ஆக்கஸ்: சீனாவை எதிர்க்கும் நீர்மூழ்கிகள் தயாரிக்க பிரிட்டன் நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?

பிபிசி நியூஸ் தமிழ்

ஆக்கஸ்: சீனாவை எதிர்க்கும் நீர்மூழ்கிகள் தயாரிக்க பிரிட்டன் நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரிட்டனின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் பெற்றுள்ளது.

2030 களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த விவரங்களை மார்ச் மாதம், மூன்று நாடுகளும் அறிவித்தன.

BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சார்லஸ் வுட்பர்ன் கூறுகையில், "இந்த முக்கியமான, மூன்று நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை நிறைவேற்றுவதில் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு இருக்கிறது என்ற தகவலால் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த தசாப்தத்தின் இறுதியில் கப்பல் கட்டும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2028 ஆம் ஆண்டுக்கான திட்டப் பணிகளுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று BAE தெரிவித்துள்ளது.

ஆக்கஸ் (AUKUS) திட்டம் என்றால் என்ன?

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்தன.

இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக்கஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

"இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, "கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்" ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

"இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்டன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

சீனாவின் எதிர்வினை என்ன?

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா இத்திட்டம் குறித்து விமர்சித்தது.

"பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும் திட்டம்" என சீனா அப்போது கூறியிருந்தது. "இது காலாவதியான பனிப்போர் மனநிலை" என்றும் குற்றம்சாட்டியிருந்தது.

"ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது" என்று "குளோபல் டைம்ஸ்" செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

சீனாவை எதிர்க்க ஆஸ்திரேலியா தேர்வு செய்யப்பட்டது ஏன்?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா விளங்கி வந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையே பல பிணக்குகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.

இப்படியொரு சூழலில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பகையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிரிட்டன் நிறுவனத்திடம் நீர்மூழ்கி தயாரிப்புப் பணி ஒப்படைக்கப்பட்டது ஏன்?

இந்நிலையில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தின் புதிய விவரங்களை நேச நாடுகள் தற்போது வெளியிட்டுள்ளன.

முதல் SSN-Aukus நீர்மூழ்கிக் கப்பலை 2030 களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டும் SSN-Aukus நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும். இது பிரிட்டன் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

"ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இந்த பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு என்பது, நீண்ட காலத்திற்கு செயல்திறன் மிக்க பங்களிப்பை அளிக்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கானது என்பது மட்டுமல்லாமல், பிரிட்டனுக்குத் தேவைப்படும் நமது வியூகங்களைப் பராமரிக்கவும், உலகளாவிய நாடுகளின் வரிசையில் எங்களின் முன்னணி இடத்தைப் பாதுகாக்கவும் உதவும்," என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மான்செஸ்டரில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கேற்கையில் கூறினார்.

ராயல் நேவியால் இயக்கப்படும் மிகப்பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மேம்பட்ட தாக்குதல் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலாக SSN-Aukus இருக்கும் என்று BAE கூறியுள்ளது. மேலும் அது கம்ப்ரியாவில் இருக்கும் பாரோ-இன்-ஃபர்னஸில் உள்ள அந்நிறுவனத்தின் தளத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் அஸ்டுட் கப்பலைப் போன்றதாகவே இருக்கும்.

இந்த ஒப்பந்தம், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் பாரோ-இன்-ஃபர்னஸ் கப்பல் கட்டும் தளத்தில் பல ஆண்டுகளுக்கு வேலை அளிக்கும் திட்டமாக இருக்கும்.

மேலும், இந்த ஒப்பந்தம் அந்த தளத்தில் குறிப்பிடத்தக்க முதலீடாக இருப்பதோடு, மேலும் ஐந்தாயிரம் பேருக்கு வேலை அளிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

BAE நிறுவனம் பிரிட்டனில் 39,600 நபர்களை வேலைக்கு வைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 93,000 க்கும் அதிகமான உலகளாவிய பணியாளர்களுக்கு வேலை அளித்துள்ளது என்று இந்நிறுவனத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள மற்ற பெரிய பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுக்கும் ஆக்கஸ் ஒப்பந்தத்தில் இருந்து வருமானம் கிடைக்கும்.

SSN-Aukus கப்பல்களுக்கு சக்தி அளிக்கும் அனைத்து அணு உலை ஆலைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்கும் என்று மார்ச் மாதம் உறுதி செய்யப்பட்டது .

ரோல்ஸ் ராய்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக டெர்பியில் உள்ள அதன் ரேன்ஸ்வே கட்டுமானத் தளத்தின் அளவை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவதாக கடந்த ஜுன் மாதம் கூறியிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தின் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பராமரிக்கும் நிறுவனமான பாப்காக் இன்டர்நேஷனல், SSN-Aukus வடிவமைப்பில் பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று கூறியது.

செப்டம்பரில் 2021 இல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டணிக்கு எதிராக சீனா பலமுறை விமர்சித்துள்ளது.

எது எப்படி என்றாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மூன்று மேற்கத்திய நாடுகளும் இணைந்து ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

- பிபிசி தமிழ்

https://www.bbc.com/tamil/articles/c97myymgj0go

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு