போர்ஜரி கடிதம்! பொய்க்கு துணை போகிறதா அரசாங்கம்!
அறம் இணைய இதழ்
மவுனித்து இருப்பது, மறைமுகமாக செல்வாக்கான கொலை குற்றவாளிக்கு உதவுவது, அரசு நிர்வாகத்தை இந்த அநீதிக்கு அரண் தந்து நிறுத்துவது என்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டுகிறார்! மாணவி எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட கடிதம் போர்ஜரி என்பது தற்போது தடயவியல் துறை மூலம் அம்பலப்பட்டுவிட்டது.
கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே அவசரப்பட்டு நீதிபதி கைது செய்யப்பட்டிருந்த பள்ளிக் கூட நிர்வாகிகளுக்கு ஜாமீன் கொடுத்தார்!
கொடுத்ததோடு நில்லாமல், பள்ளி நிர்வாகிகளுக்கு நற்சான்றிதழ் பத்திரமும் வாசித்தார். கூடுதலாக நீதிபதி, மாணவியின் கடிதம் என நிர்வாகத்தால் தரப்பட்ட – காகிதத்தில் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு தீர்ப்பே வாசித்து விட்டார். போதாக்குறைக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மீது கருணை மழையும் பொழிந்துவிட்டார்!
அந்தக் கடிதமானது தடயவியல் துறையில் (forensic department) தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு நேற்றைய தினம் தான் கோர்ட்டுக்கே சீல் வைத்த கவரில் அனுப்பபட்டு உள்ளதாம்!
நாம் விசாரித்த வகையில், ”அது போர்ஜரி கடிதம் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை” என பாரன்சிக் வட்டாரத்தில் தெரிவித்தனர். ‘மாணவி எழுதிய நோட்டு புத்தகங்களை வைத்து பார்த்ததில் மாணவி கையெழுத்தும், கடிதத்தில் உள்ள கடித எழுத்துக்களுக்கும் ஏழாம் பொருத்தம்’ இது தெளிவுபடுத்தபட்டு உள்ளதாம்!
அந்த சீல் வைத்த கவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆகிவிட்டது. இனி நீதிபதி உண்மைகளை உள்ளபடியே எடுத்துரைத்தால் தான் உண்டு! இந்த உண்மையை சுலபத்தில் வெளியே சொல்ல மாட்டார்கள்! ஆனால், ஒரு விஷயம் உளவுத் துறையின் நெருக்குதலைக் கூட பொருட்படுத்தாமல் ‘நேர்மையாக ரிப்போர்ட்’ தந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தமிழகமே தலை வணங்க கடமைப்பட்டு உள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை தொடர்பான கெமிக்கல் ‘அனாலிசஸ் ரிப்போர்ட்’ மட்டும் இன்னும் கூட வெளியே தெரியாமல் கமுக்கமாக வைத்துள்ளனர். முதன்முதலாக அது மாணவியின் வயிற்றில் மதுபானம் இருப்பதை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். பிறகு, ‘அது சம்பந்தமாக யாரும் பேசக் கூடாது’ என கறாராக மறுத்துவிட்டனர். இன்னும் எத்தனையத்தனை உண்மை மறைப்புகளும், புதைப்புகளும் தொடருமோ…?
மாணவியின் அம்மா செல்வி, ”அந்த கையெழுத்து என் மகளுடையது அல்ல” என்றும், ”என் மகள் சிவப்பு மை கொண்ட பேனாவை பயன்படுத்துவதில்லை” என்றும் சொன்னது நினைவிருக்கலாம்!
மாணவி உடுத்தி இருந்த ஆடைகள் முதலில் சென்னைக்கு தான் கொண்டுவரப்பட்டதாம். பிறகு, அதை ”சென்னையில் ஆய்வு செய்ய வேண்டாம், விழுப்புரத்திற்கு அனுப்புங்கள்” என சொல்லி விட்டார்களாம்!
கடிதம் பொய் என்றால், பொய்யான கடிதத்தை தர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்த பொய்யான கடிதம் மாணவியின் கொலையை மட்டும் மறைக்கவில்லை. அந்த புனைவில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி ஆசிரியர்கள் எதிர்காலமும், நற்பெயரும் சேர்ந்தே பாதிக்கப்பட்டு உள்ளது.
மாணவியின் தோழிகளை விசாரித்த நீதிமன்றம், அந்த விசாரணையின் உண்மையை வெளி சொல்லாமல் வைத்துள்ளது. இன்னும் சொல்வதென்றால், அந்த குழந்தைகளிடம் பெற்ற வாக்குமூலங்களை மறைப்பது என்பது அந்த நிர்வாகத்தை காப்பாற்றும் முயற்சியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
சி.பி.சி.ஐ.டி அனைத்து உண்மைகளையும் விசாரித்து அறிந்து விதிர்விதிர்த்து அமைதி காக்கிறது. ஆட்சித் தலைமையின் நோக்கத்திற்கு எதிராகவே உண்மைகள் உள்ளன! ஒட்டுமொத்த காவல்துறையும் உலகறிந்த ஒரு கொலை கும்பலை – அதுவும் குழந்தைகளைக் கொன்ற கும்பலை -பாதுகாப்பதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
எல்லாவற்றுக்கும் காரணம் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் காரர். பாஜகவின் முக்கியஸ்தர் என்பது மட்டுமே! ஒட்டுமொத்த தமிழக மக்களும் உள்ளம் நொந்து, நாளும் இந்த கொலை தொடர்பான திமுக அரசின் நகர்வுகளை வேதனையோடு பார்த்தும், கேட்டும் வருகிறார்கள்! தமிழக அரசின் வழக்கறிஞர் முழுக்க, முழுக்க நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவான நிலை எடுத்து பேசுவதையும், நீதிபதிகளுக்கு தவறான தகவல்களை தந்து, நீதிமன்றத்தை திசை திருப்புவதையும் காணும் போது உள்ளம் பதைக்கிறது.
உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப போஸ்ட் மார்ட்டத்தில் அவர்கள் கேட்கும் ஒரு மருத்துவரை இணைத்துக் கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி மற்றும் நீதியாகும். ஆனால், தமிழக அரசு அதை பிடிவாதமாக மறுத்துவிட்டது. அப்போதே, ‘இதில் உண்மை வெளிவருவதற்கு அரசுக்கு விருப்பமில்லை’ என்பது பட்டவர்த்தனமாக புரிந்து போனது!
தொடர்புடையவை: ஸ்ரீமதியைப் படுகொலை செய்த கல்வி காவி முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் திமுக அரசு
அய்யா ஸ்டாலின் அவர்களே, இந்த ஆர்.எஸ்.எஸ் கொலை பாதகர்களுக்கு துணை போவதற்காக திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நாங்கள் எழுதினோம். உங்கள் ஆட்சி தமிழகத்தில் அவர்களின் ஆதிக்கத்திற்கு தடையாக இருக்கும் என நம்பித் தானே – திராவிடக் கட்சி – என நம்பித் தானே ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தோம்.
ஓட்டு போட்ட மக்களையும், ஆட்சிக்கு வர உழைத்த கட்சிக்காரர்களையும், தோழமை இயக்கங்களையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டீர்களே!
எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் 356 பேரை சிறை கொட்டடியில் சாதி ஆதிக்க, மத ஆதிக்க சக்திகளின் ஆசைக்காக வைத்துள்ளீர்களே! அவர்களில் பலரின் கைகளை உடைத்து உள்ளீர்களே! எவ்வளவு பாதுகாப்பற்ற முறையில் இன்று தமிழகம் உள்ளது என்பதை நினைத்து பார்த்தாலே அதிர்ச்சியாக உள்ளது.
ஒரு கலவரம் நடந்தால் அதற்கு விசாரணைக் கமிஷன் அமைத்து உண்மையை கண்டு பிடிப்பார்கள்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அப்படித்தான் விசாரணை கமிஷன் அமைத்து உண்மைகள் வெளிவந்தன. அப்படி உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத் தானே சிறப்பு காவல் படையை அமைத்து அவர்களை மத ஆதிக்கவாதிகளின் கைக்கூலியாக செயல்பட வைத்துவிட்டீர்கள்? ஏன், அந்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேட்டிவ் போலீஸ் இது வரை அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்களை எரித்து அழித்த நிர்வாகத் தரப்பு குண்டர்கள் ஒருவரை கூட கைது செய்யவில்லை..?
பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கும் போது பள்ளிக் கூடத்தில் முன் கூட்டியே தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களையும், பின்புற வாசல் வழியாக நுழைந்தவர்களையும் குறித்த செய்திகளை ஏன் காவல்துறை இன்று வரை மறைக்கிறது?
நடைபெற்ற அதிபயங்கர தீ வைப்பு சம்பவங்களில் கொலைக் குற்றவாளி யுவராஜின் தளபதி ராஜசேகரனின் தீரன் சின்னமலை பேரவை அமைப்பினரின் கைவரிசையை திமுக அரசாங்கம் மறைப்பது ஏன்? மகாபாரதி பள்ளியின் அதிபர் மோகன் செய்த சதிச் செயல்கள் என்னென்ன? இவை எதுவுமே வெளியே வராதா..?
செல்வமும், செல்வாக்கும் மிகுந்த சாதிய சக்திகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பெரும் அநீதிக்கு துணை போவது நிச்சயமாக திராவிட மாடல் ஆட்சியல்ல! நாடறிந்த ஒரு கொலையை மறைப்பதில் – அதுவும் ஆர்.எஸ்.எஸ்காரர் கொலைக் குற்றத்திற்கு துணை போவது – திராவிட இயக்கத்திற்கு பேரிழுக்கு ஆகும்! இது, மதவாத சக்திகள் தமிழகத்தில் தங்கு தடையின்றி காலூன்றவே துணை புரியும்! நேரடி பாஜக ஆட்சியை விட அவர்களின் அடிமைகள் ஆட்சி மிக ஆபத்தானது!
மகாகவி பாரதியின் வரிகள் தாம் நினைவுக்கு வருகிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் – ஆனால்,
தர்மம் மறுபடியும் வென்றே தீரும்!
ஒன்றுளதுண்மை! ஒன்றுளதுண்மை!- அதைக்
கொன்றிடலொண்ணாது, குறைத்திடலொண்ணாது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு
கட்டுரையாளரின் வலைதள பக்கத்திற்குச் செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்
https://aramonline.in/10428/srimathi-letter-forgery-forensic/