செந்தில் பாலாஜி விடுதலையும், பேர அரசியலும்!
அறம் இணைய இதழ்
ஏன் செந்தில் பாலாஜி மீது முறையாக வழக்கு பதியாமல் 15 மாதங்களுக்கு மேலாக விசாரணைக் கைதியாக வைத்திருந்தது அமலாக்கத் துறை. எந்த பேரம் படிவதற்காக செந்தில் பாலாஜி வழக்கு முறையாக பதிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது? ஏன் இந்த நேரத்தில் செந்தில் பாலாஜியின் விடுதலை சாத்தியமாகி உள்ளது…?
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும், அதை திமுக தலைமை பெரும் கொண்டாட்டமாக எதிர் கொண்டதும். ஏழைகளை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜியை தியாகி என்றும், மன உறுதி கொண்டவர் என முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியதும் தமிழ் நாட்டின் அரசியல் செல்லும் திசை வழியை உணர்த்துவதாக உள்ளது.
‘வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக ஆட்சி காலத்தில் கவர்னரை சந்தித்து மனு அளித்தவர் தான் இன்றைய தமிழக முதல்வர். ‘ஊழல் செய்வதிலும், பொதுப் பணத்தை திருடுவதிலும் வல்லவர்’ என செந்தில் பாலாஜியை இகழ்ந்தவர் தான் ஸ்டாலின். ஆனால் அந்த ஊழலையும், திருட்டையும் செந்தில் பாலாஜி தனக்காக செய்யும் போது அவர் தியாகியாகவும், மன உறுதி கொண்டவராகவும் ஸ்டாலினுக்கு தெரிகிறது.
இவை ஒருபுறமிருக்க, செந்தில் பாலாஜி சிறை சென்றது வெறும் ஒரு கோடியே அறுபது லட்சம் சம்பந்தப்பட்டது தான். இது ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு தான். இது மாநில லஞ்ச ஒழிப்பு துறையே விசாரித்து தண்டிக்கக் கூடியது தான்.இன்றைய திமுக அரசு அதற்கு தயாராக இல்லை என்பதால் மத்திய அரசு தலையிட வேண்டிய சூழல்கள் உருவாகிறது. ஆனால், மத்திய அரசும் இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கத் தயார் இல்லை. 15 மாதமாக செந்தில் பாலாஜியை வெறும் விசாரணைக் கைதியாகவே வைத்திருந்தது நியாயமற்ற செயல் என்பதைவிட, இதற்குள் இருக்கும் பேர அரசியலை உய்த்தறிவது தான் நமக்கு ஒரு வெளிச்சத்தை பாய்ச்சும்.
செந்தில் பாலாஜியை எந்த பேரத்திற்காக சிறைக்குள் தள்ளினார்களோ, அந்த பேரம் முடிவுக்கு வரும் வரை சுமார் 58 முறை அவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலையை அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் உருவாக்கியது.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டாண்டுகளில் செந்தில் பாலாஜி டாஸ்மாக் துறையிலும், மின்சாரத் துறையிலும் செய்த முறைகேடுகள் இந்திய வரலாறு காணாத உச்சமாகும்.
உற்பத்தியாகும் மது மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரம் கோடி பணத்தை திமுக தலைமையின் குடும்பத்திற்கு கொண்டு சேர்த்த அசாத்திய துணிச்சல்காரர் செந்தில் பாலாஜி. இதற்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் மது உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்வதற்கேற்ப லஞ்சம் பெறுவதோடு இருந்த ஊழலை, நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஹைடெக்க்காக்கி, அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர் செந்தில் பாலாஜி.
டாஸ்மாக் தொடர்பான இடங்களில் எல்லாம் பல கட்ட ரெய்டுகளை நடத்திய அமலாக்கத் துறை இதை அம்பலப்படுத்தாமல் ஏன் கமுக்கமாக அமுக்கியது..? ஏன் இது குறித்து சார்ஜ் சீட் போடவில்லை…? எப்.ஐ.ஆர் பதியவில்லை…? என்கிற கேள்விக்கு இன்று வரை விடையில்லை. இதை தமிழகத்தில் உள்ள எந்த எதிர்கட்சிகளுமே பேசாதது கொடுமை. அறத்தை தவிர, வேறெந்த ஊடகமும் இதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது.
இவ்வளவு பெரிய ஊழலை அசால்டாக கடந்து போகும் பாஜக அரசு, டெல்லி ஆம் ஆத்மி அரசு வெறும் 100 கோடி ஊழல் செய்ததாக நிருபிக்க முடியாத புகார் மீது அதன் முதலமைச்சரையும், துணை முதல்வரையும் பல மாதங்கள் சிறையில் தள்ளி பதவியை இழக்க வைத்தது. இன்று அதே பாஜக அரசு தான் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக அனைத்து வகையிலும் தடை போடாத ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
காரணம், இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு பக்கம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக பாசாங்கு செய்து கொண்டே அதன் பெரும்பாலான அமசங்களை அமல்படுத்தியது, தொழிலாளர் விரோத சட்டங்களை அமலாக்கி வருவது, விவசாயிகளிடம் இருந்து பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பறித்து அதானி போன்ற கார்ப்பரேட்களுக்கு வழங்கி வருவது, கொடூரமான போக்குவரத்து சட்டங்களை அமலாக்கி கடுமையான அபராத கட்டணங்களை வசூலிப்பது, தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டளைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி விட்டு, அதிகாரிகள் ராஜ்ஜியத்திற்கு ஒத்துழைப்பது… போன்ற வகையில் பாஜக அரசுக்கு ஸ்டாலின் காட்டும் உண்மையான விசுவாசத்தை அறியாதவரா மோடி?
எனில், செந்தில் பாலாஜி விடுதலை விஷயமாக திமுக தலைமைக்கும், பாஜக தலைமைக்கும் இடையே நடந்த பேரம் என்ன? செந்தில் பாலாஜி விடுதலையாகும் தருவாயில் தமிழக முதல்வர் அவசர, அவசரமாக பிரதமர் மோடியை சந்திக்க போனது ஏன்? ஏதோ தமிழ்நாட்டு நலன் சம்பந்தமான கோரிக்கைக்காக சந்தித்தது போல பாவனை காட்டப்படுகிறது.
இல்லவே இல்லை, உண்மையில் செந்தில் பாலாஜி விடுதலைக்காகத் தான் தன் மகன் துணை முதல்வராக பட்டாபிஷேகம் செய்வதை ஸ்டாலின் தாமதப்படுத்தி வந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை தான். உதயநிதி பதவி ஏற்புக்கு பிரதமரின் எதிர்ப்பற்ற ஒத்துழைப்பை பெறுவதற்கே ஸ்டாலின் சென்றுள்ளார் என்பது தான் உண்மையும், யதார்த்தமுமாகும்.
பல்லாண்டுகளாக நடைபெற்ற பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பல கட்ட விசாரணைக்கு பிறகு அவரது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு சிறை தண்டனை பெற்றிருந்தாலும், அவரது மேல் முறையீட்டு வழக்கில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததும், அதனால் அவர் மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வலம் வர பாஜக அரசு ஒத்துழைத்ததும் இங்கே நினைவு கூறத்தக்கதாகும்.
மக்களாட்சி காலத்தில், ஜனநாயக யுகத்தில் எந்த கூச்ச நாச்சமுமோ, குற்றவுணர்வோ இன்றி இப்படியான பேர அரசியல் நடக்க முடிகிறது என்றால் மக்களின் விழிப்புணர்ச்சியற்ற போக்குகள் மீதான அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைத் தான் இது உணர்த்துகிறது. இப்படிப்பட்ட நாட்டிலே – அறியாமை கொண்ட சமூகத்திலே – ஸ்டாலினும், மோடியும், செந்தில் பாலாஜியும் தான் கோலோச்சுவார்கள்.
வாழ்க ஜனநாயகம், வாழ்க ஊடக அறம்.
(சாவித்திரி கண்ணன்)
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/19276/modi-stalin-sendhil-balaji-udayanithi/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு