எண்ணூர் மக்களின் சூழலியல் நீதிக்கான போராட்டம்! - அ. பகத்சிங்

தீக்கதிர்

எண்ணூர் மக்களின் சூழலியல் நீதிக்கான போராட்டம்! - அ. பகத்சிங்

முருகப்பா குழுமத்தின் இ.ஐ.டி.பாரி நிறு வனம் எண்ணூர் பகுதியில் 1957 ஆம்  ஆண்டு உரம் தயாரிக்கும் தொழிற் சாலையாக தொடங்கப்பட்டது. 2002-ஆம் ஆண்டு கோரமண்டல் இன்டர்நேசனல் லிமிடெட் என்று பெயர் மாற்றம் பெற்றது. தற்போது “அமோனியம் பாஸ்பேட் பொட்டாஷ் சல்பேட்” (APPS) என்ற உரத்தை ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் தயாரிக்கிறது. இந்த உரம் தயாரிக்கத் தேவையான அமோனியா திரவ நிலையில் ஈரான் நாட்டில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படுகிறது. அமோனியா வாயு -33 டிகிரி செல்சியஸில் திரவநிலையில் இருக்கும். கப்பலிலும், குழாயிலும், கிடங்கிலும் இதே செல்சியஸ் அளவை தக்க வைக்கிறார்கள். குழாயிலோ கிடங்கிலோ எங்கா வது சிறு விரிசல் ஏற்பட்டு வெப்பநிலை கொஞ்சம் அதிகரித்தாலும் அமோனியா வாயுவாக மாறி பெரிய அழுத்தத்துடன் வெடித்து வெளியேறுவதோடு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

2023 டிசம்பர்-28 ஆம் தேதி கப்பலில் அமோனி யா வர இருந்த நிலையில், 26 ஆம் தேதி இரவு குழாயினைத் தயார்செய்யும் (precooling) போது அமோனியா குழாயில் வெடிப்பு (இரவு 11.30 மணிக்கு) ஏற்பட்டுக் காற்றில் கலந்தது. அப்போது காற்று தென்மேற்காக வீசியதால் ஆலையை அடுத்துள்ள (பெரியகுப்பம், சின்னக்குப்பம், எர்ணா வூர்) கிராமங்களைப் பெரிதும் பாதித்தது. வரலாறு காணாத பாதிப்பை இப்பகுதி மக்கள் எதிர்கொண்ட னர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணூர் பகுதி யில் இயங்குவதாக வரலாறு பேசும் கோரமண்டல் நிறுவனம், அருகில் வாழும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை.

தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை 

அமோனியா கசிவு தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 27-12-2023 அன்று நியமித்து இருந்தது. இக்குழுவின் ஆய்வறிக்கையை 6-2-2024 அன்று பசுமை தீர்பாயத்தில் சமர்ப்பித்தது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

குழாய் வெடிப்பின் போது 67.638 டன் அளவிலான அமோனியா வெளியாகியுள்ளது. 

மிக்ஜம் புயலின் காரணமாகக் கடற்கரை யில் பாறைகள் உருண்டதால், குழாய் பாதிக்கப்பட்டி ருக்கலாம். இதனால் குழாய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை முறையாக ஆய்வுசெய்து உறுதி செய்த பிறகு pre-cooling வேலையைத் தொடங்கி இருந்தால் பெரும் விபத்தைத் தவிர்த்திருக்க முடியும். 

குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அழுத்தம் குறைந்து தானியங்கி மோட்டார் நின்றுள்ளது. காரணத்தை ஆராயாமல் மீண்டும் மோட்டாரை இயக்கியதால் அமோனியா கசிந்துள்ளது. 

ஆலையில் அமோனியா கசிவை கண்காணிக்கப் பொருத்தப்பட்டிருந்த 19 சென்சார்களிலும் கசிவு உணரப்படவில்லை.

இவை உள்ளிட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி  அமோனியா குழாய் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. இதனடிப்ப டையில், காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளைத் தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற் சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும் பரிந்துரை செய்துள்ளது. அதோடு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூபாய் 5.92 கோடி கோர மண்டல் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட அமோனியா வாயு விபத்தில் 129 பேர் பலியானதோடு சுமார் 1150 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அங்கு வெளியான அமோனியா அளவு வெறும் 22 டன் தான். தற்போது எண்ணூ ரில் வெளியானது இதை விட மூன்று மடங்கு அதிகம் (67.64 டன்கள்). ஆனால் உயிர் இழப்புகள் இல்லை. காரணம் வெடிப்பு ஏற்பட்டது கடல் அலை அடிக்கும் பகுதி என்பதால் வெளியான அமோனியாவில் பெரும்பகுதி கடல் நீரில் கரைந்து விட்டது. இல்லா விட்டால் பெரும் உயிர் இழப்புகளை எண்ணூர் மக்கள் சந்தித்து இருப்பார்கள்.

மக்களின் அச்சமும்  போராட்டமும் 
கோரமண்டல் ஆலையால், எண்ணூர் மக்க ளுக்கு நேர இருந்த பேராபத்தைக் கடல் கேடயமாக இருந்து தடுத்துவிட்டது. கடல் நீரில் கலந்தது போக மீதி அமோனியாதான் 40,000 மக்களை உயிர் பிழைக்க ஓடச் செய்துள்ளது. 

இதே போன்ற கசிவு, கப்பலில் இருந்து வாயுக் கடத்தும் போது குழாயில் ஏற்பட்டிருந்தாலோ, கிடங்கி லிருந்து வெடிப்பு ஏற்பட்டு வாயு வெளியேறினாலோ ஒட்டுமொத்த சென்னையும், திருவள்ளூர் மாவட்ட மும் பெரும் உயிர்ச் சேதங்களை சந்தித்து இருக்கும். ஏனென்றால், கிடங்கின் மொத்த கொள்ளளவு 12,500 மெட்ரிக் டன். ஆலையிருந்து 20 கிலோ மீட்டர் சுற்றள வில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமல்லா மல் காக்கை, குருவி, நாய், பூனை என அனைத்து விலங்குகளின் உயிருக்கும் ஆபத்துதான். 

அணுகுண்டாகக் காட்சியளிக்கும் அமோனியா கிடங்கு
மூன்று திசையிலும் அடர்த்தியான குடியிருப்பு களும், 300 மீட்டருக்குள் பள்ளிக்கூடமும் உள்ளது. சுனாமி ஏற்பட்ட நிலையில் கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் வாழ்வது ஆபத்தானது என மீனவக் கிராமங்களை அப்புறப்படுத்த முயற்சி நடந்தது, ஆனால் இவ்வளவு பெரிய அமோனியா கிடங்கிற்கு எப்படி அனுமதி கிடைத்தது?

ஆண்டுதோறும் புயல், இயற்கைப் பேரிடர்களின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இச்சூழ
லில் கடற்கரையில் இருக்கும் இவ்வளவு பெரிய கிடங்கு எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் அணுகுண்டிற்கு ஒப்பானதாகும்.  எனவே, அரசு இந்தக் கிடங்கிற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துச் செய்து, வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும். 

எண்ணூரின் 33 ஊர்களும்  தன்னெழுச்சியாகப் போராடுவதேன்?

கோரமண்டல் அமோனியா கசிவு விபத்தில் மூன்று ஊர்கள் மட்டுமே நேரடியாகப் பாதிக்கப்பட்ட சூழலில் ஒட்டுமொத்த எண்ணூர் மக்களும் ஆலைக்கு எதிராகக் களம் இறங்கிப் போராடி வரு கின்றனர். காரணம், எண்ணூரில் வாழும் மக்கள் அனைவரும் கோரமண்டல் ஆலையின், அமோனியா, கந்தக வாயுவின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான். பொதுவாகக் காற்று வீசும் திசையைப் பொருத்து விஷவாயுவால் பாதிக்கப்படும் ஊர்களும் மாறுபடும். பொதுவாக நடு இரவு நேரங்களி லும், மழைக் காலங்களிலும் ஆலையின் விஷப்புகை யின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தக் கந்தக நெடியின் தாக்கத்தால் திடமாக உள்ளவர்களுக்கே இருமல், நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனை உள்ளவர் கள் பெரிதும் அவதிக்கு உள்ளாவார்கள். கடந்த 50 ஆண்டுகளாக எண்ணூர் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சனைகளுக்குக் கோரமண்டல் ஆலையே முதன்மைக் காரணம் என்பது எண்ணூர் மக்களின் நேரடிக் குற்றச்சாட்டு. 

1980களில் நிலத்தடி நீரை  கெடுத்ததும் இதே நிறுவனம் தான்
1988-89 ஆம் ஆண்டுகளில் இஐடி பாரி, கோத்தாரி நிறுவனங்களுக்கு எதிராக எண்ணூரில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. காரணம், இத்தொழிற் சாலைகளின் இரசாயனப் பொருட்கள், கழிவுகள் ஆகியன நிலத்தடி நீரையும், காற்றையும் மாசுபடுத்தின. நிலத்தடி மாசால் ஆலைக்கு வடக்குப் புறத்தில் உள்ள டாக்டர் சத்தியவாணி முத்துநகர் பெரிதும் பாதிக்கப்பட்டது. நிலத்தடிநீர் முழுக்க புளோ ரைடு (Fluoride) கலந்து புளோரோசிஸ் (Flurosis) எனும் உடல் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கால் எலும்பு கள் வலு இழந்து வளைந்துப் போகும், பற்களில் மஞ்சள் நிறக்கரையாக மாறி எளிதில் பொடிந்து விழும். கிங்ஆய்வு நிறுவனம் நிலத்தடிநீர், மண் ஆகிய வற்றைப் பரிசோதனை செய்து ஆலை ஏற்படுத்திய பாதிப்புகளை உறுதி செய்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 22 மடங்கு அதிகமாக புளோரைடு உள்ளதாக கண்டறிந்தது. இப்பகுதியின் நிலத்தடி நீரை குடிக்க பயன்படுத்தக் கூடாது என்று பரிந்து ரைத்தது. ஆலைக்கு எதிராகவும், சுத்தமான குடிநீர்கேட்டு “பானை உடைப்புப் போராட்டத்தை” எண்ணூர் மக்கள் முன்னெடுத்தனர். 

மொத்தத்தில் உள்ளூர் மக்களின் உயிருக்கோ, சூழலுக்கோ எவ்வித மதிப்பையும் முருகப்பா குழுமத்தின் கோரமண்டல் நிறுவனம் தரவில்லை. பாது காப்பை உறுதிசெய்ய வேண்டிய அரசு துறைகளும் அதை முழுமையாக உணர்ந்து செயல்படவில்லை. ஆலையில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் ஏதுவும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற எண்ணூர் மக்களின் கோரிக்கை  மிக மிக நியாயமானது. அறிவியல் பூர்வமாகவும் சரியானது.

கட்டுரையாளர் : எண்ணூர் மக்கள் பாதுகாப்புக்குழு உறுப்பினர்

theekkathir.in /News/articles/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/report-of-the-technical-committee

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு