மாணவர் நலனை பலி கொடுக்கிறதா, மாநிலக் கல்வி கொள்கை?

அறம் இணைய இதழ்

மாணவர் நலனை பலி கொடுக்கிறதா, மாநிலக் கல்வி கொள்கை?

கல்வியாளர்கள் குழு தந்த தமிழ்நாட்டிற்கு என தனித்துவமாக  உருவாக்கப்பட்ட கல்வி கொள்கை  என்னவானது..? அதிகாரிகள் எழுதுவதே கல்வி கொள்கையாகுமா? தேசியக் கல்விக் கொள்கையின் தீய அம்சங்களே தீஞ்சுவையாய் தமிழ் பெயர்களில் தமிழகத்திற்கான கல்வி கொள்கையாக தேன் தடவி தரப்பட்டுள்ளதா..?  அலசுகிறார் யோகராஜன்;

முன்னுரை :

பள்ளிக் கல்வி செயலர் சந்திரமோகனின் (Times of India நாள் 09-08-25) பேட்டி திடுக்கிட வைக்கிறது. ‘அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு அளித்த மூன்று பாகங்கள் கொண்ட கல்விக் கொள்கை நீளமான இருந்தது. அதில் பள்ளிக் கல்விக் கொள்கையை இப்போது வெளியிட்டிருக்கிறோம். மழலையர் கல்விக் கொள்கையிலும் உயர் கல்விக் கொள்கையிலும் தத்தம் துறையினர் வேலை செய்து வருகின்றனர். விரைவில் அவற்றை வெளியிடுவோம்.’

உயர்நிலை குழு கொடுத்த ‘வரைவு மாநில கல்விக் கொள்கையை’ அரசு அதிகாரிகள் எவ்வாறு திருத்த முடியும்? அரசு அதிகாரிகள் உயர்நிலைக் குழுவை விட கல்வியாளர்களா? இந்த அதிகாரத்தை  யார் அளித்தார்கள்? கல்வியாளர்கள் உருவாக்கிய கொள்கையை  நிறைவேற்றுவதே அதிகாரிகளின் கடமை. அரசு சொல்வதை நிறைவேற்ற அதிகாரிககளா? அல்லது அதிகாரிகளே கொள்கையாளர்களா?

2024, சூலை 3 ஆம் தேதி உயர்நிலைக் குழு மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அரசு அதை பொதுவெளியில் வெளியிட்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டாமா? அக் கருத்துகளையெல்லாம் சட்டசபையில் வைத்து  விவாதித்து தக்க மாற்றங்கள் செய்து வெளியிட்டால் தான் அது மாநில கல்விக் கொள்கை. தற்போது வெளியாகியிருப்பது நிச்சயமாக மாநில கல்விக் கொள்கை அல்ல.

தேசிய அடைவுத் தேர்வு (NAS):

தேசியக் கல்விக் கொள்கை 2020 இந்தியா இதுவரை சந்தித்திராத ஒரு பேராபத்தாகும். இதை நம் மாநில அரசும் அறியும். அதில் மிகத் தீங்கான ஒன்று ‘பராக்’ (PARAKH – Performance Assessment, Review and Analysis of Knowledge for Holistic Development) என்றொரு திட்டம். இதன் நோக்கம் மிக பட்டவர்த்தமானது. இந்தியாவின் அனைத்து மாநில பள்ளிக் கல்வியையும் தனக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் சதித் திட்டமே அது. இதை சற்று விளக்குவது அவசியமாகும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 -ன் முக்கிய அம்சம், பள்ளியில் நடைமுறையில் உள்ள எல்லா தேர்வுகளையும் (10ஆம் வகுப்பு & 12ஆம் வகுப்பு உட்பட) நீர்க்கச் செய்வதே. அவற்றை மதிப்பில்லாமல் செய்வதே. இனி உயர்கல்வி செல்ல விரும்புவோர் அனைவருக்கும் தேசிய தேர்வு முகமையின் (NTA) போட்டித் தேர்வுகளின்  மதிப்பெண் மட்டுமே முக்கியமாகும்.

அப்படியெனில் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்வை எவ்வாறு மதிப்பீடு செய்வது? யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒன்றிய அரசே மதிப்பீடு செய்யும். அதற்கான திட்டமே ‘பராக்’ (PARAKH). அது தனது தேசிய அடைவுத் தேர்வுகள் (National Achievement Survey – NAS) மூலம் மதிப்பீடு செய்து அதை மாநில அரசிற்குத் தரும். மாநில அரசு அதற்கு ஏற்றாற் போல் தனது கற்றல் கற்பித்தல் செயல்பாட்டை மாற்றம் செய்து கொள்ள வேண்டியது தான். சரியான பலே திட்டம் இல்லையா? அதாவது, மாநிலம் என்ற ஒரு அமைப்பையே தேசியக் கல்விக் கொள்கை 2020 பொருட்படுத்தவில்லை.

சமூக நீதி, சுயமரியாதை என்று முழங்கும் தமிழக அரசு காவிகளின் மூளையில் உதித்த  ‘பராக்’ (PARAKH) அடிப்படையிலான தேசிய அடைவுத் தேர்வு (National achievement Survey – NAS) தமிழகத்தில் கால் பதிப்பதை அனுமதிக்கலாமா?

இப்போது வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை அடைவுத் தேர்வுகள் (‘SLAS 2024/PARAKH – NAS 2024’) முடிவுகளின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. இதன் உட்பொருள் என்ன?

தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ தமிழக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது என்று தானே பொருள். ‘பராக்’ இங்கே ஏன் வருகிறது? மாநில அடைவுத் தேர்வு என்ற கோட்பாடே ஒன்றிய அரசின் மையப்படுத்த அதிகாரக் கோட்பாடல்லவா?

இத்தகையக் கல்வி கொள்கை மாணவர்களின் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டுத் தேர்வுகள் மதிப்பெண்களை ஏன் கணக்கில் கொள்வதில்லை?

அதிகாரிகள் வெளியிட்ட இந்த ஆபத்தான கல்விக் கொள்கையை மாநில அரசு அமைத்த கல்விக் குழுவில் உள்ளோரின் பதில் என்ன? அவர்கள் மக்கள் பக்கம் இருக்கிறீர்களா?  அவர்கள் வாய் மூடி மௌனியாக இருந்தால், மக்கள் நம்பிக்கை இழந்து விட மாட்டார்களா?

மாநிலக் கல்விக் கொள்கை:

உட்கட்டமைப்பு:

அரசு வெளியிட்ட  மாநிலக் கல்விக் கொள்கை ஆவணத்தில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்தே இருக்கின்றன. இவை தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் உள்ள திட்டங்களுக்கு பல புது பெயர் சூட்டி நடைமுறைப்படுத்திய இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும், நம்ம ஊரு  நம்ம பள்ளி போன்ற திட்டங்களே!

பக்கம் 7 இல் கொடுத்தத் தரவை முதலில் பார்க்கலாம்.

மார்ச் 2024 இன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை 58,800க்கும் மேற்பட்ட பள்ளிகள் 1.16 கோடி மாணவர்கள், சுமார் 3 இலட்சம் ஆசிரியர்களைக் கொண்டுள்ளது.

ஆனால், இதில் அரசு பள்ளிகள் எத்தனை? அரசு உதவி பெரும் பள்ளிகள் எத்தனை ? சுயநிதி பள்ளிகள் எத்தனை?  இவற்றில் எவ்வளவு மாணவர்கள் படிக்கின்றனர்?  போன்ற எந்த தகவலும் இல்லை.

இத் தரவின்படி சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர் என்பது தெரிகிறது. ஆனால் சுயநிதி பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த சராசரியை விட மிக அதிக ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

அப்படியென்றால் அரசுப்பள்ளிகளில் மிக மிக குறைந்த ஆசிரியர்களே உள்ளனர் என்று பொருள். அந்த சராசரியிலும் எத்தனை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள், எத்தனை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் என்ற எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. இதில் தான் நம் மாநிலத்தின் உண்மையான கல்விச் சிக்கலின் அடிப்படை  இருக்கிறது.

இது மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளில் எவ்வளவு தூய்மை பணியாளர்கள், வாயில் காவலர்கள், அலுவலர்கள் இருக்கின்றனர்? இதில் செயல்பாட்டிலுள்ள அலுவலகங்கள் எத்தனை?, விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கின்றனரா? போன்ற எந்தத் தரவுகளும் 83 பக்கங்களில் இல்லை.

ஒரு பள்ளி எத்தகைய உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதே மாநில கல்விக் கொள்கையின் முதல் வரியாக இருக்க வேண்டும். உட்கட்டமைப்புடன் போதிய ஆசிரியர்களையும் கொண்டிருந்தால் பெற்றோர் அனைவரும் குழந்தைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்ப்பார்கள். வணிக நோக்கில் நடத்தப்படும் சுயநிதி பள்ளிகள் மெல்ல மறைந்து விடும். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் பெரும்பான்மையான மாணவர்கள் அரசுப் பள்ளியில் தான் பயில்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து குறைந்து, தற்போது ஏறத்தாழ 50 சதவீதமாக தாழ்ந்துவிட்டது. அரசுப் பள்ளிகள் உட்கட்டமைப்பும் போதுமான ஆசிரியர்களும் இல்லாமல் இருப்பதால் தான் இந்த நிலை.

பெரும்பான்மை  ஏழை மக்கள் சுயநிதி பள்ளிகளின் அதீத கட்டணத்தை செலுத்த திணறுகின்றனர். அரசுப் பள்ளிகளை நடத்துவது ஒரு பரோபகார செயலல்ல. அது அரசின் மிக முக்கிய கடமை. இதுவே மாநில அரசின் கல்விக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக இருந்திருக்க வேண்டும்.

எண்ணும் எழுத்தும் திட்டம்:

இதன் விளைவுகள் மிகப் பாதகமானவை. சான்றாக 27ஆம் பக்கத்தில் பராக் (PARAKH) அடிப்படையிலான அடைவுத் தேர்வு முடிவுகளை கொடுத்திருக்கின்றனர்.

அரசு ஆரம்பப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டப்பணிகள் தவிர வேறு எந்த மெய்யான கல்வி செயல்பாடும் இல்லை.

வகுப்புகள் 3 மற்றும் 6 ஆகியவற்றில் அடைவுத் தேர்வின்படி மொழிப்பாடம், கணிதம்  இரண்டிலும் தேர்ச்சி படிப்படியாக, கடுமையாக குறைகிறது. இது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விளைவேயாகும்.  இதற்கு மெய்யான காரணம், பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாகுறையே.

உண்மையில் எண்ணும் எழுத்தும் திட்டம் பன்னாட்டு நிறுவனங்கள் பரிந்துரைப்பவை. சான்றாக FLN என்று அழைக்கப்படுகின்ற Foundational Literacy and Numeracy திட்டம் பன்னாட்டு நிறுவனமான Bill & Melinda Gates Foundation என்ற அமைப்பின் முன்னெடுப்பு. இது போன்ற கொள்கைகளை நம்மை போன்ற நாடுகளின் மீது திணிப்பது அவர்களின் நுண்ணரசியல். இதற்கு நாம் ஏன் பலியாக வேண்டும்?

எண்ணும் எழுத்தும் திட்டம் தோல்வி அடைந்து விட்டது. இது மாணவர்களின் கல்வி கற்கும் அடிப்படைத் திறனை சிதைக்கிறது..

நிற்க, பள்ளிக் கல்வியை அழித்து வரும் இத்திட்டத்தை நிறுத்துவதற்கு மாறாக இதை ஒரு பெரும் இயக்கமாக (பக்கம் 20) வளர்க்க வேண்டும் என்று மாநில கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதைத் தானே தேசியக் கல்விக் கொள்கையும் கூறுகிறது.

இது பொதுக் கல்வியை முற்றிலும் அழித்துவிடும் செயல் திட்டமல்லவா? இத்தகைய சூழலில் யார் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முன் வருவர்? இதனால், அரசுப் பள்ளிகளை மூடும் நிலை உருவாகும். எனவே, இது உண்மையில் பொதுக் கல்வியை அழிக்கும் திட்டமின்றி வேறல்ல.

மொழிக் கொள்கை:

மாநிலக் கல்விக் கொள்கை இரு மொழி கொள்கையை முன் மொழிகிறது. அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பயிற்று மொழி குறித்து எது என எந்த இடத்திலும் விளக்கவில்லை. தாய் மொழியில் படித்தால் மட்டுமே மாணவர்களால் நன்கு கற்கவும் கூச்சமும், தயக்கமின்றி வினா எழுப்பவும் முடியும். தமிழ் நாட்டு மாணவர்கள் தாய் மொழியாம் தமிழில் எழுதவும், வாசிக்கவும் சரளமாக உரையாடவும் இயலாமல் உள்ளனர். இந் நிலை நீடிப்பது மொழியின் அழிவிற்கு வழி வகுக்கும்.

எனவே, தாய் மொழியிலேயே பாடங்கள் அனைத்தையும் கற்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்க வேண்டும். இதற்குத் தேவையான தரமான அறிவியல், கணிதம், கலை புத்தகங்கள் அனைத்தும்  நூலகங்களில் இருக்க வேண்டும்.

இந்தப் பணி மிக முக்கிய பணியாகும். நீண்ட காலமாக இதைச் செய்ய நாம் தவறிவிட்டோம். அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், உற்பத்தி ஆகியவற்றில் இருந்து ஏற்கனவே தமிழ் விலகிவிட்டது. இதை நீடிக்கவிட்டால் பெரும் ஆபத்தாகிவிடும். மொழி அழிந்துவிட்டால், ஒரு இனமே அழிந்ததாக பொருள்.

மாணவர்களின் கற்றல் குறைபாட்டிற்கு தாய் மொழியில் பாடங்களை படிக்காததும் ஒரு முக்கிய காரணம்.

பயிற்றியம்:

பயிற்றியம் (Pedagogy) ஒரு நுட்பமான அறிவியலாகும். மாநிலக் கல்விக் கொள்கை இதை புரிந்து கொள்ளவில்லை. தேசியக் கல்விக் கொள்கை போலவே மாநில கல்விக் கொள்கையும் அனுபவக் கற்றல் (Experiential Learning), விசாரணைக் கற்றல் (Inquiry Based Learning), செயல்வழிக் கற்றல் (Activity Based Learning), செயல்திட்டம் சார்ந்த கற்றல் (Project Based Learning), விளையாட்டு வழி கற்றல், பொம்மை வழிக் கற்றல் ஆகிய முறைகளை பரிந்துரைக்கிறது. இவை அனைத்தும் கேட்க இனிமையாக இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் பயிற்றிய அறிவியலின்படி பிழையானவைகளாகும்.

இவை அனைத்துமே மிகத் தவறான ‘சமூக உருவாக்க பயிற்றியம் (Social Constructivist Pedagogy)’ எனும் வகையை சார்ந்தது. மனு போன்றோரின் சிந்தனைகளே இதற்கு அடிப்படையாகும். மனு போன்றோர் மனிதர்களின் அறிவு, அவன் பிறப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது எனக் கருதுகிறார்கள்.

மனு போன்றவர்கள் எவன் ஒருவனும் பிறப்பால் பெற்ற அறிவை கடந்து அதன் எல்லையை தாண்ட இயலாது என்று கருதுகின்றனர்.

இந்தக் கொள்கையை தெரிந்தோ தெரியாமலோ ஏற்பவர்கள் உருவாக்கிய பிழையான பயிற்றியக் கொள்கையே அனுபவக் கற்றல், விசாரணைக் கற்றல், செயல்வழிக் கற்றல், செயல்திட்டம் சார்ந்த கற்றல், விளையாட்டுவழி கற்றல், பொம்மை வழிக்கற்றல் ஆகியவை.

இவை அனைத்துமே கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனவே அன்றி,. கற்பித்தலுக்கு அல்ல. எனவே, தான் அனுபவமே கற்றலுக்கு அடிப்படை எனக் கருதுகின்றனர். ஒருவர் எவ்வளவுதான் அனுபவம் பெற்றாலும், பள்ளியில் படிக்கும் உயர்ந்த கருத்துக்களை புரிந்து கொள்வது மிகக் கடினம். நவீன பள்ளிக் கல்வி தோன்றுவதற்கு முன்னர் எத்தனை பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும்? நவீன கல்விமுறை தோன்றும் வரை பெரும்பாலோர் எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால், பள்ளிகள் தோன்றிய பிறகே பெரும்பாலோர் எழுதப் படிக்கக் கற்றனர். அதாவது, கற்பித்தால் எவர் ஒருவராலும் கற்றுக் கொள்ள முடியும்.

சரியான வழியில் கற்பிப்பதையே அறிவியல் பயிற்றியம் (Scientific Pedagogy) என அழைக்கிறோம். அறிவியல் பயிற்றியம் மனிதர்கள் பிறப்பால் வேறுபட்டவர்கள் என்பதை ஏற்கவில்லை. மனிதர்கள் அனைவருமே எல்லையற்ற கற்றல் சாத்தியங்களுடன் பிறக்கிறார்கள் என்பதே அறிவியல் பயிற்றியத்தின் கொள்கை.

மனித மூளையின் அறிவாக்க செயல்பாடு குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நடந்திருக்கின்றன. அவை அனைத்துமே அறிவாக்கப் பயிற்றியம் (Cognition based Pedagogy) மட்டுமே, சரியான முறை என நிரூபித்திருக்கின்றன.

தேசியக் கல்விக் கொள்கையும் தமிழ்நாட்டு அரசின் மாநிலக் கல்விக் கொள்கையும் ஆசிரியரின் கற்பித்தல் முறைமையை முற்றிலும் பின்னுக்குத் தள்ளி அனுபவக் கற்றல் உள்ளிட்ட ஆசிரியரின் பங்கு இல்லாத அணுகுமுறைக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் தான் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் அரசு வைத்திருக்கிறது.

ஆசிரியரின் கற்பித்தல் இல்லாத ஒரு கல்வி அமைப்பின் மூலம் அறிவுக் கட்டமைப்பை முற்றிலும் சீர்குலைக்கும் திட்டம் தான் இந்த அனுபவக் கற்றல் உள்ளிட்ட கற்றல் முறைகள் ஆகும். இது சிந்திக்கும் ஆற்றல் இல்லாத ஒரு இருள் சூழ்ந்த சமுதாயத்தை உருவாக்கும்.

நிற்க, தமிழக அரசு பயிற்றியத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவர்களை அழைத்து பயிற்றியத்தை வடிவமைக்க வேண்டுமே ஒழிய, தேசியக் கல்விக் கொள்கை 2020 முன் மொழிகின்ற பயிற்றிய முறைகளை தானும் பரிந்துரைத்து ஆசிரியர்களை காலி பண்ணக் கூடாது.

நிரந்தர அடிப்படையில் ஆசிரியர் நியமனம்:

ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்வது சிறந்த கல்விக் கட்டமைப்பிற்கு மிக அடிப்படையானதாகும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரமும் மிக முக்கிய அம்சமாகும். 1:30 என்ற  ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நடைமுறையில் கடை பிடிக்கப்படுவதில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணி நியமனங்களே நடைபெறவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் ஆசிரியர் பணி நியமனம் குறித்து ஒரு கல்விக் கொள்கை வாயே திறக்காமல் இருப்பது, இக் கொள்கை கல்விக்கும், மக்களுக்கும் விரோதமாக இருப்பதையே காட்டுகிறது.

நிதி ஒதுக்கீடு:

கல்விக்கு ஆண்டுக்கு 13.7% ஒதுக்குவதாகக் இக் கல்விக் கொள்கை தம்பட்டமடிக்கிறது. ஆனால், இந்த நிதி போதாமல் தான் தனியாரிடமும் முன்னாள் மாணவர்களிடமும் அரசுப் பள்ளிகளுக்காக  கை ஏந்துகிறது. கல்வி அமைப்பு என்பது நிதி ஆதாரங்களில் முழுமையாக தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரைக் ஆரம்பிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. அது போதாது. அனைவருக்கும் வகுப்பு 1 முதல் வகுப்பு 12 வரை பள்ளிக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். கல்விக்கு பட்ஜெட்டில் மத்திய அரசாங்கம் 10%, மாநில அரசாங்கம் 30% ஒதுக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அப்பொழுது மட்டுமே அனைவருக்கும் பள்ளிக் கல்வியை உறுதி செய்ய முடியும். தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதற்கு மாறாக அரசுப் பள்ளிக் கட்டமைப்பை தகர்த்து கல்வியை தனியார்மயமாக்கிறது.

தனியார் மயமும், அளவில்லா கொள்ளையும்:

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களில் எந்தக் கண்காணிப்பும் இல்லை. ஏழை நடுத்தர மக்கள் தனியார் பள்ளிகளால் சுரண்டப்படுகின்றனர்.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப் படுகின்றனர். கடுமையாக வேலை வாங்கப்படும் ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியம் தருவதில்லை.

எனவே தனியார்ப் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கும், ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்திற்கும் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வாயே திறக்காமல் இருப்பதானது, இது யாருக்கு ஆதரவான கல்விக் கொள்கை என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

நன்றி; டைம்ஸ் ஆப் இந்தியா

அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் மாநிலக் கல்விக் கொள்கை:

பள்ளி மேலாண்மைக் குழு, நம்ம ஊரு நம்ம ஸ்கூல், பெரு நிறுவன சமூக பங்களிப்பு, முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு, சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு போன்ற திட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பை குறைக்கும் ஒரு திட்டவரைபடமாகவே (Blue Print) தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

கல்விக்காக தமிழ்நாடு அரசாங்கம் நிது ஒதுக்காமல், வெளியில் கையேந்த வைப்பது படிப்படியாக மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்வதில் போய் முடியும்.

நிதி ஒதுக்காததால் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு சிதைந்து வருவது போன்றவற்றால் ஏற்கனவே மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர். இதனாலேயே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது. சமீபத்தில் 208 அரசுப் பள்ளிகளை மூடப்பட்டன. இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைக் காரணங்களை மூடி மறைக்கிறது தமிழ்நாடு அரசாங்கம்.

முடிவுரை:

கட்டுரையின் நீளம் கருதி, முக்கியமான சில கருத்துகளை மட்டும் இங்கே கூறியிருக்கிறோம். மொழிக் கொள்கை, பண்டைய இந்தியப் பெருமை ஆகிய இருகூறுகள் தவிர, மாநிலக் கல்விக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. கல்வியை முழுமையாக தனியார்மயம் வணிகமயம் செய்வதை பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது

வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்வது கல்வியின் நோக்கமல்ல. சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மிகப் பெரும் ஆளுமைகளை தோற்றுவிப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இப்போது வெளியிடபட்டுள்ளது, மாநிலக் கல்விக் கொள்கையே அல்ல. எனவே, இதை உடனே திரும்பப் பெற்று சிறந்த கல்வியாளர்களை கொண்டு குழு அமைத்து அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து அறிவியல்பூர்வ, மதச்சார்பற்ற, சனநாயகபூர்வ, அனைவருக்குமான கல்விக் கொள்கையை இயற்றி மக்களிடம் சமர்ப்பித்து அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டும், சட்டசபையில் விவாதித்தும் இறுதி செய்து வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

க.யோகராஜன், மாநிலச் செயலாளர், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு.

பின்குறிப்பு:

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளர்களை இணைத்து கடந்த இரண்டாண்டுகளாக பற்பல கூட்டங்கள் நடத்தி ‘வரைவு மக்கள் கல்விக் கொள்கையை’ இயற்றியிருந்தது. அந்த ‘வரைவு மக்கள் கல்விக் கொள்கை 2025’ ஐ தமிழக அரசிடமும் முக்கியச் அரசுச் செயலர்களிடமும் நேரிடையாக சமர்பித்திருந்தது. எனினும் அதன் சாயல் கூட தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்ட ‘மாநில கல்விக்கொள்கை 2025’ல் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறம் இணைய இதழ்

https://aramonline.in/22505/national-state-education-policy/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு