கட்டுக்கடங்கா போதை புழக்கம், குற்றச் செயல்கள்..ஏன்? எதனால்?

அறம் இணைய இதழ்

கட்டுக்கடங்கா போதை புழக்கம், குற்றச் செயல்கள்..ஏன்? எதனால்?

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிலை குலைந்து வருவது, நாளும், பொழுதும் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, போதை பொருட்களின் புழக்கம்.. கையறு நிலையில் காவல்துறை, செயல் இழந்துள்ள அரசு நிர்வாகம்.. என்ன நடக்கின்றது?  இதன் பின்னணி என்ன?

தரமணி பாலிடெக்னில் காவலாளி தன் மனைவி, குழந்தையுடன் கொல்லப்பட்டதும், அவர்களது பிணம் தூக்கி எறியப்பட்ட விதமும் சென்னை மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. சென்னையின் மையமாக இருக்கும் நந்தனம் அரசு கல்லூரியில் இளம் பெண் கூட்டுப் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பது.., தொடர்ந்து சட்டம், ஒழுங்கு சரிந்து கொண்டிருப்பதன் சாட்சியாக பார்க்கப்படுகிறது.

முதலாவதாக காவல்துறையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் முதல்வருக்கு சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் முனைப்பு இருக்கிறதா…? நிலைமைகள் மோசமாவது குறித்த கவலையாவது இருக்கிறதா…? இவை இருந்தால் தானே அக்கறையும், அதற்கேற்ற செயல் திட்டமும் உருவாகும்.

முழுக்க, முழுக்க அதிகாரிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு ‘அக்கடா’ என்று அரசு விழாக்கள், கொண்டாட்டங்கள், தேர்தலை நோக்கிய நகர்வுகள் என்று மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுகிறார்.

காவல்துறைக்கு தலைமை தாங்கும் தகுதி வாய்ந்த ஒரு டி.ஜிபியை நியமிக்க முடியாத அளவுக்கு  அரசியல் பார்வையுடனே நிர்வாகத்தை அணுகுவதன் விளைவைத் தான் தற்போது தமிழகம் பார்க்கிறது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் சீர்கேடு அடைவதற்கு டாஸ்மாக் விற்பனையில் அரசு காட்டும் முனைப்பு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குடும்ப வன்முறைகள் பல்கி  பெருகிக் கொண்டுள்ளன.

குடி போதையால் குடும்பத்தில் நிகழும் வன்முறைகளில்,

# குடிகாரக் கணவனின் கொடுமை தாளாமல் மனைவியே கொல்வதும், அல்லது கணவனால் கொல்லப்படுவதும்,

# குடிப் போதைக்கு அடிமையான மகனைத் திருத்த முடியாமல் தந்தையே மகனை கொல்வதும், அல்லது குடிபோதையில் மகனே பெற்றோர்களைக் கொல்வதும் தொடர் செய்தியாக வந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் குடி நோயாளிகள் பல்கிப் பெருகி உழைக்கும் திரானியற்ற நிலைக்கு சென்ற காரணத்தால், வட இந்தியாவில் இருந்து உழைப்பதற்கான பெருந்திரள் இளைஞர் கூட்டம் தமிழகத்தில் அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் நிறைந்து வழிகிறது. இங்கு மக்கள் வரிப்பணத்தில் விவசாயிகளிடம் இருந்து பசுமை நிலங்களை பறித்து, உருவாக்கப்படும் சிப்காட்களில் 80 சதவிகித வேலைகள் வெளிமாநில இளைஞர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

மது போதை போதாது என்று கஞ்சா, அபின் மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசி… என்று தேடி அலைகிறது இளைய தலைமுறை! கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப் பரவலாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதற்கு ஆளும்கட்சி பிரமுகர்கள் ஒத்துழைப்பும், காவல்துறை அதிகாரிகள் இசைவும் ஒருசேரக் கிடைப்பதால் தங்கு தடையற்ற விநியோகச்  சங்கிலி விரிகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. குற்றத்திற்கு துணை போகும் காவலர்கள் ஆட்சியாளர்களின் அனுக்கிரகத்தில் வலம் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கே முக்கிய பதவிகளும் கிடைக்கின்றன.

ஆனால், நாடும், மக்களும் நாசமாகிக் கொண்டிருப்பது குறித்த எந்தவித பிரக்ஜையும் இன்றி ஆட்சியாளர்களோ மேன்மேலும் ‘எலைட் பார்’களை திறப்பது, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் வித்தியாசமான பார்களை உருவாக்குவது, போதாக்குறைக்கு ‘பைவ் ஸ்டார் ஹோட்டல்களில்’  24 மணி நேரமும் செயல்படத்தக்க ‘எப்.எல்.3 பார்’கள் திறந்து ஊக்குவிப்பது என வேகம் காட்டுகிறார்கள்.

சென்னை தவிர்த்த அனைத்து மாவட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட பார்கள் 20 சதவிகிதம் என்றால், அனுமதி இல்லாமல் செயல்படும் பார்கள் என்பதாக 80 சதவித பார்கள் இயங்குகின்றன. இந்த சட்ட விரோத 80 சதவித பார்களும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில் செயல்படுவதாக சொல்கிறார்கள். இதில் விற்கப்படும் சரக்குகள்  டாஸ்மாக்கிடமிருந்து அல்லாமல் நேரடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து சப்ளை செய்யப்படுகிறதாம்! எனவே, இந்த பார்கள் தொடர்பான வருமானம் எதுவும் அரசு கஜானாவிற்கு வருவதில்லை. டாஸ்மாக்கில் பலகட்ட ரெய்டுகள் நடத்திய அமலாக்கத்துறை இந்த விவகாரங்களை அம்பலப்படுத்தாமல், அமுக்கிவிட்டது என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கு மாமூல் போவதை உறுதிபடுத்துகிறது.

இப்படி தங்கள் கஜானாவை நிரப்புவதையே முதல் குறிக்கோளாக கொண்ட ஆட்சியாளர்களுக்கு மக்கள் நல வாழ்வில் எப்படி அக்கறை வரும்…? ஏகப்பட்ட இலவச திட்டங்களால் மக்களின் உழைக்கும் மன நிலையை மேலும் உளுத்துப் போகச் செய்து’ காலமெல்லாம் தேர்தலன்று தரப்படும் பணத்திற்கு விசுவாசமாக ஓட்டுப் போடுபவர்களாக மக்களை வைத்திருக்க  விரும்புகிறார்கள்!

# அண்ணா பல்கலைக் கழக மாணவி கோட்டூர்புரத்து திமுக பிரமுகர் ஞான சேகரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ,

# அண்ணா நகரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியைக் காப்பாற்ற தமிழக காவல்துறை உச்ச நீதிமன்றம் வரை சென்று அவமானப்பட்ட நிகழ்வு,

# மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தமிழக காவல்துறையினராலே கொல்லப்பட்ட அராஜகம்..

# திருத்தணியில் இளம் சிறார்கள் வட மாநில இளைஞரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதை வீடியோவாக வெளியிட்டது..

போன்றவற்றில் இருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எந்த பாடத்தையும் கற்றதாகத் தெரியவில்லை.  மேற்படி  அனைத்து சம்பவங்களிலும் பல விவகாரங்களை மூடி மறைக்கத் தான் ஆட்சியாளர்கள் பிரயத்தனப்பட்டார்களே அன்றி, தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவோ அல்லது காவல்துறையை நேர்மையாக வழி நடத்தவோ முன் வரவில்லை.

சென்னையில் இரவு நேரங்களில் யார் ஒருவரும் தனியாகவோ, குடும்பத்துடனோ நடந்து செல்வது ஆபத்தாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒ.எம்.ஆர் சாலை, இ.சி.ஆர் சாலை ஆகியவற்றில் தனியாக நடந்து செல்வோரிடம் பணம், நகைகளை பறிப்பது, தரமறுத்தால் வெட்டிக் காயப்படுத்துவது என்பது தொடர் நிகழ்வாக உள்ளது.

விதியே, விதியே தமிழ்ச் சமூகத்தை என் செய்ய நினைத்தாயோ..!

இளங்கோவடிகள் கூறிய ஒன்றை மட்டும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுவோம்;

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

இதன் பொருள் ஆட்சியாளர்கள் நீதி, நெறியை துச்சமாக மதித்து நடந்தால், அறமே காலனாகி கண்டிப்பாக தண்டிக்கும். செய்யும் செயல்பாடுகளின் விளைவுகள் விடாது வந்து தாக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23867/crime-incresed-in-tamilnadu/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு