ஊழலில் வரலாறு காணா சாதனை படைத்த பாஜக!
அறம் இணைய இதழ்
உத்தமர் போல் தோற்றம் காட்டி, உச்சபட்ச ஊழலில் உலக சாதனை படைத்த ஒரே கட்சி பாஜக தான்! ஊழல் பட்டியலை எழுதும் போதே மனம் பதைக்கிறது..! இத்தனை விதமான ஊழல்களா..? வாவ்! திருடன் கையில் கொடுக்கப்பட்ட சாவியாக அரசு அதிகாரம் துஷ்பிரயோகமானதை புட்டு, புட்டு வைக்கிறார் அமர்ஜித் கெளர்
2014 ல் தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக வானது தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. ஆனால், தார்மீகரீதியலும், அரசியல்ரீதியலும், ஒழுக்கரீதியிலும் அந்தக் கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நம்ப முடியாத அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது.
அரசியல் கட்சியான பாஜக செல்வத்தைக் குவித்துள்ளது. பாஜக தலைவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் நம்ப முடியாத எதிர்காலத்தை உருவாக்கியுள்ளனர். நரேந்திர மோடியின் கூட்டாளிகளான அதானியும், அம்பானியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாக உயர்ந்து உள்ளனர். ஆசியாவில் இந்தியாவில் ஊழலின் விகிதம் மலிந்துள்ளதாக, Global Corruption Barometer of Transparency International என்ற உலக அளவிலான குடிமைச் சமூகம் கூறுகிறது. இந்த அவலம் மோடியால் உருவானதாகும்.
ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனநாயக சக்திகளின் நிர்பந்தத்தால் உருவாக்கப்பட்டிருந்த எல்லா சட்டங்களும் மோடி அரசால் வேண்டுமென்றே நீர்த்துப் போகச் செய்யப்பட்டன.
அராஜகமாக கொல்லப்பட்ட R.T.I ஆர்வலர்கள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாரத்தை இழந்து விட்டது. பாஜகவின் கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில், தகவலையும், பொறுப்பேற்றலையும் கேட்டதற்காக 80 தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர்.
2014 ல் ஐக்கிய முன்னணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் சாசனம் & குறை தீர்க்கும் மசோதாவை செயலிழக்கச் (lapse) செய்து விட்டது. அதனை பாஜக அரசானது மீண்டும் கொண்டு வரவில்லை.
இடித்துரைப்பாளர் சட்டம் 2014 (Whistle Blowers Act) என்பது ஊழல் குறித்து சொல்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கொண்டுவரப்பட்டது. அது திருத்தப்பட்டு, புகார் அளிப்பவர்களை வெளிப்படுத்தும் வகையிலும், புகார் அளித்ததற்காக வழக்குத் தொடுக்கும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது திருடனுக்கு பாதுகாப்பும், தட்டிக் கேட்பவருக்கு தண்டனையுமாக பாஜக கொண்டு வந்த திருத்தங்களால் லோக்பால் & லோகாயுதா சட்டம் 2014 அதிகாரமற்றுவிட்டது.
ஊழலை சட்டப்படியானதாக்க, பாஜகவானது பாராளுமன்ற நெறிமுறைகளை முறைகேடாக பயன்படுத்தியது. கம்பெனிகள் சட்டம், வருமான வரிச் சட்டம், FCNR சட்டம், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் போன்றவை கம்பெனிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டு, கார்ப்பரேட்டுகள் கொள்ளையில் பங்கு பாஜகவிற்கு கிடைக்கிறது.
புதிய திட்டங்களும் பரஸ்பரம் ஆதாயம் வரும் வகையில் உருவாக்கப்படுகின்றன. தவறிழைப்பதில் எல்லாவித நெறிமுறைகளையும் மீறிவிட்டது பாஜக அரசு! முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊழலில் ஒரு கறுப்பு வரலாற்றை உருவாக்கியுள்ளது.
திகைப்பூட்டிய தேர்தல் பத்திர ஊழல்
தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு விரோதமானது எனச் சொல்லி உச்சநீதிமன்றம் தடைசெய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை கொடுப்பதை தவிர்க்க பெருமளவு முயற்சி எடுத்தும் வேறு வழியின்றி இப்போது கொடுத்துள்ளது. இதில் 57 % தேர்தல் பத்திரங்களை ( ரூபாய் 6,987 கோடிகள்) பாஜக பெற்றுள்ளது. இந்த வகையில் பணம் பெற சில நிறுவனங்களில் ரெய்டுகள் நடத்தியும், சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் தந்தும் அத்துமீறல்கள் அரங்கேறி உள்ளன. பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி இது பிரதமரால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.
நன்கொடை அளித்தது யார், பயன் பெற்றது யார் என்ற விவரங்களை மறைப்பதற்காக வருமான வரிச் சட்டமும், கம்பெனி சட்டமும் திருத்தப்பட்டன. பாஜகவும், மோடியும் இன்று அம்பலப்பட்டுள்ளனர்.
CAG அம்பலப்படுத்திய 7.5 லட்சம் கோடி கரப்ஷன்
அரசாங்க திட்டங்களை அமலாக்குவதில் அதிகபட்ச ஊழல்கள் நடந்திருப்பதாக, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) 2023 ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்திய சாலை திட்டம் ( PM – JAY),
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தயாரித்த பிழையான இயந்திரம்,
பிரதம மந்திரி சுகாதாரத் திட்டம்,
சிறுபான்மை உதவித் தொகை திட்டங்கள்,
தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும் டோல் கட்டணம் போன்றவைகளில் நடந்துள்ள ஊழல்களை மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர்( CAG) கூறியிருக்கிறார். மேற்படி விவகாரங்களில் பாஜக அரசு 7.5 இலட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது.
இப்படிப்பட்ட ஊழல் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கோரிய போதும் அனுமதிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை தயாரித்த மூன்று அதிகாரிகள் மிரட்டப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டனர்.
ரகசியமாக்கப்பட்ட ரபேல் விமான ஊழல்;
ராபேல் விமானங்கள் வாங்கியதில் 21, 075 கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பானது அம்பானிக்கு இலாபமாக மாறியுள்ளது. இதனை நரேந்திர மோடி செய்திருக்கிறார். ராபேல் போர் விமானங்களை பிரான்சைச் சேர்ந்த தசால்ட் விமான நிறுவனத்திடமிருத்தும், அனில் அம்பானியின் ரிலையன்சிடமிருந்தும் வாங்க மோடி தான் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இருந்த இரகசிய விபரங்களை பிரான்ஸ் வெளியிட்டது. அதில் “ஊழல்” “செல்வாக்கு தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டது”
தன் நெருங்கிய நண்பருக்காக பிரதமர் மோடி பண மோசடி, பாரபட்சம் , அதீத வரிக்குறைப்பு போன்றவற்றை அரங்கேற்றினார். இது குறித்து விசாரிக்க பிரான்ஸ் ஒரு நீதிபதியை நியமித்தது. இந்த விசாரணைக்கு இந்தியா கடுகளவும் ஒத்துழைக்கவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் கசப்புடன் புகார் தெரிவித்தனர்.
அதானி குழுமம் செய்த முறையற்ற பொருளாதார தகிடுதத்தங்கள் பற்றியும், அதற்கு பாஜக அரசு நல்கிய ஒத்துழைப்பு குறித்தும் அமெரிக்காவின் ஹித்தன்பர்க் அறிக்கை அகிலத்திற்கே அறிவித்துள்ளது. அதானி குழுமத்தின் இலாபமானது உயர்த்திக் காட்டப்பட்டு, நட்டமானது குறைத்து காட்டப்பட்டுள்ளது.
மக்கள் பணம் கார்ப்பரேட்களுக்கு கைமாறியது;
எல்.ஐ.சி எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது ரூ.56,142 கோடிகளை அம்பானி பங்குகளில் முதலீடு செய்துள்ளது;
பாரத ஸ்டேட் வங்கியானது ரூ. 38,150 கோடிகளை அதானிக்கு கடனாக கொடுத்துள்ளது;
வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO) ரூ. 1,65,000 கோடிகளை அதானி துறைமுகத்திலும், அதானி எண்டர்பிரைசிலும் முதலீடு செய்துள்ளது.
இவையெல்லாம் மக்களின் பணமாகும்.
இத்தனை முறைகேடுகளையும் செபி அமைப்பானது கண்டு கொள்ளவில்லை.
உச்சநீதிமன்றம் விவரங்களை கேட்டது. எதிர்கட்சிகள் விசாரணை கோரின. மோடி வெட்கமில்லாமல் அமைதியாக இருந்தார். அவருடைய நண்பரான அதானி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். அவர் மேன்மேலும் பணக்காரராகி உள்ளார்.
பித்தலாட்டத்தின் உச்சமான பி.எம்.கேர்;
கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில் ஊழல் நடந்துள்ளது. ரூ.12,700 கோடிகள் மூன்று ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்டுள்ளன. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின்படி 5,516 கோடி ரூபாய்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் சொல்வது போல இது தனியார் நிதியாகும். எனவே, இதனை தணிக்கை செய்ய இயலாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது வராது. நிதி குறித்த விவரம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றம் விவாதிக்கவில்லை. வெளிப்படைத் தன்மை இல்லை. இரகசியமகவும், தணிக்கைக்கு உட்படாமலும் இருப்பதால், இந்தத் தொகையானது பாஜகாவால் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்டிருக்கலாம்.
2015 – 2023 கால கட்டத்தில் 14.56 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த கடன்கள்! இது, வழக்கமான வங்கி நடைமுறை அல்ல. கார்பரேட் நிறுவனங்களுக்கு பகிரங்கமாக வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான கொள்ளையாகும்.
கொள்ளைக்கு பேர் போன ‘குரோனி கேப்டலிசம்’;
இவையெல்லாம் அடையாளமான ஊழல்களே. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி பாஜக அரசு சலுகை செய்துள்ளது. அதனால் பாஜக இலாபம் ஈட்டியுள்ளது. அதானி, முந்த்ரா, எஸ்ஸார், சாலயா நொடித்துப் போகும் நிலையில் இருந்தனர். அவர்கள் பாஜகவின் தலையீட்டினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநில சட்ட திருத்தத்தின் மூலம் மிக அதிக விலைக்கு கோடா துறைமுகமானது மின்சாரத்தை மாநில அரசுக்கு விற்றுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டல சட்டமானது அதானி மின் குழுமம் இலாபம் அடையும் வகையில் 2016 ல் திருத்தப்பட்டது. இவையெல்லாம் ஊழலைப் பற்றி சொல்லமுடியாத அளவுக்கு உதாரணங்களாகும். கார்ப்பரேட்டுகளுக்கும், அரசாங்கத்திற்கும் உள்ள உராய்வை போக்கும் வகையில் பணம் செயல்படுகிறது. இவை crony capitalism – ற்கான சிறந்த உதாரணமாகும். இது அபாயகரமானது. இது பொது வளங்களை கொள்ளை அடிக்கிறது.
மேலும் பல ஊழல்கள் இன்னமும் உள்ளன. அவை வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த ஊழல்கள் வறுமையை ஆழமாக்குகிறது. மனித மாண்மையும், மனித உரிமையையும் சிதைக்கிறது. வளர்ச்சியை தடம்புரளச் செய்கிறது . ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அழிக்கிறது. இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பாஜக ஊழலில் சுகித்து திளைக்கிறது. அரசாளும் தார்மீக பொறுப்பை பாஜக அரசு எப்போதோ இழந்துவிட்டது. பாஜக வீழ்த்தப்பட வேண்டும். இந்த முக்கியமான காலத்தில் உழைக்கும் மக்கள் ஊழல் மலிந்த பாஜக அரசை தூக்கி எறிவவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்; அமர்ஜித் கௌர், ஏஐடியுசி பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர்.
மொழி பெயர்ப்பு; பீட்டர் துரைராஜ்
அறம் இணைய இதழ்
aramonline.in /17202/corruption-in-bjp-govt/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு