வெனிசுலா பெட்ரோல் எங்களுக்குத்தான் சொந்தம்.. களமிறங்கிய ரஷ்யா.. வாயை பிளக்கும் டிரம்ப்.. போச்சு
ஒன் இந்தியா தமிழ்
tamil.oneindia.com /news/new-york/now-russia-wants-to-take-control-over-the-highest-crude-oil-deposits-of-venezuela-765690.html
Shyamsundar I 1/14/2026
நியூயார்க்: அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் தொழில்துறையை மீட்டெடுக்க உதவும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலாவில் ரஷ்ய அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் அனைத்து எண்ணெய் சொத்துக்களுக்கும் ரஷ்யா உரிமை கோரியுள்ளது. அதாவது அந்த எண்ணெய் எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கோரி உள்ளது. இந்த விவகாரம் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Roszarubezhneft நிறுவனம் முதல் ஆளாக அமெரிக்காவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. Roszarubezhneft இன் வெனிசுலாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் ரஷ்ய அரசின் உடைமையே என்று அந்நிறுவனம் ஒரு முக்கிய அறிக்கையின் மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ரஷ்ய பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு பிரிவுக்குச் சொந்தமான Roszarubezhneft, 2020 இல் பதிவு செய்யப்பட்டது. ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "வெனிசுலாவில் உள்ள Roszarubezhneft JSC இன் அனைத்து சொத்துக்களும் ரஷ்ய அரசின் உடமையாகும். இவை ரஷ்யத் தரப்பால் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு, வெனிசுலாவின் பொலிவாரிய குடியரசின் சட்டம், சர்வதேச சட்டம் மற்றும் ரஷ்யாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையேயான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தக் கடமைகளுக்கு முழுமையாக இணங்கி வாங்கப்பட்டுள்ளன" என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.
Roszarubezhneft, வெனிசுலா அரசின் எண்ணெய் நிறுவனமான PDVSA உடன் ஐந்து எண்ணெய் உற்பத்தி கூட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. வெனிசுலாவில் உள்ள தனது சொத்துக்களை மேலும் மேம்படுத்த Roszarubezhneft முன்னுரிமை அளித்து தீவிரமாக திட்டமிட்டுள்ளது.
அது மட்டுமின்றி ரஷ்யாவின் நிறுவனங்கள் வெனிசுலாவில் வைத்து இருக்கும் மற்ற எண்ணெய் சொத்துக்களுக்கும் கூட ரஷ்யாவே சொந்தக்கார நாடு.. அதற்கு அமெரிக்கா உரிமை கொண்டாட கூடாது என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா எண்ணெய்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவின் எண்ணெய் வருவாயை அமெரிக்காவே கட்டுப்படுத்தும் வகையில் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார். மேலும் இந்த உத்தரவில் அமெரிக்கக் கருவூலக் கணக்குகளில் உள்ள நிதியைக் கடனாளர்களிடமிருந்து தடுக்கவும், தேசிய அவசரநிலையை அறிவிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகையின் தகவல் குறிப்பின்படி, இந்த ஆணை, வெனிசுலாவின் எண்ணெய் வருவாயைக் மற்றவர்கள் கைப்பற்றுவதைத் தடுக்கிறது. கடன்கள்/சட்டக் கோரிக்கைகளுக்காக நிதியைப் பறிமுதல் செய்வதை இது தடுக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை மேம்படுத்த இந்நிதிகள் பாதுகாக்கப்படும் என்று ஆணை குறிப்பிட்டு உள்ளது.
இந்த அவசர ஆணை, வெனிசுலாவின் எண்ணெய் வருவாய் அந்நாட்டில் "அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை" உருவாக்கப் பயன்பட வேண்டும் என்கிறது. நீதித்துறை நடவடிக்கைகள், தீர்ப்புகள் உள்ளிட்ட சட்டரீதியிலான உரிமை கோரல்களிலிருந்து நிதியைப் பாதுகாக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்றங்களைத் தவிர, இந்நிதிக்கு வேறு பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது வெனிசுலா நாட்டு வருவாயை அமெரிக்கா பயன்படுத்துவதை வேறு எந்த நாடும் தடுக்க முடியாது.
வெனிசுலா எண்ணெய் வளம்
வெனிசுலா நாட்டை நாங்களே ஆளப்போகிறோம்.. இனி அங்கே உள்ள எண்ணெயை வர்த்தகம் செய்யும் வரை, அதை பயன்படுத்தும் வரை சில முதல் பல காலங்களுக்கு நாங்கள் வெனிசுலா நாட்டை ஆளப்போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த நிலையில் டிரம்ப் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசம் கொண்டு வந்துள்ளது.
உலகில் அதிக கச்சா எண்ணெய்.. அதிக தங்கம் கொண்ட நாடு எது என்று கேட்டால் அதற்கு சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் அது தவறு. உலகில் அதிக கச்சா எண்ணெய் உள்ள நாடு வெனிசுலா. ஆனால் அதன் எண்ணெய் உற்பத்தி உலகின் 0.35 சதவிகித எண்ணெயை வர்த்தகத்தை விட குறைவு. இந்த வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கையில் எடுக்கும் நாடு.. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை ஆட்டிப்படைக்கலாம். முறையாக கச்சா எண்ணெயை பிரித்து விற்பனை செய்தால்.. வெனிசுலாவின் வளம்தான் உலகையே ஆட்டிப்படைக்கும்.
சீனா - ரஷ்யா அட்டைக்கத்தி
அதிலும் சீனா போன்றவை வெனிசுலாவின் எண்ணெய்யை அதிகம் வாங்குகிறது. அப்படிப்பட்ட வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம்.. சீனா, ரஷ்யா எல்லாம் இனி அமெரிக்காவை ஏக்கமாக பார்க்க மட்டுமே முடியும். இனி அமெரிக்க டாலர் மதிப்பு உச்சம் அடையும்.. அமெரிக்காவின் எண்ணெய் மதிப்பு உயரும்.. அமெரிக்காவின் கடன் பாதிக்கு பாதி குறையும்.. கிட்டத்தட்ட சீனா, ரஷ்யாவை அட்டைக்கத்தியாக்கும் அளவிற்கு வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.
வெனிசுலா உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளது. இது சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு வெனிசுலாவில் உள்ள ஓரினோகோ பெட்ரோலியம் பெல்ட் இந்த வளத்தின் முக்கிய ஆதாரம். இங்கு நூற்றுக்கணக்கான பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்புள்ளதாகக் கணக்கிடப்படுகிறது.
ஓரினோகோ கச்சா எண்ணெய் கனமானது; பிசுபிசுப்புத் தன்மையும் அதிக சல்பரையும் கொண்டது. இதை பிரித்தெடுப்பதும், சுத்திகரிப்பதும் சிக்கலானவை. நீராவி உட்செலுத்துதல், இலகுரக எண்ணெயுடன் கலத்தல் போன்ற கூடுதல் செயல்முறைகள் தேவைப்படுவதால், உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது.
வெனிசுலா எண்ணெய் வளம்
வரலாற்று ரீதியாக ஒரு நாளைக்கு பல மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்த வெனிசுலா, தற்போது 1.0-1.2 மில்லியன் பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறது. பல ஆண்டுகளாக பணம் இல்லாமல், முதலீடு கிடைக்கமால், , நிர்வாகக் கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக வெனிசுலா வறுமையில் இருந்து வந்தது.
பெரும் எண்ணெய் இருப்புக்கும், குறைந்த உற்பத்திக்கும் உள்ள இடைவெளி வெனிசுலாவை வளங்கள் நிறைந்த, ஆனால் பணமில்லாத நாடாக மாற்றியது. தங்களிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பை ஏற்றுமதிக்குரிய எண்ணெயாக மாற்றுவதே முக்கிய சவால்.
வெனிசுலா - அமெரிக்கா
முக்கியமாக அண்மைய மாதங்களில், வெனிசுலாவின் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் குவியல் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி தாமதத்தாலும், கப்பல் தட்டுப்பாட்டாலும் வெனிசுலா தங்களிடம் உள்ள பெட்ரோலை விற்க முடியாமல் திணறி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு பொருளாதார தடைகள், கடலோர தாக்குதல்கள், கடற்படை தாக்குதல்கள் காரணமாக வெனிசுலாவால் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் மேலும் தடபட்டது .
பல்வேறு பொருளாதாரத் தடைகள், கப்பல்கள் பறிமுதல், சர்வதேச செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளால் பல கச்சா எண்ணெய் சரக்குகள் சிக்கியுள்ளன. இதனால் கடந்த வருடம் முழுக்க அந்த நாடு எண்ணெயை பெரிதாக ஏற்றுமதி செய்யாமல்.. சேமித்து வைத்துக்கொண்டே இருந்தது. 2025 வருடம் இறுதியில் அங்கே எண்ணெய் சேமிப்பு கிடங்கு முழுமையாகி.. இனிமேல் அங்கே எண்ணெய் சேமிக்க கிடங்கே இல்லை என்ற சூழல் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஏற்கனவே சேமித்து வைத்து இருக்கும் பெட்ரோல், பிரிக்கப்படாமல் இருக்கும் கச்சா எண்ணெய், வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் கச்சா எண்ணெய் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. உலகின் மிக அதிக பெட்ரோ கெமிக்கல் நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம்.. உலகின் பெட்ரோல் சாம்ராஜ்ஜியத்தை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.
ஒன் இந்தியா தமிழ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு