புதிய தொழிலாளர் சட்ட விதிகள்

ஊதியம், பணிநேரம், பிஎஃப் குறித்து என்ன சொல்கின்றன?

புதிய தொழிலாளர் சட்ட விதிகள்

இந்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 29 சட்ட விதிகளில் ஊதியம் பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன.

இந்த சட்ட விதிகளின் பலன்கள் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு பணியாளர்களையும் சென்றடைய வேண்டும் என அரசு கருதும் நிலையில், இச்சட்ட விதிமுறைகள் ஊழியர்களுக்கு இழப்பையே ஏற்படுத்தும் என தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்ட விதிமுறைகள் மாநில அரசுகள் மற்றும் இந்திய அரசு பணிகளில் உள்ள ஊழியர்களுக்குப் பொருந்தாது.

இந்த விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம்.

ஊதியம்

புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும். இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் 'டேக் ஹோம்' வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த மாற்றத்தால் அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் பி.எஃப் மற்றும் கிராஜூவிட்டி தொகை உயர்ந்து அவர்கள் மதிப்பான வாழ்க்கையை வாழ உதவும் என அரசு கூறுகிறது. "வருமானத்தில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளமாகவும், மீதம் உள்ள 50 சதவீதத்தை அலவன்ஸாகவும் பெறும்போது புதிய விதிகள் உங்களை பாதிக்காது," என வரிகள் குறித்த நிபுணரான கௌரி சத்தா பிபிசியிடம் முன்பு தெரிவித்திருந்தார்.

புதிய விதிகளின்படி, ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

இந்த மாற்றங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு மட்டுமே பலனளிக்கும் என, சிஐடியூ தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் சிந்து பிபிசியிடம் தெரிவித்தார்.

பணிநேரம்

புதிய விதிகள் அமலுக்கு வந்தால், ஊழியர்கள் எத்தனை மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்பதிலும் மாற்றங்கள் வரும்.

தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் பணிநேரம் 8-9 மணிநேரங்களாக உள்ளது. ஆனால், புதிய விதிகளின்படி இது 12 மணிநேரமாக நீட்டிக்கப்படலாம் என, சிஐடியூவின் ஆந்திரபிரதேச மாநில தலைவர் நரசிங் ராவ் கூறுகிறார்.

"வார பணிநேரமான 48 மணிநேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என ஐதராபாத்தை சேர்ந்த நிதி ஆய்வாளர் கே.நாகேந்திர சாய் பிபிசியிடம் தெரிவித்தார்.

"புதிய விதிகளின்படி இந்த 48 மணிநேரம் என்பது நீட்டிக்கப்படாது. எனவே, ஒருவர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் வார விடுப்பு வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்து இந்த 48 மணிநேர பணி என்பது 4 நாட்கள், 5 நாட்கள் அல்லது 6 நாட்களில் பிரித்து வழங்கப்படலாம். இது ஒரு ஊழியரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கலாம், இம்மாற்றம் அவர்களுக்கு பலனளிக்காது," என்றார் அவர்.

பாதுகாப்பு, உடல் நலம், பணிச்சூழல் (தொழில் பாதுகாப்பு, உடல் நலம், பணிச் சூழல் விதிமுறைகள்) குறித்துப் பேசும் சட்டப்பிரிவு 25 (1)இன் கீழ், ஊழியர்களை ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்கக் கூடாது.

ஆனால், பிரிவு 25(1)(பி)இன் படி, நிறுவனங்கள் அவர்களை 12 மணிநேரம் வரை வேலை செய்ய வைக்க முடியும்.

பிரிவு 26(1)இன் படி, ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு மேல் வேலை செய்யக் கூடாது. இந்த விதியை தளர்த்தும் அதிகாரம், பிரிவு 26(2)இன் படி அரசுக்கு உள்ளது.

ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படவில்லையென்றால், அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அந்த விடுமுறைகளை ஈடுகட்ட வேண்டும்.

அதிக நேர பணி (ஓவர் டைம்)

அதிக நேரம் பணி செய்தல் முன்பு மாதத்திற்கு 50 மணிநேரங்களாக இருந்தது, இது 125 மணிநேரங்களாக அதிகரிக்கலாம். அதிக நேரம் பணி செய்வதற்கான ஊழியர்களின் விருப்பம், புதிய விதிகளின்படி தேவைப்படாது. அதிக நேர பணிநேரங்கள் குறித்து எவ்வித குறிப்பிட்ட விதிமுறைகளும் இந்த மாற்றங்களில் இல்லை என, தொழிலாளர் சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.

ஊழியர்கள் கூடுதல் நேரம் பணி செய்வது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் நிர்வாகத்திற்கே இருக்கும்.

அதிக நேரம் பணி செய்ததற்காக வழங்கப்படும் ஊதியம் குறித்து புதிய விதிமுறைகளில் வரையறுக்கப்படவில்லை என, நரசிங் ராவ் கூறுகிறார்.

புதிய விதிகளின்படி, விடுமுறைகள் பெறுவதற்கு ஊழியர் ஒருவர் ஆண்டில் 180 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும், இது முன்பு 240 நாட்களாக இருந்தது. ஊழியர்களுக்கான மொத்த விடுப்பு எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது.

பெண்கள்

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை புதிய விதிமுறைகள் வழங்குகின்றன. பெண்களின் ஒப்புதலுடன் அவர்களை இரவு நேர பணியிலும் அனுமதிக்கலாம். ஆனால், நிறுவனங்கள் அவர்களுக்கான போதுமான பாதுகாப்பு மற்றும் பணியிட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

பி.எஃப்

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பி.எஃப்-ல் 12 சதவீதத்தை தன் பங்காக வழங்குகிறது. புதிய விதிகளின்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும்.

"அடிப்படை தேவை மொத்த வருமானத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதால், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பி.எஃப் பங்களிப்பு அதிகரிக்கும். இது நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். எனினும், ஊழியர்களின் ஓய்வுக்கு பிந்தைய பலன்கள் அதிகரிக்கும். பி.எஃப் பங்களிப்பு அதிகரிப்பதால், அரசாங்கத்தின் கருவூலத்திற்கு வரவு அதிகரிக்கும்," என நாகேந்திர சாய் தெரிவித்தார்.

புதிய விதிகளின்படி கிராஜூவிட்டி பங்கும் அதிகரிக்கும். எனவே புதிய விதிகளின்படி கிராஜூவிட்டியை கணக்கிடும் நடைமுறைகளில் மாற்றங்கள் இருக்கும்.

கிராஜூவிட்டி தொகையை ஊழியர்களுக்கு வழங்குவதற்கான குறைந்தபட்ச பணி ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்.

மேலும், அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் சமூக பாதுகாப்புப் பலன்களும் கிடைக்கும்.

சுகாதார காப்பீடு

அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையையும் இ.எஸ்.ஐ வரம்புக்குட்பட்ட கிளினிக்குகளிலும் பெறுவார்கள். இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் அதன் கிளைகள் மாவட்ட அளவிலும் நீட்டிக்கப்படும். இஎஸ்ஐ பலன்கள் தோட்ட தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

இ.எஸ்.ஐ, பி.எஃப் இரண்டுக்கும் யூ.ஏ.என் எண் உள்ளது. இந்த எண் ஆதாருடன் இணைக்கப்படும்.

ஒப்பந்த பணிகள்

தொழில் உறவுகள் சட்டப்பிரிவு 2, ஒப்பந்தப் பணிகளை சட்டப்பூர்வமாக்குகிறது.

இதன்கீழ் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியர்களை நியமிக்கலாம். அந்த காலம் முடிந்தவுடன், எவ்வித முன்கூட்டிய நோட்டீஸோ அல்லது இழப்பீடோ இல்லாமல் அவர்களை பணியிலிருந்து நீக்கலாம்.

ஆனால், அவர்கள் ஒராண்டை நிறைவு செய்திருந்தால், நிரந்தர பணியாளர்களை போன்றே அவர்களுக்கும் கிராஜூவிட்டி பலன் உண்டு.

"11 மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்த பணி வழங்கப்பட்டிருந்தால், கிராஜூவிட்டிக்கான தகுதி இருக்காது. இந்த நடைமுறையை நிர்வாகங்கள், தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும்" என்கிறார், சிந்து.

தேசிய இணையதளம்

இதற்கான தேசிய இணையதளத்தில் அனைத்து ஊழியர்களும் தங்களை மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் தேசியளவில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற முடியும். இவ்விதியின்கீழ், வேறு மாநிலங்களில் பணி செய்துவரும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போக்குவரத்துச் செலவுகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பணியில் இணைந்ததற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட வேண்டும்.

வீட்டிலிருந்து பணி

வீட்டில் இருந்து பணிசெய்யும் ஊழியர்களை, வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

"இந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு, எந்த ஒரு மாநிலமும் சிறப்புத் தொழிலாளர் சட்டங்களை இயற்றுவதும் பெரும் தடையாக அமையலாம். நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களின் வணிக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவுசெய்தால், அவை மாநில சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டவை. நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களில், பணியாளர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது", என்கிறார் சாய்

- பிபிசி நியூஸ் தமிழ்