வாழ்க்கைச் செலவின உயர்வும் நுகர்வுக் கடன் பொறியும்: தொடர்கதையாகும் நிதி மூலதனத்தின் ஏகபோகச் சுரண்டல்
செந்தளம் செய்திப்பிரிவு
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
ஆடு மேய்க்கக் கடன் வாங்கினான் ஒரு கிராமத்துக் கிழவன்!
ஆட்டை அவன் மேய்த்தான்... வட்டி அவனை மேய்ந்தது!
கடன்வாங்கி வாங்கிக் காலொடிந்ததுதான்... வங்கி ஆயிற்றோ...?
அவசரத் தேவைகளுக்கு வாங்கிய சிறு கடன்கள், நிம்மதியான இரவுகளைக் கடன் வாங்கி வட்டியாக வசூலித்துக் கொண்டிருப்பதையே இந்தியாவில் நுகர்வுக் கடன்கள் அதிகரிப்பது தொடர்பாக வெளிவரும் செய்திகள் அம்பலப்படுத்துகின்றன. இவை மக்களின் சொகுசு வாழ்க்கையையோ அல்லது ஆடம்பரத்தையோ காட்டவில்லை; மாறாக, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள், விலைவாசி ஏற்றத்தை கழித்த பிறகான மக்களின் உண்மையான ஊதிய வளர்ச்சி தேக்கமடைந்துள்ள நிலைகளையும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியையேயுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (NSSO) மற்றும் தொழிலாளர் பணியகத்தின் (Labour Bureau) தரவுகளை மேற்கோள் காட்டி ஐடியாஸ் ஃபார் இந்தியா ஆய்வு நிறுவனம் மற்றும் டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் வெளியிட்ட செய்திகளின்படி, பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மக்களின் வாங்கும் திறன் உயரவில்லை. குறிப்பாக, 2023-24ம் நிதியாண்டு நிலவரப்படி, குடும்பங்களின் வருடாந்திர நிதிச் சுமைகள் ஜிடிபியில் 6.2% முதல் 6.4% வரை உச்சத்தைத் தொட்ட அதேவேளையில், அவர்களின் நிகர நிதிச் சேமிப்பு வரலாற்றுச் சரிவாக ஜிடிபியில் 5.3% முதல் 6.0% ஆக வீழ்ச்சியடைந்ததுள்ளதாக எகனாமிக் டைம்ஸ், மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கை மற்றும் வேல்யூ ரிசர்ச் நிதி மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இத்தகையக் கடுமையான நிதி நெருக்கடியைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி நுகர்வுக் கடன்கள் மீதான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியதால், 2024-25ம் நிதியாண்டில் நிகர நிதிச் சேமிப்பு 6.5% - 7% ஆக தற்காலிக மீட்சியைக் கண்டிருந்தாலும், நீண்டகாலப் போக்கில் குடும்பங்களின் மொத்தக் கடன் பங்குச் சுமை (Accumulated Household Debt Stock) ஜிடிபியில் 45.5% என்ற உயர் மட்டத்திலேயே நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத் தன்மை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வாங்கும் திறன் சரிந்துள்ள சூழலில், குடும்பங்களின் மாத வருமானத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை கடன்களுக்கான மாதத் தவணைகளுக்கே (EMI) செலவழிக்கப்படுவதாக எகனாமிக் டைம்ஸ் வெல்த் சுட்டிக்காட்டுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் 50,000 ரூபாய்க்கும் குறைவான சிறியளவிலான தனிநபர் கடன்களை மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டுவதற்காகவே பெறுகின்றனர் என்று தி இந்தியா போரம் சுட்டிக்காட்டுகிறது. இதன் எதிரொலியாக, கடன்பெறும் வாடிக்கையாளர்களில் நுகர்வுக் கடன்களைப் பெறுவோரின் விகிதம் 51 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் டிரான்ஸ்யூனியன் சிபில் அறிக்கை எச்சரிக்கிறது. மேலும், கிரிஃப் ஹை மார்க் கடன் தகவல் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி 170.2 லட்சம் கோடியைத் தொட்டுள்ள நாட்டின் சில்லறைக் கடன் சந்தையில், வீடு போன்ற சொத்து உருவாக்கத்திற்கான கடன்களைத் தாண்டி, அன்றாட நுகர்வு மற்றும் தனிநபர் கடன்களின் பங்கு மட்டும் 58.4 சதவீதமாக ஆதிக்கம் செலுத்துகிறது என ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத் தன்மை அறிக்கை (FSR) சுட்டிக்காட்டுகிறது.
ஃபின்டெக் செயலிகளும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் (NBFCs) எங்கிருந்து பணத்தைப் பெறுகின்றன என்பதை ஆராய்ந்தால், நிதி மூலதனத்தின் 'பங்குடைமை அமைப்பின்' (Holding System) நுட்பமான இயங்குமுறை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இராட்சத வங்கிகள் நேரடியாக அதிக அபாயம் கொண்ட சிறிய தனிநபர் கடன்களை வழங்குவதைத் தவிர்த்து, வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி வருகின்றன. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) வங்கிகள் வழங்கும் கடன் ஆண்டுக்கு 17.8% முதல் 22% வரையிலான வேகத்தில் அதிகரித்து, 15 லட்சம் கோடியைக் கடந்து (சமீபத்திய தரவுகளின்படி 20 லட்சம் கோடிக்கும் அதிகமாக) வளர்ந்துள்ளது என எகனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ரிசர்வ் வங்கியின் இணைக் கடன் வழங்கும் முறை (Co-Lending Model - 80:20) மற்றும் கடன் பகிர்வு ஒப்பந்தங்கள் (FLDG) மூலமாக, பல ஃபின்டெக் செயலிகள் வழங்கும் கடன்களில் 80 சதவீதம் வரையிலான நிதியை இராட்சத வங்கிகளே திரைக்குப் பின்னால் இருந்து வழங்குகின்றன. ஃபின்டெக் நிறுவனங்கள் வெறும் 20 சதவீத நிதியை மட்டும் போட்டு வாடிக்கையாளர்களைத் திரட்டும் இடைத்தரகர்களாக (Customer Acquisition Front) மட்டுமே செயல்படுகின்றன என டாடா கேப்பிட்டல் மற்றும் டிசிபி வங்கி சுட்டிக்காட்டுகின்றன. ஃபின்டெக் நிறுவனங்கள் வழங்கும் சிறிய கடன்களில் தவணை செலுத்தத் தவறும் விகிதம் 6.4 சதவீதமாக உயர்ந்தாலும், லோன்ஸ் ஜகத் ஊடகத்தின் ஃபின்டெக் தொடர்பான செய்தி சுட்டிக்காட்டுவது போல, அந்த இழப்பு 'தாய் நிறுவனமான' இராட்சத வங்கிகளின் இலாபக் கணக்கைப் பாதிப்பதில்லை; ஐசிஐசிஐ வங்கி போன்ற இராட்சத வங்கிகள் தங்களின் வாராக்கடன்களை (NPA) 1.38 சதவீத அளவிலேயே பராமரித்துக் கொண்டு, அதிக வட்டி மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்தை மட்டும் அபகரித்துக் கொள்கின்றன.
நாட்டில் உழைக்கும் எளிய, நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காகச் தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் தங்கக் கடன் இருப்பு 69.9 சதவீதம் அதிகரித்து 3.3 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது என எகனாமிக் டைம்ஸ் நிதிச் செய்தி தெரிவிக்கின்றது. கடன் தவணை செலுத்த முடியாத குடும்பங்களின் நகைகளை 85 முதல் 90 சதவீதக் குறைந்தபட்ச விலையில் ஏலம் விட்டு நிதி நிறுவனங்கள் இரக்கமின்றி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்று ஐஐஎஃப்எல் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. இவைபோதாதென்று, கிரெடிட் கார்டு நிலுவைகளுக்கு ஆண்டுக்கு 42 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவகதாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடாமல் மக்களின் கையறுநிலையையே மூலதனமாக்கி லாபம் ஈட்டும் ஒட்டுண்ணித்தனமான சுரண்டலின் நேரடி வடிவமாக இவை விளங்குகின்றன. நவீன முதலாளித்துவம் தனது வளர்ச்சியைச் சிறிய கந்துவட்டி மூலதனமாகத் தொடங்கி, மாபெரும் கந்துவட்டி மூலதனமாக நிறைவு செய்துள்ளதையும், ஏகாதிபத்திய காலகட்டத்தில் மூலதனத்தின் உரிமையாளர்கள் வெறுமனே 'வட்டிக்கு வாழும் வர்க்கமாக' (Rentiers) உருவெடுத்துள்ளதையுமே இது காட்டுகிறது.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற இராட்சத வங்கிகள் பொதுமக்களிடமிருந்தும் சிறு வணிகர்களிடமிருந்தும் குறைந்த வட்டியில் (4.80% வைப்புத் தொகைச் செலவில்) சேமிப்புகளைத் திரட்டுகின்றன. சிதறிக் கிடக்கும் லட்சக்கணக்கான ஏழை, மற்றும் நடுத்த வர்க்க மக்களின் பணத்தை வங்கிகள் ஒரே இடத்தில் குவித்து, ஒரு மாபெரும் 'கூட்டு முதலாளியாக' உருவெடுக்கின்றன. இந்த ஏகபோக அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் வைப்புத் தொகைக்கு வெறும் 4.80% வட்டி அளித்துவிட்டு, நுகர்வோர் கடன்களுக்கு 12% முதல் 42% வரை அதிக வட்டி வசூலிப்பதன் மூலம் 3.5 லட்சம் கோடிக்கும் அதிகமான நிகர வட்டி வருவாயை (NII) ஈட்டி, ஒட்டுமொத்தமாகத் வர்த்தக வங்கிகள் 4.01 லட்சம் கோடி நிகர லாபத்தைக் (பொதுத்துறை வங்கிகள் மட்டும் 1.98 லட்சம் கோடி) குவிக்கின்றன என அம்பேத்கர் சேம்பர் நிதி அறிக்கை மற்றும் ஏஞ்சல் ஒன் சந்தை ஆய்வு தெரிவிக்கின்றன. அத்துடன் 1.5% முதல் 4% வரை செயலாக்கக் கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் முன்னணி வங்கிகள் மட்டும் 25,257 கோடிக்கும் அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளன என்பது ஆக்சிஸ் வங்கி ஆண்டறிக்கை மற்றும் சிஏ ஆலி நிதிச் செய்தி வெளியீட்டில் தெரியவருகிறது; இதில் 72 சதவீதத்திற்கும் அதிகமான தொகை சாதாரணச் சிறு கடன் வாடிக்கையாளர்களிடமிருந்தே உறிஞ்சப்படுகிறது. மேலும், 'வட்டி இல்லா மாதத் தவணை' (No-Cost EMI) என நுகர்வோருக்கு விளம்பரம் செய்யப்பட்டாலும், வாடிக்கையாளரிடமிருந்து வட்டி வாங்காதது போலக் காட்டிவிட்டு, அந்த வட்டித் தொகையை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தே (OEMs) 3 முதல் 8 சதவீதம் வரை 'மானியக் கட்டணமாக' (Subvention Fee) வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முன்பணமாகப் பெற்றுக்கொள்கின்றன என்று ஹெச்டிபி ஃபைனான்சியல் மற்றும் மிண்ட் நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது. இதனுடன் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் தவணை தவறும்போது விதிக்கப்படும் அபராதக் கட்டணங்கள் மூலமாகவும் இவர்களின் ஏகபோகக் கொள்ளை லாபம் மேலும் பெருக்கப்படுகிறது.
50,000 ரூபாய்க்கும் குறைவான சிறிய கடன்களில் ஃபின்டெக் நிறுவனங்கள் 56.8 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன என தி இந்தியா போரம் சுட்டிக்காட்டுகிறது. 'இன்று வாங்கிப் பின்னர் செலுத்தும்' (BNPL) திட்டங்கள் மூலம் மிகச் சிறிய தொகைகளைக் கடனாக வழங்குவது சாதாரண மக்களின் நலனுக்காக அல்ல; மாறாக, சிறிய கடன்கள் மூலம் சமூகத்தின் அடித்தட்டு மக்களையும், 18 முதல் 30 வயது நிரம்பிய ஜென்-ஜி இளைஞர்களையும் ஒட்டுமொத்தமாக நிதி மூலதனத்தின் சுரண்டல் வலைக்குள் கொண்டுவருவதற்கே பயன்படுகின்றன என எகனாமிக் டைம்ஸ் இளைஞர் கடன் அறிக்கை எச்சரிக்கிறது.
ரிசர்வ் வங்கி தனிநபர் கடன்களுக்காக 'வங்கிகள் ஒதுக்கி வைக்க வேண்டிய பாதுகாப்பு நிதி அளவை' (Risk Weights) 125 சதவீதமாக உயர்த்தியுள்ளதை எகனாமிக் டைம்ஸ் ரிசர்வ் வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முதலாளித்துவப் பொருளியலாளர்கள் இத்தகைய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை சிலாகித்துப் பாராட்டினாலும், போட்டியை ஊக்குவிப்பது அல்லது ஏகபோகங்களைக் கட்டுப்படுத்துவது என்று அரசுகள் கொண்டுவரும் ஒழுங்குமுறை விதிகள் எல்லாம் முற்றிலும் போலித்தனமானவை. வங்கிகளின் கடன்-வைப்புத் தொகை விகிதம் (Credit-Deposit Ratio) 82 சதவீதமாக (அதாவது 100 ரூபாய் வைப்புத் தொகையில், 82 ரூபாயை வட்டிக்கு விடுகிறார்கள்) உயர்ந்துள்ள நிலையில், லோன்ஸ் ஜகத் ஃபின்டெக் அறிக்கை தரவுகளின்படி 10 முதல் 15 மில்லியன் சிறு கடன் பெறும் வாடிக்கையாளர்கள் கடன் வலையில் மாட்டித் தவிக்கும் போது, ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை சாதாரண மக்களின் கடன் சுமையைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டதல்ல. மாறாக, கட்டுப்பாடற்ற வாராக்கடன்களால் இராட்சத வங்கிகள் திவாலாகிவிடக் கூடாது என்பதற்காகவே எடுக்கப்பட்டது. தரகு-முதலாளித்துவ அரசின் இத்தகைய கட்டுப்பாடுகள் நுகர்வோரைக் காக்காமல், முதலாளிகளின் லாபத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும், நிதிமூலதன ஆதிக்கத்தை பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுகின்றன.
- செந்தளம் செய்திப்பிரிவு