புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஏன்?- 10 முக்கிய தகவல்கள்

BBC News தமிழ்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஏன்?- 10 முக்கிய தகவல்கள்

இந்தியாவில் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் (திங்கள், ஜூலை 1) நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

மூன்று கிரிமினல் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (IPC). இந்தச் சட்டம் தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் இயற்றப்பட்டவை.

இந்தப் புதிய சட்டங்கள் எல்லாமே இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் செய்யப்படும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முந்தைய குற்றங்களுக்கு பழைய சட்டத்தின்படியே வழக்குகள், விசாரணைகள் நடக்கும்.

இந்தப் புதிய சட்டங்களின் பல்வேறு கூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

படக்குறிப்பு, உத்தரப் பிரதேசத்தில் பாரதீய நியாய சன்ஹிதா-வின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

இந்திப் பெயர்கள் ஏன்?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.

ஆனால், இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வேறு சில ஆட்சேபணைகளையும் எழுப்பியுள்ளது. இந்தச் சட்டங்கள் இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல்-3-இல் இடம்பெறுவதால், மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்படி ஏதும் நடக்காமல், மாநிலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் இச்சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கூறுகிறது. BNS மற்றும் BNSS-இன் பல பிரிவுகள் தெளிவற்றவையாகவும் முரண்பாடுகளுடன் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு கூறுகிறது.

பாலியல் குற்றங்கள்

புதிய குற்றவியல் சட்டத்தில், பாலியல் குற்றத்தை இரு பாலினத்தினருக்கும் பொதுவானதாக்க வேண்டுமென கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தச் சட்டம் முன்பைப் போலவே அதனைப் பெண்களுக்கு எதிரான குற்றமாக மட்டுமே கருதுகிறது.

புதிய குற்றவியல் சட்டங்கள்

படக்குறிப்பு, "இந்தப் புதிய சட்டங்க்களின் கீழ் சாதாரண போராட்டங்களைக்கூட, அரசுக்கு எதிரான செயல்பாடாகக் காட்டி ஒருவரைக் கைதுசெய்ய முடியும்," என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.

இறையாண்மைக்கு எதிரான வழக்குகள்

'Sedition' எனப்படும் தேசத்துரோகம் இந்தச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக, 'இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிப்பது' குற்றமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வார்த்தைகள் தெளிவற்றவையாக இருப்பதால், அவை கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை முடக்கப் பயன்படும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

"தேசத்துரோகம் தொடர்பான பிரிவையே வேறு பெயரில் இன்னும் கடுமையாக கொண்டுவந்துள்ளனர். தேசத்துரோகத்திற்கு இதற்கு முன்பு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம். இப்போது அதிகபட்சமாக ஆயுள்தண்டனைவரை விதிக்கப்படலாம்" என்கிறார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஹரி பரந்தாமன்.

காலனியாதிக்கச் சட்டமா?

காலனியப் பாரம்பரியத்திலிருந்து விலகுவதுதான் இந்தச் சட்டங்களின் நோக்கம் என்கிறது மத்திய அரசு. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது பிரிவு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட எந்த ஒரு சட்டமும் அடிப்படை உரிமைகளை மீறினால் தவிர, தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஹரி பரந்தாமன். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், காலனியாதிக்க காலத்தில் இயற்றப்பட்டதல்ல, 1973-இல் தான் இயற்றப்பட்டது என்கிறார் அவர்.

அரசுக்கு எதிரான செயல்பாடுகள்’

பயங்கரவாதச் சட்டப் பிரிவுகளின் கீழ் இருந்த கடுமையான பிரிவுகள், குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு UAPA பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள்தான் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். இப்போது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டாலே, குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். "சாதாரண போராட்டங்களைக்கூட, அரசுக்கு எதிரான செயல்பாடாகக் காட்டி ஒருவரைக் கைதுசெய்ய முடியும்," என்கிறார் ஹரி பரந்தாமன்.

காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரங்கள்

புதிய சட்டங்கள் காவல் துறைக்குக் கூடுதல் அதிகாரங்கள் தருகின்றன. முன்பு காவல்துறை கைதுசெய்யும்போது எவ்வித பலப்பிரயோகமும் செய்யக்கூடாது என்று இருந்தது. தற்போது அந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. காவல்துறை விரும்பினால், விசாரணைக்கு முன்பே சொத்துகளை முடக்கவும் முடியும்.

முன்பு ஒருவர் கைதுசெய்யப்பட்டால், 15 நாட்களுக்குள் காவல் துறையினர் நீதிமன்றத்தை அணுகி போலீஸ் காவல் கேட்க வேண்டும். ஆனால், தற்போது இந்த கால இடைவெளி 60 நாட்களாக்கப் பட்டுள்ளது. ஆகவே, இந்த 60 நாட்களில் ஜாமீன் கிடைப்பது கடினமாகலாம்.

ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, காவல்துறை 14 நாட்களை எடுத்துக்கொள்ள BNSS வாய்ப்பு வழங்குகிறது. ஆகவே, 14 நாட்கள் வரை முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்யாமல் இருக்க முடியும். ஆனால், லலிதா குமாரி vs உத்திரப்பிரதேசம் என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஒரு குற்றம் நடந்ததாக புகார் வந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய வேண்டும் எனக் கூறுகிறது.

தலைமைக் காவலர் மட்டத்திலான காவலர் ஒருவரே, பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவரைக் கைதுசெய்ய முடியும். "குற்றம்சாட்டப்பட்டவருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விவாதிப்பது, ஒரு தேநீர் அருந்துவது போன்றவற்றைக்கூட குற்றமாகக் காண்பிக்க முடியும்," என்கிறார் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞரான பி.டி.வெங்கடேஷ்.

- பிபிசி நியூஸ் தமிழ்

https://www.bbc.com/tamil/articles/c4ngz54g6d2o

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு