இறுக்கும் உளவு வலை

தீக்கதிர்

இறுக்கும் உளவு வலை

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சர்ச்சைக் குரிய ‘அஞ்சல் அலுவலக மசோதாவை’ ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சி களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி பொதுமக்களுக்கு அனுப்பப்படும் எந்தவொரு அஞ்சல் மற்றும்  பார்சலையும் இடைமறித்து திறந்து பார்க்க, நிறுத்தி வைக்க அஞ்சல்துறை அதிகாரிக ளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. 

இதன்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எளமரம் கரீம், இந்த மசோதா அரச மைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை மற்றும்  கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது என்றும்  இம்மசோதா மூலம் அஞ்சல் சேவைகளை முற்றி லும் தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முயல் கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சிகள் பலரும் இந்தியக் குடிமக்களின் அந்தரங்க உரிமையில் தலையிடுவதாக இம்மசோதா அமைந்துள்ளது என்றும், தபால் துறையின் மீதான மக்களின் நம்பிக் கையை தகர்த்துவிடும் என்றும் குறிப்பிட்டனர்.

ஆனால் பணமதிப்பு நீக்கம் உட்பட நாட்டுக் கும், நாட்டு மக்களுக்கும் எதிரான அனைத்து நடவடிக்கைகளோடும், உள்நாட்டு பாதுகாப்பு என்பதை முடிச்சுப் போடும் ஒன்றிய அரசு, இம் மசோதாவை நியாயப்படுத்தவும் அதே வாதத்தை முன்வைத்துள்ளது.

வரலாற்றுப் பெருமைமிக்க இந்திய அஞ்சல் துறை, மோடி ஆட்சியின் கீழ் கொஞ்சம்  கொஞ்சமாக பல்வேறு அரசு மற்றும் பொ துத்துறைகளைப் போலவே சீர்குலைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை அளித்து வந்த அஞ்சல் துறை ஒன்றிய அரசினால் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதால் அஞ்சல் துறையில் தனியார் கொரியர் நிறுவனங்களின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.

தொலைத் தொடர்பு துறை போல அஞ்சல் துறையிலும் தனியார் ஆதிக்கம் வளரும் போது அநியாய கட்டணக் கொள்ளை இப்போ திருப்பதை விட அதிகமாகும். அஞ்சல் துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்த்து அதன் மூலம் தனியார் ஆதிக்கத்திற்கு ஒன்றிய அரசு துணை போகிறது.

இந்தியக் குடிமக்களை பெகாசஸ் போன்ற அந்நிய உளவு மென் பொருட்கள் மூலம் வேவு  பார்க்கும் பாஜக அரசு, இப்போது அஞ்சல் துறைக்கும் நேரடியாக தன்னுடைய உளவு வேலையை விரிவுபடுத்துகிறது. புதிய சட்டத்தின் மூலம் காலனியாதிக்க கால சட்டங்களை ரத்து  செய்வதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் உண்மையில் குடிமக்கள் அனை வரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறது; நவீன காலனியாதிக்கத்தை நோக்கி நாட்டை நடத்திச் செல்கிறது என்பதே உண்மை.

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு