10 நாள்களாகத் தொடரும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்; கோரிக்கைகளும் பின்னணியும் என்ன?

விகடன் இணைய இதழ்

10 நாள்களாகத் தொடரும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்; கோரிக்கைகளும் பின்னணியும் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் ஆலையில் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை சாம்சங் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி தருகிறது.

"இந்தியாவோட பொருளாதாரம் வளருது... அது வளருது... இது வளருதுனு சொல்றாங்க. ஆனா என்னோட சம்பளம் மட்டும் பல வருசமா வளராம, அப்படியே இருக்கு" என்ற கண்ணீர் குரல்கள் சுங்குவார்சத்திரத்தில் கேட்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஆலை அருகே...

'எங்களோட புது யூனியன் சங்கத்தை அங்கீகரிக்கணும்'

'சம்பளத்தை உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தணும்'

'எங்களுக்கு வேலை செய்யறதுக்கு ஏத்த சூழலை உருவாக்கி தரணும்'

இந்த மூன்று கோரிக்கைகளோடு, சுட்டெரிக்கும் வெயிலில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் சாம்சங் ஆலை...

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் சாம்சங். இது இந்தியாவில் இரண்டு இடங்களில் இயங்கி வருகிறது. ஒன்று உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டாவில், இன்னொன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீபெரும்புதூரில்.

தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் ஆலையில் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலை சாம்சங் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி தருகிறது. இது இந்தியாவிலிருந்து சாம்சங் நிறுவனத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

சம்பள பிரச்னை...

சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னையானது சரியான சம்பள உயர்வு இல்லாமல் இருப்பது. 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலையிலேயே பணிபுரியும் ஊழியர்களுக்குக் கூட சம்பளம் இன்னும் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டவில்லை என்றும், இந்த சாம்சங் ஆலையில் கிடைக்கும் அதிகபட்ச சம்பள உயர்வே ரூ.3,000 தான் என்றும் தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

இன்று (செப்டம்பர் 20) வெளியாகி உள்ள சாம்சங் தொழிலாளர் ஒருவரின் மனைவியுடைய கால் ரெக்கார்டரில், "என்னோட கணவர் 12 வருசமா அங்க வேலை பாக்கறாரு. ஆனா, அவருக்கு இதுவரைக்கு எந்த சம்பள உயர்வுமே இல்லை" என்று சொல்கிறார். இந்த கால் ரெக்கார்டரில் அவர் சாம்சங் நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஒருவரிடம் பேசுகிறார்.

யூனியனை அங்கீகரியுங்கள்!

2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சாம்சங் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக சங்கம் இல்லாமல், கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் இந்தியத் தொழிற்சங்கங்களின் உதவியுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சங்கத்தை இன்னமும் சாம்சங் நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. இந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

வேலைப்பளு...

நிர்வாகத்தின் பணியழுத்தம் தொழிலாளர்களின் மனநிலையை மிகவும் பாதிக்கிறது என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். மேலும், எந்த இடைவேளையும் இல்லாமல் தொடர்ச்சியாக 4-5 மணி நேரம் வேலை பார்ப்பது அழுத்தம் தருகிறது என்றும், பாதுகாப்பான பணிச்சூழல் இல்லை என்றும் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு நாளில் அல்ல...

தொழிலாளர்கள் எடுத்த உடனேயே போராட்டத்தில் இறங்கவில்லை. அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம், தங்களுக்கு உள்ள குறைகளையும், கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி போராட்டம் குறித்த நோட்டீஸ் ஒன்றை சாம்சங் இந்தியா நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

கைது நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தக் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். அப்போது அனுமதி அளித்துவிட்டு, பின்னர் செப்டம்பர் 15-ம் தேதி அந்த அனுமதி திரும்பப் பெற்றுள்ளது காவல்துறை.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி, சங்கத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் அவரது குடும்பத்தினரிடம் சொல்லப்படவில்லை. மேலும் அவர் நீதிமன்றத்திற்கும் அழைத்துச் செல்லப்படவில்லை.

இவர் மட்டுமல்லாது, கிட்டதட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

சமாதனத்திற்கு ஸ்நாக்ஸ்!

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சாக்லேட், பழங்கள் உள்ளிட்ட 'ஸ்நாக்ஸ் கிட்' அனுப்பி வருகின்றனர். மேலும் வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் தொழிலாளர்களின் குடும்பங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்படி பணிக்குத் திரும்பவில்லை என்றால் வேலை பறிபோகும் என்றும் நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர். இன்னும் சிலரிடம் பேசிய நிர்வாகம், சம்பளத்தை உயர்த்தி தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இது ஒரு முக்கியமான சமயம்!

தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கம் தொடங்கி, குடும்பங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது வரை ஆலை நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணம் பண்டிகை காலம் என்பதால்தான். ஆயுத பூஜை, தீபாவளி என இனி அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருக்கிறது. இந்த சமயத்தில் வேலைநிறுத்தம் நடந்தால், ஆலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விற்பனையும் பெரிதாக அடிப்படும். இப்போது ஆலையில் 20 சதவிகித தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தற்போதே இந்த சாம்சங் ஆலையின் உற்பத்தி 80 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடையாள அட்டை...

கிட்டதட்ட 10 நாள்களாக நடந்துவரும் போராட்டத்திற்கு சாம்சங் ஆலை கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், "சட்டவிரோதமாக, வேலை நிறுத்தத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ள தொழிலாளர்களின் அடையாள அட்டை 23-ம் தேதி முதல் முடக்கப்படும். பணிக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களைத் தடுத்தால், தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இங்கே மட்டுமல்ல!

கடந்த ஜூலை மாதம், தென் கொரியாவிலும் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று 6,000-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

யூனியன்கள் வேண்டாம்...

பொருளாதார நிபுணர்கள் பேசுகையில், "இந்தியாவில் இயங்கும் பல சர்வதேச நிறுவனங்கள் இந்தியச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சங்கங்களை ஆதரிப்பதில்லை. இதற்கு, 'தொழிலாளர்கள் ஒன்று சேரக்கூடாது. ஒன்று சேர்ந்தால் தேவையில்லாத பிரச்னை எழும்' என்ற அவர்களின் எண்ணமே முக்கிய காரணம்.

சாம்சங் நிறுவனம் மட்டுமல்ல, இன்னும் பல நிறுவனங்கள் பிற நாட்டு ஊழியர்களை ஒப்பிடும்போது, இந்தியத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தருகின்றனர். இதில் பல நிறுவனங்களில் சங்கங்கள் இல்லாததால், இந்தப் பிரச்னை பெரிதாகப் பேசப்படுவதில்லை.

ஆலைகள், நிறுவனங்கள் போன்ற இடங்களில் சட்டப்படியான பணிச்சூழல் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு கட்டாயம் சரிபார்க்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் தொடங்கி பிரதமர் வரை வெளிநாட்டிற்குப் பயணம் செல்கின்றனர். அப்படி ஈர்க்கப்பட்டு வந்த முதலீடுகள் ஆலைகளாகவோ, நிறுவனங்களாகவோ மாறும்போது அதன் செயல்பாடுகளைக் கவனிப்பது அரசின் முக்கிய கடமை.

மேலும் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அரசின் பணி முடிந்துவிடுவதில்லை. வேலைப் பெற்ற தொழிலாளர்களின் பணிச்சூழல் எப்படி இருக்கிறது, ஊதிய உயர்வு கிடைக்கிறதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறுகின்றனர்.

- விகடன் இணைய இதழ்

https://www.vikatan.com/government-and-politics/protest/a-10-day-strike-by-samsung-workers-demands-and-background?utm_source=social&utm_medium=whatsapp&utm_campaign=jv_community

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு