ஹிண்டன்பர்க்-ன் ரகசிய பார்ட்னர் யார்.. கோடக் மஹிந்திரா சிக்கியது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ்

ஹிண்டன்பர்க்-ன் ரகசிய பார்ட்னர் யார்.. கோடக் மஹிந்திரா சிக்கியது எப்படி..?

அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் கூடுதல் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி நடத்திய விசாரணையில், ஹிண்டன்பர்க்-ன் ரகசிய பார்ட்னர் யார் என்பது தெரிய வந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி அறிக்கையில் கூட ஹிண்டன்பர்க் தனது முதலீட்டு கூட்டாளி குறித்து தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான கிங்டன் கேப்பிடல் மேனேஜ்மெண்ட் எல்எல்சி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்துடன் சேர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளை ஷார்ட் செல்லிங் செய்துள்ளதாக செபி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இது, பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிண்டன்பர்க்-ன் ரகசிய பார்ட்னர் யார்.. கோடக் மஹிந்திரா சிக்கியது எப்படி..?

செபியின் விசாரணை அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் நிறுவனம், பொதுமக்களுக்கு தெரியாத தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில், கிங்டன் நிறுவனத்தின் மார்க் கிங்டன் மற்றும் ஹிண்டன்பர்க் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது, அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, கிங்டன் கேப்பிடல் மேனேஜ்மெண்ட் எல்எல்சி, கே-இந்தியா அப்பார்டுனிட்டிஸ் ஃபண்ட் - கிளாஸ் எஃப் என்ற வர்த்தக கணக்கைத் தொடங்கி, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளில் ஷாட் செல்லிங் செய்துள்ளது.

இதன் மூலம், 22.25 மில்லியன் டாலர் (183.24 கோடி ரூபாய்) லாபம் ஈட்டியுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஃபண்ட், தேசிய பங்குச் சந்தையில் (NSE) அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளில் மட்டுமே வர்த்தகம் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில், இன்னொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. கோடக் மஹிந்திரா வங்கியின் துணை நிறுவனமான கோடக் மஹிந்திரா இன்டர்நேஷனல் லிமிடெட், கே-இந்தியா அப்பார்டுனிட்டிஸ் ஃபண்ட் - கிளாஸ் எஃப் என்ற வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்தின் (FPI) முதலீட்டு மேலாளராக இருந்தது.

இந்த ஃபண்ட் தான், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் எதிர்கால ஒப்பந்தங்களில் (futures) வர்த்தகம் செய்துள்ளது. இது, இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

செபியின் விசாரணையில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. கிங்டன் கேப்பிடல் நிறுவனம், 2023 ஜனவரி 5 ஆம் தேதி கோடக் மஹிந்திரா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதன் முதலீட்டு ஆலோசகராக செயல்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. கோடக் மஹிந்திரா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மொரிஷியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.

இன்று காலையில் இருந்து ஹிண்டன்பர்க் விஷயம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் கோடக் மஹிந்திரா வங்கி விளக்கம் கொடுத்துள்ளது, கே-இந்தியா அப்பார்டுனிட்டிஸ் ஃபண்ட் என்பது செபியில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் மற்றும் மொரிஷியஸின் நிதிச் சேவைகள் ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த பண்ட், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய 2013 இல் நிறுவப்பட்டது.

வாடிக்கையாளர்களை சேர்க்கும் போதே இந்த பண்ட் KYC நடைமுறைகளைப் பின்பற்றுகிறது மற்றும் அதன் அனைத்து முதலீடுகளும் அனைத்து சட்டங்களின்படி செய்யப்படுகின்றன. எங்கள் செயல்பாடுகள் தொடர்பாக நாங்கள் செபிக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கணக்கில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கும், அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் ஷாட் செய்வதிலும் ஹிண்டன்பர்க் அமைப்பிற்கு தொடர்ப்புள்ளது கோடக் மஹிந்திரா வங்கிக்கு தெரியாது என இவ்வங்கி விளக்கம் கொடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று கோடக் மஹிந்திரா வங்கி பங்கு விலை 2.49 சதவீதம் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ்

https://tamil.goodreturns.in/news/adani-hindenburg-row-mauritius-fpi-fund-setup-by-kotak-mahindra-bank-used-by-kingdon-capital-to-s-047531.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு