டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி மீது பாய்ந்த வழக்கு; வெளியான எஃப்.ஐ.ஆர்

இந்தியன் எக்ஸ்பிரஸ்

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி மீது பாய்ந்த வழக்கு; வெளியான எஃப்.ஐ.ஆர்

தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் நான்கு நபர்கள் மற்றும் சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கரூர்,சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

படிக்கவும்: ஊழல் பெருச்சாளி திமுக செந்தில் பாலாஜி கைது : அமலாக்கத்துறையை ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்தும் பாஜக

வழக்குப் பதிவு - வெளியான எஃப்.ஐ.ஆர்

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும், மதுபான ஆலைகளிடம் பார்ட்டி பண்ட் என்ற பெயரில் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் மீது தனியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவன முறைகேடு வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீதான எஃப்.ஐ.ஆர் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜியும், 2-வது குற்றவாளியாக ஐ.ஏ.எஸ் விசாகனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகள் ராமதுரை, பன்னீர் செல்வம் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

2020 முதல் 2025 ஆம் ஆண்டு வரை குற்றம் நடந்ததாகவும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.17.27 கோடி முறைகேடு செய்ததாகவும், ஊழல் தடுப்பு சட்டம் உள்பட 9 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் வருமாறு:- 

1) முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, 

2)  டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன், ஐ.ஏ.எஸ். 

3) டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் டி. ராமதுரை முருகன் 

4) டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் ஆர். பன்னீர் செல்வம்

5) முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர் 

6)  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ்

7) மூலனூர் கார்த்திக் என்ற எஸ். கார்த்திக், மற்றும் மதுபான ஆலை/பீர் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பாட்டிலிடும் நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத பிற அரசு ஊழியர்கள் மற்றும் பிறர்.

https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-malpractice-allegations-dvac-case-against-7-including-senthil-balaji-visakan-ias-tamil-news-12209592

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு