வெற்றி பெற்ற 543 எம்.பி.,க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்!

தீக்கதிர்

வெற்றி பெற்ற 543 எம்.பி.,க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 எம்.பி.,க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 543 பேர் எம்.பிக்களாக வெற்றி பெற்றனர். இந்த நிலையில், 543 எம்.பி.க்களில் 92 சதவீதம் பேர், அதாவது 504 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தெலுங்கு தேச கட்சியின் எம்.பி., சந்திரசேகர் பெம்மசானி ரூ. 5,705 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 2 ஆவதாக பாஜக எம்.பி., விஸ்வேஷ்வர் ரெட்டி உள்ளார். இவர் தெலுங்கானா மாநிலம் செவல்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.4568 கோடி ரூபாய் ஆகும். 3ஆவதாக அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்.பி. நவீன் ஜிண்டால் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1241 கோடி ரூபாய் ஆகும்.

2019 ஆம் ஆண்டு 475 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014இல் 443 பேரும், 2009இல் 315 பேரும் கோடீஸ்வரர்களாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தலுக்கு தேர்தல் தேர்ந்தெடுக்கப்படும் கோடீஸ்வர எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது தெரியவருகிறது.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவின் 240 எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.50.4 கோடிகளாக இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 99 காங்கிரஸ் எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22.93 கோடிகளாகவும், 22 திமுக எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.31.22 கோடிகளாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி, ரூ.10 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை 227 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- தீக்கதிர்

https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/of-the-543-mps-who-won-504-were-millionaires

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு