கொள்கை கூட்டணியாம்! கோமாளி கூத்தாகிவிட்டது!
சாவித்திரி கண்ணன்
சென்ற மாதம் வரை பாஜகவின் பாதங்களில் பணிந்து கிடந்த ஒ.பி.எஸ் – 50 ஆண்டுகளாக மேடைகளில் திமுக ஒரு தீய சக்தி என்ற ஒ.பி.எஸ் இன்று ஒய்யாரமாக திமுகவில் தனக்கும், தன் மகனுக்கும் மற்றொரு ஆதரவு எம்.எல்.ஏவுக்கும் சீட் வாங்கிக் கொண்டு குதூகலமாக உள்ளார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜக - அதிமுகவுடன் பசை போல ஒட்டிக் கொண்டு, கேப்டனின் லட்சியம் திமுக, காங்கிரசை ஒழிப்பது தான். அதுவும் 2026 தேர்தலுக்குப் திமுகவை இல்லாமல் செய்வதே நம் கொள்கை என்று பேசி வந்த பிரேமலதா எந்தவித அலட்டலும் இல்லாமல் அமைதியாக உள்ளார்,
திமுக கூட்டணியில் அவருக்கு இரண்டிலக்க எண்ணிக்கையில் தொகுதி தருவதாக உத்திரவாதம் தந்து விட்டதால், நடக்கும் சம்பவங்களை ஊமைச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கிறார் அம்மணி.
கொள்கைக் கூட்டணி என்பதன் பொருள், மதவெறி பாஜகவை எதிர்ப்பது, சனாதன சக்திகள் தலைதூக்கவிடாதிருப்பது! இந்த கொள்கை உறுதிப்பாட்டில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கட்சிகளே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிகவும்! இந்தக் கட்சிகள் இன்று இக்கட்டில் உள்ளன.
பாஜகவின் தோழமையில் உள்ளவர்களை திமுகவின் கொள்கை கூட்டணிக்குள் இழுத்துப் போட்டதான திமுகவின் நகர்வே கொள்கை கூட்டணி என்ற அடையாளத்தை குலைத்துவிட்டது.
திமுக பாதிக்கப்பட்ட போதெல்லாம் களத்தில் இறங்கி திமுக அரசை பாதுகாக்கும் கவசமாக இடதுசாரிகளும், விசிகவும் இருந்தனர். இதுமட்டுமின்றி, பாஜகவை விட்டு அதிமுக விலகிய காலகட்டத்தில் கூட அதை ஊக்கப்படுத்தாமல், ஊனப்படுத்துவது போல, அதிமுகவை கடுமையாக விமர்சித்தே திமுகவுக்கான தங்கள் விசுவாசத்தை உறுதிபடுத்தினர்.
கடந்த ஐந்தாண்டுகளாக இடதுசாரிகள் தங்கள் தனித் தன்மையை இழந்து திமுகவினால் ஏவிவிடப்பட்டவர்களாக பல நேரங்களில் செயல்பட்டனர். திமுகவின் ஏவுகணையாக அதன் எதிரிகள் மீது பாய்ந்து குதறினர்.
தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பல நேரங்களில் ஒப்புக்கு திமுகவை எதிர்த்துவிட்டு ஒட்டுண்ணி அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்தனர்.
இவையாவும் இடதுசாரிகளின் இயல்பான அடையாளத்தையே இழக்க செய்துவிட்டது.
திமுக தன் உண்மையான கூட்டாளிகளை உதாசீனப்படுத்திவிட்டு, ஓடுகாளிகளாக அங்கிருந்து ஓடி வந்தவர்களை அரவணைத்திருப்பது என்பது பாஜகவிற்கு தந்துள்ள பாசிடிவ் மெசேஜ் தான்.
திமுக கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் தற்கொலைப் பாதையை தானே வலிந்து ஏற்றுக் கொண்டுள்ளது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு குவாஸி பாஜகவாகவே இங்கு சகலவிதங்களிலும் ஆட்சி நடத்தியது. அதனால் தான் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வருவதற்கு பாஜக தன் கூட்டாளிகளை திமுகவிற்கு அனுப்பி உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய போது, ’’இவை இரண்டும் பிரியக் கூடாது, சேர்ந்து தான் இருக்க வேண்டும்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி உருகினார். காங்கிரசை அரவணைத்தே அழிக்கும் அசைன்மெண்டைத் தான் திமுகவுக்கு பாஜக தந்துள்ளது.
ஆக, திமுக கூட்டணியை பலப்படுத்த பாஜக உதவிவிட்டு, மறுபக்கம் அதிமுக கூட்டணியை அரவணைத்து பலவீனப்படுத்தும் காரியங்களைச் செய்கிறது.
மேற்குவங்கத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான அந்த நாள் இரவே தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் என முக்கியமானவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன் பல மாவட்ட ஆட்சியர்கள், 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இவையாவும் அங்கு உண்மையிலேயே மம்தாவை பாஜக எதிர்ப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டிலோ திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அனுசரணையாகவே பாஜக செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி உள்பட பொருந்தாமல் பதவியில் உள்ள எவருக்கும் பாதிப்பில்லை. திமுகவின் பணப் பட்டுவாடாவும் படு ஜோராக நடக்கும். பணத்தை அள்ளி இறைத்து திமுக தான் நிற்கும் தொகுதிகளில் வெற்றியை தட்டிப் பறிக்கும். கம்யூனிஸ்டுகளால் முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள வெகுஜன அமைப்புகளும், தொழிற்சங்கத்தினரும் கூட திமுகவிற்கு நிச்சயமாக வாக்களிக்க மாட்டார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும். அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் அப்பட்டமாகவே பாஜகவிற்கான ஆதரவு அரசியலைத் தான் இங்கு செய்யும். அந்த துரோகத்திற்கு இடதுசாரிகள் துணை போனார்கள் என்ற பழியைத் தவிர்க்க, கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/35431099213147531/?rdid=2AjyyJtEKjUNdoD9
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு