மின் கட்டண உயர்வு: அடப் பாவிகளா..! கொள்ளையோ கொள்ளை!

அறம் இணைய இதழ்

மின் கட்டண உயர்வு: அடப் பாவிகளா..! கொள்ளையோ கொள்ளை!

தமிழ்நாடு மின்சார வாரியம், ஒழுங்கு முறை ஆணையம், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய மூன்று அமைப்புகளும் கைக் கோர்த்து செய்யும்  ஈவு இரக்கமற்ற ஊழல், முறைகேடுகள், தகிடு தத்தங்கள் பேரதிர்ச்சி தருகின்றன. தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் செழிக்கின்றன! TNEB க்கோ 2 லட்சம் கோடி கடன்! ஏன்? எப்படி?

ஒவ்வொரு முறை மின் கட்டண உயர்வுக்கு பிறகும் தமிழ்நாடு மின்சார வாரியம், ஒழுங்கு முறை ஆணையம், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய மூன்று அமைப்புகளும் உற்சாகம் பெற்று மேன்மேலும் அதிக முறைகேடுகளைச் செய்கிறது! இந்த முக்கோணக் கள்ளக் கூட்டணி உள்ள வரை எக் காலத்திலு நியாயனாமான மின் கட்டணம் சாத்தியமில்லை என்கிறார் என்கிறார் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் தலைவர் சா. காந்தி.

”உதாரணத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 18,000 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது என்று சொல்லி, 2022 ஆம் ஆண்டில் அதிரடியாக கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு. தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டுமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.50 என்ற விலையிலிருந்து ரூ. 12 என உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 14, 550 கோடிகள் கூடுதல் வருமானம் கிடைத்தது!

ஆனால், அடுத்த ஆண்டே, ”28,000 கோடிகள் நஷ்டம் கூடிவிட்டது’’ என்றது தமிழக அரசு.

தற்போது மீண்டும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது  திமுக அரசு!

உண்மையில் நஷ்டம் ஏற்படுவதற்கே வாய்ப்பில்லை. மிக லாபம் பார்க்கக் கூடிய ஒரு அமைப்பு தான் மின் வாரியம்! சிலர் லாபத்திற்காக மின்வாரியம் நஷ்டத்தில் தள்ளப்படுகிறது’’ என்கிறார் காந்தி.

ஒரு உற்பத்திப் பொருளுக்கு இவ்வளவு தான் விலை என்றால், அதை விட அதிக விலைக்கு ஏன் அந்தப் பொருளை வாங்குகிறது தமிழக அரசு..ஏன்?

‘தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசின் உதய் திட்டம் நிர்பந்திக்கிறது. இதனால் ”நான் உயிரோடு இருக்கும் வரை உதய்  மின் திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன்” என்று உறுதி காட்டினார் ஜெயலலிதா.  தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் தமிழக அரசின் மின் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வெறும் 20 சதவிகிதமே! ”தமிழ்நாடு அரசு இனி மின் உற்பத்தியில் ஈடுபட கூடாது” என மத்திய அரசின் உதய் மின் திட்டம் நெருக்கடி தருகிறது. தனியாரிடம் தான் மின்சாரம் கொள்முதல் செய்தாக வேண்டும் என்பதே இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்.

தமிழக அரசுக்கு சொந்தமான நவீன அனல் மின் நிலையங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவு ஐந்து ரூபாய் தான்! ஆனால், தனியாரிடமோ ரூபாய் ஆறில் இருந்து 26 ரூபாய் வரை மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது, தமிழக அரசு! ஏன் இவ்வளவு அதிக விலைக்கு வாங்க வேண்டும்..? ஆறு ரூபாய் கூட ஏற்கலாம். ஆனால், 12,16,21,26  என ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு விலைக்கு ஏன் வாங்க வேண்டும் என்றால், டிமாண்டைப் பொறுத்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இஷ்டத்திற்கு விலை ஏற்றிக் கொள்ள மத்திய அரசின் சட்டம் இடம் கொடுக்கிறது.

அந்த வகையில் தான் தமிழ்நாட்டின் அதானியின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் பெறுகிறது தமிழக அரசு.

இந்தக் காரணத்திற்காகவே தமிழக மின் நிறுவனமான டான்ஜெட்கோவும் தொழிற்சாலைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை, இரவு ஆறு மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 வரையும் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு  20% கட்டண உயர்வை அறிவித்து நியாயமற்ற கட்டணத்தை வாங்குகிறது. இந்த அதிக கட்டணத்தால் சிறு, குறு நிறுவனங்களும், நடுத்தர நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மற்ற நேரங்களில் சராசரி கட்டணம் என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு உற்பத்தியை நிறுத்தவும் செய்கிறார்கள். இதனால் தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்திக்கிறார்கள்! தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு என்பது அதன் உற்பத்தி செலவை அதிகரிக்க வைத்து விடுவதால் உற்பத்திப் பொருளின் விலையும் கூடுகிறது.

மத்திய பாஜக அரசு தனியார்களை கொழுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருபுறம் மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்கிறது என்றால், தமிழக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இங்குள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகள் அளவில்லாதது.

பிள்ளை பெருமா நல்லூர் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் (PPN) என்பது 2012 ஆம் ஆண்டே மின் உற்பத்தியை நிறுத்தி விட்டது. இந்த நிறுவன உரிமையாளர் அப்பல்லோ மருத்துவமனை பிரதாப் ரெட்டி. ஆனால், சமீபத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து 637 கோடி ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக கணக்கு எழுதி உள்ளனர்.

தனியார் மின் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை தயாரித்தாலும் கூட தமிழக அரசின் மின் கட்டமைப்பை பயன்படுத்தி தான் அவர்கள் மின்சாரத்தை எங்கும் கொண்டு செல்ல முடியும். ஏனென்றால், தமிழக மின்வாரியமானது 9 லட்சம் கீ.மீட்டர் அளவுக்கு மின் பாதைகளையும், 4 லட்சம் மின் மாற்றிகளையும், 2000 துணை மின் நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசு கஜானாவிற்கு பெரும் வருமானத்தை கொண்டு வரலாம். ஆனால், இந்த மின்சாரத்தை குறைவாக கணக்கிட்டும், சில நேரங்களில் கட்டணத்தையே வசூலிக்காமல் தவிர்ப்பதன் மூலமும், தேவையற்ற சலுகைகள் செய்தும் கையூட்டுகள் வாங்கி கஜானாவைக் காயப் போடுகிறார்கள்! இதனால் தனியார் நிறுவனங்கள் ஊழல் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கூட்டணியால் கொள்ளை ஆதாயம் அடைகின்றன.

உயிரைக் கொடுத்து ஆண்டுக் கணக்கில் வேலை பார்க்கும் மின் வாரிய ஊழியர்களுக்கு அடிமாட்டுக் சம்பளம் தந்து ஒப்பந்தக் கூலிகளாக வைத்து ஏய்த்து வரும் ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் பணத்தை விரையம் செய்கின்றனர் எனப் பார்த்தால் பேரதிர்சியாக உள்ளது.

இப்படி என்னென்ன வகைகளில் எல்லாம் தமிழக மின் வாரியம் நஷ்டத்தை சந்திக்கிறது என ஒரு பட்டியலே தருகிறார் முன்னாள் மின் வாரிய பொறியாளர் சா.காந்தி;

இதோ இந்த முக்கூட்டணியால் தமிழகம் சந்திக்கும் நஷ்டங்கள்!

  • தனியார் மின்சாரத்தை கொண்டு செல்வதில் முறைகேடு 1560 கோடி!
  • தனியாரிடம் வசூலிக்காமல் விட்ட சர்சார்ஜ் மூலமாக 645 கோடி!
  • 86,00,000 KW காற்றாலை மின்சாரத்தை சேமிப்பதில் செய்யும் கோளாறு கணக்கு 1905 கோடி!
  • தனியாரிடம் மின்சார அளவினை சட்டப்படி கணக்கிடாத வகையில் 520 கோடி!
  • காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத்தை கட்டமைப்பில் இணைத்து பயன்படுத்தும் வகையில் செய்யும் முறைகேடுகளால் 3,728 கோடி!
  • ஒரு யூனிட் கூட  PPN நிறுவனத்திடம் வாங்காமல் வாங்கியதாக காட்டிய கணக்கு 637 கோடி!
  • அரசின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களை முடக்கிவிட்டு, தனியாரிடம் அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்த வகையில் ஏற்பட்ட நஷ்டம் 9,896 கோடி!

இப்படியாகத் தான் ஆண்டுக்காண்டு செய்த ஊழல்களால் தற்போது மின் வாரியத்தின் கடன் சுமார் இரண்டு லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது.

இது போல ஊழல் நிர்வாகம் செய்பவர்களுக்கு மின் கட்டணத்தை பத்து மடங்கு ஏற்றித் தந்தாலும் கூட, அதற்கேற்ப ஊழலை அதிகமாக்கிக் கொண்டே போவார்களேயன்றி, நியாயமான மின் கட்டணம் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை. ஆண்டுக்காண்டு மின் கட்டணங்களை அதிகரித்து ஊழல் செய்வதில் உச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்!

(சாவித்திரி கண்ணன்)

- அறம் இணைய இதழ்

https://aramonline.in/18608/tneb-current-corruption/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு