பிஞ்சு குழந்தைகளை சிதைத்த வக்கிர வீரமணி கும்பல்

ஜி. மஞ்சுளா - சாவித்திரி கண்ணன் - இரா. முருகவேள் - மகாதேவன்

பிஞ்சு குழந்தைகளை சிதைத்த வக்கிர வீரமணி கும்பல்

1
பிஞ்சு குழந்தைகளை சிதைத்த வக்கிர வீரமணி கும்பல்

நீதியின் பிடியில் சிக்காமல் ஸ்டாலின் அரசால் காப்பாற்றப்பட்டு வந்த நிலையில் சிக்கியது எப்படி?

ஜெம் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி, ஒரு 'தொண்டு நிறுவனம்' (Charitable Trust) நடத்துவதாகக் கூறிக்கொண்டு, அதன் மறைவில் நடத்தியது ஒரு கொடூரமான பாலியல் வேட்டை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 2025 அக்டோபர் மாதம், ஒரு குழந்தைகள் நல ஆர்வலரின் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழங்கிய ஒரு கவரும், அதில் இருந்த பெண் டிரைவ் மற்றும் கடிதமுமே இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி. சென்னையின் வசதி படைத்தவர்கள் வாழும் போயஸ் கார்டன் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் நடந்த இந்த வக்கிரங்கள், 

ஸ்டாலின் தலைமையில் நடந்துவந்த காவல்துறை அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட நிலையில், இன்று அதன் நிர்வாணமான உண்மை உலகிற்குத் தெரியவந்துள்ளது.

இந்தத் தொடர் குற்றங்கள் அரங்கேறிய தளம் சென்னையின் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீடு. இந்த வீட்டை சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

 வீரமணிக்கு 13 வயது முதலே தெரிந்த சாந்தி, ஏழ்மையான சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களைச் 'ஷாப்பிங்' மற்றும் 'ஹோட்டல்களுக்கு' அழைத்துச் செல்வதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி இந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த வீட்டிற்கு வீரமணி அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த வீட்டின் ஒரு அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில், 2019-ஆம் ஆண்டில் நடந்த பாலியல் வன்கொடுமைக் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தெரிந்தே சாந்தியும், மகேந்திர சிம்மனும் ஆதாரங்களை அழித்து, குற்றத்தை மூடி மறைத்துள்ளனர்.

கடந்த ஸ்டாலின் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை காவல்துறை இந்த வழக்கை கையாண்ட விதம் ஒரு புலனாய்வு விசாரணை போலவே இல்லை; மாறாக, ஒரு குற்றவாளியைக் காப்பாற்றும் திரைக்கதை போலவே இருந்தது. "வீடியோவில் இருப்பது வீரமணி இல்லை" என்று சாந்தி அளித்த பொய்யான வாக்குமூலத்தை எந்தவித சுயாதீன ஆய்வும் இன்றி காவல்துறை அப்படியே ஏற்றுக்கொண்டது (Face Value).

ஸ்டாலின் காவல்துறை தனது 'விசாரணையை' நியாயப்படுத்தத் தேடிப் பிடித்த சாட்சியங்கள் நகைப்புக்குரியவை:

தெரு முனையில் உள்ள ஒரு பஞ்சர் கடை உரிமையாளரிடம் விசாரித்து, அந்த வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வருவதில்லை என்று சான்றிதழ் கொடுத்தது.

அருகிலுள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையின் நிர்வாகப் பணியாளரிடம் வாக்குமூலம் பெற்று, அங்கு அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்தது.

ஒரு தெரு முனையில் இருக்கும் பஞ்சர் கடைக்காரரால் ஒரு பங்களாவிற்குள் யார் வருகிறார்கள், என்ன நடக்கிறது என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியுமா? அல்லது மருத்துவமனை நிர்வாகி பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? இந்த அடிப்படை அறிவைக்கூட அடகு வைத்துவிட்டு ஸ்டாலின் காவல்துறை ஒரு 'நாடகத்தை' அரங்கேற்றியது.

தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களைச் சிதைக்கத் துடித்த ஸ்டாலின் காவல்துறை, 2019-இல் காட்சிகள் பதிவான டிவிஆர் (DVR) பெட்டி 6 ஆண்டுகள் பழமையானது என்பதால் அதில் காட்சிகள் எதுவுமில்லை என்று ஒரு பொய்யான அறிக்கையைத் தயார் செய்தது. இதன் அடிப்படையில், 2026 பிப்ரவரி மாதம் வழக்கை நிரந்தரமாக முடித்து வைக்க 'குளோசர் ரிப்போர்ட்' (Closure Report) தாக்கல் செய்யப்பட்டது.

 பாதிக்கப்பட்ட சிறுமியைத் தேடிக் கண்டுபிடிக்கக்கூட காவல்துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், பின்னர் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், மற்றொரு மின் சாதனத்தில் (Gadget) இருந்த ஒரிஜினல் வீடியோ ஆதாரங்கள் கண்டறியப்பட்டு, தடயவியல் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டன.

போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா அவர்கள் ஸ்டாலின் காவல்துறையின் அந்த அவலமான அறிக்கையை ஏற்க மறுத்து அதிரடி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் கண்டிப்பால் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு, வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்ட அந்த சிறுமியைத் தற்போது தனிப்படை கண்டுபிடித்துள்ளது. அந்தச் சிறுமி எஸ்சி (SC) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) இணைக்கப்பட்டுள்ளது.

 இதுவரை சுமார் 9 சிறுமிகள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் போக்ஸோ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் வீரமணி தனது வக்கிரங்களைத் தொடரப் பயன்படுத்திய இதர இடங்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன:

* அடையாறு இல்லம்

* மயிலாப்பூர் அலுவலகம் (கதீட்ரல் சாலை)

* காணத்தூர் விருந்தினர் இல்லம்

* தேனாம்பேட்டை இல்லம்

சுமார் 12-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு சாதாரண மெத்தனம் அல்ல; இது ஒரு திட்டமிட்ட கூட்டுச் சதி.

அப்போதைய ஸ்டாலின் தலைமையிலான சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண், உதவி ஆணையர்கள் யாஸ்மின் மற்றும் ராதிகா ஆகியோர் இந்த வழக்கை ஏன் இத்தனை மெத்தனமாகக் கையாண்டார்கள்?

இந்த வழக்கை மூடி மறைக்க 40 கோடி ரூபாய் வரை கைமாறியதாக எழும் பகீர் குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டாமா?

* கைது செய்யப்படும்போது, "என்னிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இருக்கிறது, வாங்கிக் கொள்ளுங்கள்" என்று வீரமணி போலீஸிடம் பேரம் பேசியது எதைக் காட்டுகிறது?

* இந்த வழக்கைச் சீர்குலைக்கவும், ஊடகங்களைச் சமாளிக்கவும் காவல்துறையினருக்கு உதவியதாகக் கூறப்படும் பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம் போன்றவர்களின் துரோகம் மன்னிக்க முடியாதது.

இந்த அதிகாரிகள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, இவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள்.

முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் இதற்கு உதாரணமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் நேரடி கவனம் செலுத்தி, வழக்கை நீர்த்துப்போகச் செய்த அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரானைட் சாம்ராஜ்யம் என்ற பெயரில் பிஞ்சுக் குழந்தைகளை வேட்டையாடிய 'பிரடெட்டர்கள்' (Predators) எஸ்கேப் ஆகக் கூடாது. நீதிக்கான இந்தப் போரில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணீருக்கு அதிகார வர்க்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும். பண பலமும் அரசியல் செல்வாக்கும் ஒருபோதும் சட்டத்திற்கு மேலானது அல்ல என்பதை இந்த அரசு நிரூபிக்க வேண்டும்.

ஜி. மஞ்சுளா

https://www.facebook.com/100001530942887/posts/28600079032959747/?rdid=h1CfFqQbMGxnEx6V

========================================

2
எதைப் பேசுவது, எதைத் தவிர்ப்பது என்பதில் அரசியல் கட்சிகள் காட்டும் அணுகுமுறை நுணுக்கமானது!

சில அக்கிரமங்களை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கி எழுந்து கண்டிப்பார்கள்! சில அக்கிரமங்களை கண்டும்காணாதது போல அலட்சியல் காட்டுவார்கள்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தனர்.

அதே சமயம் சென்ற ஆட்சியில் அண்ணா நகரில் ஏழை சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமான குற்றவாளியை காப்பாற்ற அன்றைய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று அவமானப்பட்ட நிலையிலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போது வாய் திறக்கவில்லை.

வீரமணி விவகாரத்தில் இத்தனை ஏழைச் சிறுமிகள் பாதிக்கப்பட்ட நிலையில் – அதிலும் தலித் சிறுமிகளையே சாந்தி குறி வைத்து தூக்கியுள்ள விவகாரத்தில் – நெஞ்சை பதறச் செய்யும் உண்மைகள் ஒன்றையடுத்து ஒன்றென வெளியாகும் தருவாயில் கம்யூனிஸ்ட்கள், விசிக, பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக் காட்டிய பிறகு சி.பி.எம். சண்முகம் வாய் திறந்து பேசுகிறார். வழக்கம் போல, ’’கம்யூனிஸ்ட்களை விட இந்த மாதிரி விவகாரத்தில் கேள்வி கேட்டவர்கள் போரடியவர்கள் யார்?’’ என்ற வசனத்தையும் அவர் பேசத் தவறவில்லை. வாஸ்தவம் தான். ஆனால், இத்தனை நாட்களாக தோழர்கள் பெ.சண்முகமும், மு.வீரபாண்டியனும் இதை பேசாமல் தவிர்த்தற்கு விளக்கமில்லையே!

பொதுவாக சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் பாதிப்பு நேறும் போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெண்கள் அமைப்புகளான இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சென்ற ஆட்சியில் குற்றவாளிக்கு துணை போனவர்களைக் கண்டித்தும், இந்த ஆட்சியில் மெத்தனம் காட்டாமல் தொழில் அதிபர் வீரமணி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க கோரியும் ஏழைக் குழந்தைகளுக்கு ஆதரவாக ஒர் ஆர்பாட்டம் கூட 20 நாட்களை கடந்தும் நடத்தவில்லையே என்பது உண்மையில் ஆழ்ந்த வேதனை தருகிறது.

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் சென்ற வருடம் அக்டோபர் 6 ஆம் தேதி தரப்பட்ட கொடூரமான ஒரு பாலியல் புகாருக்கு இந்த வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தான் ஒரு போக்சோ குற்றவாளி கைது செய்யப்படுகிறார்..என்பதைக் காட்டிலும் இது ஏதோ ஓரிரு வருட விவகாரமல்ல, சுமார், கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருந்த குற்றம் என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

2003 ஆம் ஆண்டே ஒரு சிறுமி பாலியல் வன்முறையில் இவரால் இறந்தாள் என்பதை அவருக்கு சிறுமிகளை விநியோகம் செய்த சாந்தி, வீரமணிக்கு நினைவூட்டி அனுப்பிய மெசேஜ் சொல்கிறது!

ஆக, திமுக, அதிமுக இல்லாத ஆட்சி மாற்றம் நடந்திராவிட்டால் மிகப் பெரிய தொழில் அதிபர் ஜெம் கிரானைட் வீரமணி கைது என்பது ஒரு போதும் சாத்தியப்பட்டு இருக்காது என்பது மட்டுமல்ல, இந்த அக்கிரமமே வெளியில் வந்திருக்காது.

கைது செய்யப்பட்டு 20 நாட்கள் கழித்து தற்போது தான் போலீசார் அவரை மூன்று நாட்கள் விசாரணைக்கு கஸ்டடி பெற முடிந்துள்ளது. ஆக, ஏதோ சில அரசியல் அழுத்தங்கள் இந்த அரசுக்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் முதல்வர் விஜய் இன்றைக்கு வீரமணி விவகாரத்தில் காவல்துறை உறுதியுடன் செயல்பட ஊக்கம் தரும் வகையில் பேசியிருப்பது ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கிறது.

மிகப் பெரிய தொழில் அதிபர் என்ற வகையில் இவர் பழகாத ஆட்சியாளர்களே கிடையாது. எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தாராளமாக தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்தவர் – இதில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை.

தவெக புதிய கட்சி என்பதாலும், இது புதிய அதிகார மையம் என்பதாலும் வீரமணியால் இன்புளுயன்ஸ் பண்ண முடியாமல் போயிருக்கலாம்.

நீண்ட நெடுங்கால அயோக்கியர் சிக்கியுள்ளார். இந்த குற்ற வலைப் பின்ணலில் இருக்கும் காவல் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என யாரையும் விடாமல் தண்டிப்பதே எதிர்காலத்தில் குற்றம் செய்வோருக்கு அச்சத்தை தரும்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/39640322368891840/?rdid=8h3sqG4KM9D2Vv5S

======================

3

ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் காவல்துறை நிச்சயமாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கைந்து மாதத்தில் 
பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண முடியவில்லை. வீரமணி மற்றும் அவரது ஊழியர்களிடமிருந்து ஆதாரம் எதுவும் கிடைக்க என்று வழக்கை முடிக்க போலீஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது. Further action dropped - FAD செய்வது என்றால் வழக்கை கைவிடுவதுதான்.

மூன்று மாதத்தில் வழக்கை  முடிக்கவில்லை என்றால் FAD செய்ய வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப் பட்டிரூந்தால் அவருக்கு ஜாமீன் கிடைக்கும். அவ்வளவுதான். இதில் கைதே நடக்கவில்லை. பிறகு வழக்கை முடிக்க என்ன அவசரம்? 

இந்த முறைக் கேட்டுக்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுகவும் முதல்வரும் தான் பொறுப்பு. கரப்பான் பூச்சி கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் மீது கண்காணிப்பு, தடை நடவடிக்கை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதற்கு முதல்வர் விஜய் தான் பொறுப்பு என்று அபிஜித் திப்கே அறிக்கை வெளியிட்ட போது நாமெல்லாம் எவ்வளவு குதூகலம் அடைந்தோம். அதேதான் இதற்கும்.

அதை இல்லை என்று நிரூபிக்க செய்யப்படும் முயற்சிகள்,
ஆந்திரா ரெட்டி, தமிழ் முதலாளி விளக்கங்கள் 
மறைமுகமாக வீரமணிக்கு அனுதாபம் தேடக் கூடியவை.

வழக்குக்கு காரணமானவர்கள் ஒருவேளை ஆந்திரா ரெட்டியாக இருந்தாலும், அம்பானி அதானியாகவே இருந்தாலும்  குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு இரக்கம் 
காட்டப் படவே கூடாது. வழக்கை ஊற்றி மூட முயன்றவர்களும் கட்டாயம் தண்டிக்கப் பட வேண்டும்.

- இரா. முருகவேள்

https://www.facebook.com/share/1CHDoUGXBK/

=====================================

4
வீரமணி விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே செல்கிறது

கடந்த சில நாட்களாக வீரமணியை மிரட்டி பணம் வாங்கியதாக சிலரின் பெயர்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான பெயர் ரஞ்சன் குமார். இவர் காங்கிரஸ் SC/ST பிரிவு தலைவர். இந்த நபரும் சிறையில் இருக்கும் சாந்தியும் வீடியோவை காண்பித்து வீரமணியை மிரட்ட ஜான்பாண்டியனை அணுகியதாக செய்திகள் பரவியது. 

இந்த சம்பவம் பற்றி பத்திரிகையாளர் வாராகி செப்டம்பர் முதல் வாரத்திலேயே சொல்லிவிட்டார். எனவே இந்த செய்தி உண்மை தான். அதே போல இன்று பேட்டியளித்த ஜான் பாண்டியனும், ரஞ்சன் மற்றும் சாந்தி இருவரும் தன்னை சந்தித்தனர் என்பதை மறுக்க வில்லை. மிரட்டல் மற்றும் பணம் விஷயத்தில் ஜான் பாண்டியன் வேறொரு வெர்ஷன் சொல்கிறார். அதை தள்ளி வைப்போம். 

தற்போது இந்த ரஞ்சன் குமார் இன்னொரு டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார். 2024-ம் ஆண்டே வீரமணியின் வீடியோ ரஞ்சனுக்கு கிடைத்து விட்டது. அப்போதே சாந்தி இவருக்கு அறிமுகம். சாந்தியின் வீட்டுக்கு சென்ற பொழுது அந்த வீட்டில் இருந்த பெரிய டிவியில் இந்த வீடீயோவை போட்டு காட்டியிருக்கிறார் சாந்தி. அதை தனது செல்போனில் பதிவு செய்திருக்கிறார் ரஞ்சன். 

அதற்கு பிறகு இதுதொடர்பாக காவல்துறையிடம் புகாரும் அளித்ததாக சொல்கிறார் ரஞ்சன். அதற்கு ஆதாரமாக மகேஷ்குமார் என்ற காவல் அதிகாரிக்கு வாட்சப் மூலம் வீடியோ அனுப்பியதை காட்டுகிறார். 

எழுத்து வடிவமாக புகார் அளித்தும், வீடியோ ஆதாரம் கொடுத்ததும், இன்னார் தான் குற்றவாளி என்று சொல்லியும், ஆதாரம் எங்கே இருக்கிறது என்ற தகவலை சொன்னபிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது நடந்தது 2024. 

இந்த ரஞ்சன் தற்போது நல்லவர் போல தான் முன்பே புகார் கொடுத்ததாக சொல்கிறார். ஆனால் இரண்டு வருடமாக இந்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார். த வெ க ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் கூட வெளியே சொல்லவில்லை. வீரமணி கைது செய்யப்பட்டு 20 நாட்களாகியும் கூட வெளியே சொல்லவில்லை. வீரமணியை மிரட்டி பணம் வாங்கியவர்கள் லிஸ்டில் ரஞ்சன் பெயரும் வந்ததால், இப்போது வெளியே வந்திருக்கிறார். 

இன்னொரு புறம் 2024-ம் ஆண்டே புகார் வந்த பிறகும், அதுவும் வீரமணி என்ற நபர் தான் இப்படி செய்திருக்கிறார் என்று தெரிந்த பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது. 

இந்த விவகாரத்தில் நேற்று வரை டிபெண்ட செய்து கொண்டிருந்த திமுகவினர் ஒரு பாயிண்டை முக்கியமாக சொல்லி வந்தனர். புகார் கிடைத்த ஒரே நாளில் நாங்கள் வழக்கு பதிவு செய்து விட்டோம் என்று தங்களுக்கு ஏற்பட்ட டேமேஜை குறைக்கப் பார்த்தனர். ஆனால் புகார் கொடுத்து ஒரு வருடமாக எந்த நடவடிக்கையும் இல்லை என்பது இப்போது தான் புரிகிறது. 

மேலும் 2025 அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கும் வீரமணியை தண்டிப்பதற்காக பதியப்பட்டது அல்ல. வழக்கை காரணம் காட்டி வீரமணியை மிரட்டி பணம் பறிப்பதற்காகத்தான் மேம்போக்காக ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் பறித்த பிறகு பிப்ரவரி மாதம் இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது வீரமணி தான் என்று தெரிந்தும், அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

இந்த விவகாரத்தின் ஆரம்பப்புள்ளி சாந்தி. அவர் வீரமணி நிறுவனத்தில் பணிபுரிபவர். அதே சமயம் வீரமணியால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. வீரமணியின் இந்த படுபாதக செயலுக்கு உறுதுணையாக இருந்தவரும் சாந்தி தான். 

வீரமணியிடம் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் சாந்தியின் கண்ணை உறுத்தியிருக்கிறது. அதனால் வீரமணியின் இந்த கொடூரத்தை படம் பிடித்திருக்கிறார். அதை வைத்து பணம் பெறுவதற்காக தான் ரஞ்சனை தொடர்பு கொண்டிருக்கிறார். ரஞ்சன் மூலமாக ஜான்பாண்டியன் இதற்குள் வருகிறார். ஆனால் அவரிடம் வீடியோ காட்டப்பட்டதா என்பது பற்றி தெளிவில்லை. 

சாந்தியை பாதிக்கப்பட்டவராக காட்டி, வீரமணியிடம் இருந்து பணம் பெற பஞ்சாயத்து செய்ய பேசப்பட்டது என்பது ஜான்பாண்டியன் வெர்ஷன்.

ஆனால் ரஞ்சன் மற்றும் சாந்தியிடம் வீடியோ இருப்பது தெரிந்து இருவரையும் மிரட்ட ஜான்பாண்டியன் வந்தார் என்பது ரஞ்சனுடைய வெர்ஷன். 

சாந்தி மற்றும் ரஞ்சன் ஆகியோர் ஜான் பாண்டியன் மூலமாக வீரமணியை மிரட்டினார்கள் என்பது வாராகி வெர்ஷன். இதில் எது உண்மை என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

இந்த பஞ்சாயத்தில் வீரமணியிடம் பணம் பெற்று பங்கு பிரித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவரை தான் இவர்களது ஆட்டம். 

இதற்கு அடுத்தது தான் அதிகாரிகள் ஆட்டம். அருண், பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம், பிரகாஷ் ஆகியோர் உள்ளே வருகிறார்கள்.  சாந்தி, ரஞ்சன், ஜான்பாண்டியன் பஞ்சாயத்து கண்டிப்பாக அருணுக்கு தெரிந்திருக்கும்.  வீரமணி பணம்காய்ச்சி மரம் என்பதால் அவரை மிரட்ட ஒரு டம்மி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 

2024-ல் ரஞ்சன் கொடுத்த வீடியோ ஆதாரத்தில் வீரமணியின் முகம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் 2025-ல் கொடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தில் வேண்டுமென்றே விடீயோவின் தரம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் வழக்கின் நோக்கம் விசாரணை அல்ல. பணம் பறிப்பது. அதுவும் ரஞ்சன் அனுப்பிய வீடியோ முழுவதுமாகவே இருக்கிறது. ஆனால் 2025 புகாருக்கு பெறப்பட்ட வீடியோ சில நொடிகள் மட்டுமே அடங்கிய காட்சிகள் என்று சொல்லப்படுகிறது. 

இதிலேயே இந்த வழக்கின் நோக்கம் தெரிந்து விட்டது. 2025 அக்டோபரில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடத்துவதாக சொல்லி, வீரமணியிடம் இருந்து 40-70 கோடி வரை பறித்திருக்கிறார்கள். அதன் பிறகு வழக்கை முடித்து விடலாம் என்று நீதிமன்றம் செல்ல, அங்கே நீதிபதி பத்மா டிவிஸ்ட் வைத்து விட்டார். 

இதில் இன்னொரு முக்கிய கேள்வி. 2024-ல் ரஞ்சன் கொடுத்த புகார் என்னவானது. ஏன் அதில் நடவடிக்கை எடுக்கவில்லை. யாருடைய இன்புலையன்ஸ் காரணமாக வழக்கு பதிவு செய்யப்படாமல் போனது என்பது இன்னொரு முக்கிய கேள்வி. 

2024-ளிலேயே வீடியோ ஆதாரம் கிடைத்தும், வீரமணியை மிரட்ட 2025 அக்டோபர் வரை அருண் மற்றும் பிரகாஷு, சுரேஷ் வேதநாயகம் கூட்டணி காத்திருந்தது என்பது இன்னொரு முக்கிய கேள்வி. 

2024-ல் ரஞ்சன் கொடுத்த புகாரின் போது திமுகவில் உள்ள பவர்புல் ஆட்களால் வீரமணி காப்பாற்றப்பட்டிருக்கலாம். அதனால் ரஞ்சன் மற்றும் காவல்துறையும் அமைதியாக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய பார்வை.  

ஆனால் 2025-ல் சாந்தி மற்றும் ரஞ்சன் பஞ்சாயத்து மூலம் பணம் வாங்கியது தெரிந்ததால், அதன் பிறகு அருண், பிரகாஷ், சுரேஷ் கூட்டணியும் களத்தில் இறங்கியிருக்கலாம் என்று நினைக்கிறன். 

2024-ல் அருண் அவ்வளவு பவர்புல் இல்லை. ஆனால் 2025-ல் அருண் திமுக ஆட்சியில் சக்திவாய்ந்த அதிகார மையமாகி விட்டார் என்பதை இங்கே பொருத்திப் பார்த்தால், எல்லா கணக்கும் சரியாக வரும். 2025-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு பற்றி திமுக மேலிடத்துக்கே தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன். அந்தளவு சக்தி வாய்ந்த நபராக அருண் இருந்தார். 

இதுவரை வந்த தகவல்களை தொகுத்துச் சொல்லியிருக்கிறேன். இதில் த வெ க அரசு யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் அடுத்தவரை கைகாட்டி வருகின்றனர். மேலே குறிப்பிட்ட யாருமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவில்லை. எனவே வீரமணியின் குற்ற வழக்கை தனியாகவும், வீரமணியை மிரட்டி பணம் பறித்தவர்கள் வழக்கை தனியாகவும் நடத்தினால் மட்டுமே இதில் ஒரு முடிவு கிடைக்கும் .

முதல்வர் விஜய் அவர்கள் இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது. 

பார்க்கலாம்.  

- மகாதேவன்

https://www.facebook.com/100000299424772/posts/29250391961220730/?rdid=nbk7nw0FhqZpZAvD

==================================

5

அப்பாடா ஒரு வழியாக வாய் திறந்துவிட்டார்!

ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு 25 நாட்களை கடந்த நிலையில் தான் முன்னாள் முதல்வருக்கு தகவலே கிடைத்து ஒரு அறிக்கை தந்துள்ளார்.

யாரும் தப்பிவிடக் கூடாதாம்! அவருக்கு உதவியவர்கள் எப்பேற்பட்ட அதிகாரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமாம்!

இந்த நல்லெண்ணம் ஏன் நீங்க அதிகாரத்தில் இருக்கும் போது உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது ஐயா?

இந்த விவகாரத்தில் அன்றைய காலகட்டத்தில் ஆட்சி செய்தோருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லாதது போலவும்  ஏதோ அதிகாரிகள் மட்டுமே இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்களை போலவும்  இருக்கிறது, ஸ்டாலின் அவர்களின்  எக்ஸ் பதிவு.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த அதி கொடூர விவகாரம் போட்டோவுடன்  வீரமணி, சாந்தி தம்பதியர்களின் சம்பந்தம் ஆகியவை காவல்துறையிடம் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சனால் தரப்பட்டுவிட்டது. நடவடிக்கை இல்லை. 

அந்த விவகாரமே மீண்டும் ஒரு சைல்ட் ஆக்டிவிஸ்ட் மூலமாக காவல் துறைக்கு தரப்படுகிறது.

இந்த கொடூர நிகழ்வு இதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த சென்னை மாநகர ஆணையர் அருண், உதவி ஆணையர்கள் யாஸ்மின் உள்ளிட்ட ஐந்து பெண் அதிகாரிகள் இதயத்தையும் உலுக்கவில்லை. ’குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை’ என வழக்கை குளோசர் செய்திருக்கிறார்கள் என்றால், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அன்றைய முதலமைச்சருக்கு இதில் பொறுப்பில்லையா?

அதிகாரிகள் வெறும் கருவிகளே. அவர்களை நேர்மையுடனும், எளியோரை பாதுகாக்கும் முனைப்பிலும் செயல்பட வைப்பதற்காகத் தான் ஓட்டுப் போட்டு ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அதிகாரத்தை வழங்குகிறார்கள்.  காவல்துறைக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் இத்தகைய ஒரு மோசமான கொடூர  குற்றவாளி ஆதாரங்கள் கிடைத்தும் தண்டிக்க முடியமல் போனதற்கு  பொறுப்பு ஏற்க மறுப்பது விந்தையாக உள்ளது. 

ஆட்சியாளர்களின் இயல்பு எதுவோ, அதுவே அதிகாரிகளின் நடத்தையிலும் வெளிப்படும். ஒரு செல்வாக்கான குற்றவாளி முதலமைச்சர் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர் என்ற நிலையில் அதிகாரிகளை சமரசமின்றி நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டிய கடமை முதல்வருக்கு உண்டா? இல்லையா?

இல்லையில்லை, வீரமணிக்கும் திமுக தலைமை குடும்பத்திற்கும் எந்த உறவுமில்லை என உங்களால் மறுக்க முடியாது. வீரமணி வீட்டுத் திருமணங்கள்  எதுவுமே கலைஞர் குடும்பத்தின் பிரசன்ஸ் இல்லாமல் பெரும்பாலும் நடந்ததில்லை. காரணம், இந்த இரு குடும்பத்திற்கும் உள்ள பிணைப்பு.

ஜெம் வீரமணியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சத்தியநாயக்கன் பாளையம். வீரமணியின் தந்தை எஸ்.பி.ராமசாமி 1962 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில்  திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோற்றவர்.  இதன் பிறகு அவரது மருமகன் கொன்னையாறு செ.கந்தப்பனை  கலைஞர் திமுக எம்.பியாக்கினார்.

எஸ்.பி.ராமசாமி தன் மருமகன் கந்தப்பனோடு சேர்ந்து தொடங்கிய குவாரி வியாபாரத்தை முழுக்க தன் மகன் வீரமணியிடம் ஒப்படைத்தார். இதன் பிறகு அன்றைய திமுக ஆட்சியின் துணையோடு இந்த குவாரி வியாபாரத்தை உச்ச நிலைக்கு வளர்த்தெடுத்தார், வீரமணி. குறிப்பாக  தமிழ் நாட்டைக் காட்டிலும் கர்நாடகாவில் இவருக்கு பெரிய குவாரிகள் உள்ளன.  இதற்காக கர்நாடகாவில் செல்வாக்காக இருந்த தேவகவுடாவுக்கு கலைஞரே தொடர்பு உருவாக்கித் தந்தார்.  வீரமணி இல்லத் திருமணத்திற்கு  முன்னாள் பிரதமர் தேவகவுடாவே வந்துள்ளார்.

கலைஞர் அறிவாலய வளாகத்தில் அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது பல முறை அவரோடு சேர்ந்து நடக்க வரும் அளவுக்கு நெருக்கம் வீரமணிக்கு இருந்தது. 

திமுக தலைமை குடும்பத்துடன்  வீரமணிக்கு இருந்த இந்த நீண்ட, நெடிய நெருக்கமான உறவு பிணைப்பு தான்  திமுக ஆட்சியில் இத்தகைய இழிவான செயலைச் செய்த குற்றவாளியை ஆதாரங்கள் கிடைத்தும், அடுத்தகட்டத்திற்கு நகர முடியாத அளவுக்கு காவல் துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம். 

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/39742498385340904/?rdid=DMc8oWclfbbsO6W6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு