ஊழல் பெருச்சாளி திமுக செந்தில் பாலாஜி கைது : அமலாக்கத்துறையை ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்தும் பாஜக

சமரன்

ஊழல் பெருச்சாளி திமுக செந்தில் பாலாஜி கைது : அமலாக்கத்துறையை ஓர் அரசியல் கருவியாக பயன்படுத்தும் பாஜக

காங்கிரஸ் இல்லா இந்தியா - ஒற்றை கட்சி ஆட்சி முறையை அரங்கேற்றும் நோக்கில் பல்வேறு எதிர்க்கட்சிகளை உடைத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது பாஜக அரசு; ஊழல் ஒழிப்பு முகமூடியுடன் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது. இந்தியாவில் வரலாறு காணாத ஊழலில் ஈடுபடும் பாஜக ஆட்சிக்கு ஊழலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை; மோடி ஆட்சியின் நோக்கம் ஊழல் ஒழிப்பு அல்ல; ஊழல் வாதிகளை ஏக்நாத் ஷிண்டேக்களாக மாற்றுவதே. இவ்வாறு ஒற்றை கட்சி ஆட்சியின் மூலம் மாநில உரிமைகள் அனைத்தையும் மையப்படுத்தி நிரந்தர புதிய காலனிய பாசிச ஆட்சியை நிறுவுவதையே தனது இறுதி லட்சியமாக கொண்டுள்ளது பாஜக. அதன் ஓர் அங்கமாகத்தான் திமுக ஊழல் மாஃபியா கும்பலின் தளபதியாக செயல்படும் செந்தில் பாலாஜியை விசாரணையின் பெயரில் கைது செய்துள்ளது.

திமுக கும்பலின் ஊழலும் செந்தில் பாலாஜி கைதும்

ஜூன் 14 அன்று அதிகாலையில் திமுக அரசின் மின்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஊழல் குற்றச்சாட்டுக்காக அமலாக்கத்துறை 8 நாட்கள் தனது வளையத்தில் வைத்து விசாரிக்க முடிவெடுத்து கைது செய்தது. அந்த கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்றினார். சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அமலாக்கத்துறையால் சேர்க்கப்பட்ட அவர், தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அங்கிருந்து திமுக பினாமி கும்பலின் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை என்ற பெயரில் தப்பிச் சென்று விட்டார். ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் விசாரணை நாட்களை ஒத்திப்போடுவதற்காக, அது இன்றைக்கு அவசரமோ /இல்லையோ என்ற தெளிவில்லாத இருதய அறுவை சிகிச்சையையும் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையில் அவர் எந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கவில்லை எனக்கூறி செந்தில் பாலாஜி மனைவி தரப்பிலிருந்து ஆட்கொணர்வு மனுவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இருந்து தப்பிக்க வைக்க திமுக தரப்பிலிருந்து பல்வேறு மோசடி முயற்சிகளும் கையாளப்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் வரை லஞ்ச லாவணியத்தில் ஈடுபட்டதாக அன்றைய எதிர்க்கட்சி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதுவே செந்தில் பாலாஜியின் தற்போதைய கைதுக்கு காரணம் என்று கூறி திமுக அரசின் இன்றைய ஊழல் மறைக்கப்படுகிறது; பின்புறத்தில் பேரம் பேசி படியவைக்க அதை பயன்படுத்துகிறது என்பதே உண்மை. ஏற்கனவே சமரசம் செய்துகொள்ளப்பட்ட 3கோடி ரூபாய் லஞ்ச வழக்கிற்காக திமுக கும்பலே பதற போகிறது? செந்தில் பாலாஜியும் இருதய சிகிச்சை அளவுக்கு மெனக்கெட எவ்வித அவசியமுமில்லையே(!). ஆட்சியிலேறிய கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக கும்பலின் ஊழல் மலைக்க வைக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

  1.    டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் விற்பது, பார்களை சட்டவிரோதமாக ‘கரூர் கேங்’ மூலம் இயக்குவது என சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது.
  2.  முந்தைய அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து தன் பங்கிற்கு இந்தோனேஷியா சுரங்கத்திலிருந்து தரமில்லாத நிலக்கரியை கொள்முதல் செய்வது, மின் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு டென்டர் விடுவது என பல்லாயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளது.
  3.  நில ஒருங்கிணைப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி தமிழகத்தின் வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்க துணை போவதோடு தனது பினாமி ஜி-ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலமும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி வருகிறது.
  4.      பல்வேறு துறைகளில் ஊழலில் ஈடுபட்டு சுரண்டிய பணங்களை அதானியைப் போல தானும் நோபிள் ஸ்டீல் போன்ற ஷெல் (Shell) நிறுவனங்களை வெளிநாடுகளில் உருவாக்கியும், உதயநிதி ஃபவுண்டேசன் பெயரிலும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது போன்ற மாபெரும் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது.

பாசிசத்திற்கு யார் சிறப்பாக சேவை செய்து கமிஷன் பார்ப்பது என்பதே இவர்களுக்கிடையிலான பிரதான முரண்பாடு ஆகும். இந்த முரண்பாடுகளின் விளைவே செந்தில் பாலாஜியின் மீதான வருமானவரி துறையின் ரெய்டு நடவடிக்கைகளும், அதைத் தொடர்ந்த அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைகளும் ஆகும்.

ஆகையால், இந்த ஊழல் – கிரிமினல் மாஃபியா கும்பல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆவர். ஆனால் பாஜக அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த அமலாக்கத்துறை நேர்மையாக விசாரணை நடத்தி இவர்களை தண்டித்து ஊழலை ஒழித்து விடுவார்களா? என்ன, நிச்சயம் செய்ய மாட்டார்கள். அமலாக்கத்துறை ஆளும் அரசுகளின் அரசியல் கருவியாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆளும் அரசுகளின் அரசியல் கருவியாக அமலாக்கத்துறை

1980களில் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பிரபலமடைந்து இன்று வரை அமலாக்கத்துறை எதிர் கட்சிகளை மிரட்டி பணிய வைக்கும் ஓர் அரசியல் ஆயுதமாகவே ஆளும் அரசுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ், டாட்டா, பஜாஜ், ஆர்.பி, கோயங்கா போன்ற கார்ப்பரேட்களை விசாரணைக்கு உட்படுத்த முயன்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு கடிவாளமிட்டது. அது வி.பி,சிங் தலைமையிலான ஜனதா தள அரசால் முதன்முறையாக அரசியல் கருவியாக காங்கிரசுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

  1.     1989ல் காங்கிரஸ் அமைச்சர்கள் நரசிம்மராவ், கே.கே. திவாரி மீது 21 மில்லியன் டாலர் பண மோசடி வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் பேரம் பேசப்பட்டு விபி.சிங்கின் மகன் அஜெயா மற்றொரு பண மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டான். பின், காங்கிரசு அமைச்சர்கள் மீதான அந்த வழக்கு ஆதாரமில்லையெனக் கூறி கிடப்பில் போடப்பட்டது.
  2. 1991ல் எல்.கே. அத்வானி, மாதவராவ் சிந்தியா, கமல்நாத், அர்ஜூன் சிங் மற்றும் சரத் யாதவ் ஆகியோர் மீது சுமார் 65 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெயின் ஹவாலா ஊழல் வழக்கு காங்கிரசு நரசிம்மராவ் அரசால் அரசியல் காரணங்களுக்காக தொடுக்கப்பட்டது. பின்னர் 1998ல் வாஜ்பாய் அரசு வந்தபின் அந்த வழக்கும் கைவிடப்பட்டது.

இது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆளும் அரசுகள் எதிர் கட்சிகளை பேரம் பேசி பணிய வைக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தி வந்துள்ளன. காங்கிரஸ், பாஜக, ஜனதா தளம் என எந்த கட்சிகளுக்கும் ஊழலை ஒழிப்பதென்பது நோக்கமாக எப்போதும் இருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை.

2014ல் அன்னா ஹசாரே போன்ற என்ஜிஓ கைக்கூலிகளின் ‘ஊழல் எதிர்ப்பு இந்தியா’ அமைப்பின் உதவியுடன் ஆட்சியிலேறிய மோடி அரசு, ஒருபக்கம் ரபேல், வியாபம், 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, அதானியின் 18லட்சம் கோடி பங்குச்சந்தை முறைகேட்டிற்கு துணைபோதல், 11லட்சம் கோடி கார்ப்பரேட்களுக்கு வார கடன் தள்ளுபடி - விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்‌ஷி, ரிசி அகர்வால் போன்ற கொள்ளையர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவுதல் என ஊழலின் பிதாமகனாக திகழந்து கொண்டு மறுபக்கம் முன்னெப்போதையும் விட அதிகமாக அரசியல் பேர – ஆட்சிமாற்ற நடவடிக்கைகளுக்காக அமலாக்கத்துறையை ஓர் அடியாள் படையாக பயன்படுத்தி வருகிறது. அதுவும் தனது முந்தைய 5 ஆண்டு ஆட்சியை விட 2019க்கு பிறகு இவ்வித நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

1.        2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததையொட்டி அங்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைந்தது. 2022ல் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு 40 எம்.எல்.ஏக்களை மிரட்டி கூட்டணியை உடைத்ததோடு ஆட்சியையும் சதிசெய்து கவிழ்த்தது. தற்சமயம் பாஜக ஆதரவு (ஷிண்டே பிரிவு) சிவசேனாவின் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும் கூட வழங்கியுள்ளது.

2.        சட்டீஸ்கரில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், காங்கிரசு முதல்வர் பூபேசு பாகலுக்கு எதிராக ரூ.2000 கோடி மதுபான ஊழல் வழக்கை முடுக்கி விட்டுள்ளது. இதற்கும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி உள்ளது. நடவடிக்கை எடுக்க தயங்கிய சில அதிகாரிகள் மீதும் கூட தாக்குதல்களையும் மிரட்டல்களையும் தொடுத்து வருகிறது

3.        கேரளாவில் சிபிஎம் அரசின் செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மீது கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதிவாரியம் (Kerala Infrastructure Investment Board) கடன் பத்திரங்கள் பெறுவதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கியது சம்பந்தமாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (Foreign Excahange Management Act) மீறியதாக வழக்கை பதிவு செய்துள்ளது.

4.        மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி பழைய (2005ம் ஆண்டு) வழக்கை உயிரூட்டி அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

5.        டெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை நகை கடை ஊழல் வழக்கிலும், கல்வி அமைச்சர் மனீஷ் சிசோடியாவை மதுபான ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறை மூலம் கைது செய்துள்ளது.

6.        370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டபின் காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

7.        காங்கிரசு தலைவர்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் நேசனல் ஹெரால்டு ஊடக ஊழல் சம்பந்தமாக சுப்ரமணிய சுவாமி மூலம் வழக்குத் தொடர்ந்து அதை அமலாக்கத் துறை நடத்தி வருகிறது.

8.        பிபிசி, டைம்ஸ் குழுமம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் மீதும் அமலாக்கத்துறையை ஏவி தன் ஆட்சிக்கு எதிரான செய்திகள் வெளிவராமல் மிரட்டி வருகிறது.

9.        பல்வேறு அடையாள அரசியல் போராட்டங்களில் ஈடுபடும் – எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக செயல்படும் என்ஜிஓக்களுக்கும் அமலாக்கத்துறை மூலம் நெருக்கடியை கொடுத்து வருகிறது. (இன்னொரு பக்கம் பன்னாட்டு ஏகாதிபத்தியங்களிடம் அதிக நிதிபெறும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்களையும், என்ஜிஓக்களையும் தங்கள் அணியில் வைத்துக் கொண்டு என்ஜிஓ பண பரிவர்த்தனை ஒழிப்பு நாடகமாடுகிறது)

இதே போன்று பீகார், ஆந்திரா, தமிழ்நாடு என பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சியினர் மீதும், தான் ஆளும் மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் மீது பழைய வழக்குகளை தோண்டியெடுத்தும் தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளில் அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பிக்களை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி அடிபணிய வைத்து தனது கட்சி வளையத்திற்குள் இழுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் சாரதா வழக்கில் திரிணாமுல் காங்கிரசின் முகுல்ராய் மற்றும் சுவேந்து, மகாராஷ்டிராவில் காங்கிரசின் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், அசாமில் காங்கிரசின் ஹிமாந்த பிஸ்வ சர்மா, கோவாவில் காங்கிரசின் திகம்பர் காமத் மற்றும் சர்ச்சில் அலெமாவோ போன்ற முன்னாள் முதல்வர்களையும் அமைச்சர்களையும் கூட அமலாக்கத்துறை மூலம் கட்டம் கட்டி தூக்கி அவர்களை பாஜகவில் இணைத்துக் கொண்டது. இதில் மகாராஷ்டிரா காங்கிரசின் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், தான் தற்போது பாஜகவில் சேர்ந்த பின்புதான் ரெய்டுகள் பற்றிய பயமின்றி நிம்மதியாக தூங்குவதாக தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் மீதே பாஜக அரசின் பாசிச அடக்குமுறை தீவிரம் பெற்றுள்ளது.

2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 121 அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. இதில் 24பேர் காங்கிரஸ், 19 பேர் திரிணாமுல் காங்கிரஸ், 8பேர் தேசியவாத காங்கிரஸ், 8பேர் சிவசேனா என 115 பேர் பாஜக அல்லாத எதிர்க் கட்சியினர். அமலாக்கத்துறை தொடங்கப்பட்டது முதல் 2014வரை வெறும் 112 ரெய்டுகளை மட்டுமே நடத்தியிருந்தது; ஆனால், 2014க்குபின் 2022க்குள் மட்டும் 3010 ரெய்டுகளை நடத்தியுள்ளது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட ரெய்டுகளை நடத்தியுள்ளது. இவ்வாறு பாஜக அரசு அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக மிகத்தீவிரமாக பயன்படுத்தி வருகிறது. இந்த பாசிசப் போக்குகளுக்கு அடிப்படையாக விளங்குவது பொருளாதார மையப்படுத்துதலும் அரசியல் மையப்படுத்துதலுமே ஆகும்.

அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் கருவி மட்டுமல்ல அது புதிய காலனிய ஆதிக்கத்தின் மற்றுமோர் ஆயுதம்

அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) முதலில் 1956ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு (Enforcement unit) என உருவாக்கப்பட்டது. அது அந்நிய செலாவணி ஒழுங்குப்படுத்துதல் சட்டத்தை (Foreign Exchange Regulation Act, 1947 – FERA) பின்பற்றும் முறையிலே இயங்கியது. 1957ல் அமலாக்கத்துறை என பெயர் மாற்றப்பட்டது. புதிய காலனிய ஆதிக்கத்தின் கருவியாக இது இருந்தாலும் அன்றைய கட்டத்தில் இந்த அமைப்பிற்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை. 70களின் நடுவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் அமல்படுத்தப்பட்ட எமெர்ஜென்சி ஆட்சி காலத்தில் FERA சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அமலாக்கத்துறை ஓரளவுக்கு பிரபலமடையுமளவிற்கு மாற்றப்பட்டது. 90களுக்கு பின் அமல்படுத்தப்பட்ட உலகமய-தாராளமய-தனியார்மயக் கொள்கைகளின் மூலம் நாட்டின் புதிய காலனிய பிடி இறுக்கப்பட்டது; ஊழலும் பெருகியது. புதியகாலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையில் FERA சட்டம் மாற்றியமைக்கபட்டு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம்,1999 (Foreign Exchange Management Act,1999 – FEMA) கொண்டு வரப்பட்டது. அதோடு தொடர்ச்சியாக 2002ம் ஆண்டு, பண மோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundaring Act,2002 – PMLA) அறிமுகப்படுத்தப்பட்டு 2005ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது (கூடுதல் விவரங்களுக்கு உள்பெட்டியில் உள்ள குறிப்பை படிக்கவும்). 2018ம் ஆண்டு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை (Fugitive Economic Offenders Act, 2018 - FEOA) அறிமுகப்படுத்தி அதே ஆண்டே அமல்படுத்தியது. இவையனைத்தும் பெரிதாக நாடாளுமன்ற விவாதங்களிலும் பொதுத்தளத்திலும் பேசுபொருள் ஆக்கப்படாமலேயே பாசிச முறையில் அமல்படுத்தப்பட்டன. இதில் PMLA சட்டம் பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு காங்கிரஸ் மன்மோகன்சிங் அரசால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு புதிய காலனிய சட்டங்களை பாஜக – காங்கிரஸ் அரசுகள் மாறி மாறி அமல்படுத்தியது போலவே அமலாக்கத்துறை சம்பந்தமான இந்த புதிய காலனிய சட்டங்களையும் இரண்டு அரசுகளும் மாறி மாறி செயல்படுத்தியே வந்துள்ளன; வருகின்றன.

பண மோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundaring Act,2002 – PMLA)

இச்சட்டம் உலகமயமாக்கலை முன்னிட்டு 1988ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டு பல்வேறு நாடுகளில் அமல்படுத்துவதற்கு வழிகாட்டப்பட்டது. நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Acation Task Force – FATF) என்ற உலகளாவிய அமைப்பு 1989ம் ஆண்டு இச்சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியது. அப்போதுதான் IMF, உலக வங்கி போன்ற நிதிநிறுவனங்களிடமிருந்து தடையின்றி பணம் அல்லது கடன் பெற முடியும் எனவும் அறிவுறுத்தியது. அதனடிப்படையிலேயே 2002ம் ஆண்டு இந்தியாவில் வாஜ்பாய் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு 2005ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் எப்பகுதியும் விதிவிலக்கல்ல. இச்சட்டத்தின் பயன்கள் முழுவதையும் பெறும் உரிமையாளர் (Beneficial Owner) என்பவர் - இவ்வழக்கு யாரால் தொடுக்கப்பட்டிருந்தாலும் முறைகேட்டில் ஈடுபட்ட பணத்தின் அல்லது சொத்தின் மீதும், தீர்ப்பாயத்தின் மீதும் உச்சபட்ச உரிமை பெற்றவரே ஆவார். (அது நாட்டின் மீது புதிய காலனிய ஆதிக்கத்தை நிறுவும் நிதிமூலதன கும்பலை தவிர வேறு யாராக இருக்க முடியும்!). இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முழு அதிகாரத்தையும் அமலாக்கத்துறைக்கு வழங்கியுள்ளது. சிபிஐ, போலீஸ், வருமான வரித்துறை உள்ளிட்ட அரசின் கருவியாக செயல்படும் அமைப்புகளுக்கு இல்லாத கட்டற்ற அதிகாரங்களை அமலாக்கத்துறைக்கு 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மூலம் கொண்டு வந்தது பாஜக அரசு. அவை

1.        அமலாக்கத்துறை மூலம் அமலாக்க வழக்கு தகவலறிக்கை (Enforcement case information report –ECIR) பதியப்படும். இது போலீசால் பதியப்படும் எஃப்.ஐ.ஆர் போன்றது. எப்.ஐ.ஆர். ல் என்ன பதியப்பட்டுள்ளது என்பதை நாம் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும், பொதுத் தளங்களிலும் அது காண கிடைக்கும். ஆனால் ஈசிஐஆர் ல் என்ன பதியப்பட்டுள்ளது என்பது ரகசியமாக பாதுகாக்கப்படும், அதை குற்றம் சுமத்தப்பட்டவருக்கு கூட தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தேவையெனில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தே தெரிந்துகொள்ள முடியும்.

2.        இச்சட்டம் மூலம் பண மோசடி குற்றங்களில் ஈடுபடுவோரின், அவரது உறவினர்களின், வழக்கில் சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களின் அசையும் - அசையா சொத்துக்கள் என அனைத்து விதமான சொத்துக்களையும் வழக்கோடு இணைக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அச்சொத்துக்களின் விவரங்களையும் கூட பொது வெளியில் வெளியிடவும் தேவையில்லை.

3.        குற்றம் சுமத்தப்பட்டவர் அல்லது ஈசிஐஆர் பதியப்பட்டவர் குற்றவாளி என அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தாமாகவே தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்.

4.        வழக்கு தொடரப்பட்டவர் ஜாமீன் பெறுவதும் கடினமாக்கப்பட்டுள்ளது. அவர் ஒன்று இக்குற்றத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதற்கான நம்பிக்கையையும், இனி இது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட மாட்டார் என்ற நம்பிக்கையையும் அமலாக்கத்துறையின் சிறப்பு நீதிமன்றத்திற்கு உண்டாக்க வேண்டும்; அப்போதுதான் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும்.

இவற்றை எதிர்த்து எதிர் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022ம் ஆண்டில் வழக்கின் கோரிக்கைகளை நிராகரித்து அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவேதான் செந்தில்பாலாஜி கைது சட்ட விரோதம் என திமுக தரப்பு வாதிடுவது இந்த PMLA சட்ட விதிகளுக்கு பொருந்தாது என்றும் இது PMLA சட்ட அடிப்படையிலான நடவடிக்கையே என்றும் அமலாக்கத்துறை வாதிடுகிறது. ஏற்கனவே நடப்பில் உள்ள குற்றவியல் தண்டனை சட்டங்களில் இருக்கும் குறைந்தபட்ச உரிமைகளைகூட பறிக்கும் கருப்புச் சட்டமாக அரங்கேற்றப்பட்டுள்ளது இந்த புதிய காலனிய PMLA சட்டம்.      

இந்த அமலாக்கத்துறை ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதெல்லாம் ஏமாற்று பேச்சே. இது புதிய காலனிய ஆதிக்கத்தை இங்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தின் மீது கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட மற்றுமொரு கருவியே ஆகும். இது சுயேச்சையாக இயங்கும் அமைப்பு கிடையாது.

1.         நிதி நடவடிக்கை பணிக்குழு (Financial Acation Task Force – FATF) என்ற உலகளாவிய அமைப்பு – இதுவே PMLA சட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இது 200 நாடுகளுக்கும் மேலாக பண மோசடிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு

2.        கேம்டன் சொத்து மீட்பு வலையமைப்பு (Camden Asset Recovery Inter-Agency Network – CARIN) – இது அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, போலாந்து, ருமேனியா போன்ற நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. மேலும் ஐரோப்பிய நிதிசார் குற்ற பிரிவுடன் (Europol Financial Crime Unit) இணைந்து செயல்படும் அமைப்பாகும். இது நாடு கடந்து சொத்துக்களை கைப்பற்றும் அதிகாரம் படைத்த அமைப்புமாகும்.

3.        ஆசிய பசிபிக் சொத்து மீட்பு வலையமைப்பு (Asia Pacific Asset Recovery Inter agency Network – ARIN (AP)) – இதுவும் CARIN போலவே குறிப்பாக ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள நாடுகளின் பணமோசடி குற்றங்களை விசாரித்து சொத்துக்களை கைப்பற்ற நாடுகடந்த அதிகாரம் படைத்த அமைப்பாகும்.

4.        ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் அமலாக்க கூட்டமைப்பு (United Nation Convention against Corruption) மற்றும் போதைப்பொருள் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (United Nation Office on Drugs and Crime) – இது 100க்கும் மேலான நாடுகளில் 350க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் (CSO) மூலம் தனது கட்டுப்பாட்டை நிறுவி வருகிறது.

5.        மத்திய புலனாய்வு துறை (Central Bureau of Investigation –CBI) – இது அமலாக்கத்துறை குற்றவியல் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக 40 நாடுகளுக்கும் மேலாக பலதரப்பு – இருதரப்பு ஒப்பந்தங்கள் (Mutual Legal Assistive Treaty – MLAT) போட்டுள்ளது.

என உலகளாவிய புதிய காலனிய நிறுவனங்களுடன் இந்திய அமலாக்கத்துறை பிண்ணிப் பிணைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இவை ஏகாதிபத்திய நிதிமூலதனம் காலனிய நாடுகளில் தங்குதடையின்றி வருவதற்கும் அது எவ்வித சிதறலுமின்றி கொள்ளை லாபத்துடன் நாட்டைவிட்டு பறந்தோடுவதற்கும் உருவாக்கப்பட்ட புதியகாலனிய அமைப்புகள். இவற்றை சர்வதேச நிதியம் (IMF), உலக வங்கி (World bank), உலக வர்த்தக கழகம் (WTO) போன்ற நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. அந்நிய நிதிமூலன ஆதிக்கமும் அதற்கு சேவை செய்யும் தரகு முதலாளித்துவமும் என்ன வழிகாட்டுகிறதோ அதையே அமலாக்கத்துறை நிறைவேற்றும். அதை இங்கிருக்கும் ஆளும் வர்க்க கட்சிகள் தங்கள் ஒட்டுண்ணித்தனமான அரசியல் நலன்களுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றன. அதற்கு மேல் அந்த அமைப்பில் அதிகாரம் செலுத்த அவர்களால் முடியாது. அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையிலேயே அமலாக்கத்துறைக்கு எல்லையற்ற சட்டவிரோத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் கோரப்பற்கள் தீட்டிவிடப்பட்டுள்ளன. ஆகையால்தான் அது ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினரை கூட கடித்து குதறி வருகிறது.

திமுக கும்பல் கொள்ளையடிப்பதற்கான உரிமைதான் மாநில உரிமையா?

தரகுமுதலாளிகளை ஊழல் மூலம் நிதிமூலதன கும்பல்தான் வளர்த்து விடுகிறது, இந்த ஊழல்களின் சுமைகள் என்னவோ கோடானுகோடி உழைக்கும் மக்கள் தலையில்தான் சுமத்தப்பட்டு வருகிறதே ஒழிய, இன்றும் கோடி கோடியாய் வர்த்தக – பங்குச் சந்தை மோசடிகளில் ஈடுபடும் அதானி, அம்பானி, டாட்டா போன்ற தரகு கும்பல் மீது அமலாக்கத்துறை ஒரு துரும்பையும் கூட அசைக்கவில்லை. நிதிமூலதன ஆதிக்கத்திற்கும் இந்த தரகுமுதலாளித்துவ கும்பல்களுக்கும் யார் சிறப்பாக சேவை செய்வது என்ற போட்டோ போட்டியில் இருந்துதான் அமலாக்கத்துறையை பிற கட்சிகள் மீது ஏவி விட்டுள்ளது பாஜக அரசு. ஏனெனில் பாஜகவுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற ஆளும் வர்க்க கட்சிகளுக்கும் இடையில் அரசியல் – பொருளாதார கொள்கைகளில் எவ்வித வேறுபாடுமில்லை. இவர்கள் அனைவரும் பாசிசத்திற்கு சேவை செய்பவர்கள்தான் – அல்லது அதன் தொங்குசதைகள் தான். இவர்கள் ஆளும் தரகுமுதலாளித்துவ கும்பலின் பல்வேறு (மத்திய – மாநில) பிரதிநிதிகள்தான். இவர்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடு என்பது பாசிசத்திற்கும் பாசிசத்திற்கெதிரான போக்கிற்கும் இடையிலான முரண்பாடு இல்லை. பாசிசத்திற்கு யார் சிறப்பாக சேவை செய்து கமிஷன் பெறுவது என்ற முரண்பாடே ஆகும். இவர்கள் அரங்கேற்றும் பாசிசத்தின் பொருளியல் அடிப்படை ஒன்றே; வடிவம் மட்டுமே மாறுகிறது. பாஜக தலைமையில் இந்துத்துவ பாசிசமாக கட்டியமைப்பதா அல்லது காங்கிரஸ் தலைமையில் பெருந்தேசிய வெறி பாசிசமாக கட்டியமைப்பதா என்பதே. குஜராத் மாடலா? திராவிட மாடலா? என்.ஜி.ஓ மாடலா? அல்லது கேரளா மாடலா? யார் கார்ப்பரேட் நலன்களுக்கு சிறந்த சேவகன் என்பதே இவர்களுக்கு இடையிலான போட்டியாகும். எலும்புத்துண்டை கவ்விப் பிடிப்பதில் வெறிநாய்களுக்கிடையிலான சண்டையே செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை.

ஜூன் 7 ம் தேதியன்று திட்டமிடப்பட்டு பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 23ம் தேதியன்று நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகள் மாநாடு பாட்னாவில் நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, மாநாட்டில் பாஜக இல்லா இந்தியா (BJP mukt Bharath) என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இதில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், மெகபூபா முப்தி, ஹேமந்த் சோரன், ஃபரூக் அப்துல்லா, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, தீபாங்கர் பட்டாச்சார்யா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 17 தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமீபத்தில் INDIA எனும் கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது தன்னுடைய ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ –’ஒரே நாடு ஒரே கட்சி’ திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான் பாஜக தற்போது தீவிரமாக இந்த ஏற்பாட்டை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் அங்கமாகத்தான் அமலாக்கத்துறையை ஏவி மு.க.ஸ்டாலின் கும்பலை பேரம் பேசி கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. திமுகவின் பலவீனமான கண்ணியின் மீது தனது தாக்தலை முதலில் தொடுத்துள்ளது. செந்தில்பாலாஜி திமுகவின் நிரந்தர விசுவாசியாக இருக்கப்போவதில்லை. அவர் வரலாறே கட்சி தாவல்தான். அதுமட்டுமில்லாமல் இன்று திமுக கட்சிகாரர்கள் மத்தியில் பணபட்டுவாடா மூலமும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளார் அவர். அதை உடைத்தால் திமுக கணிசமான இழப்புகளை சந்திக்கும் என்பதை தெரிந்தே செந்தில் பாலாஜியை தாக்கியுள்ளது பாஜக.

கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் பல்வேறு பாசிச நடவடிக்கைகளுக்கு துணை சென்ற திமுக இன்று மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாய் கூப்பாடு போடுகிறது. கல்வி மீதான மாநில உரிமைகளை தாரை வார்த்தது; காவல்துறையில் ஒரே நாடு ஒரே சீருடைத் திட்டத்தை அமல்படுத்தியது; என்.ஐ.ஏ வுக்கு ஆதரவாக செயல்பட்டது; ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகளை ஒடுக்கியது என பல்வேறு வழிகளில் மாநில உரிமைகளை மத்திய அரசிற்கு தாரை வார்த்தது திமுக அரசு. கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவோடு கொஞ்சி குலாவியபோது தெரியவில்லையா மாநில உரிமைகள் பறிபோகிறதென்று(?). இன்று செந்தில் பாலாஜியை கைது செய்தவுடன் இவர்களுக்கு மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறதாம்(!). திமுக கும்பல் கொள்ளையடிப்பதற்கும் ஊழல் செய்வதற்குமான உரிமைகள்தான் மாநில உரிமைகளா(?). யாரை ஏமாற்ற இந்த கூப்பாடு. தமிழக உழைக்கும் மக்களுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளே மாநில உரிமைகள். இதை முழுவதும் மத்தியில் ஒப்படைத்துவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது இந்த துரோக கும்பல்.

எனவே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை என்பது தரகுமுதலாளித்துவ கும்பல்களுக்கிடையிலான கொள்ளையடிப்பதற்கான போட்டியே தவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கை அல்ல.

ஊழலின் ஊற்றுக்கண் ஏகாதிபத்திய நிதிமூலதனமே

முதலாளித்துவம் ஒழிக்கப்படும் வரை ஊழலை ஒழிக்க முடியாது. நாட்டின் மீது ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க ஊழலின் அளவும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் 90களுக்கு பின் அமல்படுத்தப்பட்ட உலகமய-தாராளமய-தனியார்மயக் கொள்கைகளுக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஊழல், எதைத் தொட்டாலும் ஊழல் என ஊழல் தலைவிரித்தாடுகிறது. விதிவிலக்கின்றி எல்லா ஆளும் வர்க்க கட்சியினரும், அதிகாரிகளும் பெரும் முதலாளிகளும் மாபெரும் ஊழலில் திளைத்து வருகின்றனர். ஏனெனில் ஊழலுக்கு அடிப்படையாக விளங்குவதே இந்த ஏகாதிபத்திய நிதிமூலதனம் தான்.

அது இரண்டு வகை ஊழல் மூலமாக தனது ஆதிக்கத்தை நிறுவுகிறது:
1) அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தரப்படும் நேரடி லஞ்சம் மூலமாக, 2) பங்குச் சந்தைக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள கூட்டுகளினால் உருவாகும் ஒப்பந்தங்கள் மூலமாக – இந்த முதலாளித்துவ ஊழல்களே அரசாங்கமும் அமைச்சர்களும் சாமானிய உழைக்கும் மக்களிடமிருந்து லஞ்ச லாவணியங்கள் மூலம் அடிக்கும் கொள்ளைக்கு கூட அடிப்படையாக உள்ளது.

இதில் மக்கள் பெரும்பாலும் தாங்கள் நேரடியாக ஏமாற்றப்படும் லஞ்ச லாவணியங்களுக்கு எதிராக மட்டுமே வாதாடுகின்றனர். ஆனால் நிதிமூலதன ஆதிக்கத்திற்கான ஊழலே பிரதானமாக எதிர்க்கப்பட வேண்டியது. மக்கள் மீது சுமத்தப்படும் அனைத்து வகை பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கும் இந்த முதலாளித்துவ ஊழலே காரணமாக உள்ளது. உண்மையான ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்பது இந்த முதலாளித்துவ ஊழலையும், ஆளும் வர்க்க கும்பலின் அரசியல் பொருளாதாராக் கொள்கைகளையும், ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தையும் எதிர்த்த போராட்டத்துடன் இணைக்கப்பட்டதே ஆகும். அப்போராட்டத்தின் வெற்றிதான் ஊழலையும், கருப்பு பணத்தையும், நாட்டின் வளங்கள் சுரண்டப்படுவதையும் ஒழிக்கும்.

பிற கட்சிகளின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளும் - பாட்டாளி வர்க்க நிலைபாடும்

வானளவிலான முதலாளித்துவ ஊழலில் திளைக்கும் பாஜக அரசுதான் திமுக கும்பலின் ஊழலை ஒழிக்கப்போவதாக நாடகமாடுகிறது. அண்ணாமலை போன்ற முன்னாள் மாமூல் அதிகாரிகள் பாஜகவின் அன்றாட ஊழலை மறைத்து திமுகவின் டாஸ்மாக் ஊழலைப் பற்றி கதை கதையாக அளக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கும் போது 2ஜி அலைகற்றை ஊழலுக்காக ராஜாவையும் கனிமொழியையும் பணயமாக வைத்து தன் கூட்டணியிலிருந்த கருணாநிதியை கூட மிரட்டி பணிய வைத்தது; காங்கிரசோடு சேர்ந்து ஈழ மக்களின் இரத்தம் குடித்தது ஊழல் கறை படிந்த திமுக அரசு. ஆனால் இன்று செந்தில் பாலாஜி கைதை கண்டிப்பதாக வேஷம் போடுகிறது காங்கிரசு. அமலாக்கத்துறையை மாநில அரசுகளுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவதில் பாஜகவும் – காங்கிரசுக்கும் இடையே எவ்வித வேறுபாடுமில்லை. மீண்டும் காங்கிரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இதைவிட மூர்க்கமாக கூட அமல்படுத்தலாம், அது பாசிசம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி அல்லது தோல்வியை பொறுத்தே அமையும். விசிகவும், சிபிஎம்மும் விழுப்புரத்தில் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுரிமையை மறுத்து சீல் வைக்கப்பட்டதை கண்டித்து கதவுடைப்பு மற்றும் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்தன; அதை நாம் வரவேற்ற மறுநாள், செந்தில் பாலாஜி கைதானவுடனே கோவில் நுழைவுப் போராட்டத்தை கைவிட்டு, செந்தில் பாலாஜி விடுதலையாக வேண்டி அம்மனுக்கு வேல்குத்தி காவடி எடுக்க சென்றுவிட்டன. மக்கள் அதிகாரம் – ராஜூ அணி, பு.இ.மு, மருதையன் உள்ளிட்ட பல மா.லெ. குழுக்கள் கூட பாசிசத்தை வெறும் மதவெறியாக சுருக்கி திமுகவின் ஊழலுக்கும் கூட வக்காலத்து வாங்க கிளம்பி விட்டனர். ஆரிய ஊழலுக்கு எதிரான திராவிட ஊழல் முற்போக்கானது என்று விதந்தோதி கொண்டாடி வருகின்றன. இவ்வாறு இந்த கும்பல் தங்களது சந்தர்ப்பவாத நிலைபாடு மூலம் அம்பலமாகியுள்ளன.

வினவு தளம் மட்டும் பாஜகவோடு சேர்த்து திமுகவையும் விமர்சிக்கிறது; அது திமுகவின் ஊழலை விமர்சித்தாலும், பாஜகவின் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வெறும் தேர்தல் அரசியலுக்கான நகர்வாக மட்டுமே பார்க்கிறது, அதன் பின்னிருக்கும் புதியகாலனிய பொருளாதார அடிப்படைகளை பற்றி பேசவில்லை. ஊழலின் ஊற்றுக்கண் ஏகாதிபத்திய நிதிமூலதனம் என்பதை காண மறுக்கிறது.

நாம் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் மீது ஏவப்படும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் குரல் எழுப்பியுள்ளோம், சமீபத்தில் கூட ராகுல் காந்தியின் மீதான தண்டனை - நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு போன்ற ஒற்றைகட்சி ஆட்சிமுறைக்கு வித்திடும் பாஜக அரசின் பாசிச நடவடிக்கைகளை கண்டித்தோம். ஆனால், எவ்விதத்திலும் பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் கிரிமினல் மாஃபியா திமுக கும்பலின் ஊழலுக்கு ஆதரவாக குரல் எழுப்ப முடியாது; அதே வேளையில் அமலாக்கத்துறையும் பாஜக மோடி கும்பலும் ஊழலை ஒழிக்க வந்த ரட்சகர்கள் அல்ல; அவை புதிய காலனியாதிக்கத்தின் கருவிகள் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறி இந்த ஆளும் வர்க்க கும்பலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். மக்களை பாசிசத்திற்கெதிராகவும், முதலாளித்துவ ஊழலுக்கெதிராகவும் அணிதிரட்ட வேண்டும்.

- சமரன்

ஜூலை -ஆகஸ்ட் இதழ்