பெண் என்பவர் பெண் தான்; இழி வார்த்தைகளைத் தூக்கி எறியுங்கள்

பா.ஹேமாவதி

பெண் என்பவர் பெண் தான்; இழி வார்த்தைகளைத் தூக்கி எறியுங்கள்

பாலின நிகர்நிலையை நோக்கிய உந்து தலாக உச்சநீதிமன்றம் வெளி யிட்டுள்ள கையேடு, நீதிமன்ற தீர்ப்பு கள், வழக்குகள் மற்றும் வாதங்களின் போது, தற்போது பெண்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் புறந்தள்ளியுள்ளது.

எத்தனை எத்தனை  இழி வார்த்தைகள்

வழக்கறிஞர்களின் வாதங்கள் மட்டுமல்ல; நீதி பதிகளின் தீர்ப்புகளிலும் கூட, இதுநாள் வரை பெண் களைக் குறிக்க ‘வேசி’, ‘நடத்தை சரியில்லாதவள்’,‘ஒழுக்கம் கெட்டவள்’, ‘கற்புள்ள பெண்’, ‘மயக்கும்பெண்’, ‘விரும்பத்தகாத பெண் ‘ ‘பரத்தையர்’, ‘தளர்வான ஒழுக்கமுள்ள பெண்’, ‘காமக்கிழத்தி’, ‘ஊதாரி பெண்’, ‘அலங்காரம் செய்பவர்’ போன்ற இழிவான சொற்களே பல ஆண்டுகளாக நீதித்துறையால் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற வார்த்தைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுகிறது இந்தக் கையேடு. வழக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும், குற்றம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ‘பெண்’ என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கையேடு கூறியுள்ளது.   மேலும், ‘பாலியல் தொடர்பு கொண்டவள்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘திருமணத்திற்கு வெளியே உறவு’ என்றும் மாற்றியுள்ளது. இல்லாள், கடமை தவறாத மனைவி, கீழ் படிதலான மனைவி, நல்ல மனைவி என்பதற்கு பதிலாக ‘மனைவி’ என்று மாற்றியுள்ளது. ‘விபச்சாரி’ என்ற வார்த்தையை ‘பாலியல் தொழிலாளி’ என்றும்; திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தையை ‘திருமணம் ஆகாத பெற்றோ ருக்கு பிறந்த குழந்தை’; குழந்தை விபச்சாரம் என்பதை ‘கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை’; ‘ஈவ்டீசிங்’ என்பதை ‘தெரு பாலியல் துன்புறுத்தல்’ என மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது கையேடு. திரு நங்கைகளை சரியாக புரிந்து கொள்ளும் வகை யில் ‘மாற்றுப் பாலினத்தவர்’ போன்ற மரியாதையான வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்த கையேடு கூறியுள்ளது. 

ஆணாதிக்க கற்பிதங்கள்

‘பெண்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்கள்; முடிவுகளை எடுக்க தெரியாதவர்கள்’; ‘வீட்டு வேலை யைத் தாண்டி வேலைக்குப் போகாத பெண்கள் வீட்டிற்கு பங்களிப்பதில்லை’;  குழந்தைகள், முதி யோர்களை பெண்கள்தான் கவனிக்க வேண்டும் - என்பன உள்ளிட்ட பொதுவான கற்பிதங்கள் நீதி மன்ற வாதங்களிலும் தீர்ப்புகளிலும் வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற வேலைகளை “அனைத்து பாலின மக்களும் செய்ய சமமான திறன் கொண்டவர்கள்; பெண்கள் மட்டுமே இது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஆண்கள் பெரும்பாலும் நிபந்தனை விதிக்கிறார்கள்” என்று கையேடு விவரிக்கிறது. 

ஊதியமற்ற உழைப்பின்  மதிப்பு என்ன?

அதேவேளையில் ஆண்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவான வேலைகளையே பெண்கள் செய்வ தாக நம்பப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “பெண்களின் ஊதியமற்ற உழைப்பு குடும் பத்தின் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிப்பது மட்டு மல்லாமல், பணச்சேமிப்பையும் ஏற்படுத்துகிறது; அவர்களின் பங்களிப்புகள் பெரும்பாலும் கவ னிக்கப்படுவதில்லை, ஏனென்றால் அத்தகைய வேலை, குறைந்த மதிப்புடையது என்று ஆண்கள் நம்பு வதாக” கையேடு கூறுகிறது.  பொழுதுபோக்காக  பெண் குடிப்பதன் மூலமோ  புகைப்பிடிப்பதன் மூலமோ தன்னைத் தொடுவதற்கு அனுமதி தந்ததாக கூறும் வாதத்தை ஏற்க முடியாது; ஒரு பெண், இல்லை என்று சொன்னால், இல்லை என்று தான் அர்த்தம் எனச் சுட்டிக்காட்டுகிறது.

அதிகம் பாதிக்கப்படும்  பாலியல் தொழிலாளி

பெண் பாலியல் தொழிலாளியை பலாத்காரம் செய்தால் அது குற்றமாகாது என்றே கற்பிதம் செய்யப் பட்டிருக்கிறது. பாலியல் தொழிலாளிகள் தங்கள் தொழிலின் அடிப்படையில் அனைத்து ஆண்களுட னும் பாலியல் உறவில் ஈடுபட சம்மதிக்கமாட்டார்கள்; விருப்பம் இல்லாமல் நடைபெறும் பலாத்காரம் என்பது பாலியல் வன்புணர்வுக் குற்றமாகும்; பாலியல் வன்புணர்வுக்கு மிகவும் பாதிக்கப்படக் கூடிய வர்களில் பாலியல் தொழிலாளர்களும் அடங்குவர் என்பதை விவரிக்கிறது.

பெண்கள் சொல்வதே  பொய் தானா?

“பெண் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எதிர்த்து புகாரளிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. குற்றவாளி ஒரு குடும்ப உறுப்பினராக, ஒரு முத லாளியாக, அப்பெண்ணின் மீது அதிகாரம் செலுத்தும் நபராகக் கூட இருக்கலாம். எனவே, உயிர் பிழைத்த பாதிக்கப்பட்ட பெண், நீதி கேட்டுப் போராடு வதில் உள்ள சவாலும், ஆண்கள் முன்னிலையில் (காவல்அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உட்பட) பாலியல் வன்கொடுமைகளைப் புகார ளிப்பதில் பெண்களுக்கு உள்ள தயக்கமும், கொடுமை களுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.  இதனைப் பயன்படுத்தி, ‘பெண்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்’ என்று  கூறும் வாதம் தவறானது; ஒவ்வொரு வழக்கும் அதன் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, பெண்களின் நேர்மையைப் பற்றிய அனுமானங்களை நீதிமன்றங்களே உருவாக்கக் கூடாது” என்று கையேடு அறிவுறுத்துகிறது.

நீதியின் ஜோதியா?  கட்டப் பஞ்சாயத்தா?

இந்திய நீதிமன்றங்கள் நீதியின் ஜோதியாகவும், மனித உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு உந்து சக்தியாகவும் இருக்க வேண்டும். ஆனால், மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்கள் மட்டத்தில் பெண்கள் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களில் நீதி வழங்குவதில் பரந்த இடைவெளி உள்ளது. பெரும்பா லும் பாலியல் குற்றங்களில் சட்ட உண்மைகளை விட, நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் நடத்தையில் கவனம் செலுத்துவதைக் காணலாம்.  பஞ்சாப் மாநிலத்தில் குர்மித் சிங் வழக்கில் “ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்கள் பொய் சொல்கிறார்கள்” என்று உயர்நீதிமன்றம் கூறியது; அபர்ணா பட்  பாலியல் வன்புணர்வு வழக்கில், “பெண்கள் அநாகரீகமாக நடந்து கொண்ட தால், ஆடைகளால் நடவடிக்கையை தூண்டியதால், “இந்திய” பெண்களுக்குத் தகுதியற்ற முறையிலான நடத்தையால்தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்”  என்று கூறியது;

மதுரா வழக்கில் பாதிக் கப்பட்ட மைனர் (சிறுமி), தன் விருப்பத்தின் பேரில் தான் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும், “உடலுறவில் ஈடுபடுவது அச்சிறு மிக்கு பழக்கம்” என்றும் கூறியது; பீகார் நீதிமன்றத் தில், “நல்ல பெண்கள் என்றால், பாலியல் வன் புணர்வை விட மரணத்தை விரும்புவார்கள்” என்று கூறியது; தருண் தேஜ்பால்வழக்கில் (2019), பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்கள் வெளித் தோற்றத்தில் “மகிழ்ச்சியாக” இருப்பதாக கோவா நீதி மன்றம் கூறியது; கர்நாடகா நீதிமன்றம் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது, “பலாத்காரத்தில் இருந்து தப்பிய  பெண் பாதிக்கப்பட்டவரைப் போல் தோன்றவில்லை; வன் புணர்வுக்குப் பிறகு தூங்குவது  இந்தியப் பெண்ணு க்குத் தகுதியற்றது” என்று கூறியது- என, இந்திய நீதிமன்றங்கள், பெண்களை வெவ்வேறு தருணங்க ளில், வெவ்வேறு வழக்குகளில் எந்த அளவிற்கு இழி வாக சித்தரித்துள்ளன என்பதை, உச்சநீதிமன்றத்தின் கையேடு வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பாலியல் குற்றத்திலிருந்து தப்பிவிடலாம் என்று தீர்வு கூறுவது; பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் சொல்லும் வாதத்தைக் கேட்டு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது; ஆடைக ளைக் களையாமல் மார்பகங்களைப் பிடிப்பதும், தொ டுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது போன்ற  ஏராளமான தீர்ப்புகளே, இந்த கையேடு வெளிவரக் காரணமாகும்.

நீதிபதிகளின் பொறுப்பு

இந்த கையேடு நீதிபதிகளுக்கும், வழக்குரை ஞர்களுக்கும் வழிகாட்டியாக செயல்படுவதை நோக்க மாகக் கொண்டுள்ளது, ஒரு நீதிபதி பயன்படுத்தும் மொழியின் வார்த்தைகள் சட்டத்தின் விளக்கத்தை மட்டுமல்ல,  சமூகத்தைப் பற்றிய அவர்களின் உணர் வையும் பிரதிபலிக்கிறது.  அனைத்து வகையான பாலினச் சார்புகளுக்கு எதிராகவும் நீதிபதிகள் விழிப் புடன் இருக்க வேண்டும்; ஒவ்வொரு நபரும், அவர்களின் பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், சட்டத் தின் முன் சமமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் பன உரத்துக்கூறுகிறது.  இது நிச்சயம் ஓர் அதிர்வை ஏற்படுத்தும். இனியா வது, பெண் குறித்த இழி வார்த்தைகள் தூக்கி எறி யப்படட்டும். பெண் என்பவர் பெண் தான். 

கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

-தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு