டங்களில் உள்ள சிறிதளவேயான உரிமைகளைக் கூட இல்லாமல் செய்து புதிய தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதனை அமல்படுத்துவதில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான மாநில அரசுகள் மட்டுமல்லாது, காங்கிரசு கட்சி தலைமையிலான அரசுகளும், தமிழகத்தில் திமுக அரசும் தயார் நிலையில் உள்ளன. இந்தச் சட்டங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமையை தொழிலாளர்கள் மீது திணிப்பதில் பாஜகவோடு கை கோர்த்துள்ள காங்கிரசும், திமுகவும் பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு மாற்றாக அமைய முடியாது என்பதை இந்த இரண்டு இடதுசாரி கட்சிகளின் தலைமை உணர்ந்திருந்தும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அடகு வைக்கின்றன.
அதன் காரணமாக அந்தக் கட்சிகளின் தலைமையின் கீழ் உள்ள தொழிற்சங்கங்களில் இருக்கும் தொழிலாளர்கள் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், தமது தலைமையின் கீழ் உள்ள தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தி.மு.க.வின் தலைமையில் உள்ள அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாலகிருஷ்ணன் ஆளாகியுள்ளார். ஆனால் அதே மூச்சில் பாஜக வையும் ஆர்எஸ்எஸ்-ஐயும் வீழ்த்தும் போராட்டத்தில் திமுகவோடு இருப்போம் என்கிறார். அதன் மூலம் தி.மு.க.வின் மீதான தனது விமர்சனம் ஒரு பாவனைதான் என்பது அம்பலப்பட்டுப் போகிறது.
ஆனால், கே.பாலகிருஷ்ணன் அவர்களின் ஒப்புக்கான விமர்சனத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக கட்சி, தனது துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மூலம் பதிலடி கொடுத்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்வில் பதிலளித்த ஆ.ராசா நேரடியாக இதற்குப் பதிலளிக்காமல் ஒட்டு மொத்தமாக கம்யூனிசத்தின் மீதும், கம்யூனிசத் தலைவர்கள் மீதும் வன்மத்தை வெளிபடுத்தியுள்ளார். ‘கம்யூனிசத் தத்துவம் செம்மையானது, ஆனால் அதன் தலைவர்கள் சுயநலமிகளாக மாறும் போது, அவர்கள் நீர்த்துப் போகும் போது கொள்கை தோற்றுவிடுகிறது’ எனத் திருவாய் மலர்ந்துள்ளார். அதே மூச்சில் அவர் தொடர்ந்து, ’திராவிட மாடல் தத்துவம் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் போன்ற சிறந்த தலைவர்களைப் பெற்றதால் இன்று வெற்றி பெற்றுள்ளது’ என்றும்,’ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தான் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனதற்கும், அமைச்சராக இருந்ததற்கும், தனது அடுத்த தலைமுறையின் உயர்வுக்கும் காரணமாக இருப்பது திராவிட மாடல் தத்துவம்தான் என்றும், அது அந்தத் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி என்றும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
திராவிடக் கருத்தியல் வெற்றி பெற்று விட்டதா?
திராவிட தத்துவத்தின் தந்தை பெரியார். அண்ணாவும், கலைஞரும் அதனை செயல்படுத்தினார்கள், அவர்கள் சுயநலமில்லாத தலைவர்களாக இருந்ததால் அது இன்று வெற்றி நடை போட்டு வருகின்றது என்கிறார் ஆ ராசா.
பெரியாரின் கொள்கைகள் (கடவுள் மறுப்பு, பாலின சமத்துவம், சாதியற்ற சமூகம்) நிறைவேற்றப்பட்டு விட்டன. இனிமேல் பெரியார் தேவையில்லை. கலைஞரின் வாரிசுகள் அதைக் காப்பாற்றினாலே போதும் என்கிறார் ஆ.ராசா. அவருடைய கண்களுக்குப் புலப்படும் சாதனைகள், சாதாரண அடித்தட்டு மக்களின் கண்களுக்குப் புலப்படவேயில்லை.
பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கைவிட்டு ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை அண்ணா அறிவித்தார். அண்ணாவின் அந்தக் கொள்கையைத்தான் தி.மு.க. தலைமையும் அதன் மாவட்ட, வட்டாரத் தலைவர்களும் தொண்டர்களும் பின்பற்றி வருகின்றனரா? ‘சனாதனத்தை ஒழிப்போம்’, ‘பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்’ என்று முழங்கி வரும் தி.மு.க.வில் உள்ள எத்தனை பேர் தமது திருமண நிகழ்வுகளிலும் பிற குடும்ப நிகழ்வுகளிலும் பார்ப்பனர்கள் ஓதும் வேத மந்திரத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்? சாதியற்ற சமூகத்தைப் படைப்பதில் திராவிடக் கொள்கை வெற்றி பெற்றுவிட்டதா? குறைந்தபட்சம் அவருடைய கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலாவது சாதி ஒழிக்கப்பட்டு விட்டதா? தி.மு.க. வின் மாநில, மாவட்ட, வட்டாரத் தலைவர்கள் மத்தியிலாவது சாதிய உணர்வு முற்றிலும் அழிந்துவிட்டதா? அவர்கள் எல்லோரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களா? இவற்றிற்கு எல்லாம் ஆ.ராசாவின் பதில்கள் என்ன?
திராவிடத்தின் கொள்கையான சமூக நீதி வெற்றி பெற்றுவிட்டது என்கிறார் ஆ.ராசா. இவர்களுடைய சமூக நீதிக் கொள்கை பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள பணம் படைத்தோரும் முதலாளிகளும் பணக்கார விவசாயிகளும் தங்களுடைய வாய்ப்பு வசதிகளைப் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவே பயன்பட்டு வருகிறது. அந்தச் சாதிகளிலுள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும், விதிவிலக்காக சிலரைத் தவிர, சமூக நீதியால் எந்தப் பயனும் பெறவில்லை. அது போலவே தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையாக உள்ள விவசாயத் தொழிலாளர்களும், தொழிலாளர்களும் எந்தப் பயனும் பெற வில்லை. சமூக நீதியால்தான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்கிறார் ஆ.ராசா. இவரைப் போல் எத்தனை விழுக்காடு மக்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மேல்நிலைக்கு வந்துள்ளார்கள் என்பதை அவரால் கூற முடியுமா? இவருடைய வளர்ச்சியை இவருடைய சாதியைச் சேர்ந்த அனைவரின் வளர்ச்சி எனக் கூறி பட்டியலின மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.
தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்!
‘மிட்டா மிராசுகளின் முதலாளிகளின் கட்சி காங்கிரசு கட்சி’, ‘’காங்கிரசின் சோசலிசம் காகிதப் பூ., காகிதப் பூ மணக்காது,’ ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’’ என்றெல்லாம் பட்டி தொட்டிகளில் எல்லாம் மேடை தோறும் முழங்கி 1967 சட்டசபைத் தேர்தலில் குட்டி முதலாளிகள், நடுத்தர வர்க்கங்கள், பணக்கார விவசாயிகள், நடுத்தர, சிறு விவசாயிகள், வறிய, விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றது தி.மு.க., மாணவர்களின் தியாகம் மிகுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட கடுமையான விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், கூலி உயர்வுக்காகவும் போராடிய தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் ஆகியவற்றையும், காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கடும் வெறுப்பையும் பயன்படுத்திக் கொண்டு, எதிர்க்கட்சிகளை ஓரணி சேர்த்து கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க முதலாளிய வர்க்கத்தின் விசுவாசமான ஏஜண்டாக மாறியது; தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் இருந்த தொழிற்சங்கங்களை, அவற்றின் தலைவர்களைத் தாக்கியது. சிம்சன் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கத் தலைவராக இருந்த தோழர்.வி.பி. சிந்தன் மீது ரவுடிகளை வைத்து கொலை வெறித் தாக்குதலை நடத்தியது; அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கி உதயகுமார் என்ற மாணவனின் உயிரைப் பறித்தது: திருச்சி கிளைவ் மாணவர்கள் விடுதியில் இருந்த மாணவர்கள் மீது போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. பெருமாநல்லூரில் மின்கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விவசாயிகளின் உயிரைக் குடித்தது. இவை எல்லாம் தி.மு.க. ஆட்சியின் போது நடந்த மக்கள் போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு சில எடுத்துக் காட்டுகள்தான். இவை போன்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. ‘இரும்புக் கரம் கொண்டு போராட்டங்களை ஒடுக்குவோம்’ என்றார் கலைஞர்.
தி.மு.க.வின் வரலாறு என்பதே பதவிக்காக கொள்கைகளைக் கை விடுவதும் சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்வதும் தான். பெரியாரின் திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.தோன்றியபோது பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கைவிடப்பது. ஏனென்றால் தேர்தலில் கடவுள் நம்பிக்கையுள்ள மக்களின் வாக்குகளைப் பெற அது தடையாக இருந்தது. அதனால் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்பதே தி.மு.க.வின் கொள்கை என அண்ணா அறிவித்தார்.
‘அடைந்தால் திராவிடநாடு, இல்லாவிடில் சுடுகாடு’ எனக் கொள்கை முழக்கமிட்டு வந்த தி.மு.க., நேருவின் அரசாங்கம் பிரிவினைவாதத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வந்தவுடன் திராவிடநாடு என்ற கொள்கைக்கு முழுக்குப் போட்டது. எப்படியாவது ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் அக்கட்சியின் நோக்கம். அதற்குத் தடையாக உள்ள கொள்கைகளைக் கை கழுவி விட வேண்டும் என்பதுதான் அதனுடைய கோட்பாடு.
தி.மு.க.வின் ஆட்சியின்போது 1990 ஜுன். 9, 10 தேதிகளில் ‘தமிழர் தேசிய இயக்கம்’ என்னும் அமைப்பு ‘தமிழர் தேசியத் தன்னுரிமை மாநாட்டைத்’ தஞ்சையில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. அதே சமயத்தில் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்துத்துவ அமைப்புகள் ‘தமிழர் தேசியத் தன்னுரிமை மாநாட்டைத்’ தடை செய்யக் கூச்சலிட்டன. ‘இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து’, ‘ஆயுதக் கலாச்சாரம் வளர்கிறது‘ என ஓலமிட்டன. இந்த அமைப்புகளுக்கு வி.பி.சிங்கின் அரசில் இருந்த செல்வாக்கைக் கண்டு. அஞ்சிய கலைஞர், பதின்மூன்றாண்டுகளுக்குப் பின் வாராது வந்த மாமணியே போல் கிடைத்த பதவி நாற்காலி எங்கே தன் கையை விட்டு நழுவி விடுமோ எனப் பயந்து மாநாட்டைத் தடை செய்தார். மாநாட்டை நடத்த இருந்த அய்யா பழ நெடுமாறன், பெருஞ்சித்திரனார், சுப.வீரபாண்டியன், போன்ற தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது தி.மு.க. அரசு., தனது மாநில சுயாட்சிக் கோரிக்கை போலியானது என அம்பலப்படுத்திக் கொண்டது.
தமிழீழப் போரின் போது புலிகளை வீழ்த்த ராஜபட்சேவின் சிங்களப் பேரினவாத அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தது அன்று காங்கிரசு தலைமையில் இருந்த மன்மோகன் சிங்கின் ஒன்றிய அரசு. அந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அதைத் தடுக்க வில்லை; பெயரளவுக்கு மட்டுமே தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்தது. தமிழீழப் போர் உச்ச கட்டத்திலிருந்தபோது இனியும் தொடர்ந்து பதவியில் இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் தம்மை மன்னிக்க மாட்டார்கள் என அஞ்சி, இறுதி வரை பதவிச் சுகத்தை அனுபவித்து விட்டு. 2009 மார்ச்சில் ஒன்றிய அமைச்சரவையிலிருந்து விலகியது. தி.மு.க.வின் தமிழினப் பற்று அம்பலமாகியது; முதலாளி வர்க்கத்தின் மீதான விசுவாசமும் அதிகாரச் சுகமும் இனப் பற்றை வெற்றி கொண்டு விட்டன.
பெரியாருடைய திராவிடக் கருத்தியலின் சாராம்சங்களாக பார்ப்பனிய பண்பாட்டு ஆதிக்க எதிர்ப்பு, கடவுள்மறுப்பு, பெண் அடிமைத்தனத்தை ஒழித்து ஆண்- பெண் சமத்துவத்தை உருவாக்குதல், சாதியற்ற சமூகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தி.மு.க.வினரே இந்தக் கருத்தியலை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தவில்லை என்பதைத்தான் அதன் வரலாறு காட்டுகிறது. இந்த நிலையில்தான் திராவிடம் வெற்றி பெற்றுவிட்டது எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ஆ.ராசா. உண்மையில் இன்று திராவிடக் கருத்தியல் என்பது தமிழினப் பற்று என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதும், ஆட்சியில் அமர்ந்ததும் முதலாளி வர்க்கம் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அதற்கு விசுவாசமாக சேவை செய்வதும், அதன் மூலம் தன் பணப் பெட்டிகளை நிரப்பிக் கொள்வதும், தானும் முதலாளி வர்க்கத்தின் அங்கமாக மாறுவதும்தான். இது தான் இன்றைய திராவிடக் கருத்தியல்.
இந்தக் கருத்தியலின் வழிகாட்டுதலின் கீழ்தான் சாதாராண ஏழை குடும்பத்தில் இருந்து வந்த கலைஞரின் குடும்பம் இன்று பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களை உடைமையாகக் கொண்ட குடும்பமாக மாறியிருக்கிறது. ஆ.ராசா போன்ற குட்டித் தலைவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களின் அதிபதியாக மாறியிருக்கின்றனர். மாநிலத் தலைமை மட்டத்திலிருந்து கிளை மட்டம் வரை முதலாளிகள் உருவாகி இருக்கின்றனர். தி.மு.க. இன்று ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்துள்ளது. மன்னருக்கும் இளவரசருக்கும், குட்டி இளவரசருக்கும் சாமரம் வீசி புகழ்பாடி கொள்ளையடித்து வருகின்றனர் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும். கொள்ளையடித்ததில் ஒரு பகுதியைக் கப்பம் கட்டி தம்முடைய சிற்றரசு பதவியைக் காப்பாற்றி வருகின்றனர். இது தான் திராவிட மாடலின் வெற்றி.
திராவிட மாடல் என்பது முதலாளி வர்க்கத்தின் மாடல்
திராவிட மாடல் என்பது முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கான மாடல்தான். உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்கி அவர்களுடைய மூலதனத்தை வளர்ப்பதற்கான மாடல். சர்வதேச ஏக போக ஏகாதிபத்திய முதலாளிகளின் முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது தி.மு.க. அரசு. அவர்களுக்கு தொழிற்சாலைகள் கட்டவும் இயக்கவும் சலுகை விலையில் நிலமும் மின்சாரமும் வழங்குகிறது; வரிச் சலுகைகளை வழங்குகிறது; அதே சமயத்தில் தொழிலாளர்களை மலிவான கூலிக்கு அவர்கள் சுரண்டப் பாதுகாப்பு கொடுக்கிறது; தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையையும் போராடும் உரிமையும் தடுக்கிறது. முதலாளிகளின் சுரண்டலை அதிகரிக்க தொழிலாளர்களின் வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரமாக அதிகரிக்கவும் இந்த அரசு தயாராக உள்ளது.
ஒரு பக்கம், இந்த நாட்டில் நிலவும் அவலங்களுக்கு எல்லாம் காரணம் முஸ்லீம்கள் தான் எனக் கூறி, வெறுப்புப் பிரச்சாரத்தின் மூலம் பயத்தை உருவாக்கி பாசிசத்தைக் கட்டமைத்து வருகின்றது ஒன்றிய அரசில் ஆட்சியில் உள்ள பாஜக. அது தன்னுடைய பரிவாரங்களைக் கொண்டு பழம் பெருமைகளைப் பேசியும், புராணப் புளுகுகளை வரலாறு எனத் திரித்தும் மக்களை ஏமாற்றி வருகிறது; மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி ஒருவரோடு ஒருவரை மோத விட்டு அரசியல் இலாபம் அடைந்து வருகிறது; மக்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் விலைவாசி ஏற்றத்திற்கும், ஏழ்மைக்கும் வறுமைக்கும் முதலாளிகளின் சுரண்டலும், அதைக் கட்டிக் காப்பாற்றி வரும் அரசின் கொள்கைகளும்தான் காரணம் என்பதை மறைக்க மக்களின் கோபத்தை மடைமாற்றி விடும் வேலையைச் செய்து வருகிறது.
இன்னொரு பக்கம், தமிழ் நாட்டில் தி.மு.க. சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் எனப் பேசி ஆரியப் பார்ப்பனியப் பண்பாடுதான் நமது முதல் எதிரி எனக் கூறி முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை மறைத்து வருகிறது; மக்களின் கோபத்தையும் போராட்டத்தையும் மடை மாற்றம் செய்து வருகிறது.
இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற முடியாமல் போனதற்கு தன்னுடைய திராவிடக் கருத்தியலும் திராவிட மாடலும்தான் காரணம் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் உண்மையில் தி.மு.க.வின் திராவிடக் கருத்தியலையோ திராவிட மாடலையோ விரும்பி மக்கள் அதைத் தேர்ந்தெடுக்க வில்லை. பத்தாண்டு கால அ.தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் எந்தப் பயனையும் பெறவில்லை. வேலை இன்மையும் விலைவாசி ஏற்றமும்தான் அவர்கள் கண்ட பயன். அ.தி.மு.க. அரசில் நிலவிய இலஞ்சமும் ஊழலும் மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி இருந்தன. அந்த வெறுப்பின் பயனால்தான் தி.மு.க. வெற்றி பெற்றது.
முதலாளிய ஜனநாயகத்தில் தேர்தல் விளையாட்டு விதிகள்!
முதலாளிய ஜனநாயகத்தில் மக்கள் எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுத்தாலும் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும் ஆளும் கட்சியினர் இலஞ்ச லாவண்யங்கள் மூலம் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடைபெறும் செயல்தான். ஆளும் கட்சியின் மீது வெறுப்புக் கொண்ட மக்கள் கடந்த தேர்தலில் தோற்கடித்த கட்சியையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இந்தத் தேர்தல் விளையாட்டில் முதலாளி வர்க்கத்தின் ஆசியையும் பணபலத்தையும் பின்னணியாகக் கொண்ட கட்சிகளே வெற்றி பெறுகின்றன. முதலாளிய ஜனநாயகத்தில் இந்த விசச் சுழலிலிருந்து மக்களால் விடுபட முடியாது.
இந்தத் தேர்தல் விளையாட்டில்தான் தி.மு.க. வெற்றி பெற்றது; கூடவே பாசிச பா.ஜ.க.வை வீழ்த்துவோம் என்ற முழக்கத்தின் கீழ் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளையும், பிற எதிர்க் கட்சிகளையும், பல குட்டி முதலாளிய தமிழ்த் தேசிய அமைப்புகளையும், புரட்சி பற்றிப் பேசி வந்த குட்டி முதலாளிய அறிவுஜீவிகளையும் அ.தி.மு.கவிற்கு எதிராகத் தன் பக்கம் அணி சேர வைத்தது; தி.மு.க.வின் வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர ஆ.ராசா தம்பட்டம் அடித்துக் கொள்வது போல திராவிடக் கருத்தியல் அல்ல.
தி.மு.க. வின் கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு முதலாளி வர்க்கத்தின் அடிவருடி ஆ.ராசா திராவிடக் கருத்தியல் வெற்றி பெற்று விட்டது என்றும், கம்யூனிசத் தத்துவம் தோற்று விட்டது என்றும் கூறுகிறார்.
ஆ.ராசாவின் இந்த இறுமாப்பு நிறைந்த பேச்சுக்கு காரணமாக இருப்பது இங்குள்ள சிபிஎம், சி.பி.ஐ. கட்சிகளின் அரசியல் கோட்பாடும் நடைமுறையும் தான். அந்தக் கட்சிகள் மார்க்சிய - லெனினியத் தத்துவத்தை தம்முடைய வழிகாட்டும் தத்துவமாகக் கொள்ளாமல், அவற்றைத் திருத்திச் சீர்திருத்தவாதக் கட்சிகளாக மாறியது தான். சுதந்திரத்திற்குப் பிறகு 1952ல் நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு அடுத்த படியாக அதிகமான இடங்களை அன்று உடையாமல் இருந்த சிபிஐ பெற்றிருந்தது. அந்த அளவுக்கு கட்சி செல்வாக்கு பெற்றிருந்ததற்குக் காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அது தலைமை தாங்கி நடத்திய மக்கள் போராட்டங்கள் தான். ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானத்தில் நிலப்பிரபுக்களை எதிர்த்து நடந்த தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னபுரா- வயலார் போராட்டம், வங்காளத்தில் நடந்த தேபகா விவசாயிகள் போராட்டம், 1946 ல் நடந்த கப்பற் படை எழுச்சி என எண்ணற்ற போராட்டங்களை நடத்தி கட்சி மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. இத்தகைய பலம் வாய்ந்திருந்த கட்சி இன்று ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளுக்காகவும் பாராளுமன்றத் தொகுதிகளுக்காகவும் தி.மு.க.போன்ற முதலாளியக் கட்சிகளின் தயவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
இதற்குக் காரணம் தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்தி புரட்சிகரமான வழியில் சமூகத்தை மாற்றியமைக்கும் கம்யூனிசக் கோட்பாட்டை கட்சி கைவிட்டது தான். முதலாளியக் கட்சிகளைப் போல தேர்தலில் நின்று மக்கள் ஆதரவைப் பெற்று, ஆட்சியில் அமர்ந்து சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் எனக் கட்சி தப்புக் கணக்குப் போட்டது. ஆனால் முதலாளிய ஜனநாயகத்தில் நடக்கும் தேர்தல் விளையாட்டு அதற்கே உரிய விதிகளைக் கொண்டுள்ளது. பண பலம், சாதி, மத, இனப் பிளவுகளை உருவாக்கி அவற்றைத் தனக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ளுதல், முதலாளிய ஊடகங்களின் ஆதரவு, தேர்தல் தில்லுமுல்லுகள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற கட்சிகள் தான் இந்த விளையாட்டில் வெற்றி பெறும். கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் முதலாளியச் சீரழிவுகளுக்கு ஆளாகியே தீர வேண்டும். இவை தான் தேர்தல் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேர்ந்துள்ளன; தேர்தல் செலவுக்காக கூட்டணியில் இருக்கும் முதலாளியத் கட்சிகளைச் சார்ந்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சில சட்டமன்ற, நாடாளுமன்றப் பதவிகளுக்காக உழைக்கும் மக்களின் நலன்களை அடகு வைக்கும் நிலை இந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன.
அண்மையில் நடந்த சாம்சங் தொழிலாளர்களின் சட்டபூர்வமான கோரிக்கையான சங்கத்தைப் பதிவு செய்தல் என்பதைக் கூட தி.மு.க. அரசு பல மாதங்கள் கடந்தும் நிறைவேற்றவில்லை. ஆனால் சி..பி.எம்., சி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்தைச் சுமூகமாக முடித்துக் கொடுத்ததாக முதல்வர். ஸ்டாலினுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து விட்ட னர். தொழிலாளர்களின் நலன்களை விடக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விடக் கூடாது என்பது தான் அவர்களின் நோக்கம்.
ஆளும் முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியோடு கூட்டணி வைத்துள்ள இந்த இரண்டு இடதுசாரி கட்சிகளின் தலைமையும் முதலாளி வர்க்கத்தின் அடிவருடி ஆ.ராசாவின் கருத்துக்கு எதிர்வினையாக திமுகவை வன்மையாக கண்டிப்பதாக, மென்மையாக அறிவிப்பதோடு நின்று கொண்டன. ஏனெனில் நீண்ட காலமாக முதலாளித்துவ கட்சிகளின் தயவில் வாழ்ந்து பழகிய இவர்களுக்கு, அவர்கள் மூலம் கிடைக்க கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிகளுக்கு சோரம் போய்விட்ட இவர்களுக்கு இதனைத் தவிர வேறு வழியில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் பலம்!
முதலாளியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதால் கம்யூனிஸ்ட் கட்சி பலம் பெற முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியின் பலமே தொழிலாளி வர்க்கம் தான். உழைக்கும் தொழிலாளர் வர்க்கமே சமூகத்தின் இதயமாகவும் இரத்த நாளங்களாகவும் நரம்பு மண்டலமாகவும் உள்ளது. அது இயங்கினால்தான் சமூகம் இயங்க முடியும். அது தனது இயக்கத்தை நிறுத்தினால் சமூகம் இயங்க முடியாது. தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் சத்தியைப் புரிந்து கொள்ளாமல் அதைத் தமது நலன்களுக்காக அடகு வைக்கும் கட்சித் தலைமையைத் தூக்கி எறிந்து விட்டுத் தொழிலாளர் வர்க்கம் புரட்சிகரமான தத்துவத்தைக் கொண்ட தலைமையின் கீழ் அணி திரள வேண்டும். சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான வலுவான தொழிலாளர்களின் ஒன்றுபட்ட முன்னணி அமைக்கும் செயல்திட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
மு.வசந்தகுமார்
https://senthazhalmagazine.blogspot.com/2025/01/blog-post_28.html?m=1
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு