தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மூடிமறைக்கும் பாஜக

இந்தியன் எக்ஸ்பிரஸ்

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மூடிமறைக்கும் பாஜக

Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் பெற்ற நிதி விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படுத்திவிட்டதாக இக்கட்டுரை தெரிவிக்கிறது. கார்ப்பரேட் சேவைக்காக அவை பெற்ற கையூட்டை ஒத்துக் கொண்டால் அவை புனிதமாகிவிடுமா என்ன? அதிலும் அவை பாதி தகவலை மட்டுமே சமர்பித்துள்ளன. பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது. எனவே இச்செய்திக் கட்டுரையை செந்தளம் நிலைபாட்டிலிருந்து விமர்சனத்துடன் வாசிக்க கோருகிறோம். செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

தேர்தல் பத்திரங்கள் தரவு: விவரங்களை மறைக்க பாஜக சட்டத்தை மேற்கோள் காட்டியது, திமுக அதற்கு நிதியளித்தவரைப் பற்றி தெரிவித்தது

நிதியளித்தவர்களின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து (ECI) மறைத்ததை நியாயப்படுத்தும் வகையில், தேர்தல் பத்திரங்களை அதிகம் பெற்ற பாஜக, விதிகளை மேற்கோள் காட்டியது. ஆனால் மற்ற சிறிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்கி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிதியளித்தவர்களின் விவரங்களை தொகுத்து சமர்ப்பித்து வருகின்றன.

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுக, ஏப்ரல் 19, 2019 முதல் நவம்பர் 14, 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.656.5 கோடியைப் பெற்றுள்ளதாகவும், பியூச்சர் கேமிங்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.509 கோடியைப் பெற்றுள்ளதாகவும், இத்தகவலை தங்களுக்கு நிதியளித்தவர்களிடமிருந்து திரட்டியதாகவும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. 

“இந்தத் திட்டத்தில்… நிதியளித்தவரின் விவரங்களை அதை பயன்படுத்தியவருக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை… அது எப்படியிருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நாங்கள் எங்களுக்கு நிதியளித்தவர்களைத் தொடர்புகொண்டோம், அவர்களிடமிருந்து விவரங்களை சேகரிக்க முடிந்தது” என்று நவம்பர் 14, 2023 அன்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் திமுக கூறியது.

தேர்தல் பத்திரங்களை வாங்கிய இரண்டாவது பெரிய நிறுவனமான மேகா இன்ஜினியரிங் நிறுவனத்திடம் இருந்து 50 கோடி ரூபாயைப் பெற்ற கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி(எஸ்)), “அரசியல் கட்சிகளுக்கான பெரும்பாலான நிதிகள் முன்கூட்டியே தெரிந்துதான் தரப்படுகின்றன; அதன் விவரங்களையும் கூட தேர்தல் கமிஷனிடம் பகிர்ந்து கொள்ள அவை அனுமதிக்கின்றன” என்று அக்கட்சி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தது. 

“எங்களுக்கு ஆதரவாக தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் யார் என்பது ஒரு கட்சியாக எங்களுக்குத் தெரியும். அவர்கள் பத்திரங்களை வாங்கியவுடன், நிதியளித்தவர் யார் என்ற தகவலைப் பெறுவோம், ஏனெனில் நாங்கள் தொகையை பணமாக்க வேண்டும்… பொதுவாக, நிதிகள் முன்னறிவிப்புடன்தான் வழங்கப்படுகின்றன. சில சமயங்களில், தேர்தல்களுக்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவோம்,” என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

திமுக மற்றும் ஜேடி(எஸ்) தவிர, அ.தி.மு.க., என்.சி.பி., ஜம்மு & காஷ்மீர் நேஷனல் கான்ஃபெரன்ஸ் (ஜே.கே.என்.சி.), ஜே.டி.(யு), ஏ.ஏ.பி., சமாஜ்வாதி கட்சி, சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட், கோவா கட்சி மற்றும் மகாராஷ்டிரா கோமந்தக் கட்சியும் போன்றவைகளும் நிதியளித்தவர்களின் விவரங்களை, பகுதியளவிலாவது தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தியுள்ளன.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் பொருளாளர் ஹேமந்த் தக்லேவை தொடர்பு கொண்டபோது, “தற்போது இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. சொல்ல வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே வழங்கிவிட்டோம்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ், தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பித்ததில், பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சைரஸ் பூனாவாலாவை 2018-19 இல் அதன் தேர்தல் பத்திர நிதியாளர்கள் என அடையாளப்படுத்தியது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திங்களன்று செய்தி வெளியிட்டது போல், தேர்தல் பத்திரம் மூலம் நிதியளிப்பவர்களின் விவரங்களை சட்டபடி நாங்கள் பராமரிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று விதிகளை தேர்தல் ஆணையத்திடம் மேற்கோள் காட்டியது பாஜக. இதுவே இவ்விசயத்தில் அவர்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஆகும். மறுபுறம், நிதியளித்தவர்களின் விவரங்கள் எங்களிடம் இல்லாததால், அதனை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ நேரடியாகவே பகிர்ந்து கொள்ளுமாறு தாங்கள் கோரியுள்ளதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

10 மாநில கட்சிகள் வெளிப்படையாக இதை எப்போதும் அறிவித்தே வருகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2019-20 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரம் மூலம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1 கோடி நிதி பற்றிய விவரங்களைத் தானாக முன்வந்து வெளியிட்டது. ஏப்ரல் 2021 இல், அதன் செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா  இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், ஹிண்டால்கோ நிறுவனம் நிதியளித்தற்கான ரசீதைக் கேட்டபோதுதான், அவர்கள் தங்கள் கட்சிக்கு நிதியளித்ததைப் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறினார்.

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://indianexpress.com/article/india/electoral-bonds-data-bjp-cited-law-to-keep-names-out-dmk-reached-out-to-its-donors-9221608/